தூசும் சாம்பலும் படிந்த
காட்சட்டையும் சேட்டும்
இடுப்பைவிட்டு வழுகிவிடாமல் இறுக்கமாய் வைத்திருக்கும்
அறுந்து தொங்கும் அப்பாவின் இடுப்புப்பட்டி
வெயிற்சூட்டிலும் சுள் என்று
சுடுகிறதம்மா தலைக்கவசம்
அதை கழற்றிவைத்துவிட்டால்
போய்விடும் என்தேசம்
டிக் டிக் டிக் உடன்
என் இதயமும் சேர்ந்து
ஒவ்வொரு நொடிக்கும் துடித்துக்கொண்டிருக்கிறது
மூச்சு விட முடியவில்லையம்மா
சுற்றி எங்கும் மணல் மூட்டைகள்
இடையே தெரியும் நீக்கலுக்குள்
துப்பாக்கி முனைகள்
இரவுபகல் தெரியவில்லை
பசி வயிற்றைப் பதப்படுத்தி
கண்களை செருக்கிக்கொண்டது
இருந்தும் விழிப்புடன் இருக்கின்றேன்
உதிக்கின்ற சூரியக்கதிர்
என்மீது படுமென்றில்லை
என் தாய்க்கொடி காற்றில்
பறக்கும் போது கம்பீரமாக ஆதிக்கமற்ற
நிலையை ஊர்மக்கள் கண்டுகளிப்பதற்கு
குபீர் குபீர் என்று சன்னல்சத்தங்கள்
படையெடுப்பு ஆரம்பித்ததற்கான
ஆரம்ப மணியாய் கேட்கிறது
ஒரு கையில் துப்பாக்கி
மறுகையில் என் பணமுடிப்பு
பணத்தைப்புரட்டி வங்கியில்
வைப்பு செய்வதிற்கில்லை
முடியப்போகும் என் விதிக்கு
முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன்
வித்திட்டு என்னை பெருவிருட்சமாக்கிய
என் அம்மா உன் முகத்தை
தவமாய் ஒருமுறை
நேரில் காணாத பாவி நான்
உன் புகைப்படத்தை கண்ணீரால்
கழுவி பாவ விமோர்ச்சனம் பெறுகின்றேன்
தலைப்பிள்ளையாய் தந்தை உயிரை துறந்தபின்
வீட்டை மட்டுமல்ல நாட்டையும் பத்திரமாய் பாதுகாத்திட
என் தங்கைமார்போல் பல பெண்கள்
இரவில் அச்சமின்றி தூங்கிடவும்
பகலில் தைரியமாய்
வெளி உலகைக்கண்டிடவும்
என் கைகள் கறைபடிந்திட
இளவயதில் ஆயிதம் தரிக்க
உன் கண்ணீரால் என்னை
வழிமறித்தாய்
பாசம் என்னைக்கட்டியபோதும்
பலமுறை முயன்றுதான்
உன்னிடமிருந்து விடைபெற்றேன்
இருந்தபோதிலும் உன் கைபட்ட
ஆறியகஞ்சி வாசனை
என்னை உன் இடத்திற்கு
அழைக்குதம்மா
சூரியக்கதிர் படர்கிறதம்மா
வீட்டை இனி நன்கு நீ
திறந்து வைக்கலாம்
அலுமாரியில் அடுக்கிவைத்த
புதிய துணிகளையும்
அணிந்துகொண்டு கோயிலுக்குச் செல்லலாம்
போய்வரும் வழியில் தரைமட்டமாகி இருக்கும்
அந்தப்பெரிய மைதானமருகே சென்றால்
மகனே என ஒருமுறை அழுது
வாய்கரிசியும் போட்டுவிட்டுச் செல்
என் உடலை நீ கண்டுபிடிக்க
சிரமம் கொள்வாய் என நன்கு அறிவேன்
அம்மா உன் புகைப்படம் இறுகிப்பற்றியநிலையில்
தலையற்ற முண்டம் இருக்கும்
அதற்கு பிண்டம் வைத்து ஈமைக்கிரியைகள்
செய்வதற்கு வீணாய் அலையாதே
அதை வாரியணைத்து மகனே என
ஒருமுறை மட்டும் அழுதிடம்மா