தலைப்புச் செய்திகளாகப் பரவிய
தற்கொலை விபரம் நடுப்பக்கத்தில்
சினிமா கிசுகிசுக்களாக
மாறியதன் கொடுமைதான் என்னவோ?
தவறிழைத்து தூக்குமேடைகாணும்
குற்றவாளிக்குக்கூட கடைசியாசையாக
அவ்வுலகில் வாழ்ந்துவிட்டுப்போக
சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்கிடும் வேளையில்
யாரோ செய்த தவறுக்கு உன்னை நீயே
தண்டனை கொடுத்துக்கொள்கிறாயே
உன் கடைசி ஆசைதான் என்னவோ?
குண்டூசி தொலைந்ததால் கயிற்றில்
தொங்கி உயிரை மாய்த்தான் என
விநோதமாய் வியப்பூட்டிடும் செய்திகளை
நாளை உண்மைக்காரணமாகக் கொண்டு
உயிரைத் துறக்கக்கூடிய சமுதாயமாய்
மாறிவருவதன் காரணம்தான் என்னவோ?
வெல்வதற்கு எளிதாய்
படைக்கப்பட்ட வாழ்க்கையை
தெளிவற்றபோர்வையில் நிதானம் குலைந்து
எடுக்கும் முடிவுகளை எதிர்கொள்ளத்
துணிவின்றி ஒரு முழம் கயிற்றுக்கு
வீணாக விளம்பரம் செய்துகொடுக்கும்
இளவயது மரணங்களின் பிண்ணனிதான் என்னவோ?
தாய்மடிசுகமாய் தினம் இருக்க
ஒருமுறை கதறியழுது கண்ணீர்மல்க
உன் துயர் நீ கூற முன்பே தாய்மனம்
அதற்கு மருந்து செய்யும் மாயம்தான் என்னவோ?
உயிராய் நேசிக்கையில் கற்பனையில்
மிதக்கும் சுகம்போதாமல் உயிர்துறந்து
விண்ணில் மிதக்கும் வெற்றுடலோ
மண்ணில் நித்திரை செய்யும்
உற்றார் உறவினர் வருகைக்கு
திட்டமிட்டு செயல்பட்ட விதம்தான் என்னவோ?
உடலில் ஓடும் நரம்பு நாளங்கள்
குருதிக்கலன்களின் எண்ணிக்கைகள்
சிறுநீரகங்கள் சுவாசப்பைகள்
புலனற்று செயலிழக்க
மேற்கொள்ளும் சத்திரசிகிச்சைகளும் மருந்துப்பாவனைகளும்
நல்வழியில் உன் பாதையை அமைத்துச்சென்றால்
வைத்தியனாய் பிற உயிர்களையும் வாழ வைப்பாய் என
பாவியவள் உன் அன்னை கண்ட கனவுகள் பலிக்கக்கூடாதென
தன்னடக்கம் கொண்டு உன் உடல் தகனம்
செய்யவே நீ செய்த செயல்கள் தான் என்னவோ?
மரணம் எனும் கணிதக்கேள்விக்கு
உயிர்நீப்பென ஒரு விடை இருக்க
எளியமுறையால் இயற்கையாய் காலம் கணக்கை
முடிக்க முன்பே
பல கடினமான படிகளை செயற்கைமுறையில்
நீ விடை காண்கையில் உன் பதில்
ஏற்றுக்கொள்ளப்படுமென நம்பும்
உன் அப்பாவித்தனமான எண்ணம்தான் என்னவோ?
மறுபிறப்புக்கொண்டு இம்மண்ணில் மீண்டும்
பிறப்பெடுத்து உன்னைப் பெற்றவர்கள்
சிந்திய கண்ணீருக்கு
மாய்த்த உன் உயிர் மிகையாகாது என
அறிந்துகொண்டும் உன் காரணம் சரி எனில்
மீண்டும் தற்கொலைக்கு முயற்சி செய்.
அன்று உன் அகாலமரணத்திற்காக கண்ணீர்வடிக்க
நான் அங்கு இருப்பேன்
No comments:
Post a Comment
Your concern is appreciable. Thank you for the review