Monday, June 8, 2020

விடைபெறுகிறேன்
















இன்றுதான் எனக்குக் கடைசிநாள் 
என்று அதிகாலைச்சேவல் உரக்கக் 
கூவுவதற்கு முன்னே நித்திரைப்பாயில் 
என் அகக்கண்கள் முழித்துக்கொண்டன


ஆர்ப்பாட்டமில்லா காலை வேளை 
எல்லோர்மனதிலும் ஓர் கலக்கத்தை
மௌனமாய் விதைத்திருப்பதை
என்னால் ஊகிக்கமுடிந்தது


அம்மா சுடும் முறுகலான நெய்த்தோசை
தட்டில் நிரம்பி வழிய காரமான மிளகாய்ச்சம்பல்
நாக்கின் சுவைநரம்புகளையும் தாண்டி 
நாசியில் புரக்கேறி என்னை விழிப்பூட்டவே
அம்மாவின் தலையில் மூன்று தட்டல்
உணவுக்குழாயை சீராக்கியது


கணக்கு வாத்தியார் கரும்பலகையை விட்டு
என் பயணப்பைகளில் பொருட்களை
திருப்தியற்றதாய் கணக்கிட்டுக்கொண்டிருந்தார்
வருடம் முழுவதும் நான் சுகவாசியாய் வாழ்வதற்கு


ஜாடி ஜாடியாய் இனிப்பு உறைப்பு உவர்ப்பில் 
உருப்படிகள் பல உலர்ந்ததாய் 
உருட்டித்திரட்டி வைத்துக்கொண்டிருந்தவளின்
கண்கள் சிவப்புக்கோவைப் பழமாய் பொங்கியிருந்தன
இரவிரவாய் அழுதிருப்பால் போலும்


பந்தாட்டம் விளையாட்டில் இன்று கவனம் 
செலுத்தாத மகள் நாளை பூப்படைந்தால்
பூவால் அலங்கரிக்க அருகில் இருப்பேனோ என்ற
அச்சம் தழுவிய தழுவல் ஏனோ நீங்க மனமில்லை


வீட்டின் வீரனாம் செல்லமகன் சற்றுக்கோபத்துடன்
மூலையில் மறைந்துகொண்டு என்னைப் பார்க்கும்
பார்வைக்கு விடைகொடுக்கத்தெரியாதவனாய்
தயங்கத்துடன் முன்னேறினேன்


ஐந்தறிவு ஜீவன் அவன் முகம்கூட இன்று 
வாடிப்போயிருந்தது ஏக்கத்தில் வாலாட்டி
என் காலைப்பின்னியிருந்தான் எடுத்துவிட
மனமில்லாமல் தலையைத் தடவிக்கொடுத்தேன்


என் பயணப்பைகள் நிரம்பிவிட்டன
என்னுடனான புகைப்படங்கள் பெரிதாக்கி
சுவரில் அலங்கரிக்கப்பட்டிருந்தன
சாமி விளக்கு பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்தது
வீட்டில் அனைத்து மின் உபகரணங்களும்
துண்டிக்கப்பட்டிருந்தன
அனைவரும் என்னை வழியனுப்ப
வாசலில் நிற்கின்றார்கள்


அம்மாவின் கால்பிடிப்புக்கு தைலம்
தேய்க்கத்தவறியவன்
அப்பாவின் பழைய மூக்குக்கண்ணாடியை
சரி செய்ய இயலாதவன்
செல்லமகளுக்கு தைரியம் கற்பிக்க
அருகில் இல்லாதவன்
குட்டிப்பையனின் வாலுச்சேட்டையில்
பங்கு கொள்ளாதவன் 
மனைவியின் கண்களின் காதலை
இரசிக்கும் பாக்கியமற்றவன்
செல்லப்பிராணியின் நிகரற்ற அன்பிற்கு
தோழனாய் தலைவணங்காதவன்


மனைவி என்னை இறுக அணைத்து
என் இதயத்துடிப்பில் 
மனமாறினால் நானோ
இத்துடிப்பின் இறுதிவரை 
நம்நாட்டின் நன்மைக்கென்று
எண்ணிக்கொண்டேன்
தீர்காயுளுடன் வாழ்வாய்
என அன்னை ஆசீர்வதித்தாள் 
ஆயுள் வரை அன்னைநாட்டிற்கு என்னை 
அர்ப்பணம் செய்துவிட்டேன்
அப்பா கதை சொல்லுங்க என்று
கேட்ட மகளிடம் நாளைய
சரித்திரத்தின் வெற்றிவாகை 
பற்றிக் கூற எண்ணியிருந்தேன்


போய் வருகிறேன் என நம்பிக்கையாய்க் கூறமுடியவில்லை
எத்தனை பொதிகள் இருந்தாலும் தோள்பட்டையில்
நாட்டின் சுமையைத் தான் சுமக்கப்போகிறேன்
அலங்கரிக்கும் என் புகைப்படங்கள் ஒருநாள் 
மாலையுடன் வீரவணக்கத்திற்கு தயாராக இருக்கும்
சாமி விளக்கு ஒரு நாள் என் கல்லறையில் 
சுடர்விட்டு எரியும்
என்னை வீரசுவர்க்கம் செல்ல இராஜமரியாதையுடன்
உலகமே வழியனுப்புவதில் ஐயமில்லை என்று
என்னுள் நினைத்துக்கொண்டு விடைபெறுகிறேன்

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...