Monday, July 27, 2020

புற்றுநோயாளியின் கர்ப்பம்














உயிர்ப்பிணைப்பில் இன்று ஒரு முடிச்சு
புதிதாய் இடப்பட்டதாக ஒரு சிறு உணர்வு
அதற்கு ஆதாரமாய் தள்ளிப்போன பல நாட்கள்
மயக்கம் மற்றும் வாந்தி


வைத்தியரின் ஆலோசனை தெய்வத்தின் வாக்காய்
காதில் ஒலிக்க கையில் இருந்த ஆதாரச்சான்றிதழில் 
புலன் செலுத்தப்பட்டு ஒருவகை மயக்கநிலை அடைந்திருந்தேன்


மருந்துமாத்திரைகளும் தடுப்பூசிகளும் என்
சின்னஞ்சிறு ஊந்துதுடிக்கும் உயிருக்கு 
வலு என்பதில் எனக்கு வலியே மறந்துவிட்டது 


கணவனின் இருசக்கரவண்டி மென்மையாய்ச் 
செல்லவும் என்னை ஆட்கொண்ட பயம் அவர்
இடுப்பை கைகளால் வளைத்துக்கொள்ள கண்களும்
இறுக சொருகிக்கொண்டன


மண்ணில் சாயமுன் உலகிற்கோர் என்னுதிரத்தின்
சாயலை அவரின் கைகள் தாங்கி முத்தமிடும் சுவடு
என் மனக்கண்ணிற் பதிந்து இதயத்தோடு ஒத்துத்துடித்தது


வாரம் இருமுறை வைத்தியநிபுணரின் வாடிக்கையாளராய் 
குருதி தானம் பெறும் யாசகி 
என் மழலைக்காய் சிறிது திருடிவைத்திருக்கிறேன்


உதிர்ந்த கேஷங்கள் தரை தவழ மிகுதி இருப்பவை 
பின்னலிட்டு நிலைக்கண்ணாடியில் விம்பமாய் 
ஜொலிக்க வயிற்றின் தொந்தியின் அழகு இமைக்க மறுக்கிறது


முதுகெலும்பின் தண்டுவடம் ஊசி வலியில் 
நொய்தலாக பேழை வயிற்றின் சுமை சுகத்தின் 
கணமாய் தலை நிமிர்த்திய நேர் நடையில் கௌரவம் பெறுகிறது


மெலிந்த தேகத்தில் சுவாசிக்கத் திடம் இன்றி 
ஒட்சிசன் முகக்கவசத்தின் துணையோடு 
என் சிறு உயிரும் சுவாசிக்கின்றது


ருசியறியா நா உணர்வற்று உணவை 
வெறுப்பினும் உட்சாகமாய் வேண்டி 
விரும்பி உண்கின்றேன் ஊட்டச்சத்தின் பிரதிபலன் 
என் சிசுவிற்கு வந்தடையட்டும்


சீராட்டி பாராட்டிட உன் பக்கமில்லா 
பாவியாவேன் என்றே உன் பாதம் தொட 
இறையாசியுடன் ஒரு பெண் குழந்தைக்காய் 
அனுதினமும் வேண்டிநிற்கின்றேன்


பாவ விமோட்ஷனம் பெற தகுதியற்றவள் நான் 
சுயநலக்காரி இவ்வுலகில் உன்னைப் பிரசவிக்க 
புற்றுநோய் பூண்ட தேகத்தை ஆடையாய் அணிந்துள்ளேன் நிரந்தரமாய்


தாயாய் கடமையாற்ற என் இன்னுயிர் உலகுநீர்ப்பினும் 
சேயாய் எனை பாவனை செய்ய
உன் அப்பாவின் மறு தாயாய் தாலாட்ட தினமும்
உன்னைத் தடவிக்கொடுத்து மன்றாடுகின்றேன்


எத்தனையோ சாகசங்கள் புரியும் பெண்மணிகள் 
பலர் மத்தியில் சாதனையாய் உனை கருவிற்சுமந்து 
சுகநலத்துடன் ஈன்றெடுப்பதே
என் வாழ்நாட்சுமைகளிற்கேற்ற செல்வம்

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...