Sunday, June 9, 2019

காதல் அடங்காப்பிடாரிகள்



காதல் அடங்காப்பிடாரிகள் தான் 
எங்கள் பெண் சமூகம்
எதிலும் எங்களுக்கான காதல் 
அடங்குவதுமில்லை
ஒன்றில் ஏற்பட்ட காதல் 
தீர்ந்துபோவதுமில்லை.
பிறருக்காக எங்கள் காதலை 
விட்டுக்கொடுப்பதில்லை
பிறருடனான காதல் அவர்கள் வஞ்சித்தும் மனம் 
விட்டுக்கொடுப்பதில்லை
புத்தகத்தின் நடுப்பக்க மயிலிறகு பென்சில் சீவலில் 
வளர்வதுமில்லை
அஞ்ஞானம் தாண்டி அறிவு விழித்தாலும் 
தினமும் வளரும் என்ற நம்பிக்கை 
குறைவதுமில்லை
காதல் தோல்விகள் பெண்களுக்கானது
இல்லை
ஆண்கள் மனதில் அதற்கு அர்த்தம் சரியாகப் 
பதிவிடப்படவில்லை
தாய் வயிற்றில் கருவாய் தடம் பதித்த நாள் முதல்
கருவறைச் சுவரை காதல் செய்வாள்
அதன் மென் சூட்டின் கதகதப்பை சுவாசம் செய்வாள்
வெளி உலகை எட்டிப்பார்க்கையில் அவள் தாய் முகம் பார்த்து
சிரித்திட தந்தை எனும் புதுச்சூழலை தாய் அறிமுகம் செய்வாள்
இவளும் தன் காதலை அப்பா என்றே அன்புடன் பகிர்ந்துகொள்வாள்
நாளுக்கு நாள் அவள் வளர உறவுகளும் பெருக காதல் மட்டுமென்ன அணைக்கட்டில்லா ஆறாய் உருவெடுக்கும்
மனிதர்கள் இடத்தில் மட்டுமல்ல செல்லமாய் விளையாடிடும் பிராணிகளிடமும் ஆசையாய் வளர்க்கும் புல் பூண்டுகளிடமும்
அதன் வாட்டம் கண்டால் மனம் ஒடிந்து விடுவாள்
பாடப்புத்தகங்கிற்கு அழகாய் உறையிட்டு அலங்கரித்தவள் வர்ண வர்ணப் பேனைகளால் ஆசையாய் அவள் பெயர் பொறித்திடுவாள்
அடுப்படியில் கறி கிளறும் கரண்டிச் சத்தம் அரை அவியலிலே சுவை பார்த்து ஓய்வுகொடுக்கும்
பிசையும் சாதம் ஒரு பருக்கையாய் மிஞ்சும் வரை விருத்தோம்பலில் நளபாகம் தேர்வு பெற்றவள் தண்ணீர்குவளையுடன் சிரித்த முகம் மணம்வீச வந்தோரை காதல் செய்வாள்
காதலுக்கு தலைசிறந்த பரிசு தாஜ்மஹாலா? அவளிடம் அன்பாய் ஒரு பார்வை பார்த்துவிடு அதை ஆயுள் வரை அடிமனதில் தேக்கிவைப்பாள்
அவளுக்கு புடவைகளில் ஆபரணங்களில் அழகுசாதனப்பொருட்களில் காதல் ஏற்படாதா?
ஆம் ஏற்படும் தான். 
பிடித்த வர்ணங்களில் எடுப்பாய் காட்டிட புடவைகள் எத்தனை எடுத்தாலும் அம்மாவின் பழைய சேலையைக் கட்டி அப்பாவிடம் காட்டிடும் காதல் அவளிற்கு பெரியது.
தங்க விலை கூடிச்செல்ல சேமிக்கும் காசில் புதிய வடிவமைப்பில் வாங்கிவைக்கும் ஆபரணங்களோ இன்னும் பிறக்காத தன்மகளிற்கு தாய்வீட்டு சீதனம் என வாங்கி அழகுபார்க்கும் 
காதல் அவளிற்கு பெரியது
உதட்டுச் சாயமும் கருகண்மையும் தோற்றப்பொழிவு கொடுத்தாலும் வாசம் வீசும் வாடாமல்லிகை சூடி அதன்போதையில் கண்களால் புன்னகை செய்து கண்மையினால் குழந்தைக்கு திருஷ்டிப்பொட்டு வைக்கும் காதல் அவளிற்கு பெரியது.
கணவனிடத்தில் எப்பொழுது மனைவியாகத் திகழ்வாள்?
பெணகள் காதலி என்று சொல்லும் போதே மனைவியாகி விடுகிறாள்
மனைவி எனும் பொழுது உனக்குத் தாயாகிவிடுகிறாள்
உன் கோபத்திலும் சோகத்திலும் உன்னை விட்டுவிலகாது என்றும் காதலியாகின்றாள்
தன்துயர் துடைக்கவே சிறுநொடி சேயாகின்றாள்
பெண் என்றுமே ஒரு வட்டத்துள் இருந்ததுமில்லை
இறப்பின் நொடிவரை அவள் காதல் அடங்கிப்போவதுமில்லை
இனி அடங்காப்பிடாரி என நீங்கள் என்னை உச்சரித்தால்
தாராளமாய் ஏற்றுக்கொள்கின்றேன் மறவாமல் காதலையும் சேர்த்து
காதல் அடங்காப்பிடாரி என்றே கூப்பிடுங்கள்.

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...