அவள் பாத்திரம் துலக்கிடும்
சத்தம் கேட்டுத்தான் என் அதிகாலை
விழித்து நிற்கும்.
அவள் வாசலில் மஞ்சள் நீர் தெளித்து
மாக்கோலமிடும் அழகைக் காணத்தான்
என் சோம்பலும் முறித்து நிற்கும்
ஈரமான கூந்தலில் முடிந்துவைத்த துணியோடு
என் எண்ணமும் அவளை முடிந்து நிற்கும்
சாம்பிராணி வாசனையும்
அவள் செம்மேனி செஞ்சந்தன வாசனையும்
துளசிமாடம் சுற்றிவர
என் கண்கள் அவளை மட்டும் சுற்றிவரும்
விலை குறைந்த பருத்திப் புடவைதான்
நேர்த்தியாய் அவள் உடுத்திடுவாள்
அவள் பொன்வண்ண மேனியை
எடுப்பாய் அதுவும் எடுத்துக்காட்டிடும்
நெற்றியில் அவள் என்னைச் சுட்டி
வைக்கும் திலகம் மாலை மங்கிப்போயும்
அதன் சாயம் போவதில்லை
அவள் என் மேல் கொண்ட காதல் போல
வகிடு வழி நீட்டிடும்
என் ஆயுள் நீள என்றே
ஆழமாய் பதித்திடுவாள்
காலில் ஆடும் வெள்ளிக்கொளுசு மணி
என் தூக்கம் கலையாமல் துயில் நீளவே
மெல்லிய மென்பாதத்தை பையவே
தரையில் ஊன்றிடுவாள்
தண்ணீரோ தாமரையிலையில் பட்டிடாமல்
அன்னமாய் அழகு நடை நடந்திடுவாள்
காதோரமாய் பல கருநாகங்கள்
சுருள் சுருளாய் காற்றிலாட
ஈரவாடை என்னை நாட
கூந்தல் வழி வழிந்த நீரோ பனித்துளியாய்
எனக்கு தீர்த்தமாகிடும்
பொன் நகைகள் பல அணிந்திடாதவள்
புன்னகையால் ஆரம் சூட்டியே
என் காலைச்சூரிய ஒளியையும்
கண்கூசச் செய்திடுவாள்
வளைந்த நார்க்காலியாய் அவள் இடை
வளர்பிறையோ கெஞ்சிடும் அதை
தினமும் தரிசனம் காண
குழந்தையாய் என்னைக் கெஞ்சிட வைப்பாள்
காலையில் சூடான தேநீர்
சுறுசுறுப்பாய் என்னை மாற்றிட
அவள் தேகமோ என்னை சூடாக்கிட
சுடுதேநீரும் குளிர்ந்தே போய்விடும்
கண்களால் இந்தக்காட்சியை தினம் நான் காண
ஒவ்வொரு நொடியும் எனதாசையாகிட வேண்டும்
காலை நேரமோ நீள வேண்டும்
காயத்திரி மந்திரம் ஓதிடும் அவள் பட்டு உதடுகளோ
உச்ச வகிடு பதிய வேண்டும்
சாலையில் எத்தனை சோலைக்குயில் சென்றாலும்
அவள் அழகில் நான் என்றும் இளைப்பாற வேண்டும்
இதுவே கணவனாக நான் வேண்டிடும் முதல் ஆசை
Oh!
ReplyDelete😀
Delete