Sunday, May 3, 2020

போதும் மாமா



காதலில் கரம் பற்றிய என்னை
கைவிடாது கரை சேர்க்க 
வசைபேச்சில் வஞ்சிப்போரிடமிருந்து
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்

அடுக்களையில் அடிமுட்டாளாய்
அரிசிபுடைப்பதே அவனியாய் இருந்த என்னை
பரந்த உலகம் படைத்தது எதற்கென விழிப்பூட்டியே
எனைப்படைத்தவனாய் அடுத்தவரிடம்
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்

தாரமானபின் பணி தாயாகுவதே
தள்ளாடும் வயதில் யார் துணையாய்  வருவாரோ
வருடம் தள்ள நாட்கள் எப்போ தள்ளும் என்றே
வாயில் போடுவோரின் வார்த்தைகளிற்கு
தாரத்திலும் அவள் தாய்மை உணர்கிறேன் என்றே
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்

மகாகவி வரிகளில் படைத்த 
புதுமைப் பெண்ணை
நீங்கள் என் வாழ்க்கையில் 
செதுக்கலாய் வடிக்க 
சுற்றாரின் உற்றாரின் மனம் 
சலனத்துடன் தீ மூழ
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்

கண்ணீரில் படகோட்டும் என் வாழ்க்கைக்கு
கலங்கரை வெளிச்சமே இந்த அன்புதான்
ஆனால் போதும் மாமா 
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்




Friday, May 1, 2020

நன்றி நவில்கிறேன்



இறைவா
உன் நல்லாசியுடன் 
என்றும் திளைப்பூட்ட 
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

நெற்றிமீது தரிக்கும் குங்குமம்
மூன்று இச்சியளவு பெருமையுடன்
 தினம் உச்சி ஏறுவதில்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

வாசம் வீசும் மலர்களும் 
அப்பன் அண்ணன் இன்றி
அகிலமாய் ஆண்மகன் ஒருவன்
சூட்டி அழகுபார்த்திட 
அருகதையுடையன் என்பதில்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

வரப்பிரசாதமாய் கழுத்தில்
மஞ்சட்குங்கும தாலிச்சரண்
கண்ணில் ஒற்றி கலியுகவரதனை
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

மெல்ல நடக்கையில் 
ஒலி மீட்டிடும் கால்விரல்களில் 
வெள்ளியாய் மின்னும் மெட்டி 
நரம்புகளில் சுருக்கென்று அவன்
அன்பை ஆயிரம் முறை நொடிப்பொழுதில் உணர்த்திடும்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

பட்டுவண்ண சேலையில் பரந்தாமன்
கைபட்ட வண்ணம் மடிப்புகள் கலைவில்
கசங்கிய காதல் மொழி உரைத்திடும்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

அறநெறிசாட்சியாய் அக்கினி சாட்சியாய்
அருந்ததி சாட்சியாய் ஆண்டவன் சாட்சியாய்
உற்றார் சாட்சியாய் உறவினர் சாட்சியாய்
நீழ்வாழ்வாய் ஏழ்ஜென்ம பந்தம்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

வெகுமதியாய்க் கிடைத்த புது சன்மானம்
அவன் பெயர்முன் இணைக்கும் சொல்லாகி 
என் பெயர் மறக்க வந்த திருமதி
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்


Thursday, April 30, 2020

மீண்டும் போலிச்சிரிப்புடன்



எள்ளி நகையாடிய காலமெல்லாம்
கிள்ளிப் பார்க்கையில் திடுக்கிடும்
புள்ளிக்கோலத்தின் ஒரு முடிச்சாய்
வள்ளி அவள் கனவுகளையெல்லால்
அள்ளிப்பருகிடும் பெருங்குவளை நீரில் கரையவிட்டாள்


பள்ளிப் பருவ காலோட்டத்தில் அவன் தந்த பவள
மல்லியாய் புன்னகை சூடி வதனம் மலர்ந்த நினைவெல்லாம்
கள்ளி அவள் கற்பனைக் கடிவாளமாய்  இன்று கட்டியிழுக்க 
சொல்லி ஆழ யாருமில்லா மெல்லிசையை
சுள்ளி விறகுடன் மூண்ட தீயில் மெல்ல
எரியவிட்டாள்


கொல்லிமலைச் சித்தர்களும் காணா கடும் தவமாய்
அல்லி மலர்ந்தொரு மொழி அரிதாய்க்கூட அந்நியரிடம்  பேசாள் வள்ளி இவள் ஒரு ஊமை என்றும் ஊராரின் பெயர் பெற்றாள்
தள்ளி நின்று பார்த்த தாய் மனம் கொதிக்க வண்ணமலரோ வண்டு வேண்டா மலராய் அவன் அன்று தந்த கற்பனை மலரை துணிமணியுடன் 
அடுக்கிவைத்தாள்


பொங்குதமிழ் எழுச்சியில் முதன்முதலாய் அவனைக் கண்டவள் அவன் செயற்பாட்டில் மெய் மறந்தாள்
தங்குதடையின்றி பாயும் வெள்ள நீரோட்டம் விவாசாயியின் வயிற்றில் பயிரிடத்தான் என ஆராய்ந்த அவள் அவன் உழைப்பினில் தன் சூழல் மறந்தாள்
மங்கும் பொன் சுரங்கம்  அவன் மார்போடு நீண்ட அன்பு அதில் அவள் சுற்றம் மறந்தாள்
பங்குகேட்கும் உலகில் என் பாகம் என்னைப் பெற்றவள் என புறங்களைத் தீண்டா அவன் குணங்களில்  அவள் தன்னையே மறந்தாள்


உறக்கம் அவள் நினைவுகளை உறங்கவிடவில்லை
தயக்கம் அவள் வார்த்தைகளை அவிழ்த்துவிடவில்லை
மயக்கம் காதலில் அவன் முகம் தவிர வேறு சுயமில்லை
நடுக்கம் அவள் கைப்பிடியில் இன்னும் அவன் கைவிரல்கள் பின்னப்படவில்லை


அன்னையின் ஆசி அப்பனின் ஆட்சி
அண்ணலின் கைப்பிடி அந்த சிறுவட்டம் தாண்டி வெளிவர
 விட்டில்பூச்சி விளக்கொளியில் ஏரிவதுபோல்
மங்கைக்கோ காத்திருந்தது பேரதிர்ச்சி


வானுலகம் சென்று பூமழை பெற்று பூமாலை சூடி 
புகைப்படத்துள் ஒளிந்துகொண்ட அவனை மீட்டுவர
அவளுக்குத் தெரியவில்லை மலர்வளையம் இட்டு மண்டியிட மனமும் விடைகொடுக்கவில்லை
உலகில் பல ஆடவர் இச்சையாய் கேட்கவும் மணக்கோலம்  காண மதியில் ஏனோ எட்டவில்லை
மாறாக கண்ணீரில் கடிதம் தீட்டினாள் கோதை விதியது வலியது


அவன் நினைவுமலர் தினம் நீரூற்றி வளர்த்தாள் அதன் வாசனை அறியாமலே 
மலர் சூட அருகதை அற்ற அவள் கூந்தல் காற்றில் களைந்தாலும் அதை ஜடைபோட்டு கட்டிவிடுகிறது அவனுக்கான அவள் மனம் மீண்டும் போலிச்சிரிப்புடன்

செல்லப்பிராணிகள்




செல்லப்பிராணிகள் 
எம் வீட்டோடு வாழ்பவர்கள்
அன்பைச் செலுத்தி அதீதமாகப் பெறுகையில்
இவர்களும் எமக்குச் செல்லக்குழந்தைகள்


போதனையில்லா  மெய் நன்றி இவர்களின் இலக்கணமாகிட பாரினில் விசும்பும் மென் மழைத்துளிகூட இவர்களின் அன்புத்தூய்மையில் தோற்றுப்போய்விடும்


வாலினால் தலைவணங்குவது 
ரோமங்களினால் மெய் தீண்டுவது 
நாவினால் நன்றி நல்குவது
முன் புஜங்களினால் இறுகப்பற்றுவது 
நம் காலடியில் தஞ்சம் கொள்வது 
நீண்ட நேரத்தவிப்பை பாசமழையாய் அவர் அவர் மொழியில் பறைசாற்றுவது 
இதுவெல்லாம் அவர்களின் அன்பின் வெளிப்பாடு அதுவே அவர்களின் கோட்பாடு


ஒருபிடிசோற்றுக்கு வாழ்நாள் முழுவதும் 
உழைக்கும் உழைப்பாளிகள்
சற்று நேரம் உறங்கினாலும் துரிதமாய் சேவை செய்து கிறங்கடிக்கச் செய்திடுவார்கள்
பலவித வித்தை கண்டு வியப்புற்றேன் இவர்களின் அன்பு என்ன மாய வித்தையோ?


சேற்றிலும் சகதியிலும் துள்ளிக்குதித்து ஆனந்தம் கொண்டு வெண்சட்டையிலும் காற்தடம் பதித்திடுவார்
குறுகிய ஓசையில் தம் வரவைக் கண்டு குதூகலித்து ஆரவாரம் செய்திடுவார்
தட்டில் எத்தனைவகை உணவிட்டாலும் உம் கரத்தால் ருசி பார்த்திடுவார் 
காதலனுக்கோ பொறாமை விஞ்சிடும் அவர்களின் கன்னத்தில் பதியும் எண்ணற்ற முத்த மழையில் தமக்கான மகுடம் என சூடிடுவார்


படுக்கையில் குழவியாகினும் வயதுமுதிர்ந்த கிழவியாகினும் பேதமற்றவராய் கட்டளைக்காக காத்திருப்பார்
வளர்த்த கடனை திருப்பிக்கொள்ள ஆருயிர்த்தியாகமும் சுயவிருப்புடன் யாக்கைத்துறப்பார்





Sunday, April 26, 2020

பெற்றவளின் உறக்கம்




என்னைப் பெற்றவள் என் மடிமீது
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


மூத்த தமக்கையாய் பிறந்த அவள்
இளவயதில் மணக்கோலம் பூண்ட அவள்
முதுமை முன் வாழ்க்கைத்துணையை இழந்த அவள்
நம்பிக்கையால் உறவை இழந்த அவள்
பெற்றமக்களால் புன்னகை இழந்த அவள்
மனம் ஆறா வடுக்காய மடிமீது 
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


கடமைகளில் கண்ணுறக்கம் தளர்த்தினாள்
கண்மணியான சிசுக்களைச் சீராட்டிட 
பாரினில் பாசமலராய் உற்றார் பாராட்டிட
வாலிபக்கோலத்தில் மணமேடை ஏற்றிட
வயோதிபம் பூண்ட வெண்தலையாள்
ஓவிய உருவமாய் தலைவனைக்கண்டே
கண்ணுறக்கம் தளர்த்தினாள்


விவாதங்களில் பின்தங்கி மனங்கோணாது
மொழிபேசக் கற்றவள் அதை அடுத்தவரிடம் பெற
சற்றுத் தோற்றுவிட்டாள் 
அனைத்தையும் கண்டு மனம் எரிமலையாய்
பிறவுறவும் அமைதிக்கடலில் கூழாங்கற்களைத்
தேடும் மென் மலர் நெஞ்சாள் இன்றுதான் இளைப்பாற கண்வளர்க்கிறாள் சற்று அமைதிகோலுங்கள்


சரசரப்பான சலனங்களுக்கு விடைகொடுத்து
தாங்கொள்ளா தாகத்திற்கு முகங்கொடுத்து
ஏக்கத்திற்கு ஆற்றாதசுமைக்கும் மனதில் இடங்கொடுத்து 
மூலையில் ஒரு மூலையாய் சுவாசித்து யாசிக்கும்
புனிதமாதா இன்றைக்கு மட்டும் சாட்டு சொல்ல காரணமின்றி என் மடிமீது
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


தூரதேசம் வாசம் செய்தவளுக்காய்
கன்னிகாதானத்தில் தானமாய் சென்றவளுக்காய்
வெறுப்புக்கு உள்ளம் குளிர்காண்பவனுக்காய்
அடுத்தமொழியை அந்நியமின்றி அறமாய் சுவாசித்தவனுக்காய்
பாதிவழி பாதிவலி பாதிஉயிராய் பிரிந்தவனுக்காய்
ஊன் உறக்கம் துறந்தவள் யாசகமாய் பரிந்து கேட்டிட பரிசாய் என் மடிமீது
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


பொன் வைர வைடூரியங்களில் கனிவு காணாதவள்
அடுக்குமாளிகை அல்லிமலர்ப்படுக்கையில் சுகம் பெறாதவள் அறுசுவைகளில் நாக்கின் ருசிமண்டலம் உணர்ந்திராதவள் 
பட்டுடுத்தி நிலைக்கண்ணாடியில் நிலைப்பாராதவள்
உறக்கத்தில் மட்டும் அனைத்திலும் உறக்கங்கொள்ள என் மடிமீது
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


ஊரவர்கள் உறவினர்கள் வருகையும் காணாது
விருந்துபச்சாரத்தில் வியர்வை சிந்தாது
கசியும் கண்ணீருக்கு விடைகொடுக்க 
கானகமே வா என்று காரிருள் கண்களில் சூழ
என் மடிமீது உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


பந்தியும் பறமேளமும் முன்நின்று வழியனுப்ப
தீப்பந்தம் கொண்டு இப்பந்தம் முறிக்க
கண்ணீரில் நீர்ப்பந்தம் சுமந்துவரும் என்கையில்
உனக்குத்தர ஒருபிடி வாய்கரிசி அதையும் மென்றுவிடாது என் மடிமீது
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


பெற்றவளின் அயர்ந்த உறக்கம் அற்றபமாய் 
கிடைப்பதில்லை போலும் என் மகவாய் பெற்றெடுத்தே உன்னைச் சீராட்டி உறங்க வைப்பேன் அவள் இன்றோ என் மடிமீது
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்

Sunday, April 19, 2020

செல்ஃபி ஒரு பார்வை



கையடக்கத்தொலைபேசி அனைவரது
கைகளிலும் புறழ இதுவும் ஒரு காரணம் தான்
தொலைபேசி வகைகளும் தரங்களும் கைமாற்றிட்டு பரீட்சித்துப் பார்க்க இதுவும் ஒரு ஆவல்தான்
வறண்ட சருமமும் வனப்புமிக்க வர்ணஜாலமாய்
வர்ணமற்ற ஓவியங்களும் 
ரவிவர்மனின் கைக் காவியமாகிட  
உதட்டோரப்புன்னையும் இன்று 
போலி  வளைவாகிட 
கஸ்தூரிமஞ்சள் நிறம் 
நினைத்தாற்போல் ஏறி இறங்கிட 
கிழப்பருவமும் குமரிக்கோலம்பூண்டிட
நவீன புழக்கமாகியது செல்ஃபி தான்
பிறப்புமுதல் இறப்பு வரை வேகமாய் பயணிக்கிறது
பிறந்த குழந்தைக்கு சிரிக்கக்கற்றுக்கொடுப்பதும்
இறந்த உடலிற்கு ஆத்ம அஞ்சலி செலுத்துவதும்
சந்தேகம் கொள்ளும் காதலிற்கு பாதகமாகுவதும்
மோகம் கொள்ள சாதகமாய் அமைவதும் 
புற அழகில் சந்தேகம் கொள்ளும் வேளை எல்லாம் 
சமாதானம் செய்வதும் 
மகிழ்ச்சியாய் வாழ்கின்றோம் என போலி வேடம் போடுவதும்
போகும் பாதையெல்லாம் ஒரு கால் தடமாய் அமைவதும் இந்த செல்ஃபி தான்
வாழ்கையின் நினைவுகளை அங்கமாய் பதியவைக்க 
ஆண்டாண்டு காலம் போகினும் அடுத்தவரிடம் 
அந்நிகழ்வை பறைசாற்றிட கையிலிருக்கும் ஆதாரமும் அது தான்
தான தர்மமும் வாரிவழங்கும் வள்ளலும்
புராணக்கதை தாண்டி முகங்காட்டும் தளம் இது
இழிந்தோர் முகஞ்சுழிக்கும் தருணமும் இது
மாமாமகளின் ஆசைக்கனவுகள் அடுத்த தேசம் தாண்டி நிஜங்களாய்ப் பலிக்கும் மந்திரவித்தை இது
விஞ்ஞானிகள் ஞானிகள் கண்டு வியக்காத விந்தை இது
அதீத மோகத்தில் உயிர்ப்பலிகள் பல வாங்கிய
இரத்தக்காட்டேரியும் இது 
பெண்ணின் மானத்தை கொள்ளை கொள்ளும் காமுகனும் இது
நிகழ்வுகளில்  காணொளி பிடிப்பாளரை மிதமிஞ்சிய 
விஸ்பரூபம் இது சிலசமயம் வெறிகொள்ள வைக்கும்
போதையும் இது
கொரனோவைவிட மிகவேகமாய் பரவிவரும் மிகக் கொடிய விசக்கிருமி தான் இந்த செல்ஃபி

Thursday, March 12, 2020

கடந்து போகட்டும்



அவர்கள் என்னை மட்டுமல்ல
என் தனிமையையும் கடந்து
போனார்கள். இறுக்கமான என்
இதயத்திலும் அவர்களுக்கு என்று 
ஓர் இடம் ஒதுக்குவேன் என கனவிலும் 
நான் நினைத்துப் பார்த்ததில்லை.
தனிநபருக்கான சூழலை தகர்த்தெரிந்து
மனிதவாடை வீச நான் மாற்றிக்கொண்டேன்
வண்ணமயமான விழாக்கோலங்களில்
ஒரு உறவாய் நானும் பங்கெடுத்துக்கொண்டேன்.
உப்பிட்டவரை உயிராய் நினைத்தேன்.
மூலை முடுக்கிலும் என் பாதச்சைவடு பதிந்திருக்கும்
அதை நானே தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தேன்.
பாத்திரங்களில் என் கைரேகை பதிந்திருக்கும்
அதை நானே சுத்தம் செய்தேன்.
அடுப்படி ஆகாயத்தில் மேகம் தான் நான். மாசு தூசுகளை உள் வாங்கி கனப்பினும் மாரியாய் நன்மை செய்வதுபோல் என்னை எண்ணிக்கொள்வேன். சிறிதுகாலத்திலே அன்பை 
சம்பாதித்துவிடுவேன் விடவேண்டும் என்ற எண்ணம்
அடி சறுக்கிவிழ மீண்டும் துணியும் தீரச் செயலை
உடலும் மனதும் ஏற்றுக்கொண்டது.
பணவரவுகள் என் கைகளில் புலங்கியதும் உண்டு 
ஆனால் கறைகளை என் கைகளில் படிய நான்
விரும்பியதில்லை. 
பத்திரமாய் அடைகாத்துக் கொடுப்பேன் ஏனெனில் நான் தேடியது அதுவல்ல அன்பு.
ஆகாரம் பரிமாறுவதுல் அலாதிப் பிரியம் கடைசிப்பருக்கைவரை ருசிப்பவருக்கு அருகில்
நளபாகம் செய்துள்ளேன்.
வெளுப்பு வெள்ளாவி வேலைகளும் நன்கு தெரியும்.
ஆசான் கலையும் அறிவும் வளர்திடும் வழங்கியும் ஆனேன். 
நானும் தானமாய் ஏதும் செய்யவில்லை அனைத்திற்கும் மௌனமாய் விலைபேசினேன் அன்பு. பணம் பொருள் தங்கத்திற்கு என்னை விலை பேசி இருக்கலாம் போலும் அன்பை மட்டும் என்னிடம் தீர்க்கப்படாத கணக்காக்கினார்கள். அவர்களுக்காய் விரிவடைந்த என் உலகம் மீண்டும்
சுருங்கவில்லை மாறாக தனிமை ஆட்கொண்டது.
தனிமை அவர்களைப் போல் அல்ல. என்னுடன் அன்பாய் நடந்துகொண்டது. என் பல கேள்விகளுக்கு என்னிடமே பதில்களைத் தேடித் தந்தது. அழுகையும் சிறந்த மருந்துதான் எனக் காட்டித்தந்தது. தனிமையே எனக்கு உணவுகளைப் பரிமாறியது. அதில் சுவை இருப்பினும் எனக்கு உணர்த்தவில்லை. அவர்களின் நோக்கம் சிந்தனை செயல் எல்லாம் எனக்குப் புரியவைத்தது. நான் தான் முட்டாள் இருப்பினும் என்னை தனிமை விடவில்லை.
என்னை மீண்டும் எழச் செய்தது இம்முறை அவர்களுக்காக அல்ல முற்றிலுமான தனிமைக்கு.


வர்த்தகச்செய்தி





சாதாரண நடுத்தர வர்க்க
குடிமக்களுக்கு முக்கியமானது
இந்த வர்த்தகச்செய்தி
பொருள்விலையில் மாற்றம்
சந்தைப்படுத்தலில் வரி நிர்ணயிப்பு
ஏற்றுமதி இறக்குமதி
பாரிய வீழ்ச்சி
அடுக்கிக்கொண்டே போகலாம் வர்த்தகச்செய்தி
பணக்காரான் எப்படியோ வாழ்ந்துவிட்டுப்போவான்
பணத்திற்கு பஞ்சம் வராதவரை
ஏழை எளியோர் ஏர் பிடித்து உண்டு வாழ்வார்
நிலத்திற்கும் வான்மழைக்கும் முட்டுக்கட்டை போடும்வரை
இவை இரண்டுக்கும் இடைப்பட்டவனுக்குத்தான் 
இந்த வர்த்தகச்செய்தி
வெங்காயம் விலை ஏறினால் கறிக்கு வெங்காயம் போடமாட்டான்
பால்மா விலை ஏறினால் கடும் கசாயம் குடிப்பான்
எண்ணெய்க்குப் பஞ்சம் வந்தால் வெயிலில் அப்பளம் பொரிப்பான்
அரிசி விலை இறங்கினால் ஒருவருடத்திற்கு வேண்டிய அளவு மூட்டையை அடுக்கிவைப்பான்
மாதம் ஒரு மரக்கறி வகை 
இந்த மாதம் கத்தரிக்காய் 
அடுத்த மாதம் முருக்கங்காய்
காய்கறியிலும் சிக்கனம் பார்த்திடுவான்
நல்லூரில் கொடி ஏறினால் மாமிசம் புலங்குவான்
ரம்ஜான் கஜ்ஜீப் பெருநாளில் சுத்த சைவமாகிடுவான்
ஐயோ இது விலைவாசிக்கான நாடகம்
வீட்டுச்சாடியில் தக்காளி மிளகாய் பாகல் வெண்டி பயற்றை நாட்டிடுவான்
கூட்டுசாம்பார் வைத்து பல நாட்களை ஓட்டிடுவான்
மீன்பிடி வியாபாரநிலை அறிந்து கூடை நிறைய அள்ளிவர வேறு ஊருக்கும் சென்றிடுவான்
நடுப்பக்கத்தில் கவர்ச்சியாய் பல இருக்க 
நடுத்தரகுடும்பத்தில் பிறந்தால் 
படிக்கவேண்டும் இந்த வர்த்தகச்செய்தி

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...