Monday, January 21, 2019

உண்மை தேவதைகள்


சிறுவயதில் நான் படித்த
கதைப்புத்தகங்களிலும் என் பொழுதை
களிப்புடன் கழிக்க நான் பார்த்த
கார்ட்டூன்களிலும் தான் நான் பார்த்திருந்தேன்
தேவதைகள்
கண்களை கூசிடச்செய்திடும் வெண்நிறமாய்
தூரமாய் இருந்து பார்த்திடவே
பால் நனைந்த பஞ்சாய்
மென்மையாய் காட்சியளித்திடுவார்கள்
முகத்தில் எப்பொழுதும் புன்சிரிப்புதான்
அழகான ஆபரணங்களும் விலைமிக்க
ஆடையும் சீராக அலங்கரிக்கப்பட்ட
வாரிய நீள்கூந்தலும்
அப்பப்பா இன்னும் அவர்களை
வர்ணித்துக்கொண்டே போகலாம்
முக்கியக்குறிப்பு குழந்தைகள்
ஆசையாய் எதைக்கேட்டாலும்
அவர்களின் அதீத சக்தியால்
ஒரு நொடியில் கொண்டுவந்துவிடுவார்கள்
நானும் ஓர் தேவதையின் மகள் தான்
சிறுவயதில்லை இது புரிந்து கொள்ளும் பருவம் தான்
கதைப்புத்தகங்களும் இல்லை என் பொழுதை
கழிக்கும் நேரமும் இல்லை
நிஜ வாழ்க்கை தேவதைகள்
பூசி மெழுகிடச் செய்திடும் வர்ணப்பூச்சுக்கள்
இல்லை சாதாரண வெயில்பட்டு கறுத்துப்போன தேகம்
வறுமையின் வரட்சி முகத்தில் ரேகைகளாய்
சுருக்கம் பெற்று பார்ப்பதற்கு முதிர்ச்சியுற்ற
தோற்றமாய் வாழ்கிறார்கள்
மாத வருமானம் கையைக் கடித்த போதிலும்
எதையும் சமாளித்து பிள்ளைகள் முன்காட்டிடாமல்
ஒரு புன்னகை செய்வார்கள்
அந்தப்புன்னகையில் கண் தெரியாமல் மூழ்கிப்போய்விடலாம்
தனக்காய் செய்த தாய்வீட்டு சீதனமான நகைகளை
அடகுபிடிக்கும் கடையில் அலங்கரித்தபோதும்
அழகாய் என்மகள் அணிந்திட
சிங்கப்பூர் நகை பத்திரமாய் அலுமாரியில் அடுக்கிவைப்பார்கள்
ஆங்காங்கே கிழிஞ்சல்களைத் தைத்தே
புத்தாண்டு முதல் நத்தார் வரை
பல ஆண்டுகள் கழித்திடுவார்கள்
பட்டுப்பாவாடை கட்டி செல்லமகள் வெட்கம் கொள்ள
புகைப்படமெடுத்து தினம் இரசித்திடுவார்கள்
அனைத்து சுமையையும் பிள்ளைகளிடம் இருந்து மறைத்தாலும் இளநரை காட்டிக்கொடுத்துவிடும்
அதை சீராக வாரி சிகை அலங்காரம் செய்திட
நேரம் செலவிடாமல் ஒற்றைக்குடும்பியுடன்
பெற்ற மக்களுக்கு கடமை புரிந்திட
அடுப்படியில் அரைவயிற்று உணவுடன்
ஆசையாய் ஆகாரம் செய்திடுவார்கள்
எத்தனை கோடி வைத்திருந்தாலும்
நாட்டினை செழிப்பாய் முன்னேற்றிட
உள்ளூர் அமைச்சு வெளிநாட்டில்
கையேந்தியும் முழுமைபெறவில்லை
பெண் தேவதைகளே கைப்பிடியிலும்
அரிசி மூட்டைகளிலும்
தலையணை உறையினுள்ளும் சேமித்து
வைத்திருக்கும் காசு எப்படி
உங்களுக்கு மட்டுமின்றி பிள்ளைகள்
எங்களுக்கும் பகட்டான வாழ்க்கைச் செலவிற்கு
போதுமானதாய் செலவு செய்கிறீர்கள்?
நான் கண்ட நிஜ தேவதைகள் நீங்கள் தான்
எந்தக் கட்டுக்கதையிலும் கற்பனைகளும்
எட்டாத சக்தி நீங்கள்
உண்மை தேவதைகள்

2 comments:

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...