Monday, October 15, 2018

ஓடாதே என் ஆசைக் கணவா


ஓடாதே என் ஆசைக் கணவா
அன்று தொட்ட காலம் முதல் 
உன் மீது கொண்ட காதல்
பூமாலை மணக்கோலம் தாண்டி
இப்பூவுலகில் இருவரின் பாதமும் 
ஒருமித்தப் பதிந்திட தவம் இல்லா
வரம் ஒன்று கைகளில் ஏந்தியும்
எல்லையில்லா மகிழ்ச்சியை
விழிகளால் வழிந்தோடிடும் கண்ணீரும்
உரைத்து நிற்கும்
என் வாழ்நாள் முழுவதும் சேர்த்துவைத்த
ஆசை எல்லாம் திகட்டத்திகட்ட
பாசமாய் ஊட்டிவிட உன் மார்பின் அருகில்
சற்று இடம் தந்து
என்னை அணைத்துக் கொள்
கழுத்தில் நீ கட்டிய மாங்கல்யம்
வேலி மட்டுமல்ல உன் மீது நான் கொண்ட
அதீத காதலையும் கர்வத்துடன் தினமும்
நினைவூட்டி நிற்கும் எவ்வேளையும்
வேலை மக்கள் குடும்பம் என்று ஓடிவிடாது
என்னைக் கொஞ்சம் அணைத்துக் கொண்டு
அமைதியாய் இரு
அந்த நிசப்பத்தில் எனக்காக மட்டும் துடிக்கும் உன்
இதயத் துடிப்பை கேட்டுக் கொண்டே என் வாழ்நாளைக்
கழித்துவிட ஒரு கணம் ஓடாதே என் ஆசைக் கணவா

ஏன் இன்னும் இந்த இடைவெளி?


பதிவுத் திருமணமும் முடிந்துவிட்டது
சட்ட ரீதியாக மட்டும் மனைவி ஆகிவிட்டேன்
ஊர் அறிய உறவறிய திருமணத்திற்கு நாள் பார்க்கிறாள்
உன் மாமியார்
தடபுடலாய் சமையலுக்கு ஆள் தேடுகின்றான் உன் மூத்த மச்சான்
மண்டபம் அலங்காரம் பத்திரிகையில் நேரத்தைப் போக்காட்டுகின்றான் உன் இளைய மச்சான்
அறிவுரையும் சமையல் கலையும் அழகுக்கலையிலும் நிபுணத்துவம் பெறுகிறாள் உன் மைத்துனி
நான் மட்டும் உன் நினைவாய் எம் சந்திப்பிற்காய் காத்திருக்கின்றேன்
அனைவரும் கோவில் சென்றுவிட்டார்கள்
நான் மட்டும் தனிமையில் உன் நினைவுகளோடு
எதேற்சையாய் நீயும் வந்தாய் இது கனவல்ல மறக்க முடியா நினைவு
காதல் புரிய இதுவல்லவோ சிறந்த நேரம் என நான் நாணம் கொட்ட என் அருகில் வந்த நீயோ என் கண்களை தின்பதாய் பார்க்கிறாய்
நாணம் கொஞ்சம் வெட்கமாய் மாறிட என் பெண்மைக்கான கூச்சத்தை ஓரம் கட்டி உன்னிடம் கேட்டேன்
“ ஏன் இன்னும் இந்த இடைவெளி?”
செல்லமாய் என் கன்னத்தைத் தட்டியவாறு கூறினாய்
“ஊரார் ஆசியுடன் உன்னை மனைவி ஆக்கிய பின் இனி ஏது இந்த இடைவெளி “
கண்கலங்கிய என் கண்மடலைத் துடைத்தபடியே பார்க்கின்றாய்
அதில் தெரிந்ததோ உன் ஆண்மையின் அடையாளம்

Saturday, October 13, 2018

அம்மா எனக்கோர் மாப்பிள்ளை பாருங்கள்


அம்மா எனக்கோர் மாப்பிள்ளை பாருங்கள்
திருமணவயதை ஓரளவு அடைந்துவிட்டேன்
உங்கள் கைப்பக்குவத்தில் அறுசுவை விருந்தளிப்பேன்
இல்லத்தரசிக்கேற்ப ஓடியாடி உங்கள் பெயரைக் காப்பாற்ற 
மாமியார் வீட்டில் வேலை செய்வேன்
சடங்கு சம்பிரதாயங்களைக் கொஞ்சம் சொல்லித்தாருங்கள் போகும் இடத்தில் கடைப்பிடிக்க
மாப்பிள்ளை அவர் உங்கள் விருப்பம்
உங்களின் எந்தத் தெரிவையும் நான் ஏற்றுக்கொள்வேன்
உயரம் வயது நிறம் குணம் அழகு படிப்பு பதவி பணம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை
ஏனெனில் பார்த்துப் பார்த்து நான் தேடிய தேடலில் ஏமாற்றப்பட்டுவிட்டேன்
அவன் நிறம் சற்று கறுப்பு அதில் எனக்கோர் விருப்பு
அவன் வார்த்தைகளால் மட்டுமல்ல அவ்வப்போது பார்வைகளாலும் என்னை வளைத்துவிடுவான்
எனக்கேற்ற உயரம்தான் அதை அளந்துபார்க்க அருகில் பலமுறை நின்றிருப்பேன்
அவன் மொழி தமிழ்தான் ஆதலால் தமிழ் மேல் அதீத பற்றுக் கொண்டேன்
அவன் குணம் குழந்தைத்தனமானதுதான் என் கோபத்திலும் இரசித்திருந்தேன்
அவனுடனான நேரம் எல்லாம் புன்னகை மட்டும்தான் அதனால் செல்லச்சண்டை போட்டு வாக்குவாதின் பின் அவன் சமாதானத்திற்காய் காத்திருந்தேன்
இத்தனையுமாய் அவனை நான் இரசிக்கையில் இரசிப்பதற்கு மட்டும் என்னை தேர்ந்தெடுத்து
பின் இரசிக்கப்பட்ட பொருளாக மாற்றிவிட்டான்
இத்தனை காலம் பொறுமையாய் இருந்து தேர்ந்தெடுத்த தெரிவு என்னை ஏளமாய் பார்க்கையில் உங்கள் தெரிவு எதுவாக இருந்தாலும் மனமில்லாத நிலையில் ஏற்றுக்கொள்கின்றேன் அம்மா

உன் வருகைக்காக காத்திருக்கும் நான்


எத்தனை தவங்கள்
எத்தனை மன்றாடல்கள்
எத்தனை கெஞ்சல்களின் பின் 
நீ என்னிடம் வந்து சேர்ந்தாய்
அத்தனையும் பொய்யாக்கியது போல மறுபடியும்
என்னை உதாசீனப்படுத்திவிட்டாய்
இருவரின் கைகளும் கோர்க்கப்பட்டு
கனவுகள் பிணைக்கப்பட்டு
வார்த்தைகள் உரசப்பட்டு
எம் எதிர்காலத்தை வர்ணம் தீட்டினோமே
யாரும் வரையாத கோலமாய் எம் இருவரின் வாழ்க்கையை சித்தரிக்க
அதை அலங்கோலமாக்கியது ஏனோ?
நிழலாய் வேண்டாம் ஒளியுடன் போய்விடும்
கனவாய் வேண்டாம் துயில் எழுந்தபின் கலைந்திடும்
உயிராய் வேண்டாம் உடல் இறந்தபின் தொலைந்திடும்
மணமாய் வேண்டாம் மலர் வாடியபின் உறங்கிடும்
சுவையாய் வேண்டாம் புலன் அற்றதும் மறத்துப்போய்விடும்
காற்றாய் வேண்டாம் பூமியோடு செறிவு குறைந்திடும்
திங்களாய் வேண்டாம் ஞாயிறு வந்திடும்
நீராய் வேண்டாம் நிலை மாறிடும்
இரயிலாய் வேண்டாம் தடம் புரண்டிடும்
கால் தடங்களாய் வேண்டாம் பாதை மாறிடும்
எதுவாய் என்னை நீ இருக்கச் சொல்கின்றாயோ
உன்னைப் பிரியாவண்ணம் உன்னைத் தொடர
புதிதாக ஒன்றைக் கண்டு பிடித்து வந்திடு
வரமாட்டாய் என அறிந்தும் உன் வருகைக்காக காத்திருக்கும் நான்

Friday, October 12, 2018

என்னளவில் அகரம்

அன்பு
நான் வாழ்வதற்கு ஆதாரம்
அழகு
உள்ளதில் காணவேண்டிய பண்பு
அறிவு
மற்றவர்முன் என்னை உயர்த்துவது
அடக்கம்
சான்றோரின் முன் காட்டவேண்டியது
அகம்பாவம்
அழிவிற்கு ஆரம்பம்
ஆக்கம்
என்னுள் உள்ள படைப்பு
ஆதரவு
தளர்ந்துபோன இதயத்திற்கு
ஆசை
நான் கனவில் தீர்த்துக்கொள்வது
ஆடம்பரம்
விருந்தோம்பலில் இருக்க வேண்டியது
இசை
தனிமையின் துணை
இறைவன்
மனிதரை மனிதராய் மதிப்பவன்
ஈட்டி
நீ அடுத்தவரை சொல்லால் வைக்கும் குறி
உண்மை
அரிதாய் கிடைக்கும் அழிவற்ற சக்தி
உணவு
சிலருக்கு கிடைக்காத பலர் வீணாக்கும் கொடை
ஊக்கம்
கை விடக்கூடாத ஒன்று
எளிமை
உன்னை அலங்கரிக்கும் அணிகலன்
எண்ணம்
சக்திவாய்ந்த ஆயுதம்
ஏமாற்றம்
நான் பெற்ற வரம்
ஏளனம்
தன்னிலை மறந்த பலர் செய்யும் செயல்
ஏக்கம்
ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரி
ஐயம்
உறவுக்கு கேடு
ஒன்று
ஒரு செயலில் மனம் இருக்க வேண்டியது
ஒழுக்கம்
தாய் தந்தையின் வளர்ப்பை குறிப்பது
ஓடம்
நான் வாழும் வாழ்க்கை
ஔவியம்
ஔவை சொன்ன மொழி                                                                                                                             
அம்மா என்னுடன் வாழும் என்னை வாழ வைக்கும் தெய்வம்                                                                                  அப்பா நான் சிறுவயதில் தொலைத்த பொக்கிஷம்

காதல் அகதி

உன் பார்வைப் போரில் சிக்குண்டு
உன் இதயத்தில் நிரந்தரமாய்க் குடியேறிட
என் கோபம் திமிர் கர்வம் உடைமைகளைக் கழைந்துவிட்டு
உன் நிழல் மட்டுமே என் சொந்தம் என்று
அன்பை மட்டும் பாத்திரமாய் ஏந்தி 
ஆயுள் முழுவதும் உன் வசமாக்கிட
காதல் அகதி ஆனேனே

ஞாபக மறதி அனைவருக்கும் கிடைக்காத வரம்

ஞாபக மறதி அனைவருக்கும் கிடைக்காத வரம்
சிலரின் செயலை
சிலரின் ஞாபகங்களை
சிலரின் வார்த்தைகளை
சிலரின் கோபங்களை
சிலரின் பிரிவை
சிலரின் வரவை
சிலரின் மௌனங்களை
சிலரின் புன்னகையை
சிலரின் அனுதாபங்களை
சிலரின் சவால்களை
சிலரின் சுயநலத்தை
சிலரின் அன்பை
சிலரின் நேசத்தை
சிலரின் வலியை
இன்னும் ஞாபகப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது.

எப்படிக்கூறுவேன்



எப்படிக்கூறுவேன்
உன் கை விரல்களுக்கு துணை என் கை விரல்கள் என்று
உன் காலடி வழி என் பாதசுவடுகள் என்று
உன் தலையணையாக என் மடி என்று
உன் தலைமுடி கோத என் கைவிரல்கள் என்று
உன் தேகம் தழுவ என் ஸ்பரிசம் என்று
உன் பார்வைக்கு மறுமொழி என் மௌனம் என்று
உன் இரவுகள் நீள என் கதை என்று
உன் உதடு வழி பருக்கை என் அமிர்தம் என்று
உன் நெற்றி வியர்வை என் சேலையில் என்று
உன் அரவணைப்பு என் காலைத் தேநீர் என்று
உன் முத்தச்சுவடு என் கன்னம் பெற்ற பொக்கிஷம் என்று
உன் அசைவுக்கு முன் என் இசைவு என்று
உன் குறும்புகளுக்கு குழந்தை என் கூச்சம் என்று
உன் புன்னகை எல்லாம் என் தவம் என்று
உன் சோர்வை தணிக்கும் என் தாய்மை என்று
உன் பசிக்கு ஆகாரம் என் காதல் என்று
உன் முதுமையில் இளமை நான் தான் என்று
உன் கேள்வியின் பதிலே நீ தான் என்று

அதுவோ காதல்



முடித்துக்கொள்ள எண்ணித் துணிகையில்
அரும்பியது உன்மேல் புது நேசம்
பாவம் இவள் பைத்தியக்காரி
அதற்கு பெயர் வைத்தாள் அதுவோ காதல்
ஓடும் திசை தெரியாப் பறவையாக 
காற்றைக் கிழித்துக் கொண்டு செல்கின்றேன் நான்
இறக்கைகளும் வலிக்கின்றன
ஓய்வெடுக்க தங்குமடங்கள் பல உண்டு
மனம்தான் இல்லை.
மனம் வைத்து நேசித்தேன் உன்னை
மறுபடியும் திசையறியாமல் பறக்கச் செய்தாய் என்னை
முடித்துக்கொள்ள துணிந்துவிட்டேன் என் பயணத்தை
இதுதான் இந்தப் பறவையின் வாழ்க்கை

மாற்றாள் காதலன்

ஆண்மகனே!
உன்னிடம் வேண்டுதல் விடுக்கவும் கோரிக்கை வைக்கவும்
என்னிடம் தகுதி இல்லை
ஆனால் ஒன்றைக் கூறுகின்றேன் சற்று
செவிமடுத்தால் போதும்
என்றொரு பெண்ணை நீ உள்ளத்தாலும் உடலாலும்
நேசிக்கத் தொடங்கினாயோ
அன்றே அவள் மனதில் தாழி கட்டா கணவன் எனும்
மதிப்பை அடைந்துவிட்டாய்
அதன்பின் அவள் அழைப்புகளும் நடத்தைகளும்
உன்னைத் தாங்கிடும் வண்ணமே இருக்கும்
நீ கவலை கொண்டால் அவள் கண்ணீர் வடிப்பாள்
நீ கோபம் கொண்டால் அவள் பணிந்து போவாள்
நீ பசி கொண்டால் அவள் ஆகாரமாகுவாள்
நீ சோர்வு கொண்டால் அவள் புத்துணர்வாக்குவாள்
இப்படி உனாக்காக தன்நிலையை மாற்றிக் கொள்வாள்
ஆனால் உன்னால் உருவாகும் பந்தத்தில் ஏமாற்றம் வந்தால் அதைத் தாங்கமாட்டாள்
பெண்களின் குணநிலையில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உறைப்பு, உவர்ப்பு எனப் பாகுபாடு உண்டுதான்
ஆனால் உள்ளத்தில் உனக்காக உள்ள அன்பு மட்டும் என்றும் ஒன்றுதான்
தெரிவு செய்வதில் நிதானம் கொள் அல்லது தெரிவினை தள்ளிவை
புதியன புகுதலிலும் பழையன கழிவதிலும் காதலைப் பிரயோகிக்காதே
உன் அன்னையை மதிக்காதவனாய் நீ இருக்கலாம்
உன் சகோதரிகளுக்கு பொறுப்பற்றவனாய் இருக்கலாம்
உன் காதலிக்கு ஏமாற்றுக்காரனாயும் இருக்கலாம்
ஆனால் நாளை பிறக்க இருக்கும் உன் பெண்குழந்தைக்கு
உண்மையான தந்தையாய் இருப்பதை மட்டும் ஒரு கணம்
சிந்தித்துப்பார்
ஆணின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் உனக்குக்கிடைத்த வரமாய் உன் காதலியைப் போற்றுவாய்
மாற்றொரு தெரிவினை மேற்கொள்ள சந்நர்ப்பம் கொடுக்காமல்

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...