Showing posts with label Life. Show all posts
Showing posts with label Life. Show all posts

Saturday, June 6, 2020

தோழா சற்றுத் தோள்கொடு


















உயிர்நண்பா

மாற்றான் தாய் வயிற்று சகோதரா

ஆண் உலகின் அன்புயிரே

எனக்கு உதவி செய்


இருட்டைக் கண்டு எனக்குப் பயமில்லை 

ஆனால் 

மனித வேட்டைக்காக பின்தொடரும் 

மனிதமிருகங்களின் கால் தடத்திற்கு அஞ்சுகிறேன்


நீண்ட தூரம் தனிமையில் பயணிப்பதில் 

அலுத்துக்கொள்ளவில்லை

ஆனால்

வேண்டா உரசுதலில் தேகத்தில் வெறுப்பை 

வளப்போரும் வார்த்தைகளால் வஞ்சனை செய்வோரும் 

அருகில் அமர்வதை எண்ணி அஞ்சுகிறேன்


பொறுப்புக்களை சுமப்பதில் சளைக்கவில்லை 

ஆனால்

கடமைக்குச் செல்லுமிடத்தில் கயவர்கள் 

சூழ்ந்திருப்பதை எண்ணி அஞ்சுகிறேன்


காதலில் கண்கவரப்பட்டு களத்திலிறங்க தயக்கமில்லை 

ஆனால்

காதல் என்ற வார்த்தை மட்டும் கூறி

காமுகரின் மூர்க்கச்செயலுக்கு

மனதில் இடம்கொடுக்க அஞ்சுகிறேன்


ஆண்களால் அழிவேற்படும் காலத்திலும்

கண்ணியமாய் கடந்து செல்லும்

நல்வர்க்க தலைவன் 

வழி கடைப்பிடிக்கும் ஆடவன் 

கண்ணில் உருத்தலின்றி

வாழும் யோகியன் நீ பார்த்தா

கலக்கமுற்றவேளைகளில் எல்லாம்


உயிர்நண்பா

மாற்றான் தாய் வயிற்று சகோதரா

ஆண் உலகின் அன்புயிரே

எனக்கு உதவி செய்



Monday, June 1, 2020

உனக்கும் எனக்கும் விடுதலை

                                                                                              

















உனக்கும் எனக்கும் விடுதலை

கிடைத்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

நீ நீயாகிய விடுதலை. 

நான் நானாகிய விடுதலை.


எந்த முடிவுகளிலும் இருவர்பால் 

சார்ந்தவை எனும் கருத்தில் 

என் நச்சரிப்பிலிருந்து உனக்கு விடுதலை

நேரத்தை வீணாக்குகிறாய் என்னும் 

பழியிலிருந்து எனக்கு  விடுதலை


உன்நலனுக்காய் மண்றாடல்கள் பல

அக்கறையான கரிசணை தினம்

இதையெல்லாம் நிறுத்தியதில் 

எனக்கு விடுதலை

இதெல்லாம் மூடச்செயல் என்று 

முடக்கியதில் உனக்கு விடுதலை


அன்பான வார்த்தைகள் நேரடி சந்திப்புகள்

பேரிடியான சண்டைக்கு மருந்தென்பதில்

என்னை உதாசீனப்படுத்துவதிலிருந்து

உனக்கு விடுதலை

ஏங்கித்திவிக்கும் ஏக்கத்திலிருந்து

எனக்கு விடுதலை


ஒருமுறையாவது அழைப்பு விடுத்து 

ஹலோ எனும் வார்த்தையில்

அத்தனையும் பேசியதாய் 

மமதை கொள்ளும் 

என் நினைவுகளுக்கு விடுதலை

ஓர் வார்த்தையிலே முழுநடிப்பையும் 

காண்பிப்பதிலிருந்து உனக்கு விடுதலை


அன்புப்பரிசுகள் அன்பை மென்மேலும் 

வாரிவழங்களிலும் தேவைகள் அறிந்து 

பூர்த்தி செய்வதிலும் நேர்த்தியான உபாதை 

என்பதிலிருந்து எனக்கு விடுதலை

அதை கண்ணாடிப்பெட்டிக்குள் சலிப்போடு 

மறைத்து வைப்பதில் உனக்கு விடுதலை


முழுஉலகத்தையும் உன்னுள் செலுத்தி 

திக்கற்றவளுக்கு உன் ப்ரியமே துணை

என்பதிலிருந்து எனக்கு விடுதலை

என் உலகத்தில் நீ ஜடமாய்க்கூட

இல்லை என்பதை எனக்குணர்த்துவதிலிருந்து 

உனக்கு விடுதலை


எத்தனை ஆடவண் கண்ணில் படினும்

உன்னைத்தேடி நாடிவரும் என் 

சிந்தனையிலிருந்து எனக்கு விடுதலை

அதையே ஆணவமாய் எண்ணி

அநீதிசெய்யும் உனக்கு விடுதலை


வருடங்கள் கடந்தும் உனைமறவாத உயிர்

உடலில் இருந்து எனக்கு விடுதலை

வருடங்கள் தான் கடந்தாலும் 

பிடிகொடுக்காத உன் கோபம் கண்ணீரால்

இன்று உனக்கு விடுதலை


Thursday, May 28, 2020

ஓ மனமே....

                                                                                                 


ஓ மனமே .....

நீ ஓர் ஊனமுற்ற கைக்குழந்தை

அடித்தாரின் பெயர் சொல்லி 

அழத் தெரியாத

மண்மூட்டை

ஓராயிரம் கூரிய வாள் வெட்டுக்களுக்கு 

பச்சிலை அரைத்து பற்றிட்டு பத்தியம் 

அறியாப் பச்சிளங்குழந்தை

சிந்தையால் காண்பதை நிஜமென நம்பி

சித்தம் மறந்த கைப்பாவை

உடலுக்காய் துடிப்பதை விடுத்து 

பிறவுயிர்க்காய் துடிக்கும் 

துக்கம் நிறைந்த கைம்பாவை

துடிப்பதையும் விடுத்து நினைக்கத்தூண்டும்

நினைப்பதில் உயிரைத் துறக்கத்தூண்டும்

இலவளித்த இரும்பு ஆலை

பள்ளம் தேடும் சேற்று நீரையும்

தேக்கி செந்தாமரை மலரால் 

வனப்பு சேர்க்கும்

கண்ணீரின் வற்றாக்குளம்

குடியிருக்க குடிசை இல்லாதவனும்

கோபுரத்தில் அலங்கரிக்கப்பட்டு

பவனிவரும்

சில்லுடைந்த  மரகத ரதம் 

கற்பனையில் அனைத்தும் கடந்து 

செல்லும் கற்சிலை

கூழங்கற்களால் சிதைக்கப்படும் உன் 

காதலிற்கு ஓர் மணிமகுடம்

துன்பத்தில் சளைக்காமல்

அறுவடைக்காய் காத்திருக்கும் 

ஏழை விவசாயி

மனமே நீ மனமாக மட்டும்

மாறிவிடு

மாற்றமில்லா மனக்கல்லறைகள் பல

உலாவித்திரிகையில் ஏமாற்ற தாழாது

நீ மரணித்துவிடக்கூடும்

Sunday, May 24, 2020

பிறைதேடலாம் வா





மிதிக்கும் துவிச்சக்கரவண்டி பெடல்களில்

பாதம் நான் வைக்க பயணம் நீ துவக்க

நீண்ட தூரம் செல்கிறோம்

பிறைதேடலாம் வா


அடர்ந்த மரக்கிளைகளில் கொஞ்சும்

கிளிக்கூட்டம் கொஞ்சம் வெட்கப்படும்

அழகை இரசித்தவாறே

பிறைதேடலாம் வா


கோடி நட்சத்திரங்கள் மினுமினுக்க

கோகிலவாணியின் பட்டம் வானுயறப்பறந்து

வாகைசூட சூறைக்காற்று புலுதிகிளப்ப

பிறைதேடலாம் வா


ஐயர் ஆத்தில் தயிர்சாதம்

ஆண்டனி வீட்டில் திருக்கைமீன் வறுவல்

ஆச்சிக்குடிசையில் நெய்முருங்கைச்சாதம்

வாசனைப்பிடியில் வயிறு தவிக்க 

பிறைதேடலாம் வா


புலுங்கலரிசிச்சோறு பருப்பு பயற்றை

பூசிணி கத்தரிக்காய்கறி மொறுமொறு உழுந்துவடை

அப்பளம் மோர்மிளகாய்ப்பொரியல்

தலைவாழையிலையில்

தண்ணீர்தெளிச்சு

தண்ணீர்க்குவளையும் அருகில்

சதுர்த்திவிரதம் முடிக்க காத்திருக்கு

பிறைதேடலாம் வா


பாய்வீட்டு கோழிப்பிரியாணி நண்டுவறுவல்

இரால்பொரியல் ஆட்டுக்கால் சூப்புடன் 

வெட்டி அலங்கரிக்கப்பட்ட அன்னாசி ஆப்பிள்

மாதுளை கிண்ணத்தில் வட்டிலப்பம் மஸ்கட்டும்

சவான் முடிக்க பாட்டாளிக்கூட்டம் காத்திருக்கு

பிறைதேடலாம் வா


ஆதிசிவன் முடியில் சிக்கிய பிரம்மவிஷ்ணு 

புது அவதாரம் காண கண்ணைக் கசக்கி

தெளிவாய்த்தேடும் அல்லா அருவமாய்

தேடச்சொன்ன பொக்கிஷப் புதையல் காண

பிறைதேடலாம் வா

Thursday, May 21, 2020

ப்ரியங்களின் வதை




ப்ரியங்களின் வதை எப்பொழுதும் 

மௌனமானதே

அது இருட்டில் மட்டும் 

வெளிச்சமிட்டு காட்டிகையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

அவஸ்தையானதே

அலாதியான அன்பைக் கொண்டு

அநாதையாய் மாற்றுகையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

துயரானதே

நேசிக்கும் நெஞ்சத்தில்

நேசத்தை தேடுகையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

சுவாரஸ்யமானதே

எப்போதாவது இன்னல்கள் விடுத்து

இன்பங்கள் சூழ்ந்திடும் நிலை எதிர்பார்கையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

சுயநலமானதே

இருகண்களில் ஒன்றை மட்டும்

உருத்தி கண்ணீர் காண்கையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

ஆத்மாத்தமானதே

உடலின் காயங்கள்  சரிசெய்துவிடும் என்கையில்

மனதால் வடுக்களின் வலி நித்தம் சுமக்கையில் 


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

ஒருமனமானதே

சொப்பனங்களிலும் கதி கலங்கிடும்

படுபாவி நினைவுகளை மட்டும் தெளிக்கையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

ப்ரியமானதே

ப்ரியமானவரின் அன்புப் பரிசை

பவித்திரமாய் பரிபூரணமாய் ஏற்கையில்

Saturday, May 9, 2020

முடிவு



இன்றெடுக்கப்போகும் முடிவிற்காக நான் 
தினமும் வருந்தலாம் மௌனமாய் 
இரவுகளில் கண்ணீர் சிந்தலாம் 
இந்த முடிவின் பலனை 
ஆயுள்வரை அனுபவிக்கலாம்
இதனால் என் இதயமும் இருண்ட 
பாலைவனத்தில் அடிமையாகலாம்
உணர்வுகள் இறந்துபோகலாம்
ஊமையாய் பல வார்த்தைகள் மடிந்து போகலாம்
ஆனால் இந்த முடிவில் நான் மாற்றம் காணப்போவதில்லை
இதில் என் சுயநலம் அடங்கலாம்
என் சுயமரியாதை உயரலாம்
நான் நானாகவே என்றும் வாழலாம்
ஆனால் இந்த முடிவில் மனதார எனக்கு உடன்பாடில்லை
இந்த முடிவால் பலரின் முன்விரோதங்களில் 
இருந்து சற்று தப்பித்துக்கொள்ளலாம்
இது உனக்காக எடுக்கும் முடிவு
உன் நலன் விரும்பியாய் எடுக்கும் முடிவு
உன்னால் மட்டுமே என் நலன் என்பதிற்கான முடிவு
தொடக்கத்திலே முடிவு என்கதையில் மட்டும் தான்
இதில் சுக துக்கங்கள் எல்லாம் நானாய் உருவாக்கிய 
கற்பனை உதறல்கள்
இந்த முடிவில் எனக்கு இஸ்டமில்லை
இந்த முடிவால் உனக்கு கஸ்டமில்லை
இதுபோன்ற முடிவுகள் ஒருவகை இன்பம்தான்
இதில் பயன்பெருவர் இம்முடிவினை வேண்டுவோராய் 
இருக்கும் பட்சத்தில்
இந்த முடிவு என்னை தூங்கவிடப்போவதில்லை
இந்த முடிவால் தூக்கம் என்னை விடப்போவதில்லை
மறப்பதற்காய் தூக்கம் கொள்கின்றேன் 
ஏன் மறதியின் வாயிலாய் நியாபகத்தைத் தூண்டுகிறாய் 
இந்த முடிவில் பலர் பயனாளியாகலாம்
நன்மை என்று கருதலாம் இதில் அவர்களுக்கு
பங்கும் இருக்கலாம் இம்முடிவால் பூரிப்படையலாம்
இந்த முடிவில் எனக்கு மனக்குழப்பமில்லை
இதை ஏற்க உனக்கு என்போல் மனமும் இல்லை
இந்த முடிவால் நீ நீயாகுகிறாய் நான் என்றும் 
நாமாகத்தான் இருப்பேன்
இந்த முடிவு துயரானது நீ என் 
துயரில் கூட துக்கம் விசாரிக்க 
இல்லை என்கிறது இந்த முடிவு
இன்று எடுக்காவிடின் வேறு என்றோ கட்டாயமாய்
இந்த முடிவை நீ எடுக்கத்தான் போகிறாய்
அதற்குப் பரிகாரமாய் இன்றே 
சற்றும் விருப்பமில்லாலம் நான் முடிவெடுக்கிறேன்
இதில் நீ உன் முடிவை இனி முடியாது 
என்று பொய் பேசத்தேவையில்லை
எல்லாம் முடிந்த முடிவு இனி முற்றுப்பெற்றது
இந்த முடிவில் முடியாது என்ற பேச்சுக்கு இடமில்லை
இந்த முடிவில் நீயும் நானும் திருப்ப முடியாத 
நீண்ட இடைவெளி பெறலாம்
எந்நாளும் இந்த முடிவை ஒரு நொடி 
மனதார பிழை விடுத்தோம் என தேற்றிக்கொள்ளலாம்

முகத்திலிரண்டு புண்ணுடையோர்




அறம் ஏற்று அகம் பெருமிதம் 
கொள்ளக் கற்றோர் முகத்தில் இரு கண்களும் 
அறிவிலார் கல்லாதோர் முகத்திலிரண்டு 
புண்ணுடையோர் என வள்ளுவன் வாக்கில்
சற்றுத் திருத்தம் அதை எழுதிக்கொள்வீர் 

கற்பதிலும் அதை மனதார ஏற்பதிலும் 
முற்போக்குச்சிந்தனையாய் எழுத்தறிவித்தவனே
அநீதி கண்டும் சீறும் தணல் சீற்றம் தாழாது 
விழியோரம் சிறு வெறுப்பைக் காண்பிக்காதவரே
முகத்திரண்டு புண்ணுடையார்

வஞ்சனையே வைராக்கியமாய் அகில 
நன்மைபயப்பிப்போர்  சூழ அராஜகமாய்
இன்றும் பல திரௌபதிகளின்  வஸ்திரம் 
களைய வல்லவர்களின் துணிகரச்செயல் கண்டும் 
கண்களை கருங்கற்கள் போல் விழிதிறக்கவிடாதோரே 
முகத்திரண்டு புண்ணுடையார்

பசித்தழும் பச்சிளங்குளவி கதறியழ கண்ணீர் வற்றி
கையேந்தும் திருவோட்டிலும் கால்வாய் கஞ்சிக்கும் 
மிஞ்சாத குற்றி அதையும் பொறுக்கி சீவனமாக்கும் 
கைம்பெண்களின் விலைபேசும் தர்மவித்துவான்களே
முகத்திரண்டு புண்ணுடையார்

வீதியோரமாய் நடைபிண உற்று ஓருயிர் துவண்டும்
நா நனைக்க ஒரு துளி ஜலம் பருகவைக்காதவன்
வாழ்க்கையிலே நடைபிணமாய் அலைய 
மதுவில் மதிமயங்கிக்கிடப்போரே
முகத்திரண்டு புண்ணுடையார்

கூப்பிட்டக்குரலுக்கு செவிசாய்த்தும்
ஏற்புடைய கருமத்தை விலத்தியும்
அல்லற்படும் அன்னையும் பிதாவும்
முதியவர் இல்லத்தில் என்ன சொகுசு காண்பர் 
என்று கெஞ்சிக்கேட்டும் அதில் சித்தம்கொள்ளாது
பஞ்சணையில் நிம்மதித்தூக்கம் உறக்குபவனே
முகத்திரண்டு புண்ணுடையார்





Thursday, May 7, 2020

எனக்கு வேறு என்னதான் வேண்டும்



அகிலத்தோனே அன்பின் மதனனே  
அருகில் நீ இருக்க 
எனக்கு வேறு என்னதான் வேண்டும்


அச்சம் மிகுந்த சூழலில் நான் இருக்கிறேன் 
என்று இறுக என் கரங்களை அணைத்துக்கொள்வாய் 
பற்றும் உன் கரங்களில் பதிந்த என் கைரேகை
உன்னில் என் விதியைக் கோர்த்திட
எனக்கு வேறு என்னதான் வேண்டும்


தனிமையில் பிதற்றிடும் போதை 
தலைக்கேற நடுக்கத்தில் இதயம் 
இரண்டுமுழம் வெளியே பதபதைக்க
உப்பிப்போன வியர்வை விழியருகே
கண்ணீராய் உருவெடுக்கமுன்
தோள்பற்றும் உன் இரு கரங்களிலும்
தன்நம்பிக்கை கொடி படர வைத்திடும்
நீ இருக்க எனக்கு 
வேறு என்னதான் வேண்டும்


கடக்கும் கரடுமுரடான கடினமான 
பாதையில் இரயில் தண்டவாளங்களாய்
தூரதேசம் போகும் நெடும்பாதை
வழி மாறி தடம் புறழும் கணமெல்லாம்
முன்னுமில்லாமல் பின்னுமில்லாமல்
என்னோடு எடுத்துவைக்கும் ஒவ்வொரு 
அடியிலும் மலரும் ரோஜா புஸ்பத்தின்
மென்மை பாதங்களில் உணரவைக்கும்
நீ இருக்க எனக்கு வேறு என்னதான் வேண்டும்


ஆயிரங்காரணங்களால் முறிந்துபோகும் 
உறவில் அன்பால் சமச்சீர்நிலை
அளக்கும் அளவுகோல் விருசபர்வா 
சர்வஜனாய் என்னை நேசத்தால் நெசவு செய்யும்
நீ இருக்க எனக்கு 
வேறு என்னதான் வேண்டும்



நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...