Thursday, October 1, 2020

அஹிம்சையின் பொக்கிஷம்


 













அஹிம்சையின் பொக்கிஷம் ஒன்று கண்டீர்

அகிலமெல்லாம் அவர் புகழ் ஓங்கக்கண்டீர்

விழித்தெழும் மனிதம் விதையாய் 

மண்ணின்மைந்தர் அகவிழியில் 

முளைத்திட காரணம் கண்டீர்


பருத்தியின் பசுமை கண்டீர்

பணிவின் பெரும் சிகரம் கண்டீர்

கொடித்தொழும் செந்தணற்கோபம் கூட

முகச்சுருக்கத்தில் மறைந்திருந்த புன்னகையில் 

மறையக் கண்டீர்


அக்கினிக் குஞ்சொன்று கண்டீர்

அப்பழுக்கற்ற தேசபக்தி கண்டீர்

சுவாசிக்கும் ஒட்சிசனினும் கலப்படம் இருக்க

சுதந்திரக்காற்றே உயிர் மூச்சான 

மாமனிதன் கண்டீர்


முதுமையில் இளமை கண்டீர்

முகத்தில் கம்பீர பிரகாசம் கண்டீர்

ஓங்கி நிற்கும் பாரதக்கொடி

பல்தேச மக்களின் தொப்புள்கொடி

உறவெனக் கண்டீர்


ஈர்ப்புவிசை கண்டீர்

ஈரமற்ற இருதயம் கூட மாறக்கண்டீர்

அன்பு தான் அகராதி அகிம்சைதான் 

இலக்கணம் என்ற இலக்கியம் தீட்டிய 

எழுத்தாணி கண்டீர்


கற்களும் கரையக்கண்டீர்

கடமையுள்ளம் உயிர் நீர்க்கக்கண்டீர்

பெற்ற சுதந்திரம் ஒவ்வோர் வீட்டின்

நிம்மதி உறக்கத்தில் லேசான 

புன்னகை பூக்கக்கண்டீர்


தாரகமந்திரம் கற்றுத் தந்தீர்

தலைவிதி புதுவிதியாய் மாற்றித் தந்தீர்

பாரத அன்னையின் மானங்காக்க

பாரத மைந்தனாய் காவியம் ஒன்று 

தலைமுறைகள் தாண்டி கற்றுத் தந்தீர்


 

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...