இரு விரல்கள் நடுவில் காதலோடு
என்னைப் பற்றிக் கொண்டாய்
எனக்கு கதகதப்பளிக்கவே
காதல் தீயும் மூட்டினாய்
கிடைக்கும் சந்தர்ப்பங்கள் எல்லாம் உன் உதட்டு ரேகையை
என்மேல் பதிய வைத்தாய்
யாருமற்ற சந்தர்ப்பங்கள் மட்டுமின்றி ஊரார் முன்னும் தைரியமாக அவ்வப்போது
என்னை அறிமுகம் செய்து வைத்தாய்
எத்தனை பேர் கூறியும் மன்றாடியும் பற்றிய உன் கரம் நழுவவில்லை
இதை விட வேறு என்ன பாக்கியம் தான் இந்தக்காதலிக்கு கிடைத்து விடப்போகிறது?
இன்று உன்னை விட நான் உன்னைக் காதல் செய்கின்றேன்
என் காதல் பிணைப்பினால் நான் இல்லாத ஒரு வாழ்வை நீ கனவிலும் காணமாட்டாய்
இன்னும் அதீதமாக உன்னைக் காதல் செய்ய உன் உயிர் சுவாசம் எங்கும் ஊடுருவி முன்னேறிச் செல்கின்றேன்
உன் ஆன்மாவுடன் ஒன்றோடு ஒன்றாய்க் கலக்க உன் சுவாசப்பையை நெருங்கிவிட்டேன்
எனக்கு ஓர் ஆசை
உன் இதயத்தில் என்னைப் பற்றிய நினைவுகள் அனைத்தையும் ஒருமுறை முத்தமிட்டு கட்டியணைப்பதற்கு
வேகமாய் நிதானமற்று குருதியுடன் கலந்து உன் இதயவறைகளை எட்டிப் பார்க்கின்றேன்
நீ என்னை ஏமாற்றிவிட்டாய்
உன்னை மட்டுமே மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்ட என்னை விட கசப்பான பழைய நினைவுகள் உன் இதயத்தில் சுட்டெரித்துக்கொண்டு இருப்பதைக் கண்ட என் மனம்
எவ்வளவு துடித்திருக்கும் என்பதை அறிந்திராமல் நீயோ
பழைய நினைவுகளிடம் இருந்து தப்பிக் உன்னை நீயே என்மேல் காதல் என்று ஒரு வடிவம் கொடுத்து ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றாய்.
உன்னை நேசித்த இதயமல்லவா எப்படி உன்னை நீங்கிச் செல்வேன்?
ஏமாற்றப்பட்டதை அறிந்தும்
உன் விரல்கள் நடுவில் வாழும்
சிகரெட் காதலி