Showing posts with label Sad. Show all posts
Showing posts with label Sad. Show all posts

Wednesday, June 10, 2020

மதுகிண்ணமும் கதைபேசும்



















கண்ணே உன் நினைவுகள் எல்லாம்

கற்பனைக் கனவுகளாய் கலைத்திட

கையில் ஏந்தினேன் மதுக்குவளை

கவலைகள் தீர வேறு மருந்தில்லை


குவளை வளைவுகளை உன்

கமலக்கன்னங்கள் தாமரை இதழாய்

கையேந்தினேன் நீயும் தவழ்ந்தாய் என்

கரங்களில் அந்திசாயும் வேளை எல்லாம்


கிண்ணத்தின் கழுத்துப்பிடியை

கைபற்றும் போதெல்லாம் உன் சங்குக்

கழுத்துவளைவை என் விரல்கள் மீட்டும்

கல்வி சரஸ்வதி வீணையாய் இசைத்தேன்


கூவும் முகமறியா கருங்குயிலும்

கீச்சிடும் சின்ன அணில் பிள்ளைகளும்

காலைவேளையில் துயில் களைய

கண்ணீராய் ஓடுகிறது என் ஏக்கங்கள் 


கேலியாய் நோட்டம் விடும் அயலவர்

கண்களுக்கு கேளிக்கை வேடம் பூண்ட

கோமாளி நான் மாது உன்னை மறக்க 

கிண்ணத்தில் மது உன்னைப் புசித்தேன்


கைதியாய் மனச்சிறையில் அடைக்கப்பட்டு

குற்றவாளிக்கூண்டில் உன்னை சிந்தையால்

கட்டிக்கொண்டு அவிழ்க்கமுடியா வலிகளை

குவளையில் மதுவோடு பேசித்தீர்க்கின்றேன்


களவாடிய பொழுதுகள் எல்லாம் கன்னி

கைவளையலாய்  கடிவாளமிட

கையில் குவளையின் முகமும் அவள் 

கண்ணாடி வளையலாய் கதைபேசுகின்றேன்


கதை கதையாப் பேசுகின்றேன்

கண்ணீரும் தீரவில்லை கண்ணிலிருத்து

கற்பனையும் மீளவில்லை உன்னிலிருந்து

கைக்குவளை மதுவும் போதவில்லை பெண்ணே

கணத்த காதல் கசடிலிருந்து



Monday, June 1, 2020

உனக்கும் எனக்கும் விடுதலை

                                                                                              

















உனக்கும் எனக்கும் விடுதலை

கிடைத்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

நீ நீயாகிய விடுதலை. 

நான் நானாகிய விடுதலை.


எந்த முடிவுகளிலும் இருவர்பால் 

சார்ந்தவை எனும் கருத்தில் 

என் நச்சரிப்பிலிருந்து உனக்கு விடுதலை

நேரத்தை வீணாக்குகிறாய் என்னும் 

பழியிலிருந்து எனக்கு  விடுதலை


உன்நலனுக்காய் மண்றாடல்கள் பல

அக்கறையான கரிசணை தினம்

இதையெல்லாம் நிறுத்தியதில் 

எனக்கு விடுதலை

இதெல்லாம் மூடச்செயல் என்று 

முடக்கியதில் உனக்கு விடுதலை


அன்பான வார்த்தைகள் நேரடி சந்திப்புகள்

பேரிடியான சண்டைக்கு மருந்தென்பதில்

என்னை உதாசீனப்படுத்துவதிலிருந்து

உனக்கு விடுதலை

ஏங்கித்திவிக்கும் ஏக்கத்திலிருந்து

எனக்கு விடுதலை


ஒருமுறையாவது அழைப்பு விடுத்து 

ஹலோ எனும் வார்த்தையில்

அத்தனையும் பேசியதாய் 

மமதை கொள்ளும் 

என் நினைவுகளுக்கு விடுதலை

ஓர் வார்த்தையிலே முழுநடிப்பையும் 

காண்பிப்பதிலிருந்து உனக்கு விடுதலை


அன்புப்பரிசுகள் அன்பை மென்மேலும் 

வாரிவழங்களிலும் தேவைகள் அறிந்து 

பூர்த்தி செய்வதிலும் நேர்த்தியான உபாதை 

என்பதிலிருந்து எனக்கு விடுதலை

அதை கண்ணாடிப்பெட்டிக்குள் சலிப்போடு 

மறைத்து வைப்பதில் உனக்கு விடுதலை


முழுஉலகத்தையும் உன்னுள் செலுத்தி 

திக்கற்றவளுக்கு உன் ப்ரியமே துணை

என்பதிலிருந்து எனக்கு விடுதலை

என் உலகத்தில் நீ ஜடமாய்க்கூட

இல்லை என்பதை எனக்குணர்த்துவதிலிருந்து 

உனக்கு விடுதலை


எத்தனை ஆடவண் கண்ணில் படினும்

உன்னைத்தேடி நாடிவரும் என் 

சிந்தனையிலிருந்து எனக்கு விடுதலை

அதையே ஆணவமாய் எண்ணி

அநீதிசெய்யும் உனக்கு விடுதலை


வருடங்கள் கடந்தும் உனைமறவாத உயிர்

உடலில் இருந்து எனக்கு விடுதலை

வருடங்கள் தான் கடந்தாலும் 

பிடிகொடுக்காத உன் கோபம் கண்ணீரால்

இன்று உனக்கு விடுதலை


Thursday, May 28, 2020

ஓ மனமே....

                                                                                                 


ஓ மனமே .....

நீ ஓர் ஊனமுற்ற கைக்குழந்தை

அடித்தாரின் பெயர் சொல்லி 

அழத் தெரியாத

மண்மூட்டை

ஓராயிரம் கூரிய வாள் வெட்டுக்களுக்கு 

பச்சிலை அரைத்து பற்றிட்டு பத்தியம் 

அறியாப் பச்சிளங்குழந்தை

சிந்தையால் காண்பதை நிஜமென நம்பி

சித்தம் மறந்த கைப்பாவை

உடலுக்காய் துடிப்பதை விடுத்து 

பிறவுயிர்க்காய் துடிக்கும் 

துக்கம் நிறைந்த கைம்பாவை

துடிப்பதையும் விடுத்து நினைக்கத்தூண்டும்

நினைப்பதில் உயிரைத் துறக்கத்தூண்டும்

இலவளித்த இரும்பு ஆலை

பள்ளம் தேடும் சேற்று நீரையும்

தேக்கி செந்தாமரை மலரால் 

வனப்பு சேர்க்கும்

கண்ணீரின் வற்றாக்குளம்

குடியிருக்க குடிசை இல்லாதவனும்

கோபுரத்தில் அலங்கரிக்கப்பட்டு

பவனிவரும்

சில்லுடைந்த  மரகத ரதம் 

கற்பனையில் அனைத்தும் கடந்து 

செல்லும் கற்சிலை

கூழங்கற்களால் சிதைக்கப்படும் உன் 

காதலிற்கு ஓர் மணிமகுடம்

துன்பத்தில் சளைக்காமல்

அறுவடைக்காய் காத்திருக்கும் 

ஏழை விவசாயி

மனமே நீ மனமாக மட்டும்

மாறிவிடு

மாற்றமில்லா மனக்கல்லறைகள் பல

உலாவித்திரிகையில் ஏமாற்ற தாழாது

நீ மரணித்துவிடக்கூடும்

Thursday, May 21, 2020

ப்ரியங்களின் வதை




ப்ரியங்களின் வதை எப்பொழுதும் 

மௌனமானதே

அது இருட்டில் மட்டும் 

வெளிச்சமிட்டு காட்டிகையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

அவஸ்தையானதே

அலாதியான அன்பைக் கொண்டு

அநாதையாய் மாற்றுகையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

துயரானதே

நேசிக்கும் நெஞ்சத்தில்

நேசத்தை தேடுகையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

சுவாரஸ்யமானதே

எப்போதாவது இன்னல்கள் விடுத்து

இன்பங்கள் சூழ்ந்திடும் நிலை எதிர்பார்கையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

சுயநலமானதே

இருகண்களில் ஒன்றை மட்டும்

உருத்தி கண்ணீர் காண்கையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

ஆத்மாத்தமானதே

உடலின் காயங்கள்  சரிசெய்துவிடும் என்கையில்

மனதால் வடுக்களின் வலி நித்தம் சுமக்கையில் 


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

ஒருமனமானதே

சொப்பனங்களிலும் கதி கலங்கிடும்

படுபாவி நினைவுகளை மட்டும் தெளிக்கையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

ப்ரியமானதே

ப்ரியமானவரின் அன்புப் பரிசை

பவித்திரமாய் பரிபூரணமாய் ஏற்கையில்

Wednesday, May 20, 2020

கடல் பெண்ணே



கடல் பெண்ணே

உன் கண்ணீர்தான் கடலில் 

உப்பாய்க் கரைந்ததோ

காலங்களும் கடக்க 

உப்பின் செறிவும் அதிகரிப்பதேன்

இன்னும் உன் கண்ணீர்கடல் வற்றாமையா?


கடல் பெண்ணே

உன் சீற்றம் தான் கொந்தளிப்பானதோ

பாரிய அலைவெள்ளத்தில் உயரம்

விண்ணளவைத்தாண்ட உன் கோபத்தணல்

இன்னும் எத்தனை துயரின் பிரதிபலிப்போ?


கடல் பெண்ணே

உன் பொறுமைதான் 

கடல் உள்வாங்கலானதோ

உள்ளிருக்கும் பொறுமை எல்லாம்

எரிமலைக்குமுறலாய் பொழியும் எரிதணலானதோ?


கடல் பெண்ணே

உன் புண்ணியம்தான் அலையானதோ

கறைபடிந்த பாதங்களை கூச்சமின்றி

கழுவி பாவவிமோட்ஷனம் அளிப்பதனாலோ?


கடல் பெண்ணே

உன் நட்புதான் சமுத்திரப்பயணமானதோ

நீண்ட தூர எல்லைகளுக்கு முடிவிடம்கொடுத்து

இரு எதிர்முகங்களுக்கு சந்திப்புக்கொடுப்பதாலோ?


கடல் பெண்ணே

உன் தாய்மைதான் கடல்மீன்களானதோ

வருமானமும் வருவாயும் தேடித்தர

வழிதேடுபவர்கள் வறுமை போக்குவதனாலோ?


கடல்பெண்ணே

உன்காதல் தான் கழிமுகமானதோ

ஆறோடு கூடல் செய்து

இனமற்ற காதலென நிலைநிற்பதனாலோ?



Saturday, May 9, 2020

முடிவு



இன்றெடுக்கப்போகும் முடிவிற்காக நான் 
தினமும் வருந்தலாம் மௌனமாய் 
இரவுகளில் கண்ணீர் சிந்தலாம் 
இந்த முடிவின் பலனை 
ஆயுள்வரை அனுபவிக்கலாம்
இதனால் என் இதயமும் இருண்ட 
பாலைவனத்தில் அடிமையாகலாம்
உணர்வுகள் இறந்துபோகலாம்
ஊமையாய் பல வார்த்தைகள் மடிந்து போகலாம்
ஆனால் இந்த முடிவில் நான் மாற்றம் காணப்போவதில்லை
இதில் என் சுயநலம் அடங்கலாம்
என் சுயமரியாதை உயரலாம்
நான் நானாகவே என்றும் வாழலாம்
ஆனால் இந்த முடிவில் மனதார எனக்கு உடன்பாடில்லை
இந்த முடிவால் பலரின் முன்விரோதங்களில் 
இருந்து சற்று தப்பித்துக்கொள்ளலாம்
இது உனக்காக எடுக்கும் முடிவு
உன் நலன் விரும்பியாய் எடுக்கும் முடிவு
உன்னால் மட்டுமே என் நலன் என்பதிற்கான முடிவு
தொடக்கத்திலே முடிவு என்கதையில் மட்டும் தான்
இதில் சுக துக்கங்கள் எல்லாம் நானாய் உருவாக்கிய 
கற்பனை உதறல்கள்
இந்த முடிவில் எனக்கு இஸ்டமில்லை
இந்த முடிவால் உனக்கு கஸ்டமில்லை
இதுபோன்ற முடிவுகள் ஒருவகை இன்பம்தான்
இதில் பயன்பெருவர் இம்முடிவினை வேண்டுவோராய் 
இருக்கும் பட்சத்தில்
இந்த முடிவு என்னை தூங்கவிடப்போவதில்லை
இந்த முடிவால் தூக்கம் என்னை விடப்போவதில்லை
மறப்பதற்காய் தூக்கம் கொள்கின்றேன் 
ஏன் மறதியின் வாயிலாய் நியாபகத்தைத் தூண்டுகிறாய் 
இந்த முடிவில் பலர் பயனாளியாகலாம்
நன்மை என்று கருதலாம் இதில் அவர்களுக்கு
பங்கும் இருக்கலாம் இம்முடிவால் பூரிப்படையலாம்
இந்த முடிவில் எனக்கு மனக்குழப்பமில்லை
இதை ஏற்க உனக்கு என்போல் மனமும் இல்லை
இந்த முடிவால் நீ நீயாகுகிறாய் நான் என்றும் 
நாமாகத்தான் இருப்பேன்
இந்த முடிவு துயரானது நீ என் 
துயரில் கூட துக்கம் விசாரிக்க 
இல்லை என்கிறது இந்த முடிவு
இன்று எடுக்காவிடின் வேறு என்றோ கட்டாயமாய்
இந்த முடிவை நீ எடுக்கத்தான் போகிறாய்
அதற்குப் பரிகாரமாய் இன்றே 
சற்றும் விருப்பமில்லாலம் நான் முடிவெடுக்கிறேன்
இதில் நீ உன் முடிவை இனி முடியாது 
என்று பொய் பேசத்தேவையில்லை
எல்லாம் முடிந்த முடிவு இனி முற்றுப்பெற்றது
இந்த முடிவில் முடியாது என்ற பேச்சுக்கு இடமில்லை
இந்த முடிவில் நீயும் நானும் திருப்ப முடியாத 
நீண்ட இடைவெளி பெறலாம்
எந்நாளும் இந்த முடிவை ஒரு நொடி 
மனதார பிழை விடுத்தோம் என தேற்றிக்கொள்ளலாம்

Thursday, April 30, 2020

மீண்டும் போலிச்சிரிப்புடன்



எள்ளி நகையாடிய காலமெல்லாம்
கிள்ளிப் பார்க்கையில் திடுக்கிடும்
புள்ளிக்கோலத்தின் ஒரு முடிச்சாய்
வள்ளி அவள் கனவுகளையெல்லால்
அள்ளிப்பருகிடும் பெருங்குவளை நீரில் கரையவிட்டாள்


பள்ளிப் பருவ காலோட்டத்தில் அவன் தந்த பவள
மல்லியாய் புன்னகை சூடி வதனம் மலர்ந்த நினைவெல்லாம்
கள்ளி அவள் கற்பனைக் கடிவாளமாய்  இன்று கட்டியிழுக்க 
சொல்லி ஆழ யாருமில்லா மெல்லிசையை
சுள்ளி விறகுடன் மூண்ட தீயில் மெல்ல
எரியவிட்டாள்


கொல்லிமலைச் சித்தர்களும் காணா கடும் தவமாய்
அல்லி மலர்ந்தொரு மொழி அரிதாய்க்கூட அந்நியரிடம்  பேசாள் வள்ளி இவள் ஒரு ஊமை என்றும் ஊராரின் பெயர் பெற்றாள்
தள்ளி நின்று பார்த்த தாய் மனம் கொதிக்க வண்ணமலரோ வண்டு வேண்டா மலராய் அவன் அன்று தந்த கற்பனை மலரை துணிமணியுடன் 
அடுக்கிவைத்தாள்


பொங்குதமிழ் எழுச்சியில் முதன்முதலாய் அவனைக் கண்டவள் அவன் செயற்பாட்டில் மெய் மறந்தாள்
தங்குதடையின்றி பாயும் வெள்ள நீரோட்டம் விவாசாயியின் வயிற்றில் பயிரிடத்தான் என ஆராய்ந்த அவள் அவன் உழைப்பினில் தன் சூழல் மறந்தாள்
மங்கும் பொன் சுரங்கம்  அவன் மார்போடு நீண்ட அன்பு அதில் அவள் சுற்றம் மறந்தாள்
பங்குகேட்கும் உலகில் என் பாகம் என்னைப் பெற்றவள் என புறங்களைத் தீண்டா அவன் குணங்களில்  அவள் தன்னையே மறந்தாள்


உறக்கம் அவள் நினைவுகளை உறங்கவிடவில்லை
தயக்கம் அவள் வார்த்தைகளை அவிழ்த்துவிடவில்லை
மயக்கம் காதலில் அவன் முகம் தவிர வேறு சுயமில்லை
நடுக்கம் அவள் கைப்பிடியில் இன்னும் அவன் கைவிரல்கள் பின்னப்படவில்லை


அன்னையின் ஆசி அப்பனின் ஆட்சி
அண்ணலின் கைப்பிடி அந்த சிறுவட்டம் தாண்டி வெளிவர
 விட்டில்பூச்சி விளக்கொளியில் ஏரிவதுபோல்
மங்கைக்கோ காத்திருந்தது பேரதிர்ச்சி


வானுலகம் சென்று பூமழை பெற்று பூமாலை சூடி 
புகைப்படத்துள் ஒளிந்துகொண்ட அவனை மீட்டுவர
அவளுக்குத் தெரியவில்லை மலர்வளையம் இட்டு மண்டியிட மனமும் விடைகொடுக்கவில்லை
உலகில் பல ஆடவர் இச்சையாய் கேட்கவும் மணக்கோலம்  காண மதியில் ஏனோ எட்டவில்லை
மாறாக கண்ணீரில் கடிதம் தீட்டினாள் கோதை விதியது வலியது


அவன் நினைவுமலர் தினம் நீரூற்றி வளர்த்தாள் அதன் வாசனை அறியாமலே 
மலர் சூட அருகதை அற்ற அவள் கூந்தல் காற்றில் களைந்தாலும் அதை ஜடைபோட்டு கட்டிவிடுகிறது அவனுக்கான அவள் மனம் மீண்டும் போலிச்சிரிப்புடன்

Thursday, March 12, 2020

கடந்து போகட்டும்



அவர்கள் என்னை மட்டுமல்ல
என் தனிமையையும் கடந்து
போனார்கள். இறுக்கமான என்
இதயத்திலும் அவர்களுக்கு என்று 
ஓர் இடம் ஒதுக்குவேன் என கனவிலும் 
நான் நினைத்துப் பார்த்ததில்லை.
தனிநபருக்கான சூழலை தகர்த்தெரிந்து
மனிதவாடை வீச நான் மாற்றிக்கொண்டேன்
வண்ணமயமான விழாக்கோலங்களில்
ஒரு உறவாய் நானும் பங்கெடுத்துக்கொண்டேன்.
உப்பிட்டவரை உயிராய் நினைத்தேன்.
மூலை முடுக்கிலும் என் பாதச்சைவடு பதிந்திருக்கும்
அதை நானே தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தேன்.
பாத்திரங்களில் என் கைரேகை பதிந்திருக்கும்
அதை நானே சுத்தம் செய்தேன்.
அடுப்படி ஆகாயத்தில் மேகம் தான் நான். மாசு தூசுகளை உள் வாங்கி கனப்பினும் மாரியாய் நன்மை செய்வதுபோல் என்னை எண்ணிக்கொள்வேன். சிறிதுகாலத்திலே அன்பை 
சம்பாதித்துவிடுவேன் விடவேண்டும் என்ற எண்ணம்
அடி சறுக்கிவிழ மீண்டும் துணியும் தீரச் செயலை
உடலும் மனதும் ஏற்றுக்கொண்டது.
பணவரவுகள் என் கைகளில் புலங்கியதும் உண்டு 
ஆனால் கறைகளை என் கைகளில் படிய நான்
விரும்பியதில்லை. 
பத்திரமாய் அடைகாத்துக் கொடுப்பேன் ஏனெனில் நான் தேடியது அதுவல்ல அன்பு.
ஆகாரம் பரிமாறுவதுல் அலாதிப் பிரியம் கடைசிப்பருக்கைவரை ருசிப்பவருக்கு அருகில்
நளபாகம் செய்துள்ளேன்.
வெளுப்பு வெள்ளாவி வேலைகளும் நன்கு தெரியும்.
ஆசான் கலையும் அறிவும் வளர்திடும் வழங்கியும் ஆனேன். 
நானும் தானமாய் ஏதும் செய்யவில்லை அனைத்திற்கும் மௌனமாய் விலைபேசினேன் அன்பு. பணம் பொருள் தங்கத்திற்கு என்னை விலை பேசி இருக்கலாம் போலும் அன்பை மட்டும் என்னிடம் தீர்க்கப்படாத கணக்காக்கினார்கள். அவர்களுக்காய் விரிவடைந்த என் உலகம் மீண்டும்
சுருங்கவில்லை மாறாக தனிமை ஆட்கொண்டது.
தனிமை அவர்களைப் போல் அல்ல. என்னுடன் அன்பாய் நடந்துகொண்டது. என் பல கேள்விகளுக்கு என்னிடமே பதில்களைத் தேடித் தந்தது. அழுகையும் சிறந்த மருந்துதான் எனக் காட்டித்தந்தது. தனிமையே எனக்கு உணவுகளைப் பரிமாறியது. அதில் சுவை இருப்பினும் எனக்கு உணர்த்தவில்லை. அவர்களின் நோக்கம் சிந்தனை செயல் எல்லாம் எனக்குப் புரியவைத்தது. நான் தான் முட்டாள் இருப்பினும் என்னை தனிமை விடவில்லை.
என்னை மீண்டும் எழச் செய்தது இம்முறை அவர்களுக்காக அல்ல முற்றிலுமான தனிமைக்கு.


நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...