அறம் ஏற்று அகம் பெருமிதம்
கொள்ளக் கற்றோர் முகத்தில் இரு கண்களும்
அறிவிலார் கல்லாதோர் முகத்திலிரண்டு
புண்ணுடையோர் என வள்ளுவன் வாக்கில்
சற்றுத் திருத்தம் அதை எழுதிக்கொள்வீர்
கற்பதிலும் அதை மனதார ஏற்பதிலும்
முற்போக்குச்சிந்தனையாய் எழுத்தறிவித்தவனே
அநீதி கண்டும் சீறும் தணல் சீற்றம் தாழாது
விழியோரம் சிறு வெறுப்பைக் காண்பிக்காதவரே
முகத்திரண்டு புண்ணுடையார்
வஞ்சனையே வைராக்கியமாய் அகில
நன்மைபயப்பிப்போர் சூழ அராஜகமாய்
இன்றும் பல திரௌபதிகளின் வஸ்திரம்
களைய வல்லவர்களின் துணிகரச்செயல் கண்டும்
கண்களை கருங்கற்கள் போல் விழிதிறக்கவிடாதோரே
முகத்திரண்டு புண்ணுடையார்
பசித்தழும் பச்சிளங்குளவி கதறியழ கண்ணீர் வற்றி
கையேந்தும் திருவோட்டிலும் கால்வாய் கஞ்சிக்கும்
மிஞ்சாத குற்றி அதையும் பொறுக்கி சீவனமாக்கும்
கைம்பெண்களின் விலைபேசும் தர்மவித்துவான்களே
முகத்திரண்டு புண்ணுடையார்
வீதியோரமாய் நடைபிண உற்று ஓருயிர் துவண்டும்
நா நனைக்க ஒரு துளி ஜலம் பருகவைக்காதவன்
வாழ்க்கையிலே நடைபிணமாய் அலைய
மதுவில் மதிமயங்கிக்கிடப்போரே
முகத்திரண்டு புண்ணுடையார்
கூப்பிட்டக்குரலுக்கு செவிசாய்த்தும்
ஏற்புடைய கருமத்தை விலத்தியும்
அல்லற்படும் அன்னையும் பிதாவும்
முதியவர் இல்லத்தில் என்ன சொகுசு காண்பர்
என்று கெஞ்சிக்கேட்டும் அதில் சித்தம்கொள்ளாது
பஞ்சணையில் நிம்மதித்தூக்கம் உறக்குபவனே
முகத்திரண்டு புண்ணுடையார்