Tuesday, October 12, 2021

சிதைந்த மலர் துளிர்கின்றது

 





அவள் ஜடைகளை ரிப்பன் கொண்டு முடியும்போதே

ஒரு குறுகிய வட்டத்துள் கட்டப்பட்ட கைபொம்மையாகிவிட்டாள்

சோகம் கண்ணீர் துக்கம் துயரம்

அவமானம் சகிப்புத்தன்மை போன்ற உணர்ச்சிக்கயிறுகள்

இன்னுமும் அவளை கட்டிப்போட்டிடத்தான் செய்கின்றன

உதிர்ந்து விழும் கேசத்தின் வாயிலாய் நீயும் அதற்கு ஒப்பானவள் என்றே சின்னஞ்சிறு பிராயத்திலே 

ஊட்டப்பட்டு வளர்க்கப்படுகிறாள்

பருவங்கள் ஏற உருவங்கள் மாற பாவாடை தாவணியோ அவளை பாதி ஆயுட்கைதியாக்கியது

விருப்பங்களைத் துறந்த துறவியேனும் ஊராரால் போற்றப்பட இவள் மட்டும் ஊர் கண்ணிலிருந்து மறைந்துமே தூற்றப்படுகிறாள்

எள்ளி நகையாடும் பள்ளி வயதில் புத்தகம் சிலேடை பென்சில் வேண்டிய பாலகி அவளுக்கோ கிடைத்தது தாலி மற்றும் கணவன் என்ற புதிய சாபம் அதுவோ அந்நாளில் குழந்தைத் திருமணம்

அங்கே ஆரம்பித்தது அம்மலரின் முதற்சிதைவு

பொம்மையை வைத்து விளையாடிய அவளுக்கோ தானும் பொம்மையாகிவிடக்கூடாதென்ற முடிவில் 

வெகுநாட்கள் அச்சத்தினால் கட்டப்பட்டிருந்த சங்கிலியை

அன்று முதன்முதலாய் கழற்றிவைத்துவிட்டு ஓடிவிட்டாள் 

அவளைப் பெற்றவர் வீட்டிற்கு

பாவம் அவள் அதை கழற்றிவைத்துவிட்டு ஓடியிருப்பதற்குப்பதில் உடைத்தெறிந்திருக்கலாம்

மீண்டும் அச்சங்கிலி பொருத்திவைக்கப்படும் என்று அறிந்திடாதவள்

தாழ்ந்த சமூகமென படைப்புகளை பிரித்துப் பார்த்திடும் வள்ளோர் வாழ்ந்த சமூகம் அவளுக்கோ அது நரகம்

அடிமைத்தனம் மேலோங்க வாட்டமடைந்த மலர் இன்னும்

சிதைக்கப்பட்டுக்கொண்டுதான் இருந்தது

மரணம் எனும் ஒரு முடிவை அவள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்றுக்கொண்டிருக்கலாம்

ஆனால் என்றோ யாரிடமோ தனக்கான நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை கொண்டவளுக்கு நீதி நெறி நழுவி அங்கேயே

கொடும் துயரம் நிகழ்ந்தது

நீதியும் நிலைக்கவில்லை அவளுக்காய் குரல் கொடுக்க யாருமில்லை

கையில் ஏந்தினாள் ஆயுதம் தன்னை நிலைகுலைய வைத்தவருக்கெல்லாம் சல்லடை போட்டு தனக்கான நீதியை தானே பெற்றுக்கொண்டாள்

பாஞ்சாலி துகிலுரிய பரமாத்மா ஶ்ரீ கிருஷ்ணன் சேலை வழங்கிய அற்புதம் இங்கு இவளுக்கேன் நிகழ்த்தப்படவில்லை? தாழ்ந்த குலமா? இல்லை அக்கினியால் பிறப்பெடுக்காத தேவமங்கையல்லாத ஒரு சாதாரண பெண்மணி என்ற நிலையா? 

ஆனால் இன்று அவளது கட்டிவைக்கப்பட்ட ஜடை அவிழ்ந்து காற்றில் அலை மோதும்போது அவளைக்கட்டி வைக்கப்பட்டிருந்த சங்கிலிகள் உடைத்தெறியப்பட்டிருந்தன

அவளுக்கான சுதந்திரம் அன்று யாராலுமல்ல 

அவளினாலே கிடைக்கப்பட்டது

அவளை எத்தனையோ பெயர் கொண்டு அழைக்கப்பட்டிருந்தாலும் பூலான் தேவி என்ற 

மலர் எத்தனையோ சிதைவுகளுக்குப் பின்னும் 

தனக்கான சுதந்திரத்தின் மூலம் மலரத்தான் செய்தது

பெண்ணிற்கான சுதந்திரம் கெஞ்சிப் பெறுவதுமல்ல 

யாரும் வழங்குவதுமல்ல அது அவளிடத்தே இருப்பது

எங்கே அவள் ஓங்கி மிதிக்கப்படுகிறாளோ அன்று அவளாய் அச்சுதந்திரத்தை உணர்வாள் 




Saturday, October 9, 2021

எனக்கான அன்பு

 





சலித்துவிட்ட இதயத்துடன் நான்

ஒவ்வொருவரையும் நெருங்கும்போது

மீண்டும் அவர்களிடத்தில் எனக்கான 

அன்பு முழுமைபெறாத என்ற 

ஏக்கம் மட்டும் வினாக்குறியாகின்றது


அவர்களிடத்தில் எனக்கான அன்பு 

மிகையானதும் அல்ல  ஆடம்பரமானதும் அல்ல

ஒரு துளியேனும் இரு கைகளுள் 

பொத்திவைத்த வெளிச்சம்போல

என் நினைவால் அவரவர் மனதில் பதித்து

வைக்கப்படும் சிறு நியாபகங்கள் மட்டுமே


புத்தகம் நடுவே திருட்டு மயிலிறகு

குட்டிபோடும் கதை எனக்கான அன்பு

கொஞ்சம் நகைத்தாலும் அதனுள் 

மறைந்திருக்கும் பித்து சிறு குழந்தையின் 

அன்பிலே தெய்வீகமாய் உணரப்படும்


திகட்டத்திகட்ட சுவைக்கும் ஒவ்வொரு 

கனி இதழ்கள் முடிவிலும் நாவூரும் 

எச்சில் எனக்கான அன்பு

அதுவும் ஒருவகை மீளமுடியாத சிறு போதை 

சிலரினால் மட்டுமே உணர முடியும்


சத்தமில்லாத இரவுநேர அழுகையில்

கண்ணீர் ஏந்தும் நண்பன் 

தலையணை எனக்கான அன்பு

ஆழ்ந்த ஆறாத வடுக்களின் ரணங்கள்

வழியும் கண்ணீரோடு ஓர் சிறு தூக்கம்

காலை விழித்ததும் எல்லாம் மாறிவிடுமென்ற புன்னை


நன்கு பரீட்சயமான பழைய பாடல் வரிகளில் 

தெரிவு செய்து உதடு முணுமுணுக்கும் 

வரிகள் எனக்கான அன்பு

மொழிகளை விட மௌனங்களில் அன்பை தேடும்

என்போல் இதயங்களினால் மட்டுமே 

வரிகளுக்கும் உயிரூட்ட முடியும்.



Sunday, March 28, 2021

Rest In Peace

  



முகநூலிலும் சரி 

முகமறியா நபராயினும் சரி

Rest In Peace என்று கடந்துவிட 

ஏனோ ஒப்புக்கொள்ளவில்லை

சிலரது மரணச்செய்திகள்


படுக்கையிலே பல காலம் தத்தளிப்பவன்

வேண்டிக்கூட இரங்காத கடவுள்

விருப்பம் உள்ளவன் வாழ்வைத் தட்டிப்பறிக்கின்றான்

காரணம் கேட்டால் விதி வலியது என்று பழிபோடுகின்றான்


வாழ்நாளெல்லாம்  வறுமையில் வாடியவன் 

வசதி வந்து அனுபவிக்கும் தறுவாயில் 

வாழ்விழந்துபோகிறான்

சமுத்திரத்தின் கரை தாண்டி நிலம் தொடும் நிமிடம்

பலன் பெறமுன் கரைந்து போகின்றான்


இலட்சியங்களில் திமிர் கொண்டவன் 

சுயவிருப்பை துறக்கின்றான்

விருப்பங்களின் தேவை விரலளவு முட்ட 

விசும்பைத் துறக்கின்றாய்


ஆண்டாய் அளந்தாய் ஆசையுறவுகள் பல கண்டு 

மாண்டாய் மண்ணில் என்னும் வரலாறு தாண்டி 

பிறப்பின் பயன்காணா வயதில் உலகெய்தினாய்

சிறுபயிர் கருகியதன் வலி கண்களில் நீராய்


இறப்பிற்கு நியதியும் இல்லை எல்லையும் இல்லை

நிழல்களாய்த் தொடரும் ஏதோ ஓர் உறவிற்கு மட்டும் 

ஏன் இதயத்தைப் படைத்து அதில் 

ரணங்களை பதிக்கின்றோம்


ஆன்மாவிற்கு உடல் உறவல்ல ஆனால் 

மனிதம் மற்றும் பகுத்தறிவு எங்கோ 

ஓர் துயர் சம்பவத்தில் 

தன்னையறியாது உளவேதனையுடன் 

விட்டுச்செல்கிறது 

Rest In Peace 


நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...