Saturday, August 8, 2020

தாழ்ச்சிக்குலம்



மண்ணோடு மனம் மங்கிப்போன மானிடா 

எங்கு தோன்றினான் 

நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவன்?

அவனும் நானும் பெண்ணுருப்பின் உதிரத்தின் 

உதிரிகளாய்ப் பிறக்க நீ மட்டும் செங்கதிரின் 

செஞ்சந்தனத்தில் பிறப்பெடுத்தாயா? 

வெடுக்கடிக்கும் பனிக்குட வாசனை நுகர நீ மட்டும்

பன்னீர் தெளித்து கமழமளித்தாயா?


நடமாடும் கல்லறைகளாய் நாடகம் அரங்கேற்றும் மானிடா 

என்ன வேறுபாடு கண்டாய் 

நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவனில்?

செங்குருதி வெண்குருதி தவிர கலங்கிய சேற்றுநீர் 

ஓடுகிறதா அவன் தேகத்தில்?

பசித்த தேகத்தில் வியர்வைத்துளியும் ஏக்கத்தில் 

உமிழ்நீர் சுரக்க உனக்கோ ஊற்றுநீர் சுரக்கிறதா?


வஞ்சகத்தின் வர்ணத்தை நாவில் நக்கிப்பிழைக்கும் பச்சோந்தி மானிடா 

என்னதான் செய்வாய் 

நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவனுக்கு?

ஒருபிடி சோற்றுக்கு ஏங்கும் ஒரு சாண் வயிற்றுக்கு 

ஓட்டைச் சிரட்டையில் களநீர் சொட்டச் சொட்ட 

குடுப்பதில் அவன் நா நனைந்திடுமா?

பெண்ணணியும் மார்புக்கச்சைக்கோ வரி கேட்கும்

குடுமிக்காரன் அதன் உள் சிறு இதயத்தின் தவிப்பை அறிந்திடுவானா?


கொடிய கருநாகம் கக்கும் விஷம் நாடி நரம்பெல்லாம் 

பாய்ந்து சர்ப்பமும் உனை கண்டு அஞ்சிடவைக்கும்  மானிடா 

என்ன செய்தான் 

நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவன்?

கல்வியில் சிறப்புற ஏட்டை விடுத்து உன் வீட்டு ஓட்டைப்பிரித்தானா? 

உயர்பணியில் உனக்கு சமமாய் அமர உறுத்தலான 

உன் மனக்கசப்பிடியிலிருந்து விலக பொன் 

பொருட்களால் அர்ச்சித்து அபிஷேகித்தானா?


மாயையினை போதையாய் சாயை கொண்டு சாதிக்கும் மானிடா 

என்ன செய்து அழித்தொழிப்பாய்  

நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவனுக்கு?

வன்புணர்வில் உன் சாதியம் சாதித்ததாய் 

மமதை கொள்கிறாள் உன் உயிர் அணுவும் கலப்புறும் என்பதை மறந்தாயா?

ஆணவக்கொலைகளை செய்கிறாய் நாளை 

புது விதை உன் வீட்டில் முளைக்காது என்ற துணிச்சலிலா? 


பேதமற்று புத்தி பேதலித்துப் பேசவில்லை மானிடா 

உன் அங்கவஸ்திரம் அங்கம் தீண்டலின்போதே 

நீயும் தீண்டாமை ஆகின்றாய் 

உதிரும் கேசமும் அவன் கையால் தீண்டுகையில் 

அதற்கும் உனக்கும் இல்லையடா வேறுபாடு 

தாழ்ச்சிக்குலத்தவனாய் பாகுபாட்டை ஏற்படுத்தமுன் 

பகுத்தறிந்து செயற்படு

தீண்டாமையை புறக்கணித்துக்கொள் அல்லது 

தீது நல்குவதில் உன்னைப் புறக்கணித்துக்கொள்

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...