Sunday, January 23, 2022

கனவுகளுடன் காதலிக்கின்றேன்

 


வடுக்களோடு வாழும் வாழ்விற்கு

கடந்துபோனவைகள் எல்லாம் 

மறைக்கப்பட்ட சுவடுகளே

கடற்கரை மணலில் பதித்த பாதம்தான்

அறியாத பலத்த அலையின்பின்பும்

அதன் சுவட்டின் நிழல்களை


நீ நினைக்கமுன்னே

எழுதப்பட்ட விதிக்கணக்கை

மாற்றியமைக்க காலனுக்கே 

காலம் கெடுவைத்தது

மரணத்திலாவது இன்பம் கொள்ள

இந்த விதிக்கு ஏன் மனம் இன்னும் கல்லானது


நீயறியாத என்னை நானென 

காட்டிக்கொள்ளாத காதல் 

பல நாட்கள் பகலிரவுகள்

இரகசிய முகப்புத்தகத்தில்

பேசிய அன்பின் பரிபாஷைகளை

என்றும் உனக்கான தேடல்தான்

விதிக்கப்பட்ட காதலாகியது


தொலைத்த இடம் வேறு 

கிடைத்த இடம் வேறு

தடமாறிய பாதையில் 

குரல் வந்த திசையெல்லாம்

வெளிச்சம் என்றெண்ணிய 

குருட்டு விழிகளுக்கு 

கைத்தடி மேல் இனி நம்பிக்கையில்லை


யாதுமாய் கண்ட யாதும் நீயாய் 

கண்ட காட்சிகள் பொய்க்க

யாரோவாகிய நிஜம் மட்டும் கைகளில்

ஏந்திக்கொண்டு மன்றாடிக்கேட்கத்

தகுதியில்லாதவளாய்க் கேட்கின்றேன்

மீண்டும் ஒருமுறை வந்துவிடு

இறுக்கமாய் உன்னை பற்றிக்கொள்கின்றேன்


தொலைவாய் இரு யாரோவாய் இரு

என்னை நினையாமலிரு 

உன்னை மறவாமலிருப்பேன்

தொலைத்த படலம் இங்கு என்னில் மட்டும் 

அமரகாவியமாகட்டும் 


என்றோ ஒருநாள் சேதிகள் கிட்ட 

இரண்டு சொட்டு கண்ணீர் கூட

வேண்டாம் எனக்கு

பாதி மனமாய் வழியனுப்புகிறேன்

முழுமனதிலும் நினைவுகள் மட்டுமே

மிச்சம் வைத்துக்கொண்டு


கல்லறைப்பூவுக்குள் தெய்வீகவாசம் தேடி

துளசிமாடத்தில் படர்ச்செய்ய நினைத்தாய்

வாசம் தந்த மல்லிகை 

என்னை மறக்கச்செய்ததுபோலும்

தேர்வுகளில் மீண்டும் கல்லறை மலரானேன்

உன் தேர்வு மிகச்சரியானவை

பிழையான என்னைத் தவிர்த்துவிடுதலின் பின்


எனக்கு மட்டும் சிறிதாய் தெரியும் 

இந்த யாக்கையில் யார் கனவுகளிலும்

எனக்கான கவிதைகளை மீட்ட

படைத்தவன் இன்னும் கிறங்கவில்லைபோலும்

ஆனால் ஒன்று் மறந்துவிடாதே

நடைபிணத்தின்மேல் நீ எய்தன்பு

சிறுநொடி உயிர்பித்து எழச்செய்தது


நீ வாழ் அது போதும் 

யாரோ உன் கரங்களைப் பற்றும்போது 

என் விரல்களுக்கு வலிக்காது இருக்கட்டும்

அன்று ஒன்றாய்க்கலந்த சுவசம் 

என் இறுதி மூச்சிலிருந்து

விதி பிரித்தெடுத்து தன் வெற்றியை

முழுமையாய்க் கொண்டாடட்டும்

தொலைந்த நான் என்றும் தேடப்படாமலிருக்க

கனவுகளுடன் மீண்டும் உன்னைக் காதலிக்கின்றேன்


No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...