Wednesday, January 26, 2022

சந்திப்போமா


 

யாருமற்ற வேளையில் சாலையின் ஒரு ஓரமாய்

வாடைக்காற்றைக் கொஞ்சம் கடன்வாங்கி

ஏக்கம் பாதி தயக்கம் மீதி அனைத்தையும் தாண்டி

மீண்டும் புதிதாய் சந்திப்போமா


பாதி கண்களால் உன்னைப்பார்க்க நீயோ

மீதிக் கண்களால் என்னைப்பார்க்க நாமோ

பார்வைகளில் ஸ்தம்பித்துப்போன வார்த்தைகளை

மீண்டும் புதிதாய் பேசிக்கொள்வோமா


உன் மூச்சின் வெப்பம் என்னைத் தாக்க

என்னில் உன்னால் குளிர்காய்ச்சல் வீச

இடையே நழுவிச்சென்ற தென்றல் இருவரையும் ஈர்க்க

மீண்டும் புதிதாய் சுவாசிப்போமா


உன் தலைகோதிட என் கைவிரல்கள் ஏங்க

என் நகம் கடித்திட உன் பற்கள் கூச

இடையே மந்திரப்புன்னகை வேலிபோட

மீண்டும் புதிதாய் வெட்கம்கொள்வோமா


மழைத்துளியில் வெண்நிலவு நனைய

மணற்தரையோ அதைக்கையில் ஏந்த

முத்தக்குளியல் அங்கே அரங்கேற்ற

மீண்டும் புதிதாய் காதல்கொள்வோமா


கடிகாரமுள் தன்கடமையைச் செய்ய

கணப்பொழுதில் ஒரு யுகம் ஓடி மறைய

நிகழ்ந்தவையாவும் கண்ணீரில் கரைய

மீண்டும் ஒருமுறை சந்திப்போமா


No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

பெண்ணுக்குள் தேவதை

  பெண்ணுக்குள் புதிதாய் ஓர்  தேவதை பிறக்கின்றாள் அவள் வர்ணமற்றவள் அவள் உருவமற்றவள் அவள் உணர்வுகளால் வர்ணம் கொண்டு உணர்ச்சிகளாய் உருவம் கொள்க...