Thursday, January 24, 2019

நட்சத்திரக்குழந்தைகள்


என் சிறுவயது காலங்களில்

அடிக்கடி மின்தட்டுப்பாடு ஏற்படும்
தாத்தா காலத்து மின்விசிறிகளும்
இருமலுடன் ஓய்வெடுக்கும்
புழுக்கமோ எங்கள் தூக்கத்தை
கலைக்க வெளி முற்றத்தில்
பஞ்சுமெத்தையாகிடும் ஓலைப்பாய்.
அப்பாவும் நானும்
வானத்தைப் பார்த்தபடி படுத்திருப்போம்
இருட்டு வீதியிலும் மெல்லிய
வெண்ணுடை உடுத்திய முகில்கள்
தோழிகளுடன் கூட்டமாக
கடந்து செல்வார்கள். ஒரே ஒரு
வெண்நிற தோசைத்தட்டாய்
ஒரு சந்திரன். அவன்
விரும்பியபடி வளருவான்
தேய்ந்துவிடுவான்
சில தினங்களுக்கு என்
கண்ணில் தென்படாமல்
மறைந்து விடுவான். என்னுடன்
சேர்ந்து அவர்களும்
அவனைத் தேடுவார்கள்.
அவர்கள் தான் நட்சத்திரங்கள்.
இத்தனை நட்சத்திரங்களையும்
சிதறவிட்டுச் சென்றவர்கள் யார்?
பாவம் அநாதரவாகச் சிதறிக்கிடக்கிறார்கள்.
அவர்களைப் பொறுக்கி ஒரு கோணிப்பையில்
சேர்த்துவைக்கலாம் தானே
எனச் செல்லமாக வினாவிய என்னிடம்
என் அப்பா
செல்லமே! இந்த நட்சத்திரங்களை
எவராலும் சரியாக எண்ணிவிட முடியாது.
சந்திரன் தனியாக இருக்கையில்
முகில்கள் அனைத்தும் கடந்து செல்லும்.
சந்திரனோ தனித்து விடும்.
அவன் தனிமையைப் போக்க
பிறப்பெடுத்தவர்கள் தான்
இந்த நட்சத்திரக்குழந்தைகள்.
அப்பா! எப்படி இந்த நட்சத்திரக்குழந்தைகள்
பிறப்பெடுக்கிறார்கள்?
இவர்களின் பெற்றோர்கள் யார்?
இவர்கள் ஏன் உயரமான
இடத்தில் இருக்கிறார்கள்?
கீழே விழுந்துவிட மாட்டார்களா?
என் எண்ணற்ற கேள்விகளுக்கு
நிறுத்தற்குறியீடாக செல்லமாய்
ஒரு முத்தம் தந்த என் அப்பா
தரணியில் நல்ல மனிதர்கள்
செய்யும் நற்காரியங்கள்
செய்து கொடுக்கும் சத்தியங்கள்
தர்மம் தலை காத்து நிற்கும் உண்மைகள்
நட்சத்திரக்குழந்தைகளாகப் பிறப்பெடுக்கின்றன.
இங்கு உண்மை பேசி நேர்மையாக
பிறருக்கு தீங்கு விளைவிக்காத
மனிதர்கள் அனைவரும்
அவர்களின் பெற்றோர்கள்.
உண்மையும் தர்மமும் என்றும் உயர்ந்த நிலையில் தான்
இருக்கும். அவை எப்பொழுதும் பிரகாசிக்கச் செய்யும்.
பிள்ளைகளின் உயர்ந்த நிலையை எண்ணி
பெற்றோர்கள் வருத்தத்திற்கு மாறாக
பெருமிதம் கொள்வார்கள்.
அவை அனைத்தும் என்று நிலைமாறி
அநீதி நடக்கின்றதோ அன்று
ஒவ்வொன்றாக நட்சத்திரங்கள் கீழே விழும்.
எனக்கூறி தன்னை மறந்து தூங்கிய
என் அப்பாவை இறுக அணைத்துக்கொண்ட
நானும் உறங்கிவிட்டேன்.
திடீரென தூக்கம் கலைந்தது
குளு குளு அறையிலும் வியர்வை
உடலைத் தெப்பமாக்கியது.
நானும் முயன்று பார்த்தேன் தூக்கம்
வரவில்லை. எழுந்து சென்று ஜன்னல் அருகே
வானத்தைத் தனியாகப் பார்த்தேன்.
எங்கே அவர்கள்?
ஓரிருவருடன் சந்திரன் தனியாக
மாட்டிக்கொண்டு தவிர்க்கின்றது.
அன்று அப்பா சொன்னது சரிதான்
இன்று நல்ல மனிதர்கள் பெருமளவில் இல்லை.
பின் எப்படி நட்சத்திரக் குழந்தைகள்
பிறப்பெடுப்பார்கள்?

Monday, January 21, 2019

உண்மை தேவதைகள்


சிறுவயதில் நான் படித்த
கதைப்புத்தகங்களிலும் என் பொழுதை
களிப்புடன் கழிக்க நான் பார்த்த
கார்ட்டூன்களிலும் தான் நான் பார்த்திருந்தேன்
தேவதைகள்
கண்களை கூசிடச்செய்திடும் வெண்நிறமாய்
தூரமாய் இருந்து பார்த்திடவே
பால் நனைந்த பஞ்சாய்
மென்மையாய் காட்சியளித்திடுவார்கள்
முகத்தில் எப்பொழுதும் புன்சிரிப்புதான்
அழகான ஆபரணங்களும் விலைமிக்க
ஆடையும் சீராக அலங்கரிக்கப்பட்ட
வாரிய நீள்கூந்தலும்
அப்பப்பா இன்னும் அவர்களை
வர்ணித்துக்கொண்டே போகலாம்
முக்கியக்குறிப்பு குழந்தைகள்
ஆசையாய் எதைக்கேட்டாலும்
அவர்களின் அதீத சக்தியால்
ஒரு நொடியில் கொண்டுவந்துவிடுவார்கள்
நானும் ஓர் தேவதையின் மகள் தான்
சிறுவயதில்லை இது புரிந்து கொள்ளும் பருவம் தான்
கதைப்புத்தகங்களும் இல்லை என் பொழுதை
கழிக்கும் நேரமும் இல்லை
நிஜ வாழ்க்கை தேவதைகள்
பூசி மெழுகிடச் செய்திடும் வர்ணப்பூச்சுக்கள்
இல்லை சாதாரண வெயில்பட்டு கறுத்துப்போன தேகம்
வறுமையின் வரட்சி முகத்தில் ரேகைகளாய்
சுருக்கம் பெற்று பார்ப்பதற்கு முதிர்ச்சியுற்ற
தோற்றமாய் வாழ்கிறார்கள்
மாத வருமானம் கையைக் கடித்த போதிலும்
எதையும் சமாளித்து பிள்ளைகள் முன்காட்டிடாமல்
ஒரு புன்னகை செய்வார்கள்
அந்தப்புன்னகையில் கண் தெரியாமல் மூழ்கிப்போய்விடலாம்
தனக்காய் செய்த தாய்வீட்டு சீதனமான நகைகளை
அடகுபிடிக்கும் கடையில் அலங்கரித்தபோதும்
அழகாய் என்மகள் அணிந்திட
சிங்கப்பூர் நகை பத்திரமாய் அலுமாரியில் அடுக்கிவைப்பார்கள்
ஆங்காங்கே கிழிஞ்சல்களைத் தைத்தே
புத்தாண்டு முதல் நத்தார் வரை
பல ஆண்டுகள் கழித்திடுவார்கள்
பட்டுப்பாவாடை கட்டி செல்லமகள் வெட்கம் கொள்ள
புகைப்படமெடுத்து தினம் இரசித்திடுவார்கள்
அனைத்து சுமையையும் பிள்ளைகளிடம் இருந்து மறைத்தாலும் இளநரை காட்டிக்கொடுத்துவிடும்
அதை சீராக வாரி சிகை அலங்காரம் செய்திட
நேரம் செலவிடாமல் ஒற்றைக்குடும்பியுடன்
பெற்ற மக்களுக்கு கடமை புரிந்திட
அடுப்படியில் அரைவயிற்று உணவுடன்
ஆசையாய் ஆகாரம் செய்திடுவார்கள்
எத்தனை கோடி வைத்திருந்தாலும்
நாட்டினை செழிப்பாய் முன்னேற்றிட
உள்ளூர் அமைச்சு வெளிநாட்டில்
கையேந்தியும் முழுமைபெறவில்லை
பெண் தேவதைகளே கைப்பிடியிலும்
அரிசி மூட்டைகளிலும்
தலையணை உறையினுள்ளும் சேமித்து
வைத்திருக்கும் காசு எப்படி
உங்களுக்கு மட்டுமின்றி பிள்ளைகள்
எங்களுக்கும் பகட்டான வாழ்க்கைச் செலவிற்கு
போதுமானதாய் செலவு செய்கிறீர்கள்?
நான் கண்ட நிஜ தேவதைகள் நீங்கள் தான்
எந்தக் கட்டுக்கதையிலும் கற்பனைகளும்
எட்டாத சக்தி நீங்கள்
உண்மை தேவதைகள்

Sunday, January 20, 2019

அவள் ஒரு புதிய அகராதி


காலை எட்டு மணிபோல தான்
அவள் தரிசனம் தருவாள்
அதற்காக அவள் சோம்பேறியும் அல்ல
செல்லப்பிள்ளையும் அல்ல
அதிகாலையிலே மதிய உணவுவரை
அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு
வயோதிபம் காணும் தாயையும்
கவனித்து விட்டு
வீட்டில் வளரும் செல்ல நாய்க்குட்டிக்கும்
பால் ஊட்டி விட்டு பறந்து வரும்
பட்டாம்பூச்சி தான் அவள்
நடுத்தரமான உயரமாகவும்
மாநிறமேனியும் வளைந்த புருவத்தின் மத்தியில்
கறுப்பு நிறப் பொட்டும்
ஆடம்பரமற்ற நேர்த்தியாய்
உடுக்கப்பட்ட ஆடையும்
கைகளுக்கு அடக்கமாய் வளையலும்
கரு நதியாய் கூந்தலும் தான்
அவள் அடையாளம்
சற்றுப்பருமனான தேகம் தான்
காற்றில் மிதப்பது போல
பாதம் வைத்து நடந்திடுவாள்
பார்ப்பதற்கு மென்மையான
தேகம் கொண்டவள்
பாதுகாப்பு தேவையறிந்து
வார்த்தையில் கடினம் காட்டிடுவாள்
ஆண்கள் கூட்டத்தின் மத்தியில்
ஒரு தோழியாய் திகழ்ந்திடுவாள்
ஆண்துணை ஒன்று தேடிடாதவள்
அதன் காரணம் பலர் கேட்டிட
சாட்டுகள் பல சொல்லிடுவாள்
கோவில் குளம் என சென்றிடாதவள்
மனதுருகி வேண்டிடுவாள்
வேண்டிய தெய்வமெல்லாம் பொய் என
நார்த்திகமும் பேசிடுவாள்
அதிகமாய் அனைவரிடமும் பேசிடாதவள்
அனைவருக்கும் அளவுகோல் ஒன்றை
தீர்மானித்த பின்பே பேசவும் செய்வாள்
புலன்களை மாற்றிட அவளிடம்
கல்வி பயில வேண்டும்
துன்பத்திலும் சிரித்திடும்
பெண் சிலையவள்
சோகங்களை மௌனமாய் காத்திடுவாள்
எத்தனை நபர்கள அவள் வட்டத்தில் இருந்தாலும்
அவள் வாட்டத்தை தனிமைக்கே காட்டிடுவாள்
அவளை இலக்கணப்படுத்தவே வேண்டும்
ஒரு புதிய அகராதி

Saturday, January 19, 2019

கணவனாக நான் வேண்டிடும் முதல் ஆசை


அவள் பாத்திரம் துலக்கிடும் 

சத்தம் கேட்டுத்தான் என் அதிகாலை
விழித்து நிற்கும்.
அவள் வாசலில் மஞ்சள் நீர் தெளித்து
மாக்கோலமிடும் அழகைக் காணத்தான்
என் சோம்பலும் முறித்து நிற்கும்
ஈரமான கூந்தலில் முடிந்துவைத்த துணியோடு
என் எண்ணமும் அவளை முடிந்து நிற்கும்
சாம்பிராணி வாசனையும்
அவள் செம்மேனி செஞ்சந்தன வாசனையும்
துளசிமாடம் சுற்றிவர
என் கண்கள் அவளை மட்டும் சுற்றிவரும்
விலை குறைந்த பருத்திப் புடவைதான்
நேர்த்தியாய் அவள் உடுத்திடுவாள்
அவள் பொன்வண்ண மேனியை
எடுப்பாய் அதுவும் எடுத்துக்காட்டிடும்
நெற்றியில் அவள் என்னைச் சுட்டி
வைக்கும் திலகம் மாலை மங்கிப்போயும்
அதன் சாயம் போவதில்லை
அவள் என் மேல் கொண்ட காதல் போல
வகிடு வழி நீட்டிடும்
என் ஆயுள் நீள என்றே
ஆழமாய் பதித்திடுவாள்
காலில் ஆடும் வெள்ளிக்கொளுசு மணி
என் தூக்கம் கலையாமல் துயில் நீளவே
மெல்லிய மென்பாதத்தை பையவே
தரையில் ஊன்றிடுவாள்
தண்ணீரோ தாமரையிலையில் பட்டிடாமல்
அன்னமாய் அழகு நடை நடந்திடுவாள்
காதோரமாய் பல கருநாகங்கள்
சுருள் சுருளாய் காற்றிலாட
ஈரவாடை என்னை நாட
கூந்தல் வழி வழிந்த நீரோ பனித்துளியாய்
எனக்கு தீர்த்தமாகிடும்
பொன் நகைகள் பல அணிந்திடாதவள்
புன்னகையால் ஆரம் சூட்டியே
என் காலைச்சூரிய ஒளியையும்
கண்கூசச் செய்திடுவாள்
வளைந்த நார்க்காலியாய் அவள் இடை
வளர்பிறையோ கெஞ்சிடும் அதை
தினமும் தரிசனம் காண
குழந்தையாய் என்னைக் கெஞ்சிட வைப்பாள்
காலையில் சூடான தேநீர்
சுறுசுறுப்பாய் என்னை மாற்றிட
அவள் தேகமோ என்னை சூடாக்கிட
சுடுதேநீரும் குளிர்ந்தே போய்விடும்
கண்களால் இந்தக்காட்சியை தினம் நான் காண
ஒவ்வொரு நொடியும் எனதாசையாகிட வேண்டும்
காலை நேரமோ நீள வேண்டும்
காயத்திரி மந்திரம் ஓதிடும் அவள் பட்டு உதடுகளோ
உச்ச வகிடு பதிய வேண்டும்
சாலையில் எத்தனை சோலைக்குயில் சென்றாலும்
அவள் அழகில் நான் என்றும் இளைப்பாற வேண்டும்
இதுவே கணவனாக நான் வேண்டிடும் முதல் ஆசை

Tuesday, December 18, 2018

ராதாகிருஸ்ணன்



எப்பொழுதுதான் இவன் குழல் ஊதுவதை நிறுத்தப்போகின்றானோ தெரியவில்லை
எப்பொழுதுதான் அவள் சுயநிலை பெற்று கண்விழித்துப்பார்ப்பாளோ தெரியவில்லை

அகிலமே வியந்து ஆராதனை செய்திடும் தெய்வீகக் காதல்கதை 

இவனோ காதல் தாகம் தீர்க்க குழல் ஊதுகின்றான்

அவளோ காதல் தாகம் தீராதவளாய் மயங்கிக்கிடக்கின்றாள்
என்ன மாயம் தான் செய்தாயோ மாயக்கண்ணா
காற்று எங்கும் உந்தன் காதல் வாசம்
அதை சுவாசித்து உயிர்வாழ்கிறாள் இந்த ராதையின் நேசம்
கவர்ந்து கொள்ளும் நீலமயில் தோகைவிரித்து தன் அழகைக் காட்டிட வானமோ மெல்லிய நீலநிறம் ஆங்காங்கே தூவிட அதன் விம்பமோ தெளிந்த நீரில் தன் அழகைப் படம் போட்டுக்காட்டிட நீலக்கண்ணன் வதனமோ இவையனைத்தையும் மிஞ்சிட அதைப்பாராத ராதையோ குழல் ஓசையில் மட்டும் மூழ்கித்திழைக்கின்றாள்
மூச்சைப்பிடித்து நீண்ட நேரமாய் எந்த ராகம் கொண்டு மீட்டுகின்றானோ அதை
மூச்சையுற்று நிதானம் தவறவிடாமல் தோல்சாய்ந்தபடி காதல் செய்கிறாள் இந்த ராதை
சாதாரண மூங்கில் குழலில் அவன் உதடுபதித்து ஆழமான காதலுடன் உயிர்மூச்சை
துவாரத்தின் வழியே செலுத்தி விரல்களால் யாலம் செய்கின்றான்
யாரும் செய்யாத விந்தையாய் ஆச்சரியத்தில் உறைந்துபோய்விட்டாள்
குழல் ஊதுவதைமட்டும் நிறுத்திவிடாதே
அவள் வேறு உலகத்தில் பரமாத்மா கண்ணனின்
இசையோடு மட்டும் உயிராத்மாவாய் அஞ்சாதவாசம் செய்கின்றாள்

Thursday, November 22, 2018

ஒரு பெண் பிள்ளை வேண்டும்


ஆறு மாதமும் ஆகிவிட்டது
அடிவயிற்றில் கணமோ கூடிவிட்டது
இறுக்க அணைத்துவிட நினைக்கும் உன் நினைப்பையும்
சற்று தூரமாகத்தான் வைத்துக்கொள்ள வேண்டும்
ஆசையாய் என் விரல்பிடித்து வாரிசாய் ஆண் பிள்ளை ஒன்று
கேட்கின்றாய்
உன் ஆசைக்கு ஒரு தவணை சொல்லி இம்முறை வேண்டி நிற்கின்றேன்
உன்போல் ஒரு பெண் பிள்ளை போதும்
ஊர் முழுக்க உன் அத்தை பேரன் வரப் போகிறான் 
பஞ்சு மெத்தை சுகம் போதாது என் மடியில் தாலாட்டிட வேண்டும் என்று வைத்தியம் பார்க்கச் சென்றுவிட்டாள்
தோப்பு துறவு எல்லாம் என் பின்னே ஆளவே கருமாரி 
அருளாய் எனக்கொரு பேரன் வரப்போகிறான் என்று 
கோவில் கோவிலாய் நேர்த்தி வைத்துத் திரிகிறார் உன் மாமனார்
ஒற்றையாய் ஊரவர் உறவினர் செல்லப் பிள்ளையாய்
பெயர் பெற்ற எனக்கோ ஆசையாய் மூத்த பிள்ளை 
ஆண்குழந்தையாய் இருக்கட்டும் என்றேன்
அடம்பிடிக்கும் நீயோ
ஒரு பெண்பிள்ளை மட்டும் போதும் என 
முகத்தைச் சுழிக்கிறாய்
அடி கள்ளி பொதுவாய் ஆண்மகனைத் தான்
பெண் எதிர்பார்ப்பாள் உன் ஆசை வித்தியாசமானது என்றேன்
உன் அன்பில் திகைப்புற்ற நானோ உன் சாயலில் ஒரு பெண் பிள்ளை வேண்டும் என உறுதியாய் திடம் கொள்கின்றாய்
பெண் பிள்ளையவள் இன்னோர் வீட்டில் குடிகொள்பவள் லட்சுமிகரமாய் பெற்றெடுத்தும் இலட்சுமியுடன் தான் அவளை வரவேற்பார் பெற்றெடுத்துத்தா முத்தாய் ஒரு மகன்
இலட்மிசுமியுடன் சாமுந்திரிக லட்சணமாய் அழைத்துவருவான் ஒரு பெண்ணை
பெண்பிள்ளையவள் தந்தை தான் தன் முதல் உலகம் என்றாலும் தாயுடன் எவ்வளவு கடிந்து கொண்டாலும்
அன்னைக்காய் ஓர் இடம் அவள் மனதில் வைத்திருப்பாள்
பால் அருந்தும் போது அன்னை முகம் கண்டு சிரிந்து நிற்பாள் அவள் கூந்தலிலே வளையம் செய்து இழுத்திருப்பாள் வண்ணம் அது அடையாளம் கண்டு தாயின் திசைக்கு தலை அசைத்து நிற்பாள்
சலவை செய்துவைத்த புடவையை கட்டி அழகு பார்த்து கசக்கியிருப்பாள்
மல்லிகை அது கொடிமீது மணம் வீசவில்லை என் மகள் தலையில் சூட்டும் வரை பொழிவிழக்கவில்லை
காலில் கட்டிய கொளுசு சத்தம் அவள் இடம் காட்டிவிடும் என சிந்திக்காது மறைந்து நின்று வேடிக்கை காட்டுவாள்
ஒன்றும் அறியா அப்பாவியாய் அவளிடம் நானும் தோற்றுப்போவேன்
அவள் கூந்தல் வாரி ஜடை போட்டு அலங்கரிப்பேன்
காதுக்கு ஜிமிக்கி மாட்டி இரசித்து நிற்பேன்
பட்டுப்பாவாடை காஞ்சிபுரத்தில் எடுத்து வந்து அவள் அணிந்துவர கோவிலில் திருவிழா வைப்பேன்
விதவிதமாய் வளையல் வாங்கி அவள் கை நிறைய அழகு பார்ப்பேன்
காலையில் அவள் விழித்தெழ சேவலும் வாங்கி வைப்பேன் நல்லதாய் பல கற்றிட நூல்களும் தேக்கிவைப்பேன்
சத்துணவாய் பல கண்டறிந்து ஊட்டிடுவேன் 
சக்திமிக்க வலிமையான பெண்ணாய் அவளை மாற்றிடுவேன்
அடுப்படியில் சிறு துணைக்காய் அவளை கூப்பிடுவேன் 
என் அன்னை சொல்லிக்கொடுக்கா அனைத்தையும் 
அவளுக்கு புகட்டிடுவேன்
வயதிற்கு வந்தவுடன் சிறப்பாய் எல்லாம் செய்திடுவேன்
நான் அற்ற உலகத்தில் அவள் பாதம் பதிக்க அறிவுறை உரைத்திடுவேன் 
பெண்பிள்ளைதானே என ஏளனம் செய்யும் ஊரவர் முன்னே 
துணிச்சலாய் அவள் நடக்க பக்கபலமாய் நின்றிடுவேன்
திருமணம் அதில் அவள் மனம் கேட்டிடுவேன் திருத்தமாய் துணை தேட பொருத்தமாய் சில விடயம் காதில் ஓதிவைப்பேன் 
அச்சம் அவள் கொள்ளும் போது ஆதரவாய் வார்த்தை உரைப்பேன் எதையும் அவள் எதிர்கொள்ள ஏணிப்படியாய் தாங்கிநிற்பேன்
கரு ஒன்றை அவள் சுமக்கையில் மறுபடியும் அவளை சுமந்து செல்வேன் பிரசவறையில் அவள் வேதனை கண்டு மறுபடியும் என் வலியை பொறுத்துக்கொள்வேன்
பிள்ளை ஒன்று அவள் பெற்றெடுக்கையில் என் உயிரை கையில் வைத்திருப்பேன்
பெண்ணானவள் பூரணமடைந்ததை எண்ணி இனிவரும் கருமம் ஆற்றிநிர்பேன்
இத்தனை சுகங்களும் அடைந்துவிட ஒரு பெண்பிள்ளை போதுமென்று இத்தனை அழகாய் சொல்லிவிட்டேன்
இனி உம் விருப்பமென பேசிவிட உம்மிடம் வார்த்தையின்றிய நிலை உருவாக்கி நானோ என் பெண்பிள்ளைக்காய் பிரசவநாட்களை எண்ணிக்கழிக்கின்றேன்

Thursday, November 8, 2018

காதலின் வர்ணம் தான் என்ன?


காதலின் வர்ணம் தான் என்ன?
உள்ளத்தால் தூய்மையாக யாசிப்பதால் 
வெள்ளைநிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
கடலிலும் ஆழமாய் நேசிக்கின்றேன் 
என வாக்குறுதி அளிப்பதால் 
நீல நிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
மனதார மங்களமாய் வாழ்க்கை ஆரம்பிக்க
இக்காதல் எனும் புரிதல் அவசியமென்பதால்
மஞ்சள் நிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
செய்வதறியாது தன்நிலை தொலைத்தோர்
அபாயகரமானது என எச்சரிக்கை விடுக்க
சிவப்பு நிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
பச்சிளம் காலத்திலும்
பருவமடையா வயதினிலும் தோன்றுவதால்
பச்சை நிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
துக்கத்தின் அடையாளமாய் துயர் பகிர
மதுச்சாலைகளிலும் புகையிலை வாசனையோடும்
கறுப்பு நிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
அட இந்தக்காலத்து காதலாவது கத்தரிக்காயாவது
என திட்டித்தீர்க்கும் பெரிசுகள்
ஊதா நிறம் கொடுத்திருப்பார்களோ?
காதலை உருவாக்கியவன் அதற்கு எந்த வர்ணம்
கொண்டு வானவில் வரைந்தானோ தெரியவில்லை
மாறாக தன்னைத் தொலைத்தவன்
கொடுத்த வர்ணம் தான் கண்ணீர்

Monday, November 5, 2018

ஏனோ என் வானிலையும் மாறிச்சென்றது


சற்று கூதலான காற்று தான் 
காதோரமாய் வளைந்து நெளிந்து 
நர்த்தனமாடிய கருங்கூந்தலை சற்று விலக்கிவிட்டு
ஏதோ சொல்லிச்சென்றது
விளக்கை சுமந்தபடி ஒளியால்
ஓவியம் வரையும் மின்மினிப்பூச்சியும்
ஒரு நிற ஒளியால்
ஏதோ சமிஞ்சை காட்டிச்சென்றது
பச்சை வயலோ இருளின் சூழ்ச்சியில்
கறுப்புக்கம்பளி போர்த்தி
என் மௌனத்தைக்கலைக்கும் வகையில்
ஏதோ ஒரு ஊந்துதல் தந்து சென்றது
மௌனக்கருவைக் கலைத்த நானோ
காதல் வலியால் துடிக்க
ஏனோ உன் பார்வையும் எனக்குப் பத்தியம் தந்தது
சொல்வதற்கு புதிதாய் ஏதுமில்லை
இதுவும் ஒரு இரயில் பயணம் தான்
அன்று மட்டும் புதிதாகியது
இதயவறை அருகே எனக்கொரு கருவறை கொண்டு
என்னவன் என்னைச் சுமந்து சென்ற நிமிடங்கள்
என் பயணத்தை சுவாரஸ்யமூட்ட பல குறும்புக்கதைகளைத்
திரட்டி வைத்திருந்தேன்
ஏனோ என் வார்த்தைகள் அனைத்தும் உன் பார்வைக்கு முன்னே நழுவிச் சென்றுவிட்டது
சற்று கதகதப்பு அதிகம் தான் இருந்தாலும் உன் வாடை பட்ட காற்றை நான் தவறவிடாமல் சுவாசத்தில் உள்வாங்கினேன்
உறக்கம் பெரிதாய் வரவில்லை இருந்தாலும்
என் தூக்கத்தில் உன் கவனிப்பு என்னவாக இருக்கும் என அறிய தூங்குவது போல் பாசங்கு செய்து பார்த்தேன்
ஏனோ உன் தீண்டல்களும் வருடல்களும் பிறர் கண் வைக்கும்படி பாசத்தைப் பறை சாற்றியது
மெதுவாகத் தட்டிக்கொடுக்கும் உன் விரல்கள்
என் தலை தடவ தவறியதில்லை
இருக்கமாய் என்னைப் பற்றிய உன் கரங்களோ
எச்சந்தர்ப்பத்திலும் என்னைத் தொலைத்ததில்லை
இதயத்துடிப்பிலும் எனக்கோர் தாலாட்டு இசை அரஞ்கேற்றி நின்றாய் நானும் ஏனோ ஒன்றும் அறிந்திராதவளாள்
உன் அரவணைப்பின் உச்சத்தில் என் நாடகத்தையும் அரஞ்கேற்றி முடித்தேன்
இம்முறை இரயிலின் ஒலி காதைப் பிளந்தது
சிணு சிணுவென கடுகாய் வெடுத்த என் பார்வைக்குப் பதில்
நாம் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது என்றாய்
சொல்லாத என் வார்த்தைகளோடு உன் பின்னால் வந்தேன்
நேரம் மட்டுமில்லை உன்னால்
ஏனோ என் வானிலையும் மாறிச்சென்றது

Tuesday, October 30, 2018

முள்வேலிக்குள் அகப்பட்ட இதயம் ஒன்றின் அழுகுரல்



இரு இதயங்கள் துடிக்கும் சத்தம் தான் கேட்கின்றது
ஒரு இதயம் தியாகம் செய்யும் தொனியுடனும் 
மறு இதயம் குற்றம் செய்த தொனியுடனும்
நடுவே ஒரு முள்வேலி
ஆம் முள்வேலிக்குள் அகப்பட்ட இதயம் ஒன்றின் அழுகுரல்
தான் இங்கு வரிகளாக காட்சிப்படுத்தப்படுகிறது
அழகான குக்கிராமம் அதிகாலைச் சூரியனும் கண் வைத்துவிடும்
மலர்களோ வாசனை வீசி மங்கையரைக் கவர்ந்திடும்
பச்சை வயலோ காற்றில் தலையசைத்திடும்
வண்ணச் சேலைகளோ காற்றில் உலர்ந்திடும்
பூஜைகள் சிறப்பாய் நடந்திடவே கோவில் மணி அடித்திடும்
மூன்று வேளைக்குமாய் அன்னம் அடுப்பில் அவிந்திடும்
வெட்டிப்பேச்சுக்காய் மாலை திண்ணை நிரம்பிடும்
இந்த இன்பம் போதுமென்றே சூரியனும் மறைந்திடும்
இதுதான் என் கிராமம்
நான் தான் தியாகம் செய்யும் இதயம் பேசுகின்றேன்
உடையவன் இன்றி மாற்றான் கைப்பற்றிய பின்
இறக்க இருக்கும் தறுவாயில் கடைசியாக பேசுகின்றேன்
மலர் சூடிய மங்கையரே உம் கணவரிக் இறுதிச்சடங்கை
நிறைவேற்றக்கூட வழியின்றி ஒரு மலராவது அவர் நினைவாய் வாடட்டும் எனக் கொய்கின்றீரோ
இங்கு மலர் முழுவதும் இரத்த வாடை வீசுகிறது
தப்பித்து ஓடிவிடும்
பச்சை வயலோ கருகி சாம்பலாகிவிட்டது இனி எங்கு
அறுவடை செய்ய ஊரார் உறவுடன் பந்தல் நாட்டுவது
வண்ணச் சேலைகள் இரண்டைப் பத்திரமாக எடுத்து வையுங்கள் நாடோடியாய் ஓடும் இடங்களில் தரையில் விரிப்பதற்கு ஒன்று
கிடைக்கும் மரக்கிளைகளில் குழந்தை உறங்க ஏணை கட்டுவதற்கு மற்றொன்று
கோவில் மணியை ஒருபடியாகக் கண்டு கொண்டேன்
ஆனால் கோவில்களும் விக்கிரங்களும் தான் காணாமற்ப் போய்விட்டன
ஒரு மூட்டை அரிசி ஒவ்வொருவர் கைகளிலும் இருக்கட்டும் ஒருவேளையவது உப்புக் கஞ்சி குடித்து உயிர் வாழ உதவிடும்
திண்ணைகளில் கால் வலிப்பதாய் அமர்ந்துவிடாதீர்கள்
உயிர்பறிக்கும் வெடிப்பொருட்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம்
இன்று எம் துயர் தாங்காத சூரியன் சோகமாய் மறைந்துவிட்டது
நானோ முள் வேலிக்கு உள்ளே என் உயிரைத் தியாகம் செய்து என் குடும்பத்தை ஏதோ ஓர் மூலையில் வாழ வழிவகுக்கின்றேன்
என்னைப் பெற்றவளோ பெற்ற கடனுக்கு செய்யாக்குற்றம் தன்னை தன்மேல் சுமத்தி கண்ணீரால் கெஞ்சிக்கொண்டு வேலியின் மறுபுறம் நிற்கின்றாள்

நான் என்பது சமூகத்தின் பிரதிபலிப்புக்களே




நான் சற்று கடினமானவள் தான்
என்னைச் சுற்றி போலியாய் சிரிக்கும் 
முகங்கள் பல கண்டும் புன்முறுவல் செய்யும்
முகத்துடன் கடந்து செல்கையில்
நான் சற்று திமிர் பிடித்தவள் தான்
சுயமரியாதையற்று சீவிக்கும்
சில சமூகங்களிடமிருந்து
சற்று விலகிச் செல்கையில்
நான் சற்று எளிமையானவள் தான்
ஆடம்பரத்தில் தான் அழகு இருப்பதாக
தங்களைத் தாங்களே ஏமாற்றும்
ஒரு கூட்டம் கண்டு உள்ளூரச்சிரிக்கையில்
நான் சற்று வேடிக்கையானவள் தான்
உண்மையை நான் அறிந்ததை அறிந்திராமல்
அதை மெருகூட்டுவதற்குப் பல பொய்களைச்
சொல்லி கதை ஆசிரியர் ஆவோர் பல மத்தியில்
நான் சற்று கோபக்காரி தான்
உண்மை நேர்மை சத்தியம் இதையணைத்தையும்
ஏளனமாய் ஓரம்கட்டி அதை ஏற்பதில்
என் மனம் சம்மதிக்காமல் வார்தைகளை கொட்டும் வேளையில்
நான் சற்று தனிமையானவள் தான்
அனைத்து உயிர்களும் அவர் அவர் கடமைகள் முடிந்தபின்
விலகிடும் தற்காலிகமான ஒரு பிணைப்புத் தான் இந்த
உறவுகள் என்று அறிந்த வேளையில்
நான் சற்று துணிந்தவள் தான்
ஆண் துணையற்ற பெண்ணின் வாழ்க்கை
சமூகத்தின் பார்வையில் இருந்து பாதுகாப்பாய்
விலகி நடக்க மனித ஓநாய்கள் பல தோன்றிய சந்தர்ப்பத்தில்
நான் சற்று விரக்தியானவள் தான்
இறப்பும் பிறப்பும் நிலையானது என்பது போல்
என் வாழ்வில் எதிலும் ஏமாற்றம் என அறிந்தும்
முயற்ச்சிகளைக் கைவிடாது விரைந்து செயற்படுகையில்
நான் சற்று அன்பானவள் தான்
ஒவ்வொரு உயிருக்கும் உண்டான மதிப்பை
அவர்களுக்காக பிறர் சிந்திடும் கண்ணீரின்
வலியை நன்கு அறிந்தமையினால்
நான் சற்று ஏமாளி தான்
அன்பெனும் போர்வை போர்த்திய விஷப்பாம்புகள்
எனத் தெரிந்திருந்தும் அன்பால் சாதித்துவிடலாம்
என இன்னும் நம்பிக்கை எனும் மாயையில் சஞ்சரிக்கையில்
இங்கு நான் என்பது சமூகத்தின் பிரதிபலிப்புக்களே
இதில் குறை தெரிந்தால் மாற்றவேண்டும் இந்த சமூகத்தையே

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...