வீதியோரமாய் வேலைப்பழுவில் விரக்தியில்
விரைந்து சென்றுகொண்டிருந்தேன் வீட்டை எப்படியாவது மணி ஆறுக்குள்
அடைந்துவிடும் நோக்கில்
கொடியில் காயப்போட்ட உடைகளை எல்லாம் எடுத்து மடித்து வைக்க வேண்டும்
மதியம் மிஞ்சியதை குழைத்து வீதியில் திரியும் நாய்க்குட்டிக்கு வைக்க வேண்டும்
புதிதாய் ஏதும் சமைக்க வேண்டும்
வீடுவாசல் துப்பரவு செய்து சாமிப்படத்திற்கு
விளக்கு வைக்கவேண்டும்
குளித்துவிட்டு நூலகத்தில் இரவல்
வாங்கிய நாவலை வாசிக்க வேண்டும்
கடிதப்பெட்டியினுள் ஒரு கடிதமாவது
இருக்குமா என எட்டிப் பார்க்கவேண்டும்
அப்பப்பா அடுக்கிக்கொண்டுபோகலாம்
தனிமையில் வாழும் வாழ்க்கையின் அடுத்தவர் உதவியில்லா அட்டவணையை
எண்ணிய எண்ணமெல்லாம்
சடார் என வெடித்தது நிமிர்ந்து பார்த்தேன்
வானில் வெள்ளி நரம்புகள் தெரிய
சுற்றமும் இருள் சூழ
கடாயுதம் கொண்டு எவனோ இடிக்கின்றான்
மழைவரப்போகிறது என எண்ணும் முன்னே
இதமான மழைக்காற்று என் விரக்தியை
எல்லாம் தூக்கிவாரிப்போட்டது
எத்தனை இதம் தான் இந்த மழைக்காற்றில்
சுள் என்று குத்திய சூரியக்கதிரால் துளையின்
வழி வழிந்த வியர்வை மாயமாகி உடல் குளிர்ந்தது
அதிரடியாய் குடை விரிக்க இறுக்கமான தழுவலுக்காய் என்னை ஓரடி பின் நகர்த்தியது
மண்வாசனை எல்லாம் திரட்டி நாசியில் உட்சுவாசத்தை ஒரு நொடி நிறுத்தியது
கூந்தல் இடைவெளிகளை வருடிவிட்டது
பின்புவரும் மழைக்கு முன்பு வந்த அழைப்பிதழ்
என்னையும் இந்த சபையின் நிகழ்வில் கலந்திட மண்டியிட்டது ஆனால் மனமோ
கொடியில் காயப்போட்ட உடைகளை எல்லாம் எடுத்து மடித்து வைக்க வேண்டும்
மதியம் மிஞ்சியதை குழைத்து வீதியில் திரியும் நாய்க்குட்டிக்கு வைக்க வேண்டும்
புதிதாய் ஏதும் சமைக்க வேண்டும்
வீடுவாசல் துப்பரவு செய்து சாமிப்படத்திற்கு
விளக்கு வைக்கவேண்டும்
குளித்துவிட்டு நூலகத்தில் இரவல்
வாங்கிய நாவலை வாசிக்க வேண்டும்
கடிதப்பெட்டியினுள் ஒரு கடிதமாவது
இருக்குமா என எட்டிப் பார்க்கவேண்டும் என்றே என்னை ஏவியது.
இருக்கட்டும் இன்று மழையில் தெப்பமாகத்தான் போகிறேன்
மழைக்காற்று என்னை துவட்டத்தான் போகிறது உங்கள் ஏவலை
நான் சரி செய்துகொள்வேன் எப்படியாவது
உலர்ந்த உடைகளை மீண்டும் துவைப்பதில் சிரமமில்லை
மிஞ்சியதை இன்று அப்பளம் பொரித்து நானே உண்கிறேன்
மழையே என்னைக் குளிப்பாட்டி விடும் சாட்டாய் நாலு வாளி தண்ணீரில்
உடல் நனைப்பேன்
சுடச்சுட இஞ்சித்தேநீர் நாவல் வாசிக்க விழிப்பாய் இருக்கும்
கடிதம் இன்று மட்டும் அதிசயமாய் யார் எழுதிவிடப்போகிறார்
மழைக்காற்று வருடல் இன்றைய இரவிற்கு நிம்மதியான உறக்கம் தரும்
Super
ReplyDeleteThank you
Delete