என் சக்கரை நிலவே
என்றும் உன்னிடம் முறையிடுவது போல்
இன்றும் உன்னிடம் தான் முறையிடப்போகின்றேன்
கருந்திரைகளுக்குப் பின் ஒழிந்துகொள்ளாதே
போதை தலைக்கேறி பிதற்றிடவிட
உன்னிடம் வரவில்லை
உள்ளூரும் கள்ளப் பொய்தன்னை
பொல்லாப்பில்லா போதனை
செய்ய வரவில்லை
பசுமரத்தில் பதியவைத்த ஆணி இது
பாறையில் செதுக்கிய சிற்பமிது
எவனோ வரைந்த வர்ணக்கோலமிது
வானவில்லாய் வளைந்து வளைந்து
என் நினைவில் அம்பும் வில்லுமாய் குறி பார்க்கிறது
நாளைய தேர்தலில் வாக்கெடுப்புகளை
கணிசமாய்க் கூற நான் வல்லமை
படைத்திராமல் இருக்கலாம்
ஆட்சியில் மாற்றங்கள் வந்து
மாயைக்கு இழுத்துச் செல்லலாம்
மத்தாப்புக்கும் மதுபானங்களுக்கும்
வரிகுறைக்கப்படலாம்
ஆவணக்கொலைகளுக்கும் அவரவர் பழிகளுக்கும்
அரசு செவிசாய்க்கலாம்
கஞ்சாக்களும் கசிப்பும் கைத்துவக்கும்
சட்டைப்பாக்கெட்டில் கொட்டிக்கிடக்கலாம்
தர்மம் செய்ய சில்லறைகளும் தாளாய் மாறலாம்
குளு குளு பெட்டிகளும் வர்ணதிரைகளும்
வீட்டில் பெருமை சேர்க்கலாம்
இவை எதுவும் சிறிதுகாலம் தான்
நிரந்தரமற்றவை நிலையற்றவை
உரிமை எடுப்பதற்காய் உரிமைகளை பறிக்கும்
கண்கட்டிவித்தை
ஏற்கனவே எழுதப்பட்ட விதிக்கு நாடகம்
அரங்கேற்றும் கைப்பொம்மைகள்
விருப்பம் தெரிவிக்கும் ஒரு விளையாட்டு இது
தன் பயிரை தீமூட்ட கொள்ளிக்கட்டை கொடுத்து
அனுப்பும் துர்ப்பாக்கியகாலமிது
எத்தனை பள்ளிகூடத்தில் போதித்தாலும்
தலைக்கேறா சுயசிந்தனை இது
என் கட்டாய விருப்பம் ஆனால் அவர்களின் தெரிவு
கிடைப்பதோ ஓரிரு நாள் விடுமுறை
வேறு என்ன இலாபம்?
உன்னிடம் முறையிடுவதால் நானும் ஒருவகை கோழைதான்
எழுதியதை மாற்றியமைக்க நல்லொரு அரசியல்
விடியப்பொழுதில் கரையும் என் சக்கரை நிலவு