பரந்த என் சொப்பனங்களுக்கு
கணவனே கதி என்று கடிவாளமிடாது
சிறகுகள் நீட்டி வானுயறப்பறந்து
எல்லை தாண்டி என் மமதையில் பங்கு
கொள்ளும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்
எல்லையில்லா என் பயணங்களில்
பிரயாணியாய் இல்லாமல் துணையாளியாய்
எடுக்கும் முடிவுகளில் தீர்கமான தீர்ப்பளித்து
வழுக்களை இதமாய் எடுத்துரைக்கும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்
முதல் எழுத்துடன் தலை எழுத்துவரை
வீட்டின் தலைவன் என அங்கீகாரம் பெற்றும்
அடிக்கொருமுறை இல்லாவிடினும் அத்தி பூத்தாற்போல்
என் ஆசையும் செவிசாய்த்து
நான் இல்லை நாம் என்று புரிந்துணர்வான
இல்ல வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்
சலனம் ஏற்படும் வேளை எல்லாம்
சந்நிதியான் வழி செல்லாது
கற்புடமை அது பெண்ணிற்குமட்டுமன்று
ஆணிற்கும் தான் என்ற இலக்கணம் கொண்டு
இலக்கிய வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்
கோபக்கனல் கசியும் வேதனையில் உன் முகம்
வாடும் வேளை எல்லாம் என் மடியும் என் கூச்சமற்ற தழுவலும்
உன்னைத் தாங்கிக்கொள்ளுமென்பதை
ஒவ்வோர் ஆறுதலின் பின் உட்சாகம் கொண்டு மது சூது
ஆரோக்கியத்தின் கேடு என்ற வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்
ஆடம்பரத்தால் ஆசை ஏற
ஆசையினால் மோகம் ஏற
மோகத்தினால் அனைத்தும் இழக்கும் நிலை ஆக
எளிமையான இனிமை இல்லறத்தில் தான்
நிம்மதி கொள்ள அன்பின் வித்திடும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்
நாவின் சுவைக்காய் மதி மயங்கி கலப்படமும்
விலங்கொழிக்கும் பாட்ஷாணமும் வெண்ணெய் தடவி
கண்ணீர்கும் பல ஆகாரம் எதிலும் நாட்டம் கொள்ளாது
மனையாளின் அறுசுவையில் அனுமனின் பலம் பெற்று
கங்கை மாதா தூய்மை பெற்று
அன்னபூரணி ஆசியுடன் சுகம் பெறும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்
இராமனைப்போல் வேள்வித்தீயில் விளக்கம் கேட்க
அதில் விழுந்து விடைகொடுக்கவும்
யுதிஸ்டன் போல் சூதில் மங்கையை
பணயம் வைத்து விளையாடவும்
பெண்ணை துயரில் தள்ளாது பச்சைமரம் எரிந்தால் என்ன
எரியாவிடின் என்ன இவள் என்றும் என் பத்தினிதான்
என்ற நன்மதிப்பால் அலங்கரிக்கும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்