Showing posts with label alone. Show all posts
Showing posts with label alone. Show all posts

Saturday, October 9, 2021

எனக்கான அன்பு

 





சலித்துவிட்ட இதயத்துடன் நான்

ஒவ்வொருவரையும் நெருங்கும்போது

மீண்டும் அவர்களிடத்தில் எனக்கான 

அன்பு முழுமைபெறாத என்ற 

ஏக்கம் மட்டும் வினாக்குறியாகின்றது


அவர்களிடத்தில் எனக்கான அன்பு 

மிகையானதும் அல்ல  ஆடம்பரமானதும் அல்ல

ஒரு துளியேனும் இரு கைகளுள் 

பொத்திவைத்த வெளிச்சம்போல

என் நினைவால் அவரவர் மனதில் பதித்து

வைக்கப்படும் சிறு நியாபகங்கள் மட்டுமே


புத்தகம் நடுவே திருட்டு மயிலிறகு

குட்டிபோடும் கதை எனக்கான அன்பு

கொஞ்சம் நகைத்தாலும் அதனுள் 

மறைந்திருக்கும் பித்து சிறு குழந்தையின் 

அன்பிலே தெய்வீகமாய் உணரப்படும்


திகட்டத்திகட்ட சுவைக்கும் ஒவ்வொரு 

கனி இதழ்கள் முடிவிலும் நாவூரும் 

எச்சில் எனக்கான அன்பு

அதுவும் ஒருவகை மீளமுடியாத சிறு போதை 

சிலரினால் மட்டுமே உணர முடியும்


சத்தமில்லாத இரவுநேர அழுகையில்

கண்ணீர் ஏந்தும் நண்பன் 

தலையணை எனக்கான அன்பு

ஆழ்ந்த ஆறாத வடுக்களின் ரணங்கள்

வழியும் கண்ணீரோடு ஓர் சிறு தூக்கம்

காலை விழித்ததும் எல்லாம் மாறிவிடுமென்ற புன்னை


நன்கு பரீட்சயமான பழைய பாடல் வரிகளில் 

தெரிவு செய்து உதடு முணுமுணுக்கும் 

வரிகள் எனக்கான அன்பு

மொழிகளை விட மௌனங்களில் அன்பை தேடும்

என்போல் இதயங்களினால் மட்டுமே 

வரிகளுக்கும் உயிரூட்ட முடியும்.



Wednesday, October 28, 2020

நான் என்றும் என்னுடன்


 














நான் தனிமையில் வாடுவதாய் 

வதந்திகள் பல பேசப்படுகின்றன

தனிமையோடு உறவாடுவதாய் போலியான 

தகவல்கள் கசிந்துகொண்டிருக்கின்றன

நான் அலட்சியப்படுத்தப்பட்டதாய்

வசை நம்பிக்கையூட்டப்படுகின்றன

நான் மனவழுத்ததில் உள்ளதாய்

பலராலும் கணிக்கப்படுகின்றன

நான் என்றும் என்னோடு இருக்கின்றேன்


என் கண்களில் கண்ணீர் வரும்போதொல்லாம் 

என் கரங்கள் துடைத்துவிடுகின்றன

என் வழிப்பயணத்தில் என் பாதங்கள் 

முன்னேறிச்செல் என்று தட்டிக்கொடுக்கின்றன

என் பேச்சுக்களை என் மனம் செவிசாய்க்கின்றன 

மூளை அதைச் செய்ய எத்தனிக்கின்றன

என் கைவிரல்கள் படபடப்பான நேரங்களில் 

என் கை கோர்க்கின்றன

என் கண்கள் நான் மனச்சோர்வடைந்த நிலையில் 

என்னோடு விழித்திருக்கின்றன

இப்பொழுதாவது புரிந்துகொள்ளுங்கள்

நான் என்றும் என்னோடு இருக்கின்றேன்


நான் தனிமையில் வாடுவதாய் 

வதந்திகள் பல பேசப்படுகின்றன

இல்லை

நான் துணிச்சலான மனதுடன் 

அன்றாடம் போராட்டங்களில் 

வெற்றி வாகை சூடிக்கொள்கின்றேன்

தனிமையோடு உறவாடுவதாய் போலியான 

தகவல்கள் கசிந்துகொண்டிருக்கின்றன

இல்லை

நான் சுயமரியாதையுடனும் தன்நம்பிக்கையுடனும் 

நீண்ட கால உறவில் இருக்கின்றேன்

நான் அலட்சியப்படுத்தப்பட்டதாய்

வசை நம்பிக்கையூட்டப்படுகின்றன

இல்லை

நான் தீர்மானிக்கும் முன் நியதி நேர்மை 

மனசாட்சியிடம் 

ஒப்புதல் பெறுகின்றேன்

நான் மனவழுத்ததில் உள்ளதாய்

பலராலும் கணிக்கப்படுகின்றன

இல்லை

நான் மனதிடம் நேசிக்க மட்டுமே 

கற்றுக்கொடுத்திருக்கின்றேன் 

அழுத்தங்களை கண்ணீரோடு 

பகிர்ந்துகொள்கின்றேன்

எப்பொழுதும் தெரிந்துகொள்ளுங்கள்

நான் என்றும் என்னோடு இருக்கின்றேன்






என் பாதி நீ


 














என் பாதியாகிய அவனுக்கு

கற்பனைக்காகிதங்களில்

களையிழந்த கருவிழி மை கொண்ட 

கண்ணீர்த்தூரிகை முனையில்

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


இருட்டின் ஒளி வீச

தலைசாய்த்த தலையணை தெப்பமாக 

மௌனமான வார்த்தைகள் கோர்த்து

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


அச்சிடப்படாத அஞ்சல் முகவரி

வழக்கத்திலற்ற முத்திரை முகம்

பெயரற்ற பெறுநர்

என் கிழிந்த இதயத்தையும் 

இணைத்துப் பசையிட்டு

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


கொடுங்கோபங்கள் வெடித்துச்சிதறும் 

தீக்குழம்பு அதை அன்பை வைத்து 

அணைத்துவிட எண்ணிய என்

முட்டாள்தனமான இதயத்தை

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


இழைத்ததொல்லாம் பிழையென்றும்

பழிச்சொல்லுக்கு விலைபோகாது

நடந்தவை கடந்தவையாகட்டும் என்று

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


கலைந்த முகிற்கூட்டங்கள் கண்ணுக்குள்

பல நிழல்களை விழச்செய்யினும் 

படிந்தது தூசியாகினும் அதைத் துடைக்காது 

காதலோடு கண்ணீர்ப்புன்னகை மலர

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்







Saturday, July 4, 2020

என்னை அழவைத்தவர்களுக்கு நன்றி



















என்னை அழவைத்தவர்களுக்கெல்லாம் மனமார நன்றி சொல்கின்றேன் இந்த வேளையில்


இந்தக் கல்லிலும் ஈரம் இருப்பதாய் உணர்த்துவதற்கு 

அன்பை தற்காலிகமாய் அடகு வைத்தீர்கள்


கண்ணில் ஈரம் வருவதற்காய் சொல்லால் எத்தனை

ஈட்டி அம்புகளை என் மனதில் பிரயோகித்திருப்பீர்கள்


நம்பிக்கையை விதைப்பதற்கு எத்தனை நாட்கள்

கண்ணயறாமல் நிஜமுகங்களை வேளாண்மை 

செய்யாமல் காத்திருந்திருப்பீர்கள்


பொய்யான வார்த்தைகளை நிஜமென உணர்த்த

எத்தனை அரும்பாடுபட்டு புன்னகையை

கண்களில் காண்பித்திருப்பீர்கள்


நிழலாய் பின்தொடர்ந்து உயிராய் காப்பதாய்

பொய் வாக்கினை அளிக்க மனதை எப்படி

திடப்படுத்தியிருப்பீர்கள்


கண்கலங்கிய நொடியெல்லாம் கரம்பற்றி 

பாசப்பிணைப்பை வலுப்படுத்த வலியவந்து

உறவாடும் நளினங்களை எப்படி கையாண்டிருப்பீர்கள்

 

இத்தனையும் ஒருநாள் உதறலுக்காய் உங்களை 

மாற்றிக்கொண்டீர்களே என் கண்ணீரில்

இனி இவை இடம் பெறாத நன்றி மட்டுமே உங்களுக்கு


Friday, June 26, 2020

சிரிப்பு போலி பிரதிபலிப்பு

















என்றும் இனிமையான சிரிப்பொலியும்

செஞ்சந்தன முகப்பொலிவும்

மனதை வசப்படுத்தும் இன்மொழியும்

நேர்த்தியான இஸ்திரிக்கப்பட்ட உடையும்

பொய் கூறிவிடலாம்


மகவற்ற தாய் மடிக்கு நற்புதல்வனாய்

ஆடவண் துணையற்ற பெண்ணின் தமையனாய்

ஈன்றவனற்ற பிஞ்சு மழலையின் தகப்பனாய்

சகமும் பகிரும் தோழனாய்

உறவுமுறியடித்து விடலாம்


செஞ்சோலையும் சாலையோர நிழலும்

கொட்டும் அருவி மழைச்சாரலும்

வயலும் புல்வெளிநிலமும்

மலைத்தொடர் கடற்பரப்பு மணல் மண்ணும்

கண்ணிற்கு காட்சியற்றும் போகலாம்


முதல் விசும்பின் மழைத்துளியும் 

அதில் எழுnம் மண்வாசமும் 

பால்வாடை வீசும் மழலை அமுதும்

வெண்புகை பனித்துளி படர்ந்த மலர் மொட்டுக்களும் 

தேன் வண்டின் ரீங்காரத்தில் ஓடி விளையாடும் 

அணிலும் சிறு பட்சிகளும் இதமற்றுப் போகலாம்


அயலவர்களின் சலசலப்பான பேச்சுகளும் 

பத்திரிகை நடுப்பக்கத்து கிசுகிசுப்பான பேச்சுகளும் 

நவீன நங்கையின் நளினமான பேச்சிலும் 

காரியவாதியின் கபடமான பேச்சிலும் 

கடமையதிகாரியின் கடுமையான பேச்சிலும்

இனி சுவாரஸ்யம் குறைந்துவிடலாம்


அருளாசிபுரியும் இறைவனடி துணைநிற்காதென

அகவிழி சுடர் அணைந்து இருட்டான ஓர் 

ஓசையறியா அறையில் மேல் முகட்டில் கற்பனைத் திரையை 

அங்குமிங்குமாய் அலைய விடலாம்


காலன் பிடியில் கைவிலங்கின்றி இனி 

எவர் சித்தம் என்றே இங்ஙனம் இனிதாய் நிறைவேற்றிய 

மேடை நாடகத்தில் தன் கதாப்பாத்திரத்தை 

விருப்பு வெறுப்பின்றி நிறைவேற்றம் செய்யலாம்


நிர்க்கதியற்ற நிம்மதி தொலைத்தவனிற்கு 

அன்பாய் அருகில் அணைத்து அமர்ந்து 

தலைகோதி மடிமீது

ஒரு நிமிட பாசப்பிணைப்பிற்கு 

மனம் தேடும் அன்பானவர் இல்லாவிட்டால் 

அவன் சிரிப்பு போலி பிரதிபலிப்பாய் அமைந்துவிடலாம்






Wednesday, June 10, 2020

மதுகிண்ணமும் கதைபேசும்



















கண்ணே உன் நினைவுகள் எல்லாம்

கற்பனைக் கனவுகளாய் கலைத்திட

கையில் ஏந்தினேன் மதுக்குவளை

கவலைகள் தீர வேறு மருந்தில்லை


குவளை வளைவுகளை உன்

கமலக்கன்னங்கள் தாமரை இதழாய்

கையேந்தினேன் நீயும் தவழ்ந்தாய் என்

கரங்களில் அந்திசாயும் வேளை எல்லாம்


கிண்ணத்தின் கழுத்துப்பிடியை

கைபற்றும் போதெல்லாம் உன் சங்குக்

கழுத்துவளைவை என் விரல்கள் மீட்டும்

கல்வி சரஸ்வதி வீணையாய் இசைத்தேன்


கூவும் முகமறியா கருங்குயிலும்

கீச்சிடும் சின்ன அணில் பிள்ளைகளும்

காலைவேளையில் துயில் களைய

கண்ணீராய் ஓடுகிறது என் ஏக்கங்கள் 


கேலியாய் நோட்டம் விடும் அயலவர்

கண்களுக்கு கேளிக்கை வேடம் பூண்ட

கோமாளி நான் மாது உன்னை மறக்க 

கிண்ணத்தில் மது உன்னைப் புசித்தேன்


கைதியாய் மனச்சிறையில் அடைக்கப்பட்டு

குற்றவாளிக்கூண்டில் உன்னை சிந்தையால்

கட்டிக்கொண்டு அவிழ்க்கமுடியா வலிகளை

குவளையில் மதுவோடு பேசித்தீர்க்கின்றேன்


களவாடிய பொழுதுகள் எல்லாம் கன்னி

கைவளையலாய்  கடிவாளமிட

கையில் குவளையின் முகமும் அவள் 

கண்ணாடி வளையலாய் கதைபேசுகின்றேன்


கதை கதையாப் பேசுகின்றேன்

கண்ணீரும் தீரவில்லை கண்ணிலிருத்து

கற்பனையும் மீளவில்லை உன்னிலிருந்து

கைக்குவளை மதுவும் போதவில்லை பெண்ணே

கணத்த காதல் கசடிலிருந்து



Thursday, May 21, 2020

ப்ரியங்களின் வதை




ப்ரியங்களின் வதை எப்பொழுதும் 

மௌனமானதே

அது இருட்டில் மட்டும் 

வெளிச்சமிட்டு காட்டிகையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

அவஸ்தையானதே

அலாதியான அன்பைக் கொண்டு

அநாதையாய் மாற்றுகையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

துயரானதே

நேசிக்கும் நெஞ்சத்தில்

நேசத்தை தேடுகையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

சுவாரஸ்யமானதே

எப்போதாவது இன்னல்கள் விடுத்து

இன்பங்கள் சூழ்ந்திடும் நிலை எதிர்பார்கையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

சுயநலமானதே

இருகண்களில் ஒன்றை மட்டும்

உருத்தி கண்ணீர் காண்கையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

ஆத்மாத்தமானதே

உடலின் காயங்கள்  சரிசெய்துவிடும் என்கையில்

மனதால் வடுக்களின் வலி நித்தம் சுமக்கையில் 


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

ஒருமனமானதே

சொப்பனங்களிலும் கதி கலங்கிடும்

படுபாவி நினைவுகளை மட்டும் தெளிக்கையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

ப்ரியமானதே

ப்ரியமானவரின் அன்புப் பரிசை

பவித்திரமாய் பரிபூரணமாய் ஏற்கையில்

Wednesday, May 20, 2020

கடல் பெண்ணே



கடல் பெண்ணே

உன் கண்ணீர்தான் கடலில் 

உப்பாய்க் கரைந்ததோ

காலங்களும் கடக்க 

உப்பின் செறிவும் அதிகரிப்பதேன்

இன்னும் உன் கண்ணீர்கடல் வற்றாமையா?


கடல் பெண்ணே

உன் சீற்றம் தான் கொந்தளிப்பானதோ

பாரிய அலைவெள்ளத்தில் உயரம்

விண்ணளவைத்தாண்ட உன் கோபத்தணல்

இன்னும் எத்தனை துயரின் பிரதிபலிப்போ?


கடல் பெண்ணே

உன் பொறுமைதான் 

கடல் உள்வாங்கலானதோ

உள்ளிருக்கும் பொறுமை எல்லாம்

எரிமலைக்குமுறலாய் பொழியும் எரிதணலானதோ?


கடல் பெண்ணே

உன் புண்ணியம்தான் அலையானதோ

கறைபடிந்த பாதங்களை கூச்சமின்றி

கழுவி பாவவிமோட்ஷனம் அளிப்பதனாலோ?


கடல் பெண்ணே

உன் நட்புதான் சமுத்திரப்பயணமானதோ

நீண்ட தூர எல்லைகளுக்கு முடிவிடம்கொடுத்து

இரு எதிர்முகங்களுக்கு சந்திப்புக்கொடுப்பதாலோ?


கடல் பெண்ணே

உன் தாய்மைதான் கடல்மீன்களானதோ

வருமானமும் வருவாயும் தேடித்தர

வழிதேடுபவர்கள் வறுமை போக்குவதனாலோ?


கடல்பெண்ணே

உன்காதல் தான் கழிமுகமானதோ

ஆறோடு கூடல் செய்து

இனமற்ற காதலென நிலைநிற்பதனாலோ?



நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...