Showing posts with label Others. Show all posts
Showing posts with label Others. Show all posts

Friday, September 11, 2020

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி



















கரு மை தீட்டி கருவிழி மெருகேற்றி 

சின்னஞ்சிறு குங்குமச்சிமிழ் பொட்டிட்டு

கூரிய அரிவாள் புருவங்களை சற்று 

உயர்த்தி தலை நிமிர்ந்து நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


முன்னழகு பின்னழகு கன்னியவளோ பேரழகு

ஒரு கணம் கண்ணிமைக் மறுக்கவே

தலைக்கேறும் போதை ஏற்ற 

அன்னம் அவளிடம் பழக வேண்டும்

ஓர் புதுநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


தீயும் தீய்ந்துபோகும் பாவியவள் பார்வை

வளைவுகளே வியர்ந்து பார்க்கும் வஞ்சியவள் 

மெல்லிடை

கொடிகள் படரத்துடிக்கும் கொஞ்சுங்கிளி கொடியிடை

வேடிக்கை பார்ப்பவர் ஏக்கத்தில் வாடித்துடிக்க

இடையில் நளினநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


சலனமற்ற பஞ்சு நடையாள் பவனி வரும் ஓசை 

மலர்களும் மலர்ந்திட விரும்பிடும் ஓர் இசை

திரண்டு வரும் மக்கட்கூட்டத்தின் நடுவே 

வேகவேகமாய் மின்னல்நடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


காற்றின் எடையில் இரட்டிப்பாய் இருந்திடுவாள்

கனத்த பையை தோளில் சுமந்தபடி

துணையற்ற பயணத்தில் பாதச்சுவடுகளின்றி 

தூயநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


பேச நான் முயன்று முன்னேறுகையில்

முகபாவணையில் மிரட்டி மிரளச்செய்கிறாள்

போ என்று என் அறிவுக்கு அவள் தகவல் தெரிவிக்கமுன்

வெடித்துச்சிதறும் பல மனிதசடலங்களுள்

வெற்றி வேட்கை தணிந்தநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


பட்டங்கள் பல பெற்றவள் பல துறையில் தேர்ச்சி கண்டவள் 

வறுமை எனும் கோட்டின் கீழ் கொடும்பிடியில் 

விடுபட இல்லையாம் அவளுக்கு ஓர்

நிரந்தர உத்தியோகம்

பலன் வேண்டி தேடித்திரிந்த இடமெல்லாம் 

சேலை அவிழ்க்க பணியாதவள்

பணமெனும் பேருதவிக்கு உயிர்துறக்க நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


அழகில் உண்டு ஆபத்தென அடுத்தவர்கள் 

சொன்னகதை நிஜம்படவே

ஆசிட் வீச்சில் உருகுலைந்த அழகிய முகம்

மறைத்துக்கொண்டு சமூகசீர்திருத்தவாதியாய் 

தற்கொலைக்குண்டுத்தாரியாய் நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


இரும்பைக்கொண்டு பட்டை தீட்டினாலும்

அவள் உள் இலவம்பஞ்சு இதயம் ஒன்றின் ஓரத்தில்

பெண்மைக்கான காதல் காவியம் அவள் 

மறைத்துக்கொண்டு சீரற்ற இந்த சமூகம் சீர்கொள்ள

அஹிம்சையின்றி ஆயுதம் தேடி நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி





Saturday, May 9, 2020

முகத்திலிரண்டு புண்ணுடையோர்




அறம் ஏற்று அகம் பெருமிதம் 
கொள்ளக் கற்றோர் முகத்தில் இரு கண்களும் 
அறிவிலார் கல்லாதோர் முகத்திலிரண்டு 
புண்ணுடையோர் என வள்ளுவன் வாக்கில்
சற்றுத் திருத்தம் அதை எழுதிக்கொள்வீர் 

கற்பதிலும் அதை மனதார ஏற்பதிலும் 
முற்போக்குச்சிந்தனையாய் எழுத்தறிவித்தவனே
அநீதி கண்டும் சீறும் தணல் சீற்றம் தாழாது 
விழியோரம் சிறு வெறுப்பைக் காண்பிக்காதவரே
முகத்திரண்டு புண்ணுடையார்

வஞ்சனையே வைராக்கியமாய் அகில 
நன்மைபயப்பிப்போர்  சூழ அராஜகமாய்
இன்றும் பல திரௌபதிகளின்  வஸ்திரம் 
களைய வல்லவர்களின் துணிகரச்செயல் கண்டும் 
கண்களை கருங்கற்கள் போல் விழிதிறக்கவிடாதோரே 
முகத்திரண்டு புண்ணுடையார்

பசித்தழும் பச்சிளங்குளவி கதறியழ கண்ணீர் வற்றி
கையேந்தும் திருவோட்டிலும் கால்வாய் கஞ்சிக்கும் 
மிஞ்சாத குற்றி அதையும் பொறுக்கி சீவனமாக்கும் 
கைம்பெண்களின் விலைபேசும் தர்மவித்துவான்களே
முகத்திரண்டு புண்ணுடையார்

வீதியோரமாய் நடைபிண உற்று ஓருயிர் துவண்டும்
நா நனைக்க ஒரு துளி ஜலம் பருகவைக்காதவன்
வாழ்க்கையிலே நடைபிணமாய் அலைய 
மதுவில் மதிமயங்கிக்கிடப்போரே
முகத்திரண்டு புண்ணுடையார்

கூப்பிட்டக்குரலுக்கு செவிசாய்த்தும்
ஏற்புடைய கருமத்தை விலத்தியும்
அல்லற்படும் அன்னையும் பிதாவும்
முதியவர் இல்லத்தில் என்ன சொகுசு காண்பர் 
என்று கெஞ்சிக்கேட்டும் அதில் சித்தம்கொள்ளாது
பஞ்சணையில் நிம்மதித்தூக்கம் உறக்குபவனே
முகத்திரண்டு புண்ணுடையார்





Friday, May 1, 2020

நன்றி நவில்கிறேன்



இறைவா
உன் நல்லாசியுடன் 
என்றும் திளைப்பூட்ட 
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

நெற்றிமீது தரிக்கும் குங்குமம்
மூன்று இச்சியளவு பெருமையுடன்
 தினம் உச்சி ஏறுவதில்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

வாசம் வீசும் மலர்களும் 
அப்பன் அண்ணன் இன்றி
அகிலமாய் ஆண்மகன் ஒருவன்
சூட்டி அழகுபார்த்திட 
அருகதையுடையன் என்பதில்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

வரப்பிரசாதமாய் கழுத்தில்
மஞ்சட்குங்கும தாலிச்சரண்
கண்ணில் ஒற்றி கலியுகவரதனை
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

மெல்ல நடக்கையில் 
ஒலி மீட்டிடும் கால்விரல்களில் 
வெள்ளியாய் மின்னும் மெட்டி 
நரம்புகளில் சுருக்கென்று அவன்
அன்பை ஆயிரம் முறை நொடிப்பொழுதில் உணர்த்திடும்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

பட்டுவண்ண சேலையில் பரந்தாமன்
கைபட்ட வண்ணம் மடிப்புகள் கலைவில்
கசங்கிய காதல் மொழி உரைத்திடும்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

அறநெறிசாட்சியாய் அக்கினி சாட்சியாய்
அருந்ததி சாட்சியாய் ஆண்டவன் சாட்சியாய்
உற்றார் சாட்சியாய் உறவினர் சாட்சியாய்
நீழ்வாழ்வாய் ஏழ்ஜென்ம பந்தம்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

வெகுமதியாய்க் கிடைத்த புது சன்மானம்
அவன் பெயர்முன் இணைக்கும் சொல்லாகி 
என் பெயர் மறக்க வந்த திருமதி
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்


Sunday, March 10, 2019

கோணிப்பை


என்னைக்கூட தலைப்பாக எடுத்து
நேரத்தை செலவிட்டு
கவிதை படைப்பீர்கள் என
கனவிலும் நான் கண்டதில்லை
உயிரற்ற பொருள்தான் நான்
இருந்தாலும் இதயமுள்ளவர்கள் சற்று
எனக்காக ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்
ஆதிகாலத்தில் மனிதனின் திறமையால்
மெல்லிய சணற்கையிறுகளால்
பிறப்பெடுத்து கோணிப்பை என்றும்
பெயர் பெற்றேன்
இளவயதில் நான் துடிப்பாக
இருந்ததால் தான் என்னவோ
பொருட்களைப் பத்திரமாகப் பாதுகாக்க
என்னுள் வைத்து என் கழுத்தை
இறுக கட்டிவிடுவார்கள்
மூச்சுத் திணறலாக இருந்தாலும்
என்மேல் மனிதர்கள் கொண்ட
நம்பிக்கைக்காக வீரமாக சகித்துக்கொள்வேன்
சற்று நான் நடுத்தர வயதை அடையவே
வீட்டை அலங்கரிக்கவும்
சுவரில் உள்ள ஓட்டை உடைசல்களை மறைக்கவும்
பலர் என்னைப் பங்குபோட்டார்கள்
வீதியில் படுக்கும் ஏழைகளுக்கு
கதகதப்பளிக்கும் கம்பளி வீடும் நான் தான்
என் கிழப்பருவத்திற்கூட
கால்களைச் சுத்தம் செய்யும் பொறுப்பளித்து
வாசற்படி அருகே என்னை விட்டுவிடுவார்கள்
நீங்கள் எத்தனை பருமனாக
இருந்தாலும் என்னை நம்பி
வாழ்வாதாரத்தை நடத்தும்
குடும்பங்களை எண்ணி
பொறுமை காத்திடுவேன்
இப்படியே என் சந்ததியினர்
வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்த பூமியில்
நவீன மார்க்கம் தழுவும் இந்த மனிதர்கள்
எங்களைத்திரும்பிக்கூட பார்ப்பதில்லை
அவர்களுக்கு எம்மவர்களைக் கண்டால்
வெட்கம் போல இருக்கிறது.
நான் சுயநலவாதி அல்ல
என்னை நம்பியவர்களை
கைவிடக்கூடாது என சிறு நல்ல உள்ளம்தான்
ஏதோ ஒருவகையிலாவது
என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
அல்லது எங்களை நம்பி வயிற்றை நிரப்பும்
ஏழைகளுக்கு ஏதாவது வழியைக்காட்டுங்கள்
இப்படிக்கு உங்கள் தாத்தா வீட்டில்
ஒருமூலையில் முடங்கிக்கிடக்கும்
வயது முதிர்ந்த
கோணிப்பை

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...