Wednesday, October 28, 2020

நான் என்றும் என்னுடன்


 














நான் தனிமையில் வாடுவதாய் 

வதந்திகள் பல பேசப்படுகின்றன

தனிமையோடு உறவாடுவதாய் போலியான 

தகவல்கள் கசிந்துகொண்டிருக்கின்றன

நான் அலட்சியப்படுத்தப்பட்டதாய்

வசை நம்பிக்கையூட்டப்படுகின்றன

நான் மனவழுத்ததில் உள்ளதாய்

பலராலும் கணிக்கப்படுகின்றன

நான் என்றும் என்னோடு இருக்கின்றேன்


என் கண்களில் கண்ணீர் வரும்போதொல்லாம் 

என் கரங்கள் துடைத்துவிடுகின்றன

என் வழிப்பயணத்தில் என் பாதங்கள் 

முன்னேறிச்செல் என்று தட்டிக்கொடுக்கின்றன

என் பேச்சுக்களை என் மனம் செவிசாய்க்கின்றன 

மூளை அதைச் செய்ய எத்தனிக்கின்றன

என் கைவிரல்கள் படபடப்பான நேரங்களில் 

என் கை கோர்க்கின்றன

என் கண்கள் நான் மனச்சோர்வடைந்த நிலையில் 

என்னோடு விழித்திருக்கின்றன

இப்பொழுதாவது புரிந்துகொள்ளுங்கள்

நான் என்றும் என்னோடு இருக்கின்றேன்


நான் தனிமையில் வாடுவதாய் 

வதந்திகள் பல பேசப்படுகின்றன

இல்லை

நான் துணிச்சலான மனதுடன் 

அன்றாடம் போராட்டங்களில் 

வெற்றி வாகை சூடிக்கொள்கின்றேன்

தனிமையோடு உறவாடுவதாய் போலியான 

தகவல்கள் கசிந்துகொண்டிருக்கின்றன

இல்லை

நான் சுயமரியாதையுடனும் தன்நம்பிக்கையுடனும் 

நீண்ட கால உறவில் இருக்கின்றேன்

நான் அலட்சியப்படுத்தப்பட்டதாய்

வசை நம்பிக்கையூட்டப்படுகின்றன

இல்லை

நான் தீர்மானிக்கும் முன் நியதி நேர்மை 

மனசாட்சியிடம் 

ஒப்புதல் பெறுகின்றேன்

நான் மனவழுத்ததில் உள்ளதாய்

பலராலும் கணிக்கப்படுகின்றன

இல்லை

நான் மனதிடம் நேசிக்க மட்டுமே 

கற்றுக்கொடுத்திருக்கின்றேன் 

அழுத்தங்களை கண்ணீரோடு 

பகிர்ந்துகொள்கின்றேன்

எப்பொழுதும் தெரிந்துகொள்ளுங்கள்

நான் என்றும் என்னோடு இருக்கின்றேன்






என் பாதி நீ


 














என் பாதியாகிய அவனுக்கு

கற்பனைக்காகிதங்களில்

களையிழந்த கருவிழி மை கொண்ட 

கண்ணீர்த்தூரிகை முனையில்

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


இருட்டின் ஒளி வீச

தலைசாய்த்த தலையணை தெப்பமாக 

மௌனமான வார்த்தைகள் கோர்த்து

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


அச்சிடப்படாத அஞ்சல் முகவரி

வழக்கத்திலற்ற முத்திரை முகம்

பெயரற்ற பெறுநர்

என் கிழிந்த இதயத்தையும் 

இணைத்துப் பசையிட்டு

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


கொடுங்கோபங்கள் வெடித்துச்சிதறும் 

தீக்குழம்பு அதை அன்பை வைத்து 

அணைத்துவிட எண்ணிய என்

முட்டாள்தனமான இதயத்தை

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


இழைத்ததொல்லாம் பிழையென்றும்

பழிச்சொல்லுக்கு விலைபோகாது

நடந்தவை கடந்தவையாகட்டும் என்று

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


கலைந்த முகிற்கூட்டங்கள் கண்ணுக்குள்

பல நிழல்களை விழச்செய்யினும் 

படிந்தது தூசியாகினும் அதைத் துடைக்காது 

காதலோடு கண்ணீர்ப்புன்னகை மலர

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்







Thursday, October 1, 2020

அஹிம்சையின் பொக்கிஷம்


 













அஹிம்சையின் பொக்கிஷம் ஒன்று கண்டீர்

அகிலமெல்லாம் அவர் புகழ் ஓங்கக்கண்டீர்

விழித்தெழும் மனிதம் விதையாய் 

மண்ணின்மைந்தர் அகவிழியில் 

முளைத்திட காரணம் கண்டீர்


பருத்தியின் பசுமை கண்டீர்

பணிவின் பெரும் சிகரம் கண்டீர்

கொடித்தொழும் செந்தணற்கோபம் கூட

முகச்சுருக்கத்தில் மறைந்திருந்த புன்னகையில் 

மறையக் கண்டீர்


அக்கினிக் குஞ்சொன்று கண்டீர்

அப்பழுக்கற்ற தேசபக்தி கண்டீர்

சுவாசிக்கும் ஒட்சிசனினும் கலப்படம் இருக்க

சுதந்திரக்காற்றே உயிர் மூச்சான 

மாமனிதன் கண்டீர்


முதுமையில் இளமை கண்டீர்

முகத்தில் கம்பீர பிரகாசம் கண்டீர்

ஓங்கி நிற்கும் பாரதக்கொடி

பல்தேச மக்களின் தொப்புள்கொடி

உறவெனக் கண்டீர்


ஈர்ப்புவிசை கண்டீர்

ஈரமற்ற இருதயம் கூட மாறக்கண்டீர்

அன்பு தான் அகராதி அகிம்சைதான் 

இலக்கணம் என்ற இலக்கியம் தீட்டிய 

எழுத்தாணி கண்டீர்


கற்களும் கரையக்கண்டீர்

கடமையுள்ளம் உயிர் நீர்க்கக்கண்டீர்

பெற்ற சுதந்திரம் ஒவ்வோர் வீட்டின்

நிம்மதி உறக்கத்தில் லேசான 

புன்னகை பூக்கக்கண்டீர்


தாரகமந்திரம் கற்றுத் தந்தீர்

தலைவிதி புதுவிதியாய் மாற்றித் தந்தீர்

பாரத அன்னையின் மானங்காக்க

பாரத மைந்தனாய் காவியம் ஒன்று 

தலைமுறைகள் தாண்டி கற்றுத் தந்தீர்


 

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...