கல்லறை மீது பூக்கும் பூ நான்
ஒரு நாள் இறைவா உந்தன் மாலையாக மாட்டேனா
ஒரு நாள் உந்தன் பூஜைக்கு உகந்தவளாக மாட்டேனா
கல்லறை மீது பூக்கும் பூவுக்கு
ஒருநாளும் உந்தன் கரிசணைதான் கிடைக்காதா
கல்லறை மீது பூக்கும் பூ நான்
ஒரு நாள் திருமணமாலையாக மாட்டேனா
ஒரு நாள் மணவறை கண்டு பூத்துக்குலுங்க மாட்டேனா
கல்லறை மீது பூக்கும் பூவுக்கு
ஒருநாளும் மணமாலையாகிடும் மகிழ்ச்சிதான் கிடைக்காதா
கல்லறை மீது பூக்கும் பூ நான்
ஒரு நாள் காதலின் அன்புப் பரிசாயாக மாட்டேனா
ஒரு நாள் காதலன் கையில் தவழ மாட்டேனா
கல்லறை மீது பூக்கும் பூவுக்கு
ஒருநாளும் காதலின் வரம்தான் கிடைக்காதா
கல்லறை மீது பூக்கும் பூ நான்
ஒரு நாள் சூடிக்கொள்ள கூந்தல் காண மாட்டேனா
ஒரு நாள் கூந்தலை அலங்கரிக்க மாட்டேனா
கல்லறை மீது பூக்கும் பூவுக்கு
ஒருநாளும் சூடிக்கொள்ளும் வாய்ப்புதான் கிடைக்காதா
முட்களைக்கொண்டு உதிரம்கண்டு
பறித்திடும் கரங்களை வருத்திடத் தெரியாதே
வண்டுகள் வேறு வண்ணத்துப்பூச்சிகள் வேறு
பிரித்துப் பார்த்திட மனமும் நினைக்காதே
சேற்றில் முளைத்த செந்தாமரையும்
களங்கமற்றதாய் வாகை சூடிடுமே
காகிதப்பூக்களில் வாசம் வருமா
பந்தலில் பவளமாய் படர்ந்திருக்கிறதே
கல்லறையில் பூத்த பாவத்தினைப் புதைத்திட
குப்பை மேட்டில் எனக்காய் ஓர் இடம் கிடைத்திடுமா
கல்லறையில் பூத்த தீட்டினை கழுவிட
கங்கை நீரும் என்னைப் புனிதமாக்கிடுமா
மனிதனின் கைகளில் வந்து சேர்வதனால்
மலரிடமும் வர்ணம் தோன்றிடுதே
கல்லறை கொண்ட ஈரம்
கடவுளும் ஏனோ என்னில் காட்டவில்லை