கரு மை தீட்டி கருவிழி மெருகேற்றி
சின்னஞ்சிறு குங்குமச்சிமிழ் பொட்டிட்டு
கூரிய அரிவாள் புருவங்களை சற்று
உயர்த்தி தலை நிமிர்ந்து நடக்கின்றாள்
துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி
முன்னழகு பின்னழகு கன்னியவளோ பேரழகு
ஒரு கணம் கண்ணிமைக் மறுக்கவே
தலைக்கேறும் போதை ஏற்ற
அன்னம் அவளிடம் பழக வேண்டும்
ஓர் புதுநடை நடக்கின்றாள்
துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி
தீயும் தீய்ந்துபோகும் பாவியவள் பார்வை
வளைவுகளே வியர்ந்து பார்க்கும் வஞ்சியவள்
மெல்லிடை
கொடிகள் படரத்துடிக்கும் கொஞ்சுங்கிளி கொடியிடை
வேடிக்கை பார்ப்பவர் ஏக்கத்தில் வாடித்துடிக்க
இடையில் நளினநடை நடக்கின்றாள்
துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி
சலனமற்ற பஞ்சு நடையாள் பவனி வரும் ஓசை
மலர்களும் மலர்ந்திட விரும்பிடும் ஓர் இசை
திரண்டு வரும் மக்கட்கூட்டத்தின் நடுவே
வேகவேகமாய் மின்னல்நடை நடக்கின்றாள்
துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி
காற்றின் எடையில் இரட்டிப்பாய் இருந்திடுவாள்
கனத்த பையை தோளில் சுமந்தபடி
துணையற்ற பயணத்தில் பாதச்சுவடுகளின்றி
தூயநடை நடக்கின்றாள்
துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி
பேச நான் முயன்று முன்னேறுகையில்
முகபாவணையில் மிரட்டி மிரளச்செய்கிறாள்
போ என்று என் அறிவுக்கு அவள் தகவல் தெரிவிக்கமுன்
வெடித்துச்சிதறும் பல மனிதசடலங்களுள்
வெற்றி வேட்கை தணிந்தநடை நடக்கின்றாள்
துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி
பட்டங்கள் பல பெற்றவள் பல துறையில் தேர்ச்சி கண்டவள்
வறுமை எனும் கோட்டின் கீழ் கொடும்பிடியில்
விடுபட இல்லையாம் அவளுக்கு ஓர்
நிரந்தர உத்தியோகம்
பலன் வேண்டி தேடித்திரிந்த இடமெல்லாம்
சேலை அவிழ்க்க பணியாதவள்
பணமெனும் பேருதவிக்கு உயிர்துறக்க நடக்கின்றாள்
துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி
அழகில் உண்டு ஆபத்தென அடுத்தவர்கள்
சொன்னகதை நிஜம்படவே
ஆசிட் வீச்சில் உருகுலைந்த அழகிய முகம்
மறைத்துக்கொண்டு சமூகசீர்திருத்தவாதியாய்
தற்கொலைக்குண்டுத்தாரியாய் நடக்கின்றாள்
துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி
இரும்பைக்கொண்டு பட்டை தீட்டினாலும்
அவள் உள் இலவம்பஞ்சு இதயம் ஒன்றின் ஓரத்தில்
பெண்மைக்கான காதல் காவியம் அவள்
மறைத்துக்கொண்டு சீரற்ற இந்த சமூகம் சீர்கொள்ள
அஹிம்சையின்றி ஆயுதம் தேடி நடக்கின்றாள்
துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி