
இரு இதயங்கள் துடிக்கும் சத்தம் தான் கேட்கின்றது
ஒரு இதயம் தியாகம் செய்யும் தொனியுடனும்
மறு இதயம் குற்றம் செய்த தொனியுடனும்
நடுவே ஒரு முள்வேலி
ஆம் முள்வேலிக்குள் அகப்பட்ட இதயம் ஒன்றின் அழுகுரல்
தான் இங்கு வரிகளாக காட்சிப்படுத்தப்படுகிறது
அழகான குக்கிராமம் அதிகாலைச் சூரியனும் கண் வைத்துவிடும்
மலர்களோ வாசனை வீசி மங்கையரைக் கவர்ந்திடும்
பச்சை வயலோ காற்றில் தலையசைத்திடும்
வண்ணச் சேலைகளோ காற்றில் உலர்ந்திடும்
பூஜைகள் சிறப்பாய் நடந்திடவே கோவில் மணி அடித்திடும்
மூன்று வேளைக்குமாய் அன்னம் அடுப்பில் அவிந்திடும்
வெட்டிப்பேச்சுக்காய் மாலை திண்ணை நிரம்பிடும்
இந்த இன்பம் போதுமென்றே சூரியனும் மறைந்திடும்
இதுதான் என் கிராமம்
நான் தான் தியாகம் செய்யும் இதயம் பேசுகின்றேன்
உடையவன் இன்றி மாற்றான் கைப்பற்றிய பின்
இறக்க இருக்கும் தறுவாயில் கடைசியாக பேசுகின்றேன்
மலர் சூடிய மங்கையரே உம் கணவரிக் இறுதிச்சடங்கை
நிறைவேற்றக்கூட வழியின்றி ஒரு மலராவது அவர் நினைவாய் வாடட்டும் எனக் கொய்கின்றீரோ
இங்கு மலர் முழுவதும் இரத்த வாடை வீசுகிறது
தப்பித்து ஓடிவிடும்
பச்சை வயலோ கருகி சாம்பலாகிவிட்டது இனி எங்கு
அறுவடை செய்ய ஊரார் உறவுடன் பந்தல் நாட்டுவது
வண்ணச் சேலைகள் இரண்டைப் பத்திரமாக எடுத்து வையுங்கள் நாடோடியாய் ஓடும் இடங்களில் தரையில் விரிப்பதற்கு ஒன்று
கிடைக்கும் மரக்கிளைகளில் குழந்தை உறங்க ஏணை கட்டுவதற்கு மற்றொன்று
கோவில் மணியை ஒருபடியாகக் கண்டு கொண்டேன்
ஆனால் கோவில்களும் விக்கிரங்களும் தான் காணாமற்ப் போய்விட்டன
ஒரு மூட்டை அரிசி ஒவ்வொருவர் கைகளிலும் இருக்கட்டும் ஒருவேளையவது உப்புக் கஞ்சி குடித்து உயிர் வாழ உதவிடும்
திண்ணைகளில் கால் வலிப்பதாய் அமர்ந்துவிடாதீர்கள்
உயிர்பறிக்கும் வெடிப்பொருட்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம்
இன்று எம் துயர் தாங்காத சூரியன் சோகமாய் மறைந்துவிட்டது
நானோ முள் வேலிக்கு உள்ளே என் உயிரைத் தியாகம் செய்து என் குடும்பத்தை ஏதோ ஓர் மூலையில் வாழ வழிவகுக்கின்றேன்
என்னைப் பெற்றவளோ பெற்ற கடனுக்கு செய்யாக்குற்றம் தன்னை தன்மேல் சுமத்தி கண்ணீரால் கெஞ்சிக்கொண்டு வேலியின் மறுபுறம் நிற்கின்றாள்