மின்னும் வேகத்தில் எத்தனை பேர் சூழ்ந்து
சூழ்ச்சி வலை பின்னினும் இலக்கு ஒன்றை
மட்டும் மனக்கண் முன் நிறுத்தி அவ்வலைதனை
தகத்தெறிய காற்பந்தாட்ட பூமியில் கட்டைக்கால்
காற்சட்டை முட்டி மேல் முழம் ஏறி சமூகத்தடை
விலக்கத் தெரியாமலே அழிந்துபோகின்றன
பல யசோதராக்களின் கனவு
வெள்ளைமுகம் தலைகாட்ட செங்கதிரோன்
தலை சாய்க்க தேவைகள் காரியங்கள் பல
ஆற்ற ஆண்துணையற்ற அங்கையர்க்கன்னி
ஓரடி வாசற்படிதாண்டுதலில் கதி கலங்கிப்போகும்
பெண்மையின் கற்பு பல அவச்சொற்களில் இருந்து
அழிந்துபோகின்றன
பல யசோதராக்களின் கனவு
காதல் கனவுகள் கல்லறைச்சுமைதாண்டி
நீண்ட தூரம் பயணிக்க சாத்தானாகினும்
ஒரே சாதியைத் தேடித் தேடி வேட்டைக்கு
அனுப்பும் புள்ளிமான்கள் பல மனதால்
உடலால் இரையாகி சுகமற்ற நோயில் வாடினும்
இன்னும் அப்பன் அம்மை பிடியில் அழிந்துபோகின்றன
பல யசோதராக்களின் கனவு
ஆடவன் தன் சுகம் தேடி சலனம் தீர்க்க எத்தனை
படி ஏறி இறங்கினாலும் பத்தினியாய் இவள்
உடலைப் பட்டினி போட்டு பத்தியம் காப்பினும்
பல் இழிக்கும் பல பங்காளிக்கூட்டம் சீண்டலுக்கு
பதில் மொழி கூறி மறுமணத்திலும் விவாகரத்திலும்
கேலிப்பேச்சிற்கு தலைகுனிவதில் அழிந்துபோகின்றன
பல யசோதராக்களின் கனவு
கற்பித்தலும் வியாபாரமாகிட கரும்பலகைகள்
கூட தரம் பார்த்திட இலஞ்சங்கள் ஊழல்கள்
தலைவிரித்தாட காஞ்சவன் பாலியல் இலஞ்சங்கள்
பரிசாய்க்கேட்டிட விண்வெளியில் பறக்கும் கனவுகள்
விண்ணிலிருந்து விழுந்து மடிந்திட
அழிந்துபோகின்றன
பல யசோதராக்களின் கனவு
அனைத்தும் துறப்பதில் மனம் கொண்ட புத்தன்
தூக்கத்தில் யார் அறியாமலும் தன்சுமைகளில்
இருந்து விடைபெற்று ஞானம் பெறுவதில் மட்டும்
சிந்தை கொண்ட ஒருகணம் குழந்தை குடும்பம்
கடமைகள் மறந்து தன் சுகம் தன்நலன் கருதி
வீட்டை விட்டு வெளியேறியிருப்பின் அவளை
வேசி என்றே நாமம் சூட்டியிருக்கும் இந்த உலகின்
மூர்க்கத்தால் அழிந்துபோகின்றன
பல யசோதராக்களின் கனவு