Sunday, April 26, 2020

பெற்றவளின் உறக்கம்




என்னைப் பெற்றவள் என் மடிமீது
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


மூத்த தமக்கையாய் பிறந்த அவள்
இளவயதில் மணக்கோலம் பூண்ட அவள்
முதுமை முன் வாழ்க்கைத்துணையை இழந்த அவள்
நம்பிக்கையால் உறவை இழந்த அவள்
பெற்றமக்களால் புன்னகை இழந்த அவள்
மனம் ஆறா வடுக்காய மடிமீது 
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


கடமைகளில் கண்ணுறக்கம் தளர்த்தினாள்
கண்மணியான சிசுக்களைச் சீராட்டிட 
பாரினில் பாசமலராய் உற்றார் பாராட்டிட
வாலிபக்கோலத்தில் மணமேடை ஏற்றிட
வயோதிபம் பூண்ட வெண்தலையாள்
ஓவிய உருவமாய் தலைவனைக்கண்டே
கண்ணுறக்கம் தளர்த்தினாள்


விவாதங்களில் பின்தங்கி மனங்கோணாது
மொழிபேசக் கற்றவள் அதை அடுத்தவரிடம் பெற
சற்றுத் தோற்றுவிட்டாள் 
அனைத்தையும் கண்டு மனம் எரிமலையாய்
பிறவுறவும் அமைதிக்கடலில் கூழாங்கற்களைத்
தேடும் மென் மலர் நெஞ்சாள் இன்றுதான் இளைப்பாற கண்வளர்க்கிறாள் சற்று அமைதிகோலுங்கள்


சரசரப்பான சலனங்களுக்கு விடைகொடுத்து
தாங்கொள்ளா தாகத்திற்கு முகங்கொடுத்து
ஏக்கத்திற்கு ஆற்றாதசுமைக்கும் மனதில் இடங்கொடுத்து 
மூலையில் ஒரு மூலையாய் சுவாசித்து யாசிக்கும்
புனிதமாதா இன்றைக்கு மட்டும் சாட்டு சொல்ல காரணமின்றி என் மடிமீது
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


தூரதேசம் வாசம் செய்தவளுக்காய்
கன்னிகாதானத்தில் தானமாய் சென்றவளுக்காய்
வெறுப்புக்கு உள்ளம் குளிர்காண்பவனுக்காய்
அடுத்தமொழியை அந்நியமின்றி அறமாய் சுவாசித்தவனுக்காய்
பாதிவழி பாதிவலி பாதிஉயிராய் பிரிந்தவனுக்காய்
ஊன் உறக்கம் துறந்தவள் யாசகமாய் பரிந்து கேட்டிட பரிசாய் என் மடிமீது
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


பொன் வைர வைடூரியங்களில் கனிவு காணாதவள்
அடுக்குமாளிகை அல்லிமலர்ப்படுக்கையில் சுகம் பெறாதவள் அறுசுவைகளில் நாக்கின் ருசிமண்டலம் உணர்ந்திராதவள் 
பட்டுடுத்தி நிலைக்கண்ணாடியில் நிலைப்பாராதவள்
உறக்கத்தில் மட்டும் அனைத்திலும் உறக்கங்கொள்ள என் மடிமீது
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


ஊரவர்கள் உறவினர்கள் வருகையும் காணாது
விருந்துபச்சாரத்தில் வியர்வை சிந்தாது
கசியும் கண்ணீருக்கு விடைகொடுக்க 
கானகமே வா என்று காரிருள் கண்களில் சூழ
என் மடிமீது உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


பந்தியும் பறமேளமும் முன்நின்று வழியனுப்ப
தீப்பந்தம் கொண்டு இப்பந்தம் முறிக்க
கண்ணீரில் நீர்ப்பந்தம் சுமந்துவரும் என்கையில்
உனக்குத்தர ஒருபிடி வாய்கரிசி அதையும் மென்றுவிடாது என் மடிமீது
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


பெற்றவளின் அயர்ந்த உறக்கம் அற்றபமாய் 
கிடைப்பதில்லை போலும் என் மகவாய் பெற்றெடுத்தே உன்னைச் சீராட்டி உறங்க வைப்பேன் அவள் இன்றோ என் மடிமீது
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...