Thursday, May 7, 2020

பழைய தூசி




அடுக்கிவைக்கப்பட்டிருந்த பழைய 
புத்தகங்களை எல்லாம் தூசி தட்டிக்கொண்டிருக்கிறேன்
பத்தாம் வகுப்பு கணக்குப்புத்தகம் 
ஒன்று கையில் அகப்பட்டது. 
பின்னாலிருந்து ஒரு குரல் 
இன்னும் சமைத்து முடிக்கவில்லையா? 
பசிக்கிறது கனத்த குரல் 
இன்று ஏதோ கடுமையாய் ஒலிக்கிறது.
அது அவர் தான். 
மதிய இடைவேளையில் சற்று சினத்தையும் கொண்டு வந்திருந்தார்
அம்மா என்ன சாப்பாடு? எனக்கு ஊட்டிவிடு
இது அவனின் குரல். செல்லக்கண்ணன் 
ஏதோ களைப்போடு கேட்கிறான்.
வாலாட்டி நானும் இருக்கிறேன் 
என்னையும் கவனியுங்கள் என்றான் 
குட்டி ராசன் அவனும் செல்லப்பையன் தான்.
பரிமாறல் முடிந்ததும் மீண்டும் புதைந்து கொண்டேன் 
தூசி தட்டும் பணியில் செல்லக்கண்ணனை தூங்கவைத்து விட்டு
இந்த சின்னக்கேள்விக்கா பிழை எடுத்திருக்கிறேன்
எத்தனை பிழை திருத்தங்கள் செய்திருக்கின்றேன்
அவரும் செல்லக்கண்ணனும் என்னைக் கணக்கில் புலி 
என்று கேலி செய்வதில் ஓர் நட்டமும் இல்லை. 
அப்படியே கடந்து சென்ற கண்களுக்கு புலப்பட்டது 
கடைசிப் பக்கம் மதுமலர் மதியழகன் என்றே நிரப்பப்பட்டிருந்தது. 
அங்கு பல ஓவியங்களும் பேனை மையினால் 
சிறப்பாய் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதயங்களில் அம்பு 
துளைக்கும் விதங்களோ ஆச்சரியம் தான் 
ஏனெனில் அம்பின் முன்புறம் பின்புறம் 
எல்லாம் அழகாய் வரையப்பட்டு இதயங்கள் மட்டும் 
அப்பளம் போன்று இருந்தன. அதில் சிறு கவிதைகள் வேறு 
“ உடல் மண்ணிற்கு உயிர் உனக்கு” 
சொந்தமாய் எழுதக்கூடத் தெரியவில்லை. 
இப்படியிருந்தால் எப்படித்தான் 
கணக்குப்பாடம் தலைக்கு ஏறியிருக்கும்? 
ஆனால் காதல் மட்டும் நுழைந்துவிட்டது. 
பழைய தூசிக்குள் இத்தனை வனப்பான நினைவுகளா? 
நேரமாகிவிட்டது நான் போய்வரட்டுமா மது 
எனக் கன்னத்தைக் கிள்ளினார் 
நானும் பதிலுக்கு தலையசைத்து வழியனுப்பி விட்டு வந்தேன் 
என் மதியழகனை 
மீண்டும் பழைய தூசிகளுடன்  உறவாட.

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

பெண்ணுக்குள் தேவதை

  பெண்ணுக்குள் புதிதாய் ஓர்  தேவதை பிறக்கின்றாள் அவள் வர்ணமற்றவள் அவள் உருவமற்றவள் அவள் உணர்வுகளால் வர்ணம் கொண்டு உணர்ச்சிகளாய் உருவம் கொள்க...