Thursday, March 12, 2020

வர்த்தகச்செய்தி





சாதாரண நடுத்தர வர்க்க
குடிமக்களுக்கு முக்கியமானது
இந்த வர்த்தகச்செய்தி
பொருள்விலையில் மாற்றம்
சந்தைப்படுத்தலில் வரி நிர்ணயிப்பு
ஏற்றுமதி இறக்குமதி
பாரிய வீழ்ச்சி
அடுக்கிக்கொண்டே போகலாம் வர்த்தகச்செய்தி
பணக்காரான் எப்படியோ வாழ்ந்துவிட்டுப்போவான்
பணத்திற்கு பஞ்சம் வராதவரை
ஏழை எளியோர் ஏர் பிடித்து உண்டு வாழ்வார்
நிலத்திற்கும் வான்மழைக்கும் முட்டுக்கட்டை போடும்வரை
இவை இரண்டுக்கும் இடைப்பட்டவனுக்குத்தான் 
இந்த வர்த்தகச்செய்தி
வெங்காயம் விலை ஏறினால் கறிக்கு வெங்காயம் போடமாட்டான்
பால்மா விலை ஏறினால் கடும் கசாயம் குடிப்பான்
எண்ணெய்க்குப் பஞ்சம் வந்தால் வெயிலில் அப்பளம் பொரிப்பான்
அரிசி விலை இறங்கினால் ஒருவருடத்திற்கு வேண்டிய அளவு மூட்டையை அடுக்கிவைப்பான்
மாதம் ஒரு மரக்கறி வகை 
இந்த மாதம் கத்தரிக்காய் 
அடுத்த மாதம் முருக்கங்காய்
காய்கறியிலும் சிக்கனம் பார்த்திடுவான்
நல்லூரில் கொடி ஏறினால் மாமிசம் புலங்குவான்
ரம்ஜான் கஜ்ஜீப் பெருநாளில் சுத்த சைவமாகிடுவான்
ஐயோ இது விலைவாசிக்கான நாடகம்
வீட்டுச்சாடியில் தக்காளி மிளகாய் பாகல் வெண்டி பயற்றை நாட்டிடுவான்
கூட்டுசாம்பார் வைத்து பல நாட்களை ஓட்டிடுவான்
மீன்பிடி வியாபாரநிலை அறிந்து கூடை நிறைய அள்ளிவர வேறு ஊருக்கும் சென்றிடுவான்
நடுப்பக்கத்தில் கவர்ச்சியாய் பல இருக்க 
நடுத்தரகுடும்பத்தில் பிறந்தால் 
படிக்கவேண்டும் இந்த வர்த்தகச்செய்தி

Wednesday, March 11, 2020

முதுமை





முதுமை ஒரு ஓரத்தில் பழைய கட்டில் மெத்தை தலையணை போட்டு என்னைப் பாடாய் படுத்திவிட்டது
வருபவர் போவோர் எல்லாம் நலன்விசாரிக்கும் கண்காட்சிப் பெட்டகம் ஆக்கிவிட்டது
கஞ்சி கூழ் போன்ற சத்துணவுகள் ஆகாரமோ இல்லை பானமோ இரண்டும் கலந்தவையோ என எண்ணியும் பார்க்கமுடியாத வேளையாகிவிட்டது
கூந்தலும் ஒன்றொன்றாய் கலன்றுவிட தேகமும்
நரைநிரப்ப வாலிபமும் வாழும் ஆசையும் சிதைந்து
போன கதையாகிவிட்டது
விக்கல் இருமல் சளி வாயுத்தொல்லை
இதற்கெல்லாம் எண்ணி எண்ணி மாத்திரை சாப்பிடுவது தினமும் தொல்லை
நிம்மதியான உறக்கம் தேடு நிம்மதியற்ற பல இரவுறக்கம் பகலில் பாசாங்கான உறக்கம்
பல ஜவுலிக்கடை சாம்ராஜ்யம் வீட்டின் அலுமாரியில்
நானோ விரும்பி உடுப்பது பழைய பருத்தியாடை
கொஞ்சம் சுவாத்தியமாய் இருக்கட்டும்
புதிது என் வாரிசுகள் ஆளட்டும்
படிப்பதற்கு பல புத்தகங்களும் பார்ப்பதற்கு தொலைக்காட்சியும் கேட்பதற்கு பழைய வானொலியும்
இருந்தும் என்ன பயன் எல்லாம் சிறிது சிறிதாய் பறிபோய்விட்டன புலன்கள்
பக்கத்து வீட்டு விடுப்புகள் எல்லாம் காதருகே மொய்க்கும் இலையான் இரைச்சல்போலாகிவிட்டது
இரவு அனைவரும் உறங்கும் வேளை யாரையும் தொந்தரவு செய்யாது நுளம்புகளுடன் பேசுவேன்
எனக்கு ஆயுள் குறைவாகிவிட்டது என்னைக்கடித்தால் என் வியாதி அவர்களுக்கும் வந்துவிடுமாம் என் காதுபடவே பேசிக்கொள்கிறார்கள்
அங்கும் கிழட்டு நுளம்புகள் போனால் போகட்டும் என்று என்னைத்தின்று பார்கிறார்கள்
எனக்குத்தான் வயதாகி பார்வை மங்கிவிட்டதால்
யார் இவர் என்று அடையாளம் காணமுடியாது 
பிள்ளைகளுக்குமா அடையாளம் காண சிரமமாகிவிட்டது?
போதும் இந்த முதுமை உடல் வலியைவிட
மனது வலிக்கிறது.




கோபம்



கோபம் ஒரு போலி முகத்திரைதான்
காற்று வீசிடும் திசைக்கேற்ப 
ஆடல் புரிந்துவிட்டு இளைப்பாறிவிடும்
கோபத்திற்கு அப்பால் பல உண்மை முகங்களும்
காண்பீரோ தெரியவில்லை
கோபம் வெறும் நாக்குநுனியில் முடிந்துவிடும்
ஆனால் அது உண்மை அல்ல நிலையானது அல்ல
கோபம் ஓர் போலி உணர்ச்சி 
கோபம் கொள்பவன் கண்களை உற்றுப்பார்த்ததுண்டா?
அதில் ஏக்கம் கலந்த அன்பு மறைந்திருக்கும்
பிரிவைத் தாழாத வலி உறைந்திருக்கும்
எளிதில் ஆவியாகிவிடும் கண்ணீர் ஈரப்பதன்
விழியோரமாய் அணை உடைக்கக் காத்திருக்கும்
அவை கண்ணைச்சுற்றிய கருவளையத்துள் நீச்சல் குளம் போல் நீரை தேக்கிவைக்கும்
கோபம் கொள்பவன் தொண்டைக்குழியை 
இரசித்ததுண்டா?
மூளை கட்டளை இடும் அனைத்து வார்த்தைகளையும் ஆதாரங்களையும் மெல்ல மெல்ல மென்று தின்றுவிட்டு எஞ்சியதை
கொடுக்கும். இடையிடையே தாகமும் எடுக்கும்
எச்சிலை முழுங்கி பின் மீண்டும் முயற்சித்துப் பார்க்கும்
கோபம் கொள்பவன் இதயத்துடிப்பைக் கேட்டதுண்டா?
பிரியாதே பிரியாதே என ஓலமிடும் 
ஒரு அங்குல ஆழமாய் இதயம் சரிந்ததாய்
உணர்வு வரும் 
குண்டூசிகள் ஊடுருவும் வலியால் இரத்தங்களும் சூடேரி கொதிக்கும் அனல்காற்றை உடலினால்  வெளியேற்றும்
கைவிரல்களோ தெம்பாய் பற்றிக்கொள்ள ஏதுமின்றி நான்கு விரல்களை மாத்திரம் நடுக்கத்துடன் ஒன்று சேர்த்துக்கொள்ளும். மீதம் ஒரு விரல் எதிரில் உன்னை விழிப்பூட்டும்
இத்தனையும் கடந்து கோபம் கொள்ளவது எல்லாம்
அன்பிற்காய்த்தான். அன்பின் ஆழம் கடல் ஆழத்திலும் இல்லை
அன்பின் எல்லை ஆகாய எல்லையிலும் இல்லை
கோபம் தான். கோபத்தில் மட்டும் தான்
உனக்காய் என் கோபம்
எனக்கானது உன் கோபம்
எளிதில் கரைந்துவிடும் இந்தக்கோபம்
உனக்கும் எனக்குமான ஓர் அன்பின் பாலம்

Saturday, November 16, 2019

அரசி(ன்இ)யல்



என் சக்கரை நிலவே
என்றும் உன்னிடம் முறையிடுவது போல்
இன்றும் உன்னிடம் தான் முறையிடப்போகின்றேன்
கருந்திரைகளுக்குப் பின் ஒழிந்துகொள்ளாதே
போதை தலைக்கேறி பிதற்றிடவிட
உன்னிடம் வரவில்லை
உள்ளூரும் கள்ளப் பொய்தன்னை
பொல்லாப்பில்லா போதனை
செய்ய வரவில்லை
பசுமரத்தில் பதியவைத்த ஆணி இது
பாறையில் செதுக்கிய சிற்பமிது
எவனோ வரைந்த வர்ணக்கோலமிது
வானவில்லாய் வளைந்து வளைந்து
என் நினைவில் அம்பும் வில்லுமாய் குறி பார்க்கிறது
நாளைய தேர்தலில் வாக்கெடுப்புகளை
கணிசமாய்க் கூற நான் வல்லமை 
படைத்திராமல் இருக்கலாம்
ஆட்சியில் மாற்றங்கள் வந்து 
மாயைக்கு இழுத்துச் செல்லலாம்
மத்தாப்புக்கும் மதுபானங்களுக்கும்
வரிகுறைக்கப்படலாம்
ஆவணக்கொலைகளுக்கும் அவரவர் பழிகளுக்கும்
அரசு செவிசாய்க்கலாம்
கஞ்சாக்களும் கசிப்பும் கைத்துவக்கும்
சட்டைப்பாக்கெட்டில் கொட்டிக்கிடக்கலாம்
தர்மம் செய்ய சில்லறைகளும் தாளாய் மாறலாம்
குளு குளு பெட்டிகளும் வர்ணதிரைகளும்
வீட்டில் பெருமை சேர்க்கலாம்
இவை எதுவும் சிறிதுகாலம் தான்
நிரந்தரமற்றவை நிலையற்றவை
உரிமை எடுப்பதற்காய் உரிமைகளை பறிக்கும்
கண்கட்டிவித்தை 
ஏற்கனவே எழுதப்பட்ட விதிக்கு நாடகம் 
அரங்கேற்றும் கைப்பொம்மைகள்
விருப்பம் தெரிவிக்கும் ஒரு விளையாட்டு இது
தன் பயிரை தீமூட்ட கொள்ளிக்கட்டை கொடுத்து
அனுப்பும் துர்ப்பாக்கியகாலமிது
எத்தனை பள்ளிகூடத்தில் போதித்தாலும்
தலைக்கேறா சுயசிந்தனை இது
என் கட்டாய விருப்பம் ஆனால் அவர்களின் தெரிவு
கிடைப்பதோ ஓரிரு நாள் விடுமுறை
வேறு என்ன இலாபம்?
உன்னிடம் முறையிடுவதால் நானும் ஒருவகை கோழைதான் 
எழுதியதை மாற்றியமைக்க நல்லொரு அரசியல்
விடியப்பொழுதில் கரையும் என் சக்கரை நிலவு




Friday, November 15, 2019

அகல்விளக்கின் கற்பூரம்



உனக்கான காதல் என்னிடம் 
என்றோ தோன்றிவிட்டது
பலமுறை உன்னிடம் கூறியும் விட்டேன்
கிடைக்காமல் நழுவிச்செல்லும் 
வாய்ப்புகளிற்கு நான் இடம் கொடுக்கவே இல்லை
அதற்காக நான் ஊமையும் இல்லை
நீ செவிப்புலண் அற்றவனும் இல்லை
பாவம் என் கண்ஜாடைக்குள் ஆயிரம் 
அர்த்தங்கள் அறிந்திராதவன்
என் பேச்சு வழக்கில் பல ஒப்பனைகள் 
செய்துகொண்டேன் உன் நிழல் பட்டு
கரைத்திடும் என அறியாது
இரு புருவங்கள் அகல உன்னைக் கைது 
செய்ய பதுங்கியிருந்தேன்
பாவி உன் மூச்சைத்தான் சுவாசித்து 
தினம் உயிர்பிழைக்கின்றேன் 
என சிந்தைகொள்ளாமல் 
இரவில் வாடும் வெண்மதியும் நானும்
கைகோர்த்து உன்னைப்பற்றித்தான் எத்தனை 
நாட்களாய் பேசியிருப்போம்
தோட்டத்தின் நடு மாமரத்தில் 
கனியும் கசக்க உன் நினைவினால் 
பலமுறை சிரித்திருப்பேன்
என்ன செய்வது எனக்குள் தோன்றிய 
முதற்காதலும் நீ என் இறுதிக்காதலும் நீ
தேகத்தை நீரில் கரைத்து மழைத்தூறலாய் 
உன் மீது பொழியவா?
என் கனவுகள் அனைத்தும் காற்றாய் சரிசெய்து
உன்னை சுவாசிக்கச்செய்யவா?
அருவமாய் உன் ஆவி உன்னைச்சுமக்கும்
என் ஆசைக்காதலை என்றுதான் புரிந்துகொள்வாயோ?
மலரும் நாட்களுக்கு விதையாய் காதல் விருட்சக்கனி சுவைக்க மனதோடு 
காலமெல்லாம் காதலோடு கரையும் 
என் அகல்விளக்கின் கற்பூரம்

Sunday, June 9, 2019

காதல் அடங்காப்பிடாரிகள்



காதல் அடங்காப்பிடாரிகள் தான் 
எங்கள் பெண் சமூகம்
எதிலும் எங்களுக்கான காதல் 
அடங்குவதுமில்லை
ஒன்றில் ஏற்பட்ட காதல் 
தீர்ந்துபோவதுமில்லை.
பிறருக்காக எங்கள் காதலை 
விட்டுக்கொடுப்பதில்லை
பிறருடனான காதல் அவர்கள் வஞ்சித்தும் மனம் 
விட்டுக்கொடுப்பதில்லை
புத்தகத்தின் நடுப்பக்க மயிலிறகு பென்சில் சீவலில் 
வளர்வதுமில்லை
அஞ்ஞானம் தாண்டி அறிவு விழித்தாலும் 
தினமும் வளரும் என்ற நம்பிக்கை 
குறைவதுமில்லை
காதல் தோல்விகள் பெண்களுக்கானது
இல்லை
ஆண்கள் மனதில் அதற்கு அர்த்தம் சரியாகப் 
பதிவிடப்படவில்லை
தாய் வயிற்றில் கருவாய் தடம் பதித்த நாள் முதல்
கருவறைச் சுவரை காதல் செய்வாள்
அதன் மென் சூட்டின் கதகதப்பை சுவாசம் செய்வாள்
வெளி உலகை எட்டிப்பார்க்கையில் அவள் தாய் முகம் பார்த்து
சிரித்திட தந்தை எனும் புதுச்சூழலை தாய் அறிமுகம் செய்வாள்
இவளும் தன் காதலை அப்பா என்றே அன்புடன் பகிர்ந்துகொள்வாள்
நாளுக்கு நாள் அவள் வளர உறவுகளும் பெருக காதல் மட்டுமென்ன அணைக்கட்டில்லா ஆறாய் உருவெடுக்கும்
மனிதர்கள் இடத்தில் மட்டுமல்ல செல்லமாய் விளையாடிடும் பிராணிகளிடமும் ஆசையாய் வளர்க்கும் புல் பூண்டுகளிடமும்
அதன் வாட்டம் கண்டால் மனம் ஒடிந்து விடுவாள்
பாடப்புத்தகங்கிற்கு அழகாய் உறையிட்டு அலங்கரித்தவள் வர்ண வர்ணப் பேனைகளால் ஆசையாய் அவள் பெயர் பொறித்திடுவாள்
அடுப்படியில் கறி கிளறும் கரண்டிச் சத்தம் அரை அவியலிலே சுவை பார்த்து ஓய்வுகொடுக்கும்
பிசையும் சாதம் ஒரு பருக்கையாய் மிஞ்சும் வரை விருத்தோம்பலில் நளபாகம் தேர்வு பெற்றவள் தண்ணீர்குவளையுடன் சிரித்த முகம் மணம்வீச வந்தோரை காதல் செய்வாள்
காதலுக்கு தலைசிறந்த பரிசு தாஜ்மஹாலா? அவளிடம் அன்பாய் ஒரு பார்வை பார்த்துவிடு அதை ஆயுள் வரை அடிமனதில் தேக்கிவைப்பாள்
அவளுக்கு புடவைகளில் ஆபரணங்களில் அழகுசாதனப்பொருட்களில் காதல் ஏற்படாதா?
ஆம் ஏற்படும் தான். 
பிடித்த வர்ணங்களில் எடுப்பாய் காட்டிட புடவைகள் எத்தனை எடுத்தாலும் அம்மாவின் பழைய சேலையைக் கட்டி அப்பாவிடம் காட்டிடும் காதல் அவளிற்கு பெரியது.
தங்க விலை கூடிச்செல்ல சேமிக்கும் காசில் புதிய வடிவமைப்பில் வாங்கிவைக்கும் ஆபரணங்களோ இன்னும் பிறக்காத தன்மகளிற்கு தாய்வீட்டு சீதனம் என வாங்கி அழகுபார்க்கும் 
காதல் அவளிற்கு பெரியது
உதட்டுச் சாயமும் கருகண்மையும் தோற்றப்பொழிவு கொடுத்தாலும் வாசம் வீசும் வாடாமல்லிகை சூடி அதன்போதையில் கண்களால் புன்னகை செய்து கண்மையினால் குழந்தைக்கு திருஷ்டிப்பொட்டு வைக்கும் காதல் அவளிற்கு பெரியது.
கணவனிடத்தில் எப்பொழுது மனைவியாகத் திகழ்வாள்?
பெணகள் காதலி என்று சொல்லும் போதே மனைவியாகி விடுகிறாள்
மனைவி எனும் பொழுது உனக்குத் தாயாகிவிடுகிறாள்
உன் கோபத்திலும் சோகத்திலும் உன்னை விட்டுவிலகாது என்றும் காதலியாகின்றாள்
தன்துயர் துடைக்கவே சிறுநொடி சேயாகின்றாள்
பெண் என்றுமே ஒரு வட்டத்துள் இருந்ததுமில்லை
இறப்பின் நொடிவரை அவள் காதல் அடங்கிப்போவதுமில்லை
இனி அடங்காப்பிடாரி என நீங்கள் என்னை உச்சரித்தால்
தாராளமாய் ஏற்றுக்கொள்கின்றேன் மறவாமல் காதலையும் சேர்த்து
காதல் அடங்காப்பிடாரி என்றே கூப்பிடுங்கள்.

Saturday, June 1, 2019

விலைமாதுக்களே! வரவேற்கின்றேன்


பெண்ணாக நான் இருந்துகொண்டு
விலைமாதுக்கள் ஆகிய உங்களை
இன்முகத்துடன் வரவேற்பதில்
பெருமிதமடைகின்றேன்

நீங்கள் விருப்பம் கொண்டோ
அல்லது உங்கள் விருப்பத்திற்கு
பிறம்பாகவோ விலைகூறி உங்களை
சமூகத்தில் அவப்பெயர் பெற்று
இத்தொழில் செய்கிறீர்கள்
இருந்தாலும் நீங்களும் பெண் தானே
உங்களின் வலிகளும் வேதனைகளும்
சிறிதளவாயினும் நானும் புரிந்துகொள்வேன்

பருவமடையும் முன் நானும் உங்களைப்பற்றி
அவதூறாகக் கதைத்ததுண்டுதான்
மானத்தை உயிராய் நினைக்கும்
பெண்கள் மத்தியில் அதை கூலிக்கு
நீங்கள் விற்பனை செய்வதால்
ஆனால் இன்று உங்களைப்
பெருமளவில் காணக்கிடைப்பதில்லை

உங்கள் விலையை உயர்த்திவிட்டீர்களோ
சட்ட ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டுவிட்டீர்களோ தெரியவில்லை
நீங்கள் நலிந்துவிட்ட இக்காலகட்டத்தில்
பருவமங்கையரை மட்டுமல்ல
பிஞ்சுக்குழந்தைகளையும் வயது முதிர்ச்சி பெற்று
இறக்கும் காலத்தை எண்ணி பொழுதைக் கழிக்கும்
மூத்தோரையும் வக்கிரகுணம் கொண்ட
காமுகர்கள் விட்டுவைத்ததில்லை
இரவில் மட்டுமல்ல பகலிலும் பொதுமக்கள்
நிறைந்த நிலையிலும் அவர்கள்
தயங்காமல் முன்னேறுகிறார்கள்

அவனை ஈன்றவள் ஒரு பெண்
அன்பாய் அண்ணா என பாசம் பொழிந்தவள் ஒரு பெண்
தம்பி என தலைதடவியவள் ஒரு பெண்
அவனை மட்டும் பதியாய் மானம் துறப்பவள் ஒரு பெண்
அவன் உருவாய் பிறப்பெடுப்பதும் ஒரு பெண்
என்பதை மறந்துவிடுகிறான்

பொது இடங்களிலும் நாங்கள் நிம்மதியாய்  

மூச்சுவிட்டிருக்கமாட்டோம்
அதையும் தட்டிக்கேட்ட யாரும் அங்கு ஆண்மகனாய் தெரியவில்லை
பொதுமலசலகூடம் கூடச்சுதந்திரமாய் செல்லமுடியவில்லை
பாவி இரகசியக் காமராக்களை எங்கெல்லாமோ மறைத்துவைத்திருக்கின்றான்

எங்கள் ஆடைதான் அவன் உணர்ச்சியை ஈர்ப்பதாயின்
புடவையில் அவன் அம்மாவைப் பார்த்திருக்கமாட்டானா?
இல்லை சுடிதாரில் அவன் அக்காவைப் பார்த்திருக்கமாட்டானா?
இல்லை பாவாடை அணிந்த தோழியைப் பார்த்திருக்கமாட்டானா?இல்லை ஜீன்ஸ் அணிந்த அவன் தங்கையைத்தான் பார்த்திருக்கமாட்டானா?
வயதுதான் புணர்ச்சியைத் தூண்டுவதெனில்
பாட்டிமார்களையும் எங்கு சென்று பத்திரப்படுத்தி வைப்பது?

விலைமகள்களே!
அரச அங்கீகாரம் பெற்று சுகநலதேகிகளாய்
வனப்புமிக்க தோற்றத்துடன் அரைகுறை ஆடையுடன்
வீதியில் நீங்கள் அலைந்து திரியுங்கள் அப்பொழுதாவது அவன் பார்வை சற்று விலகட்டும்

Sunday, May 12, 2019

மௌனராகம்





நான் பாடும் மௌனராகம்
இது ஒவ்வோர் மனதிலும் ஓடும் 
ஒருதலை ராகம்
இசை மீட்பதிலும் அதில் 
கானம் மெய்சிலிர்ப்பதிலும்
காதால் இரசிப்பதிலும் தான்
சுவைக்கப்பட்ட ராகம்
மௌனமாய் விழிகளில் வீணை
வாசிப்பதிலும் நெஞ்சார உறுத்தப்படுகிறது
சொல்லிய வார்த்தைகளுக்கு பல பொருள்
அர்த்தமாகிட சொல்ல வார்த்தைகளுக்குப்
பரிசாய் மௌனங்கள் நீடிக்கையில் 
என் ஒருதலை ராகம் மீட்டிப்பார்கிறேன்
வெளிப்படையாய் கூறமுடியாத சில ராகம்
மௌனத்தில் மட்டும் மௌனத்துடன் மௌனமாய்
பல கதைகள் பேசிடும் ஒருதலைராகம்
வெட்கம் காதல் அன்பு கோபம் வெறுப்பு 
சகிப்புத்தன்மை குற்றுணர்வு மனிதம்
பெண்ணியம் கடமை கற்பு ஏதோ ஒன்றாய்
மறைக்கப்படும் ஒவ்வோர் உணர்வும் சொல்லாத மௌனராகம் தான்

சைக்கோவின் காதல்





என்றுமில்லாதவாறு இன்றுமட்டும் 
ஏன் என் முகத்தில் ஒரு புன்னகை 
ஓடுகிற மின்விசிறியையும் மீறி 
நினைவுகள் எங்கோ ஓடிச்செல்கின்றன
கதிரை மேசைகளில் கோலம் போடத்தான் 
கைநகத்தினை சீராக்கி வைத்திருந்தேனா
புன்னகைக்கும் ஒவ்வொரு இடைவெளிக்கும் 
மூச்சுக்காற்று உனக்கானதாய் நெஞ்சை உரசிச் சென்றது
நீ எனக்கானவன் நீ எனக்குமட்டுமே ஆளானவன்
இந்த கர்வம் தான் இத்தனைக்கும் காரணமா
எத்தனை சண்டைகள் எத்தனை அழுகைகள்
சிரிப்பாக வருகின்றது அனைத்தும்
நம் குழந்தைகளுக்கு உணவூட்டும் போது நிச்சயம் 
இந்தக்கதைகளைச் சொல்லி அம்மாச் செல்லமாக்கிவிட வேண்டும் என்ற எண்ணமும் பனைமரத்தையும் தாண்டி வேலி போட்டது. எளிதில் பிடித்துவிட முடியுமா 
அதனால்தான் தேக்கி வைத்திருக்கின்றேன் கற்பனைகளை எல்லாம் 
கவிதை வரிகளாக.
உனக்கு ஆயுள் நூறு. வேண்டாம் நான் இறப்பதற்கு ஒரு நிமிடம் முன். 
கடைசி வரை உனக்கான சேவைகளை முடித்துக்கொண்டபின். 
எனக்கு என்ன செய்தி சொல்லப்போகின்றாய்
முதலில் என் நலன் விசாரிப்பாயா?
என் அணைப்பு வேண்டும் என்பாயா?
உன் சோகம் பகிர்ந்து கொள்வாயா?
ம்ம்ம்ம்ம் ஏதும் நல்ல செய்தி?
சரி சொல்லுடா 
வேண்டாம் போதும் வலிக்கிறது 
இதற்குமேல் என்னால் தாங்கமுடியாது
துண்டித்துக்கொள் அனைத்து அழைப்புகளையும்
அனைத்திலும் என்னை முடக்கிக்கொள்
வழமைபோலதான் நானும்
ஏன் என் முகத்தில் ஒரு புன்னகை 
ஓடுகிற மின்விசிறியையும் மீறி 
நினைவுகள் எங்கோ ஓடிச்செல்கின்றன
கதிரை மேசைகளில் கோலம் போடத்தான் 
கைநகத்தினை சீராக்கி வைத்திருந்தேனா
புன்னகைக்கும் ஒவ்வொரு இடைவெளிக்கும் 
மூச்சுக்காற்று உனக்கானதாய் நெஞ்சை உரசிச் சென்றது. இனி
நீ எனக்காவும் இல்லை எனக்காக உன்னிடமும் எதுவுமில்லை. 
இப்படியே என் நாட்களைக் கடத்திச்செல்கின்றேன்
கற்களும் சீமைந்துமாய் அலங்கரிக்கப்பட்ட 
உன் நினைவுகளுடன் மட்டும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் என்னை 
என்னால் அடையாளம் காட்டமுடியாத சைக்கோக்காதலியாய்

Wednesday, May 8, 2019

மௌனமான இரவு


இந்த இரவை மட்டும் பரிசாய்க் கொடுத்திடு
எனக்கான பல கேள்விகள் இருக்கு அதில் 
உன் மௌனம் மட்டும் பரிசாய்க் கொடுத்திடு 
என் உதடுகள் உன் பெயரை பல முறை சொல்லக்கூடும் 
உன் காதோரம் வெப்பக்காற்று வீசக்கூடும் 
பார்வைகள் இருட்டின் வெளிச்சத்தில் கெஞ்சக்கூடும் ஆனாலும் 
உன் மௌனமான பார்வையை மட்டும் 
பரிசாய்க் கொடுத்திடு 
என் வேதனைகள் எல்லாம் வார்த்தையாகிடும்
என் வலிகள் எல்லாம் கண்ணீராகிடும்
ஆனாலும் நீ மௌனமாய் என்னைப் பார்வையிடு
என் விம்மலான அழுகைக்கு உன் தழுவல் பலம் 
கொடுக்க கூடும் இருந்தாலும் மௌனமாய் இரு
எந்த அழைப்புகளையும் ஓரம்கட்டு
எந்த மொழிக்கும் செவிசாய்க்காதே
எந்த சிந்தனைகளையும் தூக்கிவீசு
எந்த நினைவுகளையும் நினைவுகொள்ளாதே
மௌனமாய் என்மீதுமட்டும் பார்வை கொள்
காந்தமான நெருக்கத்திற்கும் விரல்கள் தேடும் 
தேடல்களுக்கும் இந்த இரவை மட்டும் பரிசாய்க் கொடுத்திடு
இந்தனை நாட்கள் பிரிந்த ஏக்கத்திற்கும் என் கோபமான கொஞ்சிடும் மொழிக்கு 
இந்த இரவை மட்டும் பரிசாய்த் தந்து மௌனமாய் பார்வை வீசிடு 
உன் மார்போடு உறக்கத்தில் அதன் வலிகளைக் கரைத்துக்கொள்கின்றேன்


நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...