அவள் ஜடைகளை ரிப்பன் கொண்டு முடியும்போதே
ஒரு குறுகிய வட்டத்துள் கட்டப்பட்ட கைபொம்மையாகிவிட்டாள்
சோகம் கண்ணீர் துக்கம் துயரம்
அவமானம் சகிப்புத்தன்மை போன்ற உணர்ச்சிக்கயிறுகள்
இன்னுமும் அவளை கட்டிப்போட்டிடத்தான் செய்கின்றன
உதிர்ந்து விழும் கேசத்தின் வாயிலாய் நீயும் அதற்கு ஒப்பானவள் என்றே சின்னஞ்சிறு பிராயத்திலே
ஊட்டப்பட்டு வளர்க்கப்படுகிறாள்
பருவங்கள் ஏற உருவங்கள் மாற பாவாடை தாவணியோ அவளை பாதி ஆயுட்கைதியாக்கியது
விருப்பங்களைத் துறந்த துறவியேனும் ஊராரால் போற்றப்பட இவள் மட்டும் ஊர் கண்ணிலிருந்து மறைந்துமே தூற்றப்படுகிறாள்
எள்ளி நகையாடும் பள்ளி வயதில் புத்தகம் சிலேடை பென்சில் வேண்டிய பாலகி அவளுக்கோ கிடைத்தது தாலி மற்றும் கணவன் என்ற புதிய சாபம் அதுவோ அந்நாளில் குழந்தைத் திருமணம்
அங்கே ஆரம்பித்தது அம்மலரின் முதற்சிதைவு
பொம்மையை வைத்து விளையாடிய அவளுக்கோ தானும் பொம்மையாகிவிடக்கூடாதென்ற முடிவில்
வெகுநாட்கள் அச்சத்தினால் கட்டப்பட்டிருந்த சங்கிலியை
அன்று முதன்முதலாய் கழற்றிவைத்துவிட்டு ஓடிவிட்டாள்
அவளைப் பெற்றவர் வீட்டிற்கு
பாவம் அவள் அதை கழற்றிவைத்துவிட்டு ஓடியிருப்பதற்குப்பதில் உடைத்தெறிந்திருக்கலாம்
மீண்டும் அச்சங்கிலி பொருத்திவைக்கப்படும் என்று அறிந்திடாதவள்
தாழ்ந்த சமூகமென படைப்புகளை பிரித்துப் பார்த்திடும் வள்ளோர் வாழ்ந்த சமூகம் அவளுக்கோ அது நரகம்
அடிமைத்தனம் மேலோங்க வாட்டமடைந்த மலர் இன்னும்
சிதைக்கப்பட்டுக்கொண்டுதான் இருந்தது
மரணம் எனும் ஒரு முடிவை அவள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்றுக்கொண்டிருக்கலாம்
ஆனால் என்றோ யாரிடமோ தனக்கான நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை கொண்டவளுக்கு நீதி நெறி நழுவி அங்கேயே
கொடும் துயரம் நிகழ்ந்தது
நீதியும் நிலைக்கவில்லை அவளுக்காய் குரல் கொடுக்க யாருமில்லை
கையில் ஏந்தினாள் ஆயுதம் தன்னை நிலைகுலைய வைத்தவருக்கெல்லாம் சல்லடை போட்டு தனக்கான நீதியை தானே பெற்றுக்கொண்டாள்
பாஞ்சாலி துகிலுரிய பரமாத்மா ஶ்ரீ கிருஷ்ணன் சேலை வழங்கிய அற்புதம் இங்கு இவளுக்கேன் நிகழ்த்தப்படவில்லை? தாழ்ந்த குலமா? இல்லை அக்கினியால் பிறப்பெடுக்காத தேவமங்கையல்லாத ஒரு சாதாரண பெண்மணி என்ற நிலையா?
ஆனால் இன்று அவளது கட்டிவைக்கப்பட்ட ஜடை அவிழ்ந்து காற்றில் அலை மோதும்போது அவளைக்கட்டி வைக்கப்பட்டிருந்த சங்கிலிகள் உடைத்தெறியப்பட்டிருந்தன
அவளுக்கான சுதந்திரம் அன்று யாராலுமல்ல
அவளினாலே கிடைக்கப்பட்டது
அவளை எத்தனையோ பெயர் கொண்டு அழைக்கப்பட்டிருந்தாலும் பூலான் தேவி என்ற
மலர் எத்தனையோ சிதைவுகளுக்குப் பின்னும்
தனக்கான சுதந்திரத்தின் மூலம் மலரத்தான் செய்தது
பெண்ணிற்கான சுதந்திரம் கெஞ்சிப் பெறுவதுமல்ல
யாரும் வழங்குவதுமல்ல அது அவளிடத்தே இருப்பது
எங்கே அவள் ஓங்கி மிதிக்கப்படுகிறாளோ அன்று அவளாய் அச்சுதந்திரத்தை உணர்வாள்