Thursday, January 24, 2019

நட்சத்திரக்குழந்தைகள்


என் சிறுவயது காலங்களில்

அடிக்கடி மின்தட்டுப்பாடு ஏற்படும்
தாத்தா காலத்து மின்விசிறிகளும்
இருமலுடன் ஓய்வெடுக்கும்
புழுக்கமோ எங்கள் தூக்கத்தை
கலைக்க வெளி முற்றத்தில்
பஞ்சுமெத்தையாகிடும் ஓலைப்பாய்.
அப்பாவும் நானும்
வானத்தைப் பார்த்தபடி படுத்திருப்போம்
இருட்டு வீதியிலும் மெல்லிய
வெண்ணுடை உடுத்திய முகில்கள்
தோழிகளுடன் கூட்டமாக
கடந்து செல்வார்கள். ஒரே ஒரு
வெண்நிற தோசைத்தட்டாய்
ஒரு சந்திரன். அவன்
விரும்பியபடி வளருவான்
தேய்ந்துவிடுவான்
சில தினங்களுக்கு என்
கண்ணில் தென்படாமல்
மறைந்து விடுவான். என்னுடன்
சேர்ந்து அவர்களும்
அவனைத் தேடுவார்கள்.
அவர்கள் தான் நட்சத்திரங்கள்.
இத்தனை நட்சத்திரங்களையும்
சிதறவிட்டுச் சென்றவர்கள் யார்?
பாவம் அநாதரவாகச் சிதறிக்கிடக்கிறார்கள்.
அவர்களைப் பொறுக்கி ஒரு கோணிப்பையில்
சேர்த்துவைக்கலாம் தானே
எனச் செல்லமாக வினாவிய என்னிடம்
என் அப்பா
செல்லமே! இந்த நட்சத்திரங்களை
எவராலும் சரியாக எண்ணிவிட முடியாது.
சந்திரன் தனியாக இருக்கையில்
முகில்கள் அனைத்தும் கடந்து செல்லும்.
சந்திரனோ தனித்து விடும்.
அவன் தனிமையைப் போக்க
பிறப்பெடுத்தவர்கள் தான்
இந்த நட்சத்திரக்குழந்தைகள்.
அப்பா! எப்படி இந்த நட்சத்திரக்குழந்தைகள்
பிறப்பெடுக்கிறார்கள்?
இவர்களின் பெற்றோர்கள் யார்?
இவர்கள் ஏன் உயரமான
இடத்தில் இருக்கிறார்கள்?
கீழே விழுந்துவிட மாட்டார்களா?
என் எண்ணற்ற கேள்விகளுக்கு
நிறுத்தற்குறியீடாக செல்லமாய்
ஒரு முத்தம் தந்த என் அப்பா
தரணியில் நல்ல மனிதர்கள்
செய்யும் நற்காரியங்கள்
செய்து கொடுக்கும் சத்தியங்கள்
தர்மம் தலை காத்து நிற்கும் உண்மைகள்
நட்சத்திரக்குழந்தைகளாகப் பிறப்பெடுக்கின்றன.
இங்கு உண்மை பேசி நேர்மையாக
பிறருக்கு தீங்கு விளைவிக்காத
மனிதர்கள் அனைவரும்
அவர்களின் பெற்றோர்கள்.
உண்மையும் தர்மமும் என்றும் உயர்ந்த நிலையில் தான்
இருக்கும். அவை எப்பொழுதும் பிரகாசிக்கச் செய்யும்.
பிள்ளைகளின் உயர்ந்த நிலையை எண்ணி
பெற்றோர்கள் வருத்தத்திற்கு மாறாக
பெருமிதம் கொள்வார்கள்.
அவை அனைத்தும் என்று நிலைமாறி
அநீதி நடக்கின்றதோ அன்று
ஒவ்வொன்றாக நட்சத்திரங்கள் கீழே விழும்.
எனக்கூறி தன்னை மறந்து தூங்கிய
என் அப்பாவை இறுக அணைத்துக்கொண்ட
நானும் உறங்கிவிட்டேன்.
திடீரென தூக்கம் கலைந்தது
குளு குளு அறையிலும் வியர்வை
உடலைத் தெப்பமாக்கியது.
நானும் முயன்று பார்த்தேன் தூக்கம்
வரவில்லை. எழுந்து சென்று ஜன்னல் அருகே
வானத்தைத் தனியாகப் பார்த்தேன்.
எங்கே அவர்கள்?
ஓரிருவருடன் சந்திரன் தனியாக
மாட்டிக்கொண்டு தவிர்க்கின்றது.
அன்று அப்பா சொன்னது சரிதான்
இன்று நல்ல மனிதர்கள் பெருமளவில் இல்லை.
பின் எப்படி நட்சத்திரக் குழந்தைகள்
பிறப்பெடுப்பார்கள்?

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...