என்னை வருடிச் செல்லும் மெல்லிய தென்றல் காற்றே!
அவன் நினைவுகளைத் தாங்கிடும் இந்த தேகத்தை
கூதல் செய்து செல்ல
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
என் நெற்றி வழி வழிந்தோடிய வியர்வைத் துளி
அவன் உதடுகளால் ஒற்றி எடுக்கும் நொடி
பூவாய் மலர்ந்திட அதை உதிர வைக்க
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
அவன் பார்வையில் உருகிவிடும் சந்தனத்தேகம்
அதைப் பொக்கிஷமாய் பாதுகாத்திடும்
பட்டுப் புடவை அதை மெதுவாய் நகர வைக்க
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
பாதத்திலாடிடும் வெள்ளிக் கொளுசுமணி
அவன் பார்வை என் திசை திரும்பும்படி
காற்றில் அவன் மேல் கொண்ட காதல் கீதம் இசைத்திட
அவன் இல்லா நேரத்தில் அதை இரசிப்பதற்கு
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
அந்திசாயும் வேளையில் நித்தமும்
ஏனோ ஏக்கமாய் அவன் வாங்கித்தந்த
வாசம் வீசும் கொடி மல்லிகை மாலை
அவன் மயங்கிக்கிடக்க ஆசையாய்
நான் சூட்டி அழகு பார்க்கையில்
அதன் வாசனை சற்று களவாடிச் செல்ல
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
இத்தனை இலட்சணமாய் அலங்கரித்து
பெண்ணாணவள் உனக்காய் உருகி உருகிக் காத்திருந்து
கண்ணீர் கன்னம் வழியே வழிந்தோடிட அதைத் துடைப்பதற்கு
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
உன் நினைவாலே வாடிய இந்த மலர்
உன் நிரந்தரப் பிரிவைத் துயர் தாங்காது
உயிர் நீக்க
அவ்வுயிரை காற்றோடு சங்கமிக்க
என் காதலனே உன்னைத் தவிர
இந்தக் காற்றுக்கு
யார் அதிகாரம் தந்தது?
No comments:
Post a Comment
Your concern is appreciable. Thank you for the review