அடிமைத்தனம் உணராத அடிமைகள்
கொண்டாடும் பகட்டான சுதந்திரம்
குரல் கொடுத்து வெற்றி கண்ட தியாகிகள்
பெற்ற பொக்கிஷத்தை நம்மவர் கைநழுவிடப்பட்ட சுதந்திரம்
தண்ணீரின் தட்டுப்பாட்டில் குடிநீர் வேண்டி
அணைகள் திறக்க தலை தூக்கிய சுதந்திரம்
போத்தல் நீரை காசுக்கு வாங்கி பக்குவமாய்
சிந்தாமல் குடிக்க கிடைத்தது சுதந்திரம்
இதமான தென்றல் காற்றைக்கூட தூய்மையாய்
சுவாசிக்கக் கேட்ட சுதந்திரம்
ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளின் விசத்தை
பருகுவதில் கிடைத்தது சுதந்திரம்
வரிகளிலும் அரச கட்டணங்களிலும் கட்டணத்தொகை
குறைக்க வேண்டிய சுதந்திரம்
தாரை தாரையாய் கறுப்புப்பணம் அரசு அறியாமல்
பதுக்கி வைக்க கிடைத்தது சுதந்திரம்
பெண்ணடிமை அழிய சுய அந்தஸ்தைப்பெற
தற்துணிவும் நீதியும் நிலைநாட்ட வேண்டிய சுதந்திரம்
இன்று கற்பழித்து கொலை செய்யும் மனித ஓநாய்களின்
அநீதி படலத்திற்கு மீண்டும் கிடைத்தது சுதந்திரம்
பசுமைப்புரட்சியாம் பச்சைப்பசேல் வயல்வெளிகளில்
நெல்மணியாய் குலுங்க வேண்டிய சுதந்திரம்
அம்மணமாய் அரைவயிற்றுக் கஞ்சிக்கு வட்டியில்லா கடன் வேண்டி
அரசிடம் தீக்குளித்தது சுதந்திரம்
புண்ணிய ஸ்தலங்களும் நதி மலை வயல் புகழ் ஓங்க
பாதுக்காக்க வேண்டிய சுதந்திரம்
கனிம வளங்களாம் ஹைட்ரோக்கார்பன் அகழ்வுகளால்
மழுங்கும் இயற்கை அழிவுக்கே சுதந்திரம்
பிடித்த துறையில் ஊக்கமுடன் படித்து
ஞானியாகிட வேண்டிய சுதந்திரம்
பட்டங்களை காகிதப்பட்டமாக்கி வானில் பறக்கவிடும்
வேலையற்ற பட்டதாரிகளை உருவாக்கியது இன்றைய சுதந்திரம்
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றே இருதயத்தில்
முரசொலிக்கவேண்டிய சுதந்திரம்
ஆணவக்கொலை தேவதாசிகளை பகிரங்கமாய்
உருவாக்கியது இந்த சுதந்திரம்
வெள்ளையனிடம் வீரத்துடன் ஆவேசங்கொண்ட
கட்டபொம்மன் கதை சுதந்திரம்
அஹிம்சை வழியே அன்பின் பெரும் ஆயுதமாய்
காந்தியடிகளின் சத்தியசோதனை சுதந்திரம்
இன்று வெள்ளையனும் இல்லை
கட்டபொம்மனும் இல்லை
காந்தியடிகளும் இல்லை
நம்மவரிடமே தொலைத்து அடிமையான சுதந்திரம்
No comments:
Post a Comment
Your concern is appreciable. Thank you for the review