Showing posts with label Mother. Show all posts
Showing posts with label Mother. Show all posts

Wednesday, October 28, 2020

என் பாதி நீ


 














என் பாதியாகிய அவனுக்கு

கற்பனைக்காகிதங்களில்

களையிழந்த கருவிழி மை கொண்ட 

கண்ணீர்த்தூரிகை முனையில்

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


இருட்டின் ஒளி வீச

தலைசாய்த்த தலையணை தெப்பமாக 

மௌனமான வார்த்தைகள் கோர்த்து

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


அச்சிடப்படாத அஞ்சல் முகவரி

வழக்கத்திலற்ற முத்திரை முகம்

பெயரற்ற பெறுநர்

என் கிழிந்த இதயத்தையும் 

இணைத்துப் பசையிட்டு

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


கொடுங்கோபங்கள் வெடித்துச்சிதறும் 

தீக்குழம்பு அதை அன்பை வைத்து 

அணைத்துவிட எண்ணிய என்

முட்டாள்தனமான இதயத்தை

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


இழைத்ததொல்லாம் பிழையென்றும்

பழிச்சொல்லுக்கு விலைபோகாது

நடந்தவை கடந்தவையாகட்டும் என்று

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


கலைந்த முகிற்கூட்டங்கள் கண்ணுக்குள்

பல நிழல்களை விழச்செய்யினும் 

படிந்தது தூசியாகினும் அதைத் துடைக்காது 

காதலோடு கண்ணீர்ப்புன்னகை மலர

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்







Monday, July 27, 2020

புற்றுநோயாளியின் கர்ப்பம்














உயிர்ப்பிணைப்பில் இன்று ஒரு முடிச்சு
புதிதாய் இடப்பட்டதாக ஒரு சிறு உணர்வு
அதற்கு ஆதாரமாய் தள்ளிப்போன பல நாட்கள்
மயக்கம் மற்றும் வாந்தி


வைத்தியரின் ஆலோசனை தெய்வத்தின் வாக்காய்
காதில் ஒலிக்க கையில் இருந்த ஆதாரச்சான்றிதழில் 
புலன் செலுத்தப்பட்டு ஒருவகை மயக்கநிலை அடைந்திருந்தேன்


மருந்துமாத்திரைகளும் தடுப்பூசிகளும் என்
சின்னஞ்சிறு ஊந்துதுடிக்கும் உயிருக்கு 
வலு என்பதில் எனக்கு வலியே மறந்துவிட்டது 


கணவனின் இருசக்கரவண்டி மென்மையாய்ச் 
செல்லவும் என்னை ஆட்கொண்ட பயம் அவர்
இடுப்பை கைகளால் வளைத்துக்கொள்ள கண்களும்
இறுக சொருகிக்கொண்டன


மண்ணில் சாயமுன் உலகிற்கோர் என்னுதிரத்தின்
சாயலை அவரின் கைகள் தாங்கி முத்தமிடும் சுவடு
என் மனக்கண்ணிற் பதிந்து இதயத்தோடு ஒத்துத்துடித்தது


வாரம் இருமுறை வைத்தியநிபுணரின் வாடிக்கையாளராய் 
குருதி தானம் பெறும் யாசகி 
என் மழலைக்காய் சிறிது திருடிவைத்திருக்கிறேன்


உதிர்ந்த கேஷங்கள் தரை தவழ மிகுதி இருப்பவை 
பின்னலிட்டு நிலைக்கண்ணாடியில் விம்பமாய் 
ஜொலிக்க வயிற்றின் தொந்தியின் அழகு இமைக்க மறுக்கிறது


முதுகெலும்பின் தண்டுவடம் ஊசி வலியில் 
நொய்தலாக பேழை வயிற்றின் சுமை சுகத்தின் 
கணமாய் தலை நிமிர்த்திய நேர் நடையில் கௌரவம் பெறுகிறது


மெலிந்த தேகத்தில் சுவாசிக்கத் திடம் இன்றி 
ஒட்சிசன் முகக்கவசத்தின் துணையோடு 
என் சிறு உயிரும் சுவாசிக்கின்றது


ருசியறியா நா உணர்வற்று உணவை 
வெறுப்பினும் உட்சாகமாய் வேண்டி 
விரும்பி உண்கின்றேன் ஊட்டச்சத்தின் பிரதிபலன் 
என் சிசுவிற்கு வந்தடையட்டும்


சீராட்டி பாராட்டிட உன் பக்கமில்லா 
பாவியாவேன் என்றே உன் பாதம் தொட 
இறையாசியுடன் ஒரு பெண் குழந்தைக்காய் 
அனுதினமும் வேண்டிநிற்கின்றேன்


பாவ விமோட்ஷனம் பெற தகுதியற்றவள் நான் 
சுயநலக்காரி இவ்வுலகில் உன்னைப் பிரசவிக்க 
புற்றுநோய் பூண்ட தேகத்தை ஆடையாய் அணிந்துள்ளேன் நிரந்தரமாய்


தாயாய் கடமையாற்ற என் இன்னுயிர் உலகுநீர்ப்பினும் 
சேயாய் எனை பாவனை செய்ய
உன் அப்பாவின் மறு தாயாய் தாலாட்ட தினமும்
உன்னைத் தடவிக்கொடுத்து மன்றாடுகின்றேன்


எத்தனையோ சாகசங்கள் புரியும் பெண்மணிகள் 
பலர் மத்தியில் சாதனையாய் உனை கருவிற்சுமந்து 
சுகநலத்துடன் ஈன்றெடுப்பதே
என் வாழ்நாட்சுமைகளிற்கேற்ற செல்வம்

Sunday, March 10, 2019

அம்மா உன் புகைப்படம்


தூசும் சாம்பலும் படிந்த 
காட்சட்டையும் சேட்டும்
இடுப்பைவிட்டு வழுகிவிடாமல் இறுக்கமாய் வைத்திருக்கும்
அறுந்து தொங்கும் அப்பாவின் இடுப்புப்பட்டி
வெயிற்சூட்டிலும் சுள் என்று 
சுடுகிறதம்மா தலைக்கவசம்
அதை கழற்றிவைத்துவிட்டால்
போய்விடும் என்தேசம்
டிக் டிக் டிக் உடன்
என் இதயமும் சேர்ந்து
ஒவ்வொரு நொடிக்கும் துடித்துக்கொண்டிருக்கிறது
மூச்சு விட முடியவில்லையம்மா
சுற்றி எங்கும் மணல் மூட்டைகள்
இடையே தெரியும் நீக்கலுக்குள்
துப்பாக்கி முனைகள்
இரவுபகல் தெரியவில்லை
பசி வயிற்றைப் பதப்படுத்தி
கண்களை செருக்கிக்கொண்டது
இருந்தும் விழிப்புடன் இருக்கின்றேன்
உதிக்கின்ற சூரியக்கதிர்
என்மீது படுமென்றில்லை
என் தாய்க்கொடி காற்றில்
பறக்கும் போது கம்பீரமாக ஆதிக்கமற்ற
நிலையை ஊர்மக்கள் கண்டுகளிப்பதற்கு
குபீர் குபீர் என்று சன்னல்சத்தங்கள்
படையெடுப்பு ஆரம்பித்ததற்கான
ஆரம்ப மணியாய் கேட்கிறது
ஒரு கையில் துப்பாக்கி
மறுகையில் என் பணமுடிப்பு
பணத்தைப்புரட்டி வங்கியில்
வைப்பு செய்வதிற்கில்லை
முடியப்போகும் என் விதிக்கு
முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன்
வித்திட்டு என்னை பெருவிருட்சமாக்கிய
என் அம்மா உன் முகத்தை
தவமாய் ஒருமுறை
நேரில் காணாத பாவி நான்
உன் புகைப்படத்தை கண்ணீரால்
கழுவி பாவ விமோர்ச்சனம் பெறுகின்றேன்
தலைப்பிள்ளையாய் தந்தை உயிரை துறந்தபின்
வீட்டை மட்டுமல்ல நாட்டையும் பத்திரமாய் பாதுகாத்திட
என் தங்கைமார்போல் பல பெண்கள்
இரவில் அச்சமின்றி தூங்கிடவும்
பகலில் தைரியமாய்
வெளி உலகைக்கண்டிடவும்
என் கைகள் கறைபடிந்திட
இளவயதில் ஆயிதம் தரிக்க
உன் கண்ணீரால் என்னை
வழிமறித்தாய்
பாசம் என்னைக்கட்டியபோதும்
பலமுறை முயன்றுதான்
உன்னிடமிருந்து விடைபெற்றேன்
இருந்தபோதிலும் உன் கைபட்ட
ஆறியகஞ்சி வாசனை
என்னை உன் இடத்திற்கு
அழைக்குதம்மா
சூரியக்கதிர் படர்கிறதம்மா
வீட்டை இனி நன்கு நீ
திறந்து வைக்கலாம்
அலுமாரியில் அடுக்கிவைத்த
புதிய துணிகளையும்
அணிந்துகொண்டு கோயிலுக்குச் செல்லலாம்
போய்வரும் வழியில் தரைமட்டமாகி இருக்கும்
அந்தப்பெரிய மைதானமருகே சென்றால்
மகனே என ஒருமுறை அழுது
வாய்கரிசியும் போட்டுவிட்டுச் செல்
என் உடலை நீ கண்டுபிடிக்க
சிரமம் கொள்வாய் என நன்கு அறிவேன்
அம்மா உன் புகைப்படம் இறுகிப்பற்றியநிலையில்
தலையற்ற முண்டம் இருக்கும்
அதற்கு பிண்டம் வைத்து ஈமைக்கிரியைகள்
செய்வதற்கு வீணாய் அலையாதே
அதை வாரியணைத்து மகனே என
ஒருமுறை மட்டும் அழுதிடம்மா

Monday, January 21, 2019

உண்மை தேவதைகள்


சிறுவயதில் நான் படித்த
கதைப்புத்தகங்களிலும் என் பொழுதை
களிப்புடன் கழிக்க நான் பார்த்த
கார்ட்டூன்களிலும் தான் நான் பார்த்திருந்தேன்
தேவதைகள்
கண்களை கூசிடச்செய்திடும் வெண்நிறமாய்
தூரமாய் இருந்து பார்த்திடவே
பால் நனைந்த பஞ்சாய்
மென்மையாய் காட்சியளித்திடுவார்கள்
முகத்தில் எப்பொழுதும் புன்சிரிப்புதான்
அழகான ஆபரணங்களும் விலைமிக்க
ஆடையும் சீராக அலங்கரிக்கப்பட்ட
வாரிய நீள்கூந்தலும்
அப்பப்பா இன்னும் அவர்களை
வர்ணித்துக்கொண்டே போகலாம்
முக்கியக்குறிப்பு குழந்தைகள்
ஆசையாய் எதைக்கேட்டாலும்
அவர்களின் அதீத சக்தியால்
ஒரு நொடியில் கொண்டுவந்துவிடுவார்கள்
நானும் ஓர் தேவதையின் மகள் தான்
சிறுவயதில்லை இது புரிந்து கொள்ளும் பருவம் தான்
கதைப்புத்தகங்களும் இல்லை என் பொழுதை
கழிக்கும் நேரமும் இல்லை
நிஜ வாழ்க்கை தேவதைகள்
பூசி மெழுகிடச் செய்திடும் வர்ணப்பூச்சுக்கள்
இல்லை சாதாரண வெயில்பட்டு கறுத்துப்போன தேகம்
வறுமையின் வரட்சி முகத்தில் ரேகைகளாய்
சுருக்கம் பெற்று பார்ப்பதற்கு முதிர்ச்சியுற்ற
தோற்றமாய் வாழ்கிறார்கள்
மாத வருமானம் கையைக் கடித்த போதிலும்
எதையும் சமாளித்து பிள்ளைகள் முன்காட்டிடாமல்
ஒரு புன்னகை செய்வார்கள்
அந்தப்புன்னகையில் கண் தெரியாமல் மூழ்கிப்போய்விடலாம்
தனக்காய் செய்த தாய்வீட்டு சீதனமான நகைகளை
அடகுபிடிக்கும் கடையில் அலங்கரித்தபோதும்
அழகாய் என்மகள் அணிந்திட
சிங்கப்பூர் நகை பத்திரமாய் அலுமாரியில் அடுக்கிவைப்பார்கள்
ஆங்காங்கே கிழிஞ்சல்களைத் தைத்தே
புத்தாண்டு முதல் நத்தார் வரை
பல ஆண்டுகள் கழித்திடுவார்கள்
பட்டுப்பாவாடை கட்டி செல்லமகள் வெட்கம் கொள்ள
புகைப்படமெடுத்து தினம் இரசித்திடுவார்கள்
அனைத்து சுமையையும் பிள்ளைகளிடம் இருந்து மறைத்தாலும் இளநரை காட்டிக்கொடுத்துவிடும்
அதை சீராக வாரி சிகை அலங்காரம் செய்திட
நேரம் செலவிடாமல் ஒற்றைக்குடும்பியுடன்
பெற்ற மக்களுக்கு கடமை புரிந்திட
அடுப்படியில் அரைவயிற்று உணவுடன்
ஆசையாய் ஆகாரம் செய்திடுவார்கள்
எத்தனை கோடி வைத்திருந்தாலும்
நாட்டினை செழிப்பாய் முன்னேற்றிட
உள்ளூர் அமைச்சு வெளிநாட்டில்
கையேந்தியும் முழுமைபெறவில்லை
பெண் தேவதைகளே கைப்பிடியிலும்
அரிசி மூட்டைகளிலும்
தலையணை உறையினுள்ளும் சேமித்து
வைத்திருக்கும் காசு எப்படி
உங்களுக்கு மட்டுமின்றி பிள்ளைகள்
எங்களுக்கும் பகட்டான வாழ்க்கைச் செலவிற்கு
போதுமானதாய் செலவு செய்கிறீர்கள்?
நான் கண்ட நிஜ தேவதைகள் நீங்கள் தான்
எந்தக் கட்டுக்கதையிலும் கற்பனைகளும்
எட்டாத சக்தி நீங்கள்
உண்மை தேவதைகள்

Thursday, November 22, 2018

ஒரு பெண் பிள்ளை வேண்டும்


ஆறு மாதமும் ஆகிவிட்டது
அடிவயிற்றில் கணமோ கூடிவிட்டது
இறுக்க அணைத்துவிட நினைக்கும் உன் நினைப்பையும்
சற்று தூரமாகத்தான் வைத்துக்கொள்ள வேண்டும்
ஆசையாய் என் விரல்பிடித்து வாரிசாய் ஆண் பிள்ளை ஒன்று
கேட்கின்றாய்
உன் ஆசைக்கு ஒரு தவணை சொல்லி இம்முறை வேண்டி நிற்கின்றேன்
உன்போல் ஒரு பெண் பிள்ளை போதும்
ஊர் முழுக்க உன் அத்தை பேரன் வரப் போகிறான் 
பஞ்சு மெத்தை சுகம் போதாது என் மடியில் தாலாட்டிட வேண்டும் என்று வைத்தியம் பார்க்கச் சென்றுவிட்டாள்
தோப்பு துறவு எல்லாம் என் பின்னே ஆளவே கருமாரி 
அருளாய் எனக்கொரு பேரன் வரப்போகிறான் என்று 
கோவில் கோவிலாய் நேர்த்தி வைத்துத் திரிகிறார் உன் மாமனார்
ஒற்றையாய் ஊரவர் உறவினர் செல்லப் பிள்ளையாய்
பெயர் பெற்ற எனக்கோ ஆசையாய் மூத்த பிள்ளை 
ஆண்குழந்தையாய் இருக்கட்டும் என்றேன்
அடம்பிடிக்கும் நீயோ
ஒரு பெண்பிள்ளை மட்டும் போதும் என 
முகத்தைச் சுழிக்கிறாய்
அடி கள்ளி பொதுவாய் ஆண்மகனைத் தான்
பெண் எதிர்பார்ப்பாள் உன் ஆசை வித்தியாசமானது என்றேன்
உன் அன்பில் திகைப்புற்ற நானோ உன் சாயலில் ஒரு பெண் பிள்ளை வேண்டும் என உறுதியாய் திடம் கொள்கின்றாய்
பெண் பிள்ளையவள் இன்னோர் வீட்டில் குடிகொள்பவள் லட்சுமிகரமாய் பெற்றெடுத்தும் இலட்சுமியுடன் தான் அவளை வரவேற்பார் பெற்றெடுத்துத்தா முத்தாய் ஒரு மகன்
இலட்மிசுமியுடன் சாமுந்திரிக லட்சணமாய் அழைத்துவருவான் ஒரு பெண்ணை
பெண்பிள்ளையவள் தந்தை தான் தன் முதல் உலகம் என்றாலும் தாயுடன் எவ்வளவு கடிந்து கொண்டாலும்
அன்னைக்காய் ஓர் இடம் அவள் மனதில் வைத்திருப்பாள்
பால் அருந்தும் போது அன்னை முகம் கண்டு சிரிந்து நிற்பாள் அவள் கூந்தலிலே வளையம் செய்து இழுத்திருப்பாள் வண்ணம் அது அடையாளம் கண்டு தாயின் திசைக்கு தலை அசைத்து நிற்பாள்
சலவை செய்துவைத்த புடவையை கட்டி அழகு பார்த்து கசக்கியிருப்பாள்
மல்லிகை அது கொடிமீது மணம் வீசவில்லை என் மகள் தலையில் சூட்டும் வரை பொழிவிழக்கவில்லை
காலில் கட்டிய கொளுசு சத்தம் அவள் இடம் காட்டிவிடும் என சிந்திக்காது மறைந்து நின்று வேடிக்கை காட்டுவாள்
ஒன்றும் அறியா அப்பாவியாய் அவளிடம் நானும் தோற்றுப்போவேன்
அவள் கூந்தல் வாரி ஜடை போட்டு அலங்கரிப்பேன்
காதுக்கு ஜிமிக்கி மாட்டி இரசித்து நிற்பேன்
பட்டுப்பாவாடை காஞ்சிபுரத்தில் எடுத்து வந்து அவள் அணிந்துவர கோவிலில் திருவிழா வைப்பேன்
விதவிதமாய் வளையல் வாங்கி அவள் கை நிறைய அழகு பார்ப்பேன்
காலையில் அவள் விழித்தெழ சேவலும் வாங்கி வைப்பேன் நல்லதாய் பல கற்றிட நூல்களும் தேக்கிவைப்பேன்
சத்துணவாய் பல கண்டறிந்து ஊட்டிடுவேன் 
சக்திமிக்க வலிமையான பெண்ணாய் அவளை மாற்றிடுவேன்
அடுப்படியில் சிறு துணைக்காய் அவளை கூப்பிடுவேன் 
என் அன்னை சொல்லிக்கொடுக்கா அனைத்தையும் 
அவளுக்கு புகட்டிடுவேன்
வயதிற்கு வந்தவுடன் சிறப்பாய் எல்லாம் செய்திடுவேன்
நான் அற்ற உலகத்தில் அவள் பாதம் பதிக்க அறிவுறை உரைத்திடுவேன் 
பெண்பிள்ளைதானே என ஏளனம் செய்யும் ஊரவர் முன்னே 
துணிச்சலாய் அவள் நடக்க பக்கபலமாய் நின்றிடுவேன்
திருமணம் அதில் அவள் மனம் கேட்டிடுவேன் திருத்தமாய் துணை தேட பொருத்தமாய் சில விடயம் காதில் ஓதிவைப்பேன் 
அச்சம் அவள் கொள்ளும் போது ஆதரவாய் வார்த்தை உரைப்பேன் எதையும் அவள் எதிர்கொள்ள ஏணிப்படியாய் தாங்கிநிற்பேன்
கரு ஒன்றை அவள் சுமக்கையில் மறுபடியும் அவளை சுமந்து செல்வேன் பிரசவறையில் அவள் வேதனை கண்டு மறுபடியும் என் வலியை பொறுத்துக்கொள்வேன்
பிள்ளை ஒன்று அவள் பெற்றெடுக்கையில் என் உயிரை கையில் வைத்திருப்பேன்
பெண்ணானவள் பூரணமடைந்ததை எண்ணி இனிவரும் கருமம் ஆற்றிநிர்பேன்
இத்தனை சுகங்களும் அடைந்துவிட ஒரு பெண்பிள்ளை போதுமென்று இத்தனை அழகாய் சொல்லிவிட்டேன்
இனி உம் விருப்பமென பேசிவிட உம்மிடம் வார்த்தையின்றிய நிலை உருவாக்கி நானோ என் பெண்பிள்ளைக்காய் பிரசவநாட்களை எண்ணிக்கழிக்கின்றேன்

Tuesday, October 23, 2018

அவள் தான் என் அம்மா


ஆங்கிலம் பெரிதாய் தெரிந்திராதவள்
என் ஆசைக்காய் முயற்சித்து உச்சரித்து விடுவாள்
என் விருப்பங்கள் பெரிதாய் அறிந்திராதவள்
விரும்பியதை வாங்கித் தந்து என்னை சமாதானம் செய்திடுவாள்
தன்விருப்பத்தில் தெரிவுகளை மேற்கொள்ளாதவள்
என் விருப்பத்தை எப்பொழுதும் ஏற்றிடுவாள்
தன் பசி அறியாது அடுப்படியில்
என் பசி போக்க காய்ந்திடுவாள்
வண்ணங்களில் சேலை அணிந்திடாதவள்
வண்ணமயமாய் என் வாழ்வை மாற்றிட போராடிடுவாள்
துன்பங்கள் பல சகித்துக்கொண்டவள்
என் முகம் துவண்டதைக்கண்டு
கண்ணில் உதிரம் வடிப்பாள்
கணவன் அவன் உயிர்துறக்கையில் கைம்பெண்ணாய்
தந்தையுமாகி நின்றவள் அவள்
பெற்றகடனுக்கு நான் பெரிதாய் உனக்கு
ஏதும் செய்யவில்லை எனினும்
மற்றோர் முன் என்றும் உயர்வாய்க்கூறிடுவாள்
தூய்மை அது வெண்மை மட்டுமில்லை
அதை நான் அச்சொட்டாய்க் கண்டதில்லை
கருமை நிறத் தேகத்திலும் தூயவள்
அவள் தான் என் அம்மா

அடுப்படியில் அம்மா உன் நேசம்


அடுப்படியில் அம்மா உன் நேசம் கண்டு
எத்தனைமுறைதான் நான் வியப்பது?
அதிகாலை எந்த வேலையும் இல்லாத சேவல் கூட
உறங்கிக்கிடக்கையில் பாத்திரம் தேய்க்கும் சத்தம் 
கேட்டு தான் நான் பல முறை விழித்தெழுவேன்
கொட்டும் பனியில் எனக்காய் ஆகாரம் செய்திட
பாத்திரங்கள் சுத்தம் செய்வதில் என்னை கவனித்திருக்கமாட்டாய்
ஒரு சாண் வயிற்றுக்கேற்ப உண்டு நீர் அருந்திடவேண்டும்
என்பேன் பாடசாலைச் சீருடையுடன்
இன்னுமொரு தோசை அடுப்பில் இருக்கிறது
என்றே மன்றாடி ஊட்டிவிடுவாய்
பரீட்சைகாலம் நெருங்கவே உண்ண உறங்க மனமின்றி
என் சிந்தனை எதயோ நாட
ஊட்டச்சத்து உணவின்றி என் மகள் ஊக்கம் குறைந்தது என்பாய்
கோபம் உன்னில் காட்டிட சந்தர்ப்பமாய் பட்டினி
கிடந்திடுவேன்
கண்கலங்கிய நீயோ ஊட்டிவிட முன்னும் பின்னுமாய்
கெஞ்சிடுவாய்
அன்பை வெளிக்காட்டிட நீ வாய்மொழியால் என்னிடம்
சொல்லாவிட்டாலும்
கரி படிந்த அடுப்படிச் சுவர் இன்னும்
தீயாய் என்னைச் சுட்டுக்கொண்டிருகிறது அம்மா
உன் கையால் ஊட்டிவிடும் சோற்றுருண்டையில்
அறுசுவை தெரியவில்லை மாறாக
உன் அடுப்படி நேசம் தெரிகிறதம்மா

Saturday, October 13, 2018

அம்மா எனக்கோர் மாப்பிள்ளை பாருங்கள்


அம்மா எனக்கோர் மாப்பிள்ளை பாருங்கள்
திருமணவயதை ஓரளவு அடைந்துவிட்டேன்
உங்கள் கைப்பக்குவத்தில் அறுசுவை விருந்தளிப்பேன்
இல்லத்தரசிக்கேற்ப ஓடியாடி உங்கள் பெயரைக் காப்பாற்ற 
மாமியார் வீட்டில் வேலை செய்வேன்
சடங்கு சம்பிரதாயங்களைக் கொஞ்சம் சொல்லித்தாருங்கள் போகும் இடத்தில் கடைப்பிடிக்க
மாப்பிள்ளை அவர் உங்கள் விருப்பம்
உங்களின் எந்தத் தெரிவையும் நான் ஏற்றுக்கொள்வேன்
உயரம் வயது நிறம் குணம் அழகு படிப்பு பதவி பணம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை
ஏனெனில் பார்த்துப் பார்த்து நான் தேடிய தேடலில் ஏமாற்றப்பட்டுவிட்டேன்
அவன் நிறம் சற்று கறுப்பு அதில் எனக்கோர் விருப்பு
அவன் வார்த்தைகளால் மட்டுமல்ல அவ்வப்போது பார்வைகளாலும் என்னை வளைத்துவிடுவான்
எனக்கேற்ற உயரம்தான் அதை அளந்துபார்க்க அருகில் பலமுறை நின்றிருப்பேன்
அவன் மொழி தமிழ்தான் ஆதலால் தமிழ் மேல் அதீத பற்றுக் கொண்டேன்
அவன் குணம் குழந்தைத்தனமானதுதான் என் கோபத்திலும் இரசித்திருந்தேன்
அவனுடனான நேரம் எல்லாம் புன்னகை மட்டும்தான் அதனால் செல்லச்சண்டை போட்டு வாக்குவாதின் பின் அவன் சமாதானத்திற்காய் காத்திருந்தேன்
இத்தனையுமாய் அவனை நான் இரசிக்கையில் இரசிப்பதற்கு மட்டும் என்னை தேர்ந்தெடுத்து
பின் இரசிக்கப்பட்ட பொருளாக மாற்றிவிட்டான்
இத்தனை காலம் பொறுமையாய் இருந்து தேர்ந்தெடுத்த தெரிவு என்னை ஏளமாய் பார்க்கையில் உங்கள் தெரிவு எதுவாக இருந்தாலும் மனமில்லாத நிலையில் ஏற்றுக்கொள்கின்றேன் அம்மா

Thursday, October 11, 2018

நான் வரைந்த சித்திரத்தை நீ அறிவாயா அம்மா❤️

குழந்தையாய் உன் கரத்தில் தவழ்ந்தபோது என்னை அரவணைத்து தந்தாய் முதல் முத்தம்
உன் ஓசை கேட்டு திரும்பிய என் புன்னகைக்கு
கண்மணி என்னைக் கண்டு கொண்டாய் என இரண்டாம் முத்தம்
உன் மொழி பேசிட நான் முயற்சித்து பல ஓசைகள் எழுப்பிடத் தந்தாய் மூன்றாம் முத்தம்
பிஞ்சு விரல் நீட்டி உன்னைத் தொட்டு புன்னகைக்கையில் 

உள்ளங்கைகளில் தந்தாய் நான்காவது முத்தம்
பசி தீர்க்கும் போது உன் முகம் கண்டு அருந்திய அமிர்தம்
வாசனை நுகரந்து தந்தாய் ஐந்தாவது முத்தம்
உன் கருங்கூந்தல் தன்னை இறுகப் பற்றிக் கொண்ட நான்
என்னை விட்டு அகலாதே என சமிஞ்சை செய்திட
கெஞ்சலுடன் தந்தாய் ஆறாவது முத்தம்
உன்னையும் தான்டி புதிய உலகமாய் தந்தையை அறிமுகம் செய்து பெருமையுடன் தந்தாய் ஏழாவது முத்தம்
நான் ஈன்றெடுத்த பொக்கிஷம் என்று ஊரறியக் கூறி
கவர்வமாய்த் தந்தாய் எட்டாவது முத்தம்
வெயிலோ மழையோ பிணியோ குளிரோ எதுவும் உன்னைத் தாண்டி வராமல் காத்துத் தந்தாய் ஒன்பதாவது முத்தம்
பல முயற்சியின் பின் சற்றும் தழராத நான்
அம்மா எனக்கூறிட ஓட்டு மொத்த அன்பையும் கொட்டி
திகட்டாமல் என் உயிரே எனத்தந்தாய் பத்தாவது முத்தம்
இந்த பத்து முத்தங்களை நான் என்றும் மறவேன் அதுபோல்
பத்து மாதம் கருவறையில் முத்தத்தால் நான் வரைந்த சித்திரத்தை நீ அறிவாயா அம்மா
❤️

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...