Tuesday, October 23, 2018

அடுப்படியில் அம்மா உன் நேசம்


அடுப்படியில் அம்மா உன் நேசம் கண்டு
எத்தனைமுறைதான் நான் வியப்பது?
அதிகாலை எந்த வேலையும் இல்லாத சேவல் கூட
உறங்கிக்கிடக்கையில் பாத்திரம் தேய்க்கும் சத்தம் 
கேட்டு தான் நான் பல முறை விழித்தெழுவேன்
கொட்டும் பனியில் எனக்காய் ஆகாரம் செய்திட
பாத்திரங்கள் சுத்தம் செய்வதில் என்னை கவனித்திருக்கமாட்டாய்
ஒரு சாண் வயிற்றுக்கேற்ப உண்டு நீர் அருந்திடவேண்டும்
என்பேன் பாடசாலைச் சீருடையுடன்
இன்னுமொரு தோசை அடுப்பில் இருக்கிறது
என்றே மன்றாடி ஊட்டிவிடுவாய்
பரீட்சைகாலம் நெருங்கவே உண்ண உறங்க மனமின்றி
என் சிந்தனை எதயோ நாட
ஊட்டச்சத்து உணவின்றி என் மகள் ஊக்கம் குறைந்தது என்பாய்
கோபம் உன்னில் காட்டிட சந்தர்ப்பமாய் பட்டினி
கிடந்திடுவேன்
கண்கலங்கிய நீயோ ஊட்டிவிட முன்னும் பின்னுமாய்
கெஞ்சிடுவாய்
அன்பை வெளிக்காட்டிட நீ வாய்மொழியால் என்னிடம்
சொல்லாவிட்டாலும்
கரி படிந்த அடுப்படிச் சுவர் இன்னும்
தீயாய் என்னைச் சுட்டுக்கொண்டிருகிறது அம்மா
உன் கையால் ஊட்டிவிடும் சோற்றுருண்டையில்
அறுசுவை தெரியவில்லை மாறாக
உன் அடுப்படி நேசம் தெரிகிறதம்மா

Monday, October 22, 2018

யாருமற்ற வாழ்க்கையை வாழ பழகிக்கொள்வீர்கள்


காதல் கொண்டு ஆசையாய் கட்டிய மனைவி
கடைசிவரை உறுதுணையாய் உன்னைக் காப்பேன் என
அக்கினி குண்டம் வலம் வந்தேன்
செய்த சத்தியம் பொய்யாய்ப் போய்விட
உன் பெற்றோருக்கு நான் அளித்த வாக்கு மங்கும் படி
என் உயிர் இவ்வுலகம் விட்டு போகப் போகிறது
எண்ணும் எழுத்தும் கண்ணாய்
பிள்ளைகள் நால்வரைப் பெற்றேன்
கல்வி எனும் கடலில் கரைதாண்டி
பட்டம் பெற ஆனந்தமாய் நானும் கண்ணீர் மல்க
கனவுகள் தான் பல நெஞ்சில் சுமந்தேன்
நீங்கள் வாங்கும் முதல் மாத சம்பளத்தில்
வேண்டுதல்கள் பல நிறைவேற்றிட தெய்வம்
அருள்புரிய வேண்டி நின்றேன்
நல்ல இடமாய் மாமா என அழைத்தாலும்
பெறாமக்களாய் என் அன்பைச் சொரிந்திட
ஊர்ஊராய் ஊர்வலம் சொந்தங்களுடன் கூடியே
என் மக்களுக்கு கனவில் திருமணமும் நிகழ்த்தி விட்டேன்
எத்தனை கடை தான் ஏறி இறங்கினாலும் பிஞ்சு மொழியால்
தாத்தா இன்னும் ஒன்று வாங்கி தாங்க என்று சொல்லும்
பேரக்குழந்தைகளையும் ஒருமுறையாவது தூக்கி சுமந்துவிடுவேன்
இப்படி ஆசைகளை மூட்டை கட்டி வயதுபோன நாற்காலியில்
இளம் வயதோடு போகப் போகும் என் உயிருக்காய் நான்
நிமிடங்களை எண்ணி களைப்புற்று விட்டேன்
பிறக்கையில் மரணத்தின் விதையை நாட்டி விட்டு
இம்மண்ணுலகில் ஏன் பிற உயிர்களோடு பந்தங்களை
ஏற்படுத்துகின்றோம்
அவர்களின் நீங்காத துயர் மூலமும் நினைவு வரும் வேளையில் கண்ணீர்த்துளி மூலமும் பிறப்பெடுப்பதற்கா?
இறப்பு என்பது எத்தகைய
கொடியது என இறக்கும் தறுவாயில்
துடித்த இதயங்களிடம் கேட்டுப்பாருங்கள்
யாருமற்ற வாழ்க்கையை வாழ பழகிக்கொள்வீர்கள்

Sunday, October 21, 2018

பழைய புத்தகத்தில் நடுப்பக்கத்து மயிலிறகாய்


விதிகளைத் தளர்த்தெறிந்த 
வரைமுறையற்ற பார்வை வீச்சினால்
வன்முறைகள் பல செய்கிறாய்
தூரம் நான் தேடி நின்றாலும்
என் பேர் சொல்லிய வெப்பம் நிரம்பிய
உன் சுவாசக்காற்றால்
வலிமை இழக்கச் செய்கிறாய்
ஆணுக்கான திமிர் நிறைந்த தோரணையில்
எப்பக்கமும் சாயாக் கொடி என்னை
மெழுகுசிலையாய் உருக வைத்தாய்
இத்தனை அழகாய் சொல்லாக்காதலை
ஒரு சொல்லில் உதட்டோடு வருடிவிட
எத்தனை வருடமாய் நானும் காத்திருக்க
இது உன் விதி என எழுதி வைக்கா என் காதல் காவியத்தை
முடித்து வைத்தது காலம் எனும் விதி
இனி எங்கு சொல்லப் போகிறாய்
சொல்லா உன் காதல் கதையின் கதாநாயகி
பழைய புத்தகத்தில் நடுப்பக்கத்து மயிலிறகாய்
உன் நினைவுடன் மடிந்து கிடக்கின்றேன்

Thursday, October 18, 2018

கலியுகத்திலும் இன்னும் தசரதர்கள்


எழில் கொஞ்சும் அன்னம் அது
உன் நடையழகை சாயல் கொண்டு
மெல்ல வர அதனழகில் காதல் வயப்பட்டு
அந்நாளில் பெண் மேல் காதல் புரிந்தானொருவன்
விரிந்த செந்தாமரை இதழ் மென்மையில்
இடையழகை வர்ணித்து ஒப்பீடுகளில்
வரைமுறை பேணி பெண் மேல் காதல் புரிந்தானொருவன்
சிவதனுசை வில்லொடித்து மணமாலை மணமகன்
சூட்டிட சுயம்வர வேளையில் வீரமகன் வதனம் கண்டு
வெட்கத்தால் அவள் சிவந்திட வீரம் கொண்டு
வில்லொடித்து பெண் மேல் காதல் புரிந்தானொருவன்
இப்படி இதிகாசங்களிலும் புராணங்களிலும் காதல் கற்பு
நெறி தவறாமல் உரைத்து நின்ற பெருமான்களே
உம்போல் உரைப்பதற்குப் பலர் இருந்தும் கேளாய்ச் சமூகமாய் மாறிவிட்டார்கள் எம்மவர்கள்
விதைத்தவன் நன்கு செழித்து வளரந்த பயிரை உரிய முறையில் அறுவடை செய்யக்காத்திருக்கும் வேளை
தீ மூட்டி அதில் குளிர்காய்ந்து கருக வைத்த பாவிகள்
வாழும் உலகம் இது
பாவம் நாளை அவர்கள் விதைக்கையில் அவர்களின் பயிர்களுக்கும் இதே கதி என்பதை மறந்துவிட்டார்கள்
இராமவதாராம் முடிந்தும் கலியுகத்திலும் இன்னும் தசரதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்
இதயத்தால் காதல் கற்பற்ற கன்னியர்கள் நினைவில்
நீங்காச் சிலை எழுத்துப்போல

Monday, October 15, 2018

ஓடாதே என் ஆசைக் கணவா


ஓடாதே என் ஆசைக் கணவா
அன்று தொட்ட காலம் முதல் 
உன் மீது கொண்ட காதல்
பூமாலை மணக்கோலம் தாண்டி
இப்பூவுலகில் இருவரின் பாதமும் 
ஒருமித்தப் பதிந்திட தவம் இல்லா
வரம் ஒன்று கைகளில் ஏந்தியும்
எல்லையில்லா மகிழ்ச்சியை
விழிகளால் வழிந்தோடிடும் கண்ணீரும்
உரைத்து நிற்கும்
என் வாழ்நாள் முழுவதும் சேர்த்துவைத்த
ஆசை எல்லாம் திகட்டத்திகட்ட
பாசமாய் ஊட்டிவிட உன் மார்பின் அருகில்
சற்று இடம் தந்து
என்னை அணைத்துக் கொள்
கழுத்தில் நீ கட்டிய மாங்கல்யம்
வேலி மட்டுமல்ல உன் மீது நான் கொண்ட
அதீத காதலையும் கர்வத்துடன் தினமும்
நினைவூட்டி நிற்கும் எவ்வேளையும்
வேலை மக்கள் குடும்பம் என்று ஓடிவிடாது
என்னைக் கொஞ்சம் அணைத்துக் கொண்டு
அமைதியாய் இரு
அந்த நிசப்பத்தில் எனக்காக மட்டும் துடிக்கும் உன்
இதயத் துடிப்பை கேட்டுக் கொண்டே என் வாழ்நாளைக்
கழித்துவிட ஒரு கணம் ஓடாதே என் ஆசைக் கணவா

ஏன் இன்னும் இந்த இடைவெளி?


பதிவுத் திருமணமும் முடிந்துவிட்டது
சட்ட ரீதியாக மட்டும் மனைவி ஆகிவிட்டேன்
ஊர் அறிய உறவறிய திருமணத்திற்கு நாள் பார்க்கிறாள்
உன் மாமியார்
தடபுடலாய் சமையலுக்கு ஆள் தேடுகின்றான் உன் மூத்த மச்சான்
மண்டபம் அலங்காரம் பத்திரிகையில் நேரத்தைப் போக்காட்டுகின்றான் உன் இளைய மச்சான்
அறிவுரையும் சமையல் கலையும் அழகுக்கலையிலும் நிபுணத்துவம் பெறுகிறாள் உன் மைத்துனி
நான் மட்டும் உன் நினைவாய் எம் சந்திப்பிற்காய் காத்திருக்கின்றேன்
அனைவரும் கோவில் சென்றுவிட்டார்கள்
நான் மட்டும் தனிமையில் உன் நினைவுகளோடு
எதேற்சையாய் நீயும் வந்தாய் இது கனவல்ல மறக்க முடியா நினைவு
காதல் புரிய இதுவல்லவோ சிறந்த நேரம் என நான் நாணம் கொட்ட என் அருகில் வந்த நீயோ என் கண்களை தின்பதாய் பார்க்கிறாய்
நாணம் கொஞ்சம் வெட்கமாய் மாறிட என் பெண்மைக்கான கூச்சத்தை ஓரம் கட்டி உன்னிடம் கேட்டேன்
“ ஏன் இன்னும் இந்த இடைவெளி?”
செல்லமாய் என் கன்னத்தைத் தட்டியவாறு கூறினாய்
“ஊரார் ஆசியுடன் உன்னை மனைவி ஆக்கிய பின் இனி ஏது இந்த இடைவெளி “
கண்கலங்கிய என் கண்மடலைத் துடைத்தபடியே பார்க்கின்றாய்
அதில் தெரிந்ததோ உன் ஆண்மையின் அடையாளம்

Saturday, October 13, 2018

அம்மா எனக்கோர் மாப்பிள்ளை பாருங்கள்


அம்மா எனக்கோர் மாப்பிள்ளை பாருங்கள்
திருமணவயதை ஓரளவு அடைந்துவிட்டேன்
உங்கள் கைப்பக்குவத்தில் அறுசுவை விருந்தளிப்பேன்
இல்லத்தரசிக்கேற்ப ஓடியாடி உங்கள் பெயரைக் காப்பாற்ற 
மாமியார் வீட்டில் வேலை செய்வேன்
சடங்கு சம்பிரதாயங்களைக் கொஞ்சம் சொல்லித்தாருங்கள் போகும் இடத்தில் கடைப்பிடிக்க
மாப்பிள்ளை அவர் உங்கள் விருப்பம்
உங்களின் எந்தத் தெரிவையும் நான் ஏற்றுக்கொள்வேன்
உயரம் வயது நிறம் குணம் அழகு படிப்பு பதவி பணம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை
ஏனெனில் பார்த்துப் பார்த்து நான் தேடிய தேடலில் ஏமாற்றப்பட்டுவிட்டேன்
அவன் நிறம் சற்று கறுப்பு அதில் எனக்கோர் விருப்பு
அவன் வார்த்தைகளால் மட்டுமல்ல அவ்வப்போது பார்வைகளாலும் என்னை வளைத்துவிடுவான்
எனக்கேற்ற உயரம்தான் அதை அளந்துபார்க்க அருகில் பலமுறை நின்றிருப்பேன்
அவன் மொழி தமிழ்தான் ஆதலால் தமிழ் மேல் அதீத பற்றுக் கொண்டேன்
அவன் குணம் குழந்தைத்தனமானதுதான் என் கோபத்திலும் இரசித்திருந்தேன்
அவனுடனான நேரம் எல்லாம் புன்னகை மட்டும்தான் அதனால் செல்லச்சண்டை போட்டு வாக்குவாதின் பின் அவன் சமாதானத்திற்காய் காத்திருந்தேன்
இத்தனையுமாய் அவனை நான் இரசிக்கையில் இரசிப்பதற்கு மட்டும் என்னை தேர்ந்தெடுத்து
பின் இரசிக்கப்பட்ட பொருளாக மாற்றிவிட்டான்
இத்தனை காலம் பொறுமையாய் இருந்து தேர்ந்தெடுத்த தெரிவு என்னை ஏளமாய் பார்க்கையில் உங்கள் தெரிவு எதுவாக இருந்தாலும் மனமில்லாத நிலையில் ஏற்றுக்கொள்கின்றேன் அம்மா

உன் வருகைக்காக காத்திருக்கும் நான்


எத்தனை தவங்கள்
எத்தனை மன்றாடல்கள்
எத்தனை கெஞ்சல்களின் பின் 
நீ என்னிடம் வந்து சேர்ந்தாய்
அத்தனையும் பொய்யாக்கியது போல மறுபடியும்
என்னை உதாசீனப்படுத்திவிட்டாய்
இருவரின் கைகளும் கோர்க்கப்பட்டு
கனவுகள் பிணைக்கப்பட்டு
வார்த்தைகள் உரசப்பட்டு
எம் எதிர்காலத்தை வர்ணம் தீட்டினோமே
யாரும் வரையாத கோலமாய் எம் இருவரின் வாழ்க்கையை சித்தரிக்க
அதை அலங்கோலமாக்கியது ஏனோ?
நிழலாய் வேண்டாம் ஒளியுடன் போய்விடும்
கனவாய் வேண்டாம் துயில் எழுந்தபின் கலைந்திடும்
உயிராய் வேண்டாம் உடல் இறந்தபின் தொலைந்திடும்
மணமாய் வேண்டாம் மலர் வாடியபின் உறங்கிடும்
சுவையாய் வேண்டாம் புலன் அற்றதும் மறத்துப்போய்விடும்
காற்றாய் வேண்டாம் பூமியோடு செறிவு குறைந்திடும்
திங்களாய் வேண்டாம் ஞாயிறு வந்திடும்
நீராய் வேண்டாம் நிலை மாறிடும்
இரயிலாய் வேண்டாம் தடம் புரண்டிடும்
கால் தடங்களாய் வேண்டாம் பாதை மாறிடும்
எதுவாய் என்னை நீ இருக்கச் சொல்கின்றாயோ
உன்னைப் பிரியாவண்ணம் உன்னைத் தொடர
புதிதாக ஒன்றைக் கண்டு பிடித்து வந்திடு
வரமாட்டாய் என அறிந்தும் உன் வருகைக்காக காத்திருக்கும் நான்

Friday, October 12, 2018

என்னளவில் அகரம்

அன்பு
நான் வாழ்வதற்கு ஆதாரம்
அழகு
உள்ளதில் காணவேண்டிய பண்பு
அறிவு
மற்றவர்முன் என்னை உயர்த்துவது
அடக்கம்
சான்றோரின் முன் காட்டவேண்டியது
அகம்பாவம்
அழிவிற்கு ஆரம்பம்
ஆக்கம்
என்னுள் உள்ள படைப்பு
ஆதரவு
தளர்ந்துபோன இதயத்திற்கு
ஆசை
நான் கனவில் தீர்த்துக்கொள்வது
ஆடம்பரம்
விருந்தோம்பலில் இருக்க வேண்டியது
இசை
தனிமையின் துணை
இறைவன்
மனிதரை மனிதராய் மதிப்பவன்
ஈட்டி
நீ அடுத்தவரை சொல்லால் வைக்கும் குறி
உண்மை
அரிதாய் கிடைக்கும் அழிவற்ற சக்தி
உணவு
சிலருக்கு கிடைக்காத பலர் வீணாக்கும் கொடை
ஊக்கம்
கை விடக்கூடாத ஒன்று
எளிமை
உன்னை அலங்கரிக்கும் அணிகலன்
எண்ணம்
சக்திவாய்ந்த ஆயுதம்
ஏமாற்றம்
நான் பெற்ற வரம்
ஏளனம்
தன்னிலை மறந்த பலர் செய்யும் செயல்
ஏக்கம்
ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரி
ஐயம்
உறவுக்கு கேடு
ஒன்று
ஒரு செயலில் மனம் இருக்க வேண்டியது
ஒழுக்கம்
தாய் தந்தையின் வளர்ப்பை குறிப்பது
ஓடம்
நான் வாழும் வாழ்க்கை
ஔவியம்
ஔவை சொன்ன மொழி                                                                                                                             
அம்மா என்னுடன் வாழும் என்னை வாழ வைக்கும் தெய்வம்                                                                                  அப்பா நான் சிறுவயதில் தொலைத்த பொக்கிஷம்

காதல் அகதி

உன் பார்வைப் போரில் சிக்குண்டு
உன் இதயத்தில் நிரந்தரமாய்க் குடியேறிட
என் கோபம் திமிர் கர்வம் உடைமைகளைக் கழைந்துவிட்டு
உன் நிழல் மட்டுமே என் சொந்தம் என்று
அன்பை மட்டும் பாத்திரமாய் ஏந்தி 
ஆயுள் முழுவதும் உன் வசமாக்கிட
காதல் அகதி ஆனேனே

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...