பூலோகம் தாண்டி ஒரு இரயில் பயணம்
இரு இருக்கைகள் மட்டும் கொண்ட இரயில் பெட்டிக்குள் அவனும் நானும் மற்றும் கொஞ்சம் காதலும்
முடிவில்லா பயணம் காணவே
முடிவிலியாய் தண்டவாளம் ஓடிட
வானுயர்ந்த சோலை குறுகிட
காதல் ஊர்வலமாய் இரயில் போகுதே
அவன் மார்போடு தலையை சாய்த்து
நான் பயணம் செய்யும் அழகைப் பார்க்க
பகலெல்லாம் சூரியனும் இரவெல்லாம் சந்திரனும்
மூச்செடுக்க வெகுதூரமோடி பின்தொடருதே
பூமியில் உள்ள தேடல்களைக்காண
விண்மீன்களின் கோர்வையை பாய்விரித்தே
வெண்ணிலவை கட்டி பூமியில் நட்டுவைத்து
ஜோடியாய் நாம் போகிறோம் இந்த இரயில் பயணம்
என்னவனின் உறக்கம் கலையாது நீள
மடிமீது மிருதுவாய் தலைகோதி தாலாட்டிட
ஆனந்த பைரவி ராகம் மீட்டிய தேன்சிட்டுகளோடு
நத்தை நகர்வலமாய் இரயில் போகுதே
காலமும் கடிவாளமிட மறந்துவிட
பாதைகளும் சிவப்பு கம்பளமிட்டு வரவேற்க
பக்கத்தில் பச்சைபசேல் தலையசைத்து வாழ்த்துக்கூற
பட்டாம்பூச்சிகள் இரயிலுக்கு பாதை காட்டுதே
மழைச்சாரலும் தேநீர் தந்து வழியனுப்பி வைக்க
மயில் தோகை தந்து துயில் எழுப்ப
மேகங்கள் வானிறங்கி துகில் கொடுக்க
காற்றோ காதோடு வந்து கூந்தல் சரிசெய்யுதே
தேனீகளும் தேன் சொரிந்து வாழிய என்றே
வாழ்த்தியனுப்பும் பூலோகம்தாண்டி
இரு இருக்கைகள் கொண்ட இரயில் பெட்டிக்குள்
அவனும் நானும் மற்றும் கொஞ்சம் காதலும்
No comments:
Post a Comment
Your concern is appreciable. Thank you for the review