நான் சற்று கடினமானவள் தான்
என்னைச் சுற்றி போலியாய் சிரிக்கும்
முகங்கள் பல கண்டும் புன்முறுவல் செய்யும்
முகத்துடன் கடந்து செல்கையில்
நான் சற்று திமிர் பிடித்தவள் தான்
சுயமரியாதையற்று சீவிக்கும்
சில சமூகங்களிடமிருந்து
சற்று விலகிச் செல்கையில்
நான் சற்று எளிமையானவள் தான்
ஆடம்பரத்தில் தான் அழகு இருப்பதாக
தங்களைத் தாங்களே ஏமாற்றும்
ஒரு கூட்டம் கண்டு உள்ளூரச்சிரிக்கையில்
நான் சற்று வேடிக்கையானவள் தான்
உண்மையை நான் அறிந்ததை அறிந்திராமல்
அதை மெருகூட்டுவதற்குப் பல பொய்களைச்
சொல்லி கதை ஆசிரியர் ஆவோர் பல மத்தியில்
நான் சற்று கோபக்காரி தான்
உண்மை நேர்மை சத்தியம் இதையணைத்தையும்
ஏளனமாய் ஓரம்கட்டி அதை ஏற்பதில்
என் மனம் சம்மதிக்காமல் வார்தைகளை கொட்டும் வேளையில்
நான் சற்று தனிமையானவள் தான்
அனைத்து உயிர்களும் அவர் அவர் கடமைகள் முடிந்தபின்
விலகிடும் தற்காலிகமான ஒரு பிணைப்புத் தான் இந்த
உறவுகள் என்று அறிந்த வேளையில்
நான் சற்று துணிந்தவள் தான்
ஆண் துணையற்ற பெண்ணின் வாழ்க்கை
சமூகத்தின் பார்வையில் இருந்து பாதுகாப்பாய்
விலகி நடக்க மனித ஓநாய்கள் பல தோன்றிய சந்தர்ப்பத்தில்
நான் சற்று விரக்தியானவள் தான்
இறப்பும் பிறப்பும் நிலையானது என்பது போல்
என் வாழ்வில் எதிலும் ஏமாற்றம் என அறிந்தும்
முயற்ச்சிகளைக் கைவிடாது விரைந்து செயற்படுகையில்
நான் சற்று அன்பானவள் தான்
ஒவ்வொரு உயிருக்கும் உண்டான மதிப்பை
அவர்களுக்காக பிறர் சிந்திடும் கண்ணீரின்
வலியை நன்கு அறிந்தமையினால்
நான் சற்று ஏமாளி தான்
அன்பெனும் போர்வை போர்த்திய விஷப்பாம்புகள்
எனத் தெரிந்திருந்தும் அன்பால் சாதித்துவிடலாம்
என இன்னும் நம்பிக்கை எனும் மாயையில் சஞ்சரிக்கையில்
இங்கு நான் என்பது சமூகத்தின் பிரதிபலிப்புக்களே
இதில் குறை தெரிந்தால் மாற்றவேண்டும் இந்த சமூகத்தையே
No comments:
Post a Comment
Your concern is appreciable. Thank you for the review