என்றும் இனிமையான சிரிப்பொலியும்
செஞ்சந்தன முகப்பொலிவும்
மனதை வசப்படுத்தும் இன்மொழியும்
நேர்த்தியான இஸ்திரிக்கப்பட்ட உடையும்
பொய் கூறிவிடலாம்
மகவற்ற தாய் மடிக்கு நற்புதல்வனாய்
ஆடவண் துணையற்ற பெண்ணின் தமையனாய்
ஈன்றவனற்ற பிஞ்சு மழலையின் தகப்பனாய்
சகமும் பகிரும் தோழனாய்
உறவுமுறியடித்து விடலாம்
செஞ்சோலையும் சாலையோர நிழலும்
கொட்டும் அருவி மழைச்சாரலும்
வயலும் புல்வெளிநிலமும்
மலைத்தொடர் கடற்பரப்பு மணல் மண்ணும்
கண்ணிற்கு காட்சியற்றும் போகலாம்
முதல் விசும்பின் மழைத்துளியும்
அதில் எழுnம் மண்வாசமும்
பால்வாடை வீசும் மழலை அமுதும்
வெண்புகை பனித்துளி படர்ந்த மலர் மொட்டுக்களும்
தேன் வண்டின் ரீங்காரத்தில் ஓடி விளையாடும்
அணிலும் சிறு பட்சிகளும் இதமற்றுப் போகலாம்
அயலவர்களின் சலசலப்பான பேச்சுகளும்
பத்திரிகை நடுப்பக்கத்து கிசுகிசுப்பான பேச்சுகளும்
நவீன நங்கையின் நளினமான பேச்சிலும்
காரியவாதியின் கபடமான பேச்சிலும்
கடமையதிகாரியின் கடுமையான பேச்சிலும்
இனி சுவாரஸ்யம் குறைந்துவிடலாம்
அருளாசிபுரியும் இறைவனடி துணைநிற்காதென
அகவிழி சுடர் அணைந்து இருட்டான ஓர்
ஓசையறியா அறையில் மேல் முகட்டில் கற்பனைத் திரையை
அங்குமிங்குமாய் அலைய விடலாம்
காலன் பிடியில் கைவிலங்கின்றி இனி
எவர் சித்தம் என்றே இங்ஙனம் இனிதாய் நிறைவேற்றிய
மேடை நாடகத்தில் தன் கதாப்பாத்திரத்தை
விருப்பு வெறுப்பின்றி நிறைவேற்றம் செய்யலாம்
நிர்க்கதியற்ற நிம்மதி தொலைத்தவனிற்கு
அன்பாய் அருகில் அணைத்து அமர்ந்து
தலைகோதி மடிமீது
ஒரு நிமிட பாசப்பிணைப்பிற்கு
மனம் தேடும் அன்பானவர் இல்லாவிட்டால்
அவன் சிரிப்பு போலி பிரதிபலிப்பாய் அமைந்துவிடலாம்