மண்ணைக் காதலித்திருக்கலாம்.
இரண்டின் முடிவிலும்
மண்ணோடு மண்ணாய்ப் போவதுதானே நியதி
அன்பான வார்த்தைகளுக்கும் கனிவான
கரிசணைக்கும் கரைந்துபோகாமல்
வீரத்தமிழ் வீழாது விண்ணிலும்
ஆலம் வித்துக்காளாய் விளைச்சல் காட்ட
உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம்.
காஞ்சிவரம் பட்டுக்களின் இஸ்திரி மடிப்புக்கள்
நேர்த்தியாய் நேர்கோட்டிட வர்ணங்களில்
வனப்பேன் உன் கருவிழியில் கண்ணா
என்று கர்வம் கொள்ளாமல்
காக்கி உடையோ கிழிஞ்சல் கந்தையோ
மண்மகள் அடையாளம் எனக்காட்ட
உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம்.
பத்துப்பவுன் திருமாங்கல்யம் வெகுவிரைவாய்
கழுத்தில் ஏற மஞ்சல் மேனி மையல்
கொண்டு நாணம் கூடி செக்கச்
சிவப்பதற்கு எதிரியின் பிடியிலும்
உன் விதி நீ எழுத மரணமே
மந்திரமாம் சைனைட்டுக் குப்பியுடன்
கறுப்புக்கயிறு வீரவணக்கத்தைக்காட்ட
உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம்.
பூச்செண்டு கையில்லேந்தி மணமேடை
மணம் கமழ வாச ரோஜா வாடிவிடாமல்
பன்னீர்த்தெளித்து புதுமலர்ச்சி கொடுக்க
பூமாரி பொழியும் தோட்டாக்களின் உறைவிடம்
துப்பாக்கி முனையுன் துஸ்டனை தூளாக்கும்
துடிக்கும் கரங்களிற்கு துர்பாக்கியவதி நான்
உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம்.
ஒற்றைக்கையொப்பத்தில் உன்னைச் சரண்டைந்து
இருவர் சாட்சியில் இறுதிவரை உன்னில் மாட்சி காண
நாமம் பொறித்த கல்லறைகளில் எரியும்
விளக்குக்கூட தலைவணங்கி என் மண்ணின்
காதற்புகழ் பாடி வையமும் வரவேற்க
உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம்.
உனக்கும் உற்றாருக்கும் உறங்காமல்
ஊதியமற்ற ஊழியம் பார்த்து உயிர்மூச்சுத்துறந்து
மண்ணில் உறங்கிக்கிடப்பதிலும்
தளர்வான நிலையிலும் தைரியமாய் போரடி
மண்ணில் மக்கிய உரமாகிப்போனாலும்
ஒரு விதையை விளையச் செய்து அதன்
கொடும்விசத்தில் விரோதி வீழ்த்தப்பட
உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம்.