என்னைக்கூட தலைப்பாக எடுத்து
நேரத்தை செலவிட்டு
கவிதை படைப்பீர்கள் என
கனவிலும் நான் கண்டதில்லை
உயிரற்ற பொருள்தான் நான்
இருந்தாலும் இதயமுள்ளவர்கள் சற்று
எனக்காக ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்
ஆதிகாலத்தில் மனிதனின் திறமையால்
மெல்லிய சணற்கையிறுகளால்
பிறப்பெடுத்து கோணிப்பை என்றும்
பெயர் பெற்றேன்
இளவயதில் நான் துடிப்பாக
இருந்ததால் தான் என்னவோ
பொருட்களைப் பத்திரமாகப் பாதுகாக்க
என்னுள் வைத்து என் கழுத்தை
இறுக கட்டிவிடுவார்கள்
மூச்சுத் திணறலாக இருந்தாலும்
என்மேல் மனிதர்கள் கொண்ட
நம்பிக்கைக்காக வீரமாக சகித்துக்கொள்வேன்
சற்று நான் நடுத்தர வயதை அடையவே
வீட்டை அலங்கரிக்கவும்
சுவரில் உள்ள ஓட்டை உடைசல்களை மறைக்கவும்
பலர் என்னைப் பங்குபோட்டார்கள்
வீதியில் படுக்கும் ஏழைகளுக்கு
கதகதப்பளிக்கும் கம்பளி வீடும் நான் தான்
என் கிழப்பருவத்திற்கூட
கால்களைச் சுத்தம் செய்யும் பொறுப்பளித்து
வாசற்படி அருகே என்னை விட்டுவிடுவார்கள்
நீங்கள் எத்தனை பருமனாக
இருந்தாலும் என்னை நம்பி
வாழ்வாதாரத்தை நடத்தும்
குடும்பங்களை எண்ணி
பொறுமை காத்திடுவேன்
இப்படியே என் சந்ததியினர்
வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்த பூமியில்
நவீன மார்க்கம் தழுவும் இந்த மனிதர்கள்
எங்களைத்திரும்பிக்கூட பார்ப்பதில்லை
அவர்களுக்கு எம்மவர்களைக் கண்டால்
வெட்கம் போல இருக்கிறது.
நான் சுயநலவாதி அல்ல
என்னை நம்பியவர்களை
கைவிடக்கூடாது என சிறு நல்ல உள்ளம்தான்
ஏதோ ஒருவகையிலாவது
என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
அல்லது எங்களை நம்பி வயிற்றை நிரப்பும்
ஏழைகளுக்கு ஏதாவது வழியைக்காட்டுங்கள்
இப்படிக்கு உங்கள் தாத்தா வீட்டில்
ஒருமூலையில் முடங்கிக்கிடக்கும்
வயது முதிர்ந்த
கோணிப்பை
No comments:
Post a Comment
Your concern is appreciable. Thank you for the review