ஆகா ஓகோ என்று தடபுடலாய்
தட்டுமாற்றி தாலிகட்ட நாளும்
குறித்துவிட்டார்கள். பந்தற்கால் நட்டு
பொன்னுருக்கி மூலையில் அமரவைத்தார்கள்
இப்பொழுதுதான் உன்னிடம் ஆசையாய் பேசமுடிந்தது
நீ நலம் தானா?
என் நலனில் அக்கறை இருப்பதால்
கண்ணீரோடு கதை பேசுகின்றேன்.
இங்கு யாருமில்லை என்ற தைரியத்தை
தக்கவைத்துக்கொண்டு கைபேசியில்
கலகலப்பாய் பேச நான் ஒன்றும்
பெண்ணியவாதியல்ல சராசரிப்பெண் தான்.
மாப்பிள்ளை வீட்டாரின் முழுசம்மதத்துடன்
மாங்கல்யம் ஏற்பதில் இத்தனை சுமைகளா என்ன?
தந்தையற்ற ஆண்துணையில்லா
மூத்த பெண்ணாய்ப் பிறந்தவள்
என்பதில் அடிக்கொருமுறை அன்னையைப் போல் அதட்டலும்
அன்பும் அதிகாரமும் அக்கறையும் அளாவலற்ற ப்ரியமும்
இறுதியில் தான் என்னைப் பெண் என உணரவைத்தது.
என் இளமை உணர்ச்சிகளை மீறி இனிதான ஒரு கூடலுக்கு
சமூகத்தில் ஒருபடி அந்தஸ்து தரும் ஒரு தருணம்
மிக விரைவில் வரப்போகிறது. தயவு செய்து
என் திருமணத்திற்கு வந்துவிடாதே.
மாங்கல்யம் சூட்டுவதில் எண்கணித சோதிடருக்கே
என் முதல் வணக்கம்.
தலைவிதி நன்றாக இல்லை என்ற வருத்தத்தில்
புரண்ட எனக்கு கோள்களும் கிரகங்களும் ஒன்றிசைந்து
நன்மைக் காரியம் கிட்டும் என்பதோடு விடாது
சிறப்பான வரன் என்று பல கட்டங்களுக்கு
என் புகைப்படம் முதல் என் நற்சான்றிதழும் அனுப்பிவைத்தார்கள்.
பார்த்தவுடன் பிடித்துப்போக
நான் என்ன ரதியா? ரம்பையா?
தட்டிக்கழிக்கப்பட்டன பல வரன்கள்.
இருந்தும் சிலர் முறுக்கும் பலகாரமும்
சுடச்சுட பால்த்தேநீர் குடிக்க வந்தவர்கள் போல
வீட்டுற்குப்போய் என் வீட்டு விலாசத்தை மறந்துவிட்டார்கள்
பின்புதான் நான் அறிந்தேன்
மாப்பிள்ளை சீதனத்தில் தான்
குடித்தனம் நடத்தப்போகிறார் என்று.
நல்லவேளை முறுக்கோடு நறுக்கிவிட்டதாய் எண்ணிக்கடக்க
அடுத்த மாப்பிள்ளை வீட்டார் அப்படியில்லை
வரதட்சணை வேண்டாம் மகளாய்ப் பார்ப்போம்
மகளை மட்டும் கட்டி அனுப்புங்கள் என்று
என் தங்கையைக் கைகாட்டினார்கள்.
பரவாயில்லை அவளும் சற்று ரம்பையோ மேனகையையோ
போல அழகாய்த்தான் இருப்பாள்.
வாழ்வில் பல அவமானங்களைக் கடந்துவிட்டேன்
இது என்ன என் கையால் தாலித்தட்டை சுமந்து
ஆசீர்வாதம் வாங்குவது ஒன்றும் பெரும் தவறில்லையே.
அடுத்தமுறை பெண் பார்க்க வந்தவர்களிடம்
உன்னைப்பற்றிக்கூற நான் விரும்பவில்லை
காரணம் எனக்கோ வயது முப்பத்திரண்டு.
இனியும் காதில் பஞ்சை வைத்துக்கொண்டு
வீதியில் நடக்கமுடியாது. அக்கம்பக்கம் அடுக்கும்
கேள்விகளுக்கு விடையளிக்காது சிரித்துக்கொண்டு
கடக்க இயலாது. வேறு சாதிக்காரனுடன் ஓடிவிட்டாள்
என்றால் பலகாரம் கூட பல்லில் படாமல் ஓடியிருப்பார்கள்.
நீயும் நல்லபடியாய் குழந்தைகளைப் பெற்று மணவாழ்வில்
மகிழ்ச்சியோடு வாழ்கிறாய் எந்தவித குற்ற உணர்வுகளும் இல்லாமல்.
நானும் உன்னைக்கடிந்து கொள்ளவிரும்பவில்லை.
என்னதான் சோற்றைப்போட்டு நடுவீட்டில் வைத்தாலும்
அதன் புத்தி மாறாது என்பதில் மிகத்தெளிவாய் இருந்தேன்.
இந்த உரையாடல் உன்னை அழைப்பதற்கல்ல தவறிக்கூட
என் திருமணத்திற்கு வந்துவிடாதே!