Showing posts with label Life. Show all posts
Showing posts with label Life. Show all posts

Monday, July 27, 2020

புற்றுநோயாளியின் கர்ப்பம்














உயிர்ப்பிணைப்பில் இன்று ஒரு முடிச்சு
புதிதாய் இடப்பட்டதாக ஒரு சிறு உணர்வு
அதற்கு ஆதாரமாய் தள்ளிப்போன பல நாட்கள்
மயக்கம் மற்றும் வாந்தி


வைத்தியரின் ஆலோசனை தெய்வத்தின் வாக்காய்
காதில் ஒலிக்க கையில் இருந்த ஆதாரச்சான்றிதழில் 
புலன் செலுத்தப்பட்டு ஒருவகை மயக்கநிலை அடைந்திருந்தேன்


மருந்துமாத்திரைகளும் தடுப்பூசிகளும் என்
சின்னஞ்சிறு ஊந்துதுடிக்கும் உயிருக்கு 
வலு என்பதில் எனக்கு வலியே மறந்துவிட்டது 


கணவனின் இருசக்கரவண்டி மென்மையாய்ச் 
செல்லவும் என்னை ஆட்கொண்ட பயம் அவர்
இடுப்பை கைகளால் வளைத்துக்கொள்ள கண்களும்
இறுக சொருகிக்கொண்டன


மண்ணில் சாயமுன் உலகிற்கோர் என்னுதிரத்தின்
சாயலை அவரின் கைகள் தாங்கி முத்தமிடும் சுவடு
என் மனக்கண்ணிற் பதிந்து இதயத்தோடு ஒத்துத்துடித்தது


வாரம் இருமுறை வைத்தியநிபுணரின் வாடிக்கையாளராய் 
குருதி தானம் பெறும் யாசகி 
என் மழலைக்காய் சிறிது திருடிவைத்திருக்கிறேன்


உதிர்ந்த கேஷங்கள் தரை தவழ மிகுதி இருப்பவை 
பின்னலிட்டு நிலைக்கண்ணாடியில் விம்பமாய் 
ஜொலிக்க வயிற்றின் தொந்தியின் அழகு இமைக்க மறுக்கிறது


முதுகெலும்பின் தண்டுவடம் ஊசி வலியில் 
நொய்தலாக பேழை வயிற்றின் சுமை சுகத்தின் 
கணமாய் தலை நிமிர்த்திய நேர் நடையில் கௌரவம் பெறுகிறது


மெலிந்த தேகத்தில் சுவாசிக்கத் திடம் இன்றி 
ஒட்சிசன் முகக்கவசத்தின் துணையோடு 
என் சிறு உயிரும் சுவாசிக்கின்றது


ருசியறியா நா உணர்வற்று உணவை 
வெறுப்பினும் உட்சாகமாய் வேண்டி 
விரும்பி உண்கின்றேன் ஊட்டச்சத்தின் பிரதிபலன் 
என் சிசுவிற்கு வந்தடையட்டும்


சீராட்டி பாராட்டிட உன் பக்கமில்லா 
பாவியாவேன் என்றே உன் பாதம் தொட 
இறையாசியுடன் ஒரு பெண் குழந்தைக்காய் 
அனுதினமும் வேண்டிநிற்கின்றேன்


பாவ விமோட்ஷனம் பெற தகுதியற்றவள் நான் 
சுயநலக்காரி இவ்வுலகில் உன்னைப் பிரசவிக்க 
புற்றுநோய் பூண்ட தேகத்தை ஆடையாய் அணிந்துள்ளேன் நிரந்தரமாய்


தாயாய் கடமையாற்ற என் இன்னுயிர் உலகுநீர்ப்பினும் 
சேயாய் எனை பாவனை செய்ய
உன் அப்பாவின் மறு தாயாய் தாலாட்ட தினமும்
உன்னைத் தடவிக்கொடுத்து மன்றாடுகின்றேன்


எத்தனையோ சாகசங்கள் புரியும் பெண்மணிகள் 
பலர் மத்தியில் சாதனையாய் உனை கருவிற்சுமந்து 
சுகநலத்துடன் ஈன்றெடுப்பதே
என் வாழ்நாட்சுமைகளிற்கேற்ற செல்வம்

Monday, July 20, 2020

நான் மீண்டும் அறிமுகமாகின்றேன்


















நான் மீண்டும் புதிதாக 

உனக்கு அறிமுகமாகின்றேன்


என் முழுப்பெயர் முதல் 

செல்லப்பெயர் வரை அறிய

நீ மீண்டும் முயன்றுகொள்


உனக்கு ஆவலான அலாதிப்பிரியமான

விடையங்களை அறிய மீண்டும் 

வினாக்களைத் தொடுக்கின்றேன்


நீண்ட உரையாடல்கள் நீளமான இரவுகள்

பகட்டான பகல் மாலை வேளையும் தாண்டி

புதிய ஒரு தினத்தை மீண்டும் அமைக்கட்டும்


மணித்துளிகளுடன் உன் நினைவுத்துளிகளும்

ஒட்டிக்கொண்டு நிமிடமுள் ஸ்தம்பித்துப்போகட்டும்


கைவண்ணங்கள் பல உன்வண்ணம் 

காண்பித்தலில் வெகுமதி பெற்ற இறுமாப்பு 

இதயத்தில் மீண்டும் துடிக்கட்டும்


புரிந்துணர்வற்ற புரிதல்கள் மூண்டுபோன 

கசப்பு வார்த்தைகள் பரிசுத்தமான அன்பை

மீண்டும் பரிசீலிப்பதை தவிர்த்துக்கொள்ளட்டும்


நான் என்னையும் நீ உன்னையும் நேசிக்கச்செய்யும்

பரிபாசை யுக்திகள் நிலைக்கண்ணாடி விம்பத்தில் 

மீண்டும் இரசிக்கும் இரசணையூட்டட்டும்


நீ நீவீராய் செல்ல நான் நலிவுற்றுப்போக 

சங்கடமான சந்தேகத்தேக்கத்தில் நறுமலரும் பூக்க மீண்டும் கடிகார முட்கள் சுழறட்டும்


பழைய புத்தகத்தில் புதிய அத்தியாயம் 

சுவாரஸ்யமான 

பகுதிகளை மென்மையான 

தோகை கொண்டு புனரமைக்கட்டும்


மீண்டும் மீண்டும் அறிமுகமாகும் 

புதியவர்கள் போல்

தேடலும் போலி ஊடலும் 

ஊக்கமளிக்கும் உறவுவிற்காய் 

நான் மீண்டும் அறிமுகமாகின்றேன்







Saturday, July 4, 2020

என்னை அழவைத்தவர்களுக்கு நன்றி



















என்னை அழவைத்தவர்களுக்கெல்லாம் மனமார நன்றி சொல்கின்றேன் இந்த வேளையில்


இந்தக் கல்லிலும் ஈரம் இருப்பதாய் உணர்த்துவதற்கு 

அன்பை தற்காலிகமாய் அடகு வைத்தீர்கள்


கண்ணில் ஈரம் வருவதற்காய் சொல்லால் எத்தனை

ஈட்டி அம்புகளை என் மனதில் பிரயோகித்திருப்பீர்கள்


நம்பிக்கையை விதைப்பதற்கு எத்தனை நாட்கள்

கண்ணயறாமல் நிஜமுகங்களை வேளாண்மை 

செய்யாமல் காத்திருந்திருப்பீர்கள்


பொய்யான வார்த்தைகளை நிஜமென உணர்த்த

எத்தனை அரும்பாடுபட்டு புன்னகையை

கண்களில் காண்பித்திருப்பீர்கள்


நிழலாய் பின்தொடர்ந்து உயிராய் காப்பதாய்

பொய் வாக்கினை அளிக்க மனதை எப்படி

திடப்படுத்தியிருப்பீர்கள்


கண்கலங்கிய நொடியெல்லாம் கரம்பற்றி 

பாசப்பிணைப்பை வலுப்படுத்த வலியவந்து

உறவாடும் நளினங்களை எப்படி கையாண்டிருப்பீர்கள்

 

இத்தனையும் ஒருநாள் உதறலுக்காய் உங்களை 

மாற்றிக்கொண்டீர்களே என் கண்ணீரில்

இனி இவை இடம் பெறாத நன்றி மட்டுமே உங்களுக்கு


Friday, June 26, 2020

சிரிப்பு போலி பிரதிபலிப்பு

















என்றும் இனிமையான சிரிப்பொலியும்

செஞ்சந்தன முகப்பொலிவும்

மனதை வசப்படுத்தும் இன்மொழியும்

நேர்த்தியான இஸ்திரிக்கப்பட்ட உடையும்

பொய் கூறிவிடலாம்


மகவற்ற தாய் மடிக்கு நற்புதல்வனாய்

ஆடவண் துணையற்ற பெண்ணின் தமையனாய்

ஈன்றவனற்ற பிஞ்சு மழலையின் தகப்பனாய்

சகமும் பகிரும் தோழனாய்

உறவுமுறியடித்து விடலாம்


செஞ்சோலையும் சாலையோர நிழலும்

கொட்டும் அருவி மழைச்சாரலும்

வயலும் புல்வெளிநிலமும்

மலைத்தொடர் கடற்பரப்பு மணல் மண்ணும்

கண்ணிற்கு காட்சியற்றும் போகலாம்


முதல் விசும்பின் மழைத்துளியும் 

அதில் எழுnம் மண்வாசமும் 

பால்வாடை வீசும் மழலை அமுதும்

வெண்புகை பனித்துளி படர்ந்த மலர் மொட்டுக்களும் 

தேன் வண்டின் ரீங்காரத்தில் ஓடி விளையாடும் 

அணிலும் சிறு பட்சிகளும் இதமற்றுப் போகலாம்


அயலவர்களின் சலசலப்பான பேச்சுகளும் 

பத்திரிகை நடுப்பக்கத்து கிசுகிசுப்பான பேச்சுகளும் 

நவீன நங்கையின் நளினமான பேச்சிலும் 

காரியவாதியின் கபடமான பேச்சிலும் 

கடமையதிகாரியின் கடுமையான பேச்சிலும்

இனி சுவாரஸ்யம் குறைந்துவிடலாம்


அருளாசிபுரியும் இறைவனடி துணைநிற்காதென

அகவிழி சுடர் அணைந்து இருட்டான ஓர் 

ஓசையறியா அறையில் மேல் முகட்டில் கற்பனைத் திரையை 

அங்குமிங்குமாய் அலைய விடலாம்


காலன் பிடியில் கைவிலங்கின்றி இனி 

எவர் சித்தம் என்றே இங்ஙனம் இனிதாய் நிறைவேற்றிய 

மேடை நாடகத்தில் தன் கதாப்பாத்திரத்தை 

விருப்பு வெறுப்பின்றி நிறைவேற்றம் செய்யலாம்


நிர்க்கதியற்ற நிம்மதி தொலைத்தவனிற்கு 

அன்பாய் அருகில் அணைத்து அமர்ந்து 

தலைகோதி மடிமீது

ஒரு நிமிட பாசப்பிணைப்பிற்கு 

மனம் தேடும் அன்பானவர் இல்லாவிட்டால் 

அவன் சிரிப்பு போலி பிரதிபலிப்பாய் அமைந்துவிடலாம்






Wednesday, June 24, 2020

மறக்கமுடியுமா










மறக்கமுடியுமா

உன்னோடு பள்ளிப்பருவம் 

தொட்டு இன்று வரையிலான நினைவுச் சிற்பங்கள் 

ஒவ்வொன்றையும் அவை ஒவ்வொன்றாய் 

இதயத்தில் ஆழமாய் நான் பதித்த கல்வெட்டுக்கள்


இணையங்களில் இல்லை இதயங்களில் 

ஆரம்பித்த எம் அன்புப் பரிமாற்றங்கள் இடையிடையே 

ஆயிரம் பெரும் சண்டைகள்

ஒவ்வோர் சண்டை முடிவினிலும் 

புன்னகைத்தே உன்னிடம் வருவேன் 

நீண்ட மண்றாடலின் 

பின் மன்னிக்க வேண்டுவேன் 

பதிலாய் நீயும் கேலி செய்வாய்

கேலிகளே இன்று கேள்விகளாகின

ஒவ்வொரு பிரிவிலும் என் தேடல் இருக்கும்

தேடலின் பலனாய் நீ கிடைப்பாய்

ஊடலிலும் தேடலிலும் மாதங்களும் ஓட வருடமும் புரண்டோடியது


நீயும் வாலிபனானாய் நானும் இளவஞ்சியானேன்

இருந்தும் இந்த வாக்குவாதங்கள் நீண்டே தான் சென்றன 

இந்த வாய்ப்பேச்சுக்கள் இல்லாத நிலை 

வருமெனத் தெரிந்திருந்தால் நான் வாய்திறக்காமலே 

காலத்தை கடத்தியிருப்பேன்

அன்பான அக்கறைகளில் அடுக்களை சமையும்

என் உரையாடலோடே நடந்தது

எந்தன் பரிசு பொம்மைகள் உந்தன் கண்ணாடிப் 

பெட்டிகுள் காட்சியளித்தது

உனக்காய் வாங்கிய சட்டை கூட

உன் தம்பிக்கோ அளவானது


பக்குவமான வயதில்லை

பக்குவம் சொல்லித்தர யாருமில்லை

மண்ணோடு புரண்டழுது கண்ணீர் வடித்தாலும்

வானத்து விண்மீன்கள் கையில்

தவழ்வது இல்லை

நீயோ கடல்கடந்து போனாய்

நானோ எனை மறந்துபோனேன்

காலங்களும் கடந்தன

கடதாசி கணினி மயமாய் உருவெடுத்தன

மீண்டும் அழைப்பு விடுத்தேன்

மறுபக்கத்தில் பதிலளிக்க நீ


மீண்டும் நட்புக்கு பாலமிட்டேன்

நீயோ வேடம் என்றாய்

போகமனமில்லை என்றேன்

போடி என் வாழ்விலிருந்து என துரத்திவிட்டாய்

காரணம் என்னவோ நீயும் சொல்லவில்லை 

நானும் கேட்கவில்லை

கேட்பதிலும் பலனில்லை என்கே அறிந்தேன்


என்னதான் காரணமோ எதற்காய் இந்த காரியமோ

கானகமும் சொல்லும் என் சோகக்கதை

சோ எனப் பொழிந்த மழை

என் கண்ணீரைக் கழுவிக் கழுவி உப்பாய்போனது

உன் நிஜாபகங்கள் மட்டும் கரைந்திடாத

சிலைமேல் எழுத்தாகின


தொல்லைகளினால் தொலையட்டும்

இந்த அன்பின் இராச்சியம்

காலங்களின் கட்டளைகளை நிறைவேற்றியே

காத்திருக்கும் காத்திருப்புகள் 

பிரயோசமற்றதாய் களவாடிப்போன

இதயத்தில் உனக்கான நியாபகங்கள்

மட்டும் பகிரங்கமாக பதுக்கிவைக்கப்பட்டுள்ளன


ஆண்பெண் நட்பின் அளவும் அளவுகோலும்

நீ அறிந்துவிட்டாய் இன்னும் நான் அறியாமல்

இருப்பின் அது என்தவறே 

முட்டுக்கட்டைகளால் என்னுடன் முரண்பாடிடாதே

ஒதுங்கி ஓரமாய் இன்னும் மறவாமல் தவிக்கின்றேன்




Monday, June 8, 2020

விடைபெறுகிறேன்
















இன்றுதான் எனக்குக் கடைசிநாள் 
என்று அதிகாலைச்சேவல் உரக்கக் 
கூவுவதற்கு முன்னே நித்திரைப்பாயில் 
என் அகக்கண்கள் முழித்துக்கொண்டன


ஆர்ப்பாட்டமில்லா காலை வேளை 
எல்லோர்மனதிலும் ஓர் கலக்கத்தை
மௌனமாய் விதைத்திருப்பதை
என்னால் ஊகிக்கமுடிந்தது


அம்மா சுடும் முறுகலான நெய்த்தோசை
தட்டில் நிரம்பி வழிய காரமான மிளகாய்ச்சம்பல்
நாக்கின் சுவைநரம்புகளையும் தாண்டி 
நாசியில் புரக்கேறி என்னை விழிப்பூட்டவே
அம்மாவின் தலையில் மூன்று தட்டல்
உணவுக்குழாயை சீராக்கியது


கணக்கு வாத்தியார் கரும்பலகையை விட்டு
என் பயணப்பைகளில் பொருட்களை
திருப்தியற்றதாய் கணக்கிட்டுக்கொண்டிருந்தார்
வருடம் முழுவதும் நான் சுகவாசியாய் வாழ்வதற்கு


ஜாடி ஜாடியாய் இனிப்பு உறைப்பு உவர்ப்பில் 
உருப்படிகள் பல உலர்ந்ததாய் 
உருட்டித்திரட்டி வைத்துக்கொண்டிருந்தவளின்
கண்கள் சிவப்புக்கோவைப் பழமாய் பொங்கியிருந்தன
இரவிரவாய் அழுதிருப்பால் போலும்


பந்தாட்டம் விளையாட்டில் இன்று கவனம் 
செலுத்தாத மகள் நாளை பூப்படைந்தால்
பூவால் அலங்கரிக்க அருகில் இருப்பேனோ என்ற
அச்சம் தழுவிய தழுவல் ஏனோ நீங்க மனமில்லை


வீட்டின் வீரனாம் செல்லமகன் சற்றுக்கோபத்துடன்
மூலையில் மறைந்துகொண்டு என்னைப் பார்க்கும்
பார்வைக்கு விடைகொடுக்கத்தெரியாதவனாய்
தயங்கத்துடன் முன்னேறினேன்


ஐந்தறிவு ஜீவன் அவன் முகம்கூட இன்று 
வாடிப்போயிருந்தது ஏக்கத்தில் வாலாட்டி
என் காலைப்பின்னியிருந்தான் எடுத்துவிட
மனமில்லாமல் தலையைத் தடவிக்கொடுத்தேன்


என் பயணப்பைகள் நிரம்பிவிட்டன
என்னுடனான புகைப்படங்கள் பெரிதாக்கி
சுவரில் அலங்கரிக்கப்பட்டிருந்தன
சாமி விளக்கு பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்தது
வீட்டில் அனைத்து மின் உபகரணங்களும்
துண்டிக்கப்பட்டிருந்தன
அனைவரும் என்னை வழியனுப்ப
வாசலில் நிற்கின்றார்கள்


அம்மாவின் கால்பிடிப்புக்கு தைலம்
தேய்க்கத்தவறியவன்
அப்பாவின் பழைய மூக்குக்கண்ணாடியை
சரி செய்ய இயலாதவன்
செல்லமகளுக்கு தைரியம் கற்பிக்க
அருகில் இல்லாதவன்
குட்டிப்பையனின் வாலுச்சேட்டையில்
பங்கு கொள்ளாதவன் 
மனைவியின் கண்களின் காதலை
இரசிக்கும் பாக்கியமற்றவன்
செல்லப்பிராணியின் நிகரற்ற அன்பிற்கு
தோழனாய் தலைவணங்காதவன்


மனைவி என்னை இறுக அணைத்து
என் இதயத்துடிப்பில் 
மனமாறினால் நானோ
இத்துடிப்பின் இறுதிவரை 
நம்நாட்டின் நன்மைக்கென்று
எண்ணிக்கொண்டேன்
தீர்காயுளுடன் வாழ்வாய்
என அன்னை ஆசீர்வதித்தாள் 
ஆயுள் வரை அன்னைநாட்டிற்கு என்னை 
அர்ப்பணம் செய்துவிட்டேன்
அப்பா கதை சொல்லுங்க என்று
கேட்ட மகளிடம் நாளைய
சரித்திரத்தின் வெற்றிவாகை 
பற்றிக் கூற எண்ணியிருந்தேன்


போய் வருகிறேன் என நம்பிக்கையாய்க் கூறமுடியவில்லை
எத்தனை பொதிகள் இருந்தாலும் தோள்பட்டையில்
நாட்டின் சுமையைத் தான் சுமக்கப்போகிறேன்
அலங்கரிக்கும் என் புகைப்படங்கள் ஒருநாள் 
மாலையுடன் வீரவணக்கத்திற்கு தயாராக இருக்கும்
சாமி விளக்கு ஒரு நாள் என் கல்லறையில் 
சுடர்விட்டு எரியும்
என்னை வீரசுவர்க்கம் செல்ல இராஜமரியாதையுடன்
உலகமே வழியனுப்புவதில் ஐயமில்லை என்று
என்னுள் நினைத்துக்கொண்டு விடைபெறுகிறேன்

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...