Friday, September 11, 2020

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி



















கரு மை தீட்டி கருவிழி மெருகேற்றி 

சின்னஞ்சிறு குங்குமச்சிமிழ் பொட்டிட்டு

கூரிய அரிவாள் புருவங்களை சற்று 

உயர்த்தி தலை நிமிர்ந்து நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


முன்னழகு பின்னழகு கன்னியவளோ பேரழகு

ஒரு கணம் கண்ணிமைக் மறுக்கவே

தலைக்கேறும் போதை ஏற்ற 

அன்னம் அவளிடம் பழக வேண்டும்

ஓர் புதுநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


தீயும் தீய்ந்துபோகும் பாவியவள் பார்வை

வளைவுகளே வியர்ந்து பார்க்கும் வஞ்சியவள் 

மெல்லிடை

கொடிகள் படரத்துடிக்கும் கொஞ்சுங்கிளி கொடியிடை

வேடிக்கை பார்ப்பவர் ஏக்கத்தில் வாடித்துடிக்க

இடையில் நளினநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


சலனமற்ற பஞ்சு நடையாள் பவனி வரும் ஓசை 

மலர்களும் மலர்ந்திட விரும்பிடும் ஓர் இசை

திரண்டு வரும் மக்கட்கூட்டத்தின் நடுவே 

வேகவேகமாய் மின்னல்நடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


காற்றின் எடையில் இரட்டிப்பாய் இருந்திடுவாள்

கனத்த பையை தோளில் சுமந்தபடி

துணையற்ற பயணத்தில் பாதச்சுவடுகளின்றி 

தூயநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


பேச நான் முயன்று முன்னேறுகையில்

முகபாவணையில் மிரட்டி மிரளச்செய்கிறாள்

போ என்று என் அறிவுக்கு அவள் தகவல் தெரிவிக்கமுன்

வெடித்துச்சிதறும் பல மனிதசடலங்களுள்

வெற்றி வேட்கை தணிந்தநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


பட்டங்கள் பல பெற்றவள் பல துறையில் தேர்ச்சி கண்டவள் 

வறுமை எனும் கோட்டின் கீழ் கொடும்பிடியில் 

விடுபட இல்லையாம் அவளுக்கு ஓர்

நிரந்தர உத்தியோகம்

பலன் வேண்டி தேடித்திரிந்த இடமெல்லாம் 

சேலை அவிழ்க்க பணியாதவள்

பணமெனும் பேருதவிக்கு உயிர்துறக்க நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


அழகில் உண்டு ஆபத்தென அடுத்தவர்கள் 

சொன்னகதை நிஜம்படவே

ஆசிட் வீச்சில் உருகுலைந்த அழகிய முகம்

மறைத்துக்கொண்டு சமூகசீர்திருத்தவாதியாய் 

தற்கொலைக்குண்டுத்தாரியாய் நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


இரும்பைக்கொண்டு பட்டை தீட்டினாலும்

அவள் உள் இலவம்பஞ்சு இதயம் ஒன்றின் ஓரத்தில்

பெண்மைக்கான காதல் காவியம் அவள் 

மறைத்துக்கொண்டு சீரற்ற இந்த சமூகம் சீர்கொள்ள

அஹிம்சையின்றி ஆயுதம் தேடி நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி





Thursday, September 10, 2020

முகத்திரை














முகத்திரையிட்டுக் கடக்கின்றேன் சாலைகளில் மட்டுமல்ல முகத்திரையிட்டுக் கடக்கின்றேன் சில வேளைகளில் மட்டுமல்ல நான் அணியும் முகப்பூச்சுக்களையும் யாரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் அவை வர்ணமற்ற புன்னகைகளின் முகச்சுருக்கங்களில் அலங்கரிக்கப்பட்ட அழகியல் கலை என்பதனால் நான் செய்யும் மந்திரப்புன்னகையை யாரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் கேளிகை வாழ்க்கையில் கோமாளிகள் பல உணர்வற்ற முகபாவனையை நிரந்தரம் கொள்கையில் நான் உரைக்கும் இன்மொழி யாரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் நச்சு வார்த்தைகளை மென்றுகொண்டிருக்கும் கவர்ச்சிகரமான உதடுகளை நோட்டமிட்டுக்கொண்டு பலர் இருப்பதால் நான் சிந்தும் வியர்வைத்துளி யாரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் என் தாகத்திற்கு யாரோ நீர் பருகிக்கொண்டு என் வேட்கையை தீண்டுவதில் இன்பமுறுகின்றமையால் முகத்திரையிட்டுக் கடக்கின்றேன் சாலைகளில் மட்டுமல்ல முகத்திரையிட்டுக் கடக்கின்றேன் சில வேளைகளில் மட்டுமல்ல









Thursday, September 3, 2020

உதட்டுச்சாயம்

 













அவள் உதட்டுச்சாயம் களைவதில்

அத்தனை ஆடவர்களின் கண்களும்  தீவிரமாய்

மொய்த்துக்கொண்டிருந்தன

என்ன ஆச்சரியம்!

பூக்களே தேன் சுவைக்க ஏங்கும் போது

வண்டுகள் மட்டும் வர்ணித்துவிட்டுப்போகுமா?

சிவப்பு வெல்வெட் ரோஜா இதழை


உதட்டுரேகை வளைவை வானவில் 

கோடுகளில் கூட இவ்வளவு 

கற்சிதமாய் கண்டிருக்கமாட்டார் எவரும்

அவ்வப்போது அவள் எச்சிற்பனித்துளிகள் 

ஈரமூட்டிக்கொண்டு இருக்கின்றன

இதையெல்லாம் அறிந்தும் 

அவள் மேலும் மேலும் உதட்டுச்சாயத்தை 

அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றாள்


ச்சீ என்ன பெண்தான் இவளோ?

இத்தனை கடுமை வர்ணம் தீட்டுகிறாள் 

எவனை மயக்குவதற்கோ? 

எவர் குடியைக் கெடுப்பதற்கோ?

ஊர்ப்பெண்கள் சாபம் இவளை சும்மா விட்டுவிடுமா?

கர்ஜனைக்கும் பெண்சிங்கங்கள் பல மனதினுள்

குமிறிக்கொண்டிருக்க கண்டும் காணாதவளாய் 

மேலும் மேலும் உதட்டுச்சாயத்தை 

அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றாள்


அவள் வர்ணம் தீட்ட தீட்ட கையில் 

இருந்த உதட்டுச்சாயமோ குறைவடைந்ததாயில்லை

வெறுமையான மென் இதழோடு 

அவள் வஞ்சனையற்ற மனதாய் புன்னகைத்துக் கடக்கையில் 

பாவம் ஓர் பெண்ணாய்க்கூட 

அவளைப்பார்க்காதவர்கள் இன்றும் 

அதே புன்னகைக்கு உதட்டுச்சாயம் பூசிட 

ஒவ்வோர் கோணங்களில் கணக்கிட்டுக்கொண்டு 

அவர்களின் புன்னகைகளை மறந்துவிட்டார்கள்

என்பதை உதட்டுச்சாயம் அறிந்துவிட்டது போல


நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...