Showing posts with label Beauty. Show all posts
Showing posts with label Beauty. Show all posts

Sunday, May 3, 2020

போதும் மாமா



காதலில் கரம் பற்றிய என்னை
கைவிடாது கரை சேர்க்க 
வசைபேச்சில் வஞ்சிப்போரிடமிருந்து
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்

அடுக்களையில் அடிமுட்டாளாய்
அரிசிபுடைப்பதே அவனியாய் இருந்த என்னை
பரந்த உலகம் படைத்தது எதற்கென விழிப்பூட்டியே
எனைப்படைத்தவனாய் அடுத்தவரிடம்
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்

தாரமானபின் பணி தாயாகுவதே
தள்ளாடும் வயதில் யார் துணையாய்  வருவாரோ
வருடம் தள்ள நாட்கள் எப்போ தள்ளும் என்றே
வாயில் போடுவோரின் வார்த்தைகளிற்கு
தாரத்திலும் அவள் தாய்மை உணர்கிறேன் என்றே
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்

மகாகவி வரிகளில் படைத்த 
புதுமைப் பெண்ணை
நீங்கள் என் வாழ்க்கையில் 
செதுக்கலாய் வடிக்க 
சுற்றாரின் உற்றாரின் மனம் 
சலனத்துடன் தீ மூழ
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்

கண்ணீரில் படகோட்டும் என் வாழ்க்கைக்கு
கலங்கரை வெளிச்சமே இந்த அன்புதான்
ஆனால் போதும் மாமா 
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்




Friday, May 1, 2020

நன்றி நவில்கிறேன்



இறைவா
உன் நல்லாசியுடன் 
என்றும் திளைப்பூட்ட 
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

நெற்றிமீது தரிக்கும் குங்குமம்
மூன்று இச்சியளவு பெருமையுடன்
 தினம் உச்சி ஏறுவதில்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

வாசம் வீசும் மலர்களும் 
அப்பன் அண்ணன் இன்றி
அகிலமாய் ஆண்மகன் ஒருவன்
சூட்டி அழகுபார்த்திட 
அருகதையுடையன் என்பதில்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

வரப்பிரசாதமாய் கழுத்தில்
மஞ்சட்குங்கும தாலிச்சரண்
கண்ணில் ஒற்றி கலியுகவரதனை
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

மெல்ல நடக்கையில் 
ஒலி மீட்டிடும் கால்விரல்களில் 
வெள்ளியாய் மின்னும் மெட்டி 
நரம்புகளில் சுருக்கென்று அவன்
அன்பை ஆயிரம் முறை நொடிப்பொழுதில் உணர்த்திடும்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

பட்டுவண்ண சேலையில் பரந்தாமன்
கைபட்ட வண்ணம் மடிப்புகள் கலைவில்
கசங்கிய காதல் மொழி உரைத்திடும்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

அறநெறிசாட்சியாய் அக்கினி சாட்சியாய்
அருந்ததி சாட்சியாய் ஆண்டவன் சாட்சியாய்
உற்றார் சாட்சியாய் உறவினர் சாட்சியாய்
நீழ்வாழ்வாய் ஏழ்ஜென்ம பந்தம்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

வெகுமதியாய்க் கிடைத்த புது சன்மானம்
அவன் பெயர்முன் இணைக்கும் சொல்லாகி 
என் பெயர் மறக்க வந்த திருமதி
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்


Sunday, June 9, 2019

காதல் அடங்காப்பிடாரிகள்



காதல் அடங்காப்பிடாரிகள் தான் 
எங்கள் பெண் சமூகம்
எதிலும் எங்களுக்கான காதல் 
அடங்குவதுமில்லை
ஒன்றில் ஏற்பட்ட காதல் 
தீர்ந்துபோவதுமில்லை.
பிறருக்காக எங்கள் காதலை 
விட்டுக்கொடுப்பதில்லை
பிறருடனான காதல் அவர்கள் வஞ்சித்தும் மனம் 
விட்டுக்கொடுப்பதில்லை
புத்தகத்தின் நடுப்பக்க மயிலிறகு பென்சில் சீவலில் 
வளர்வதுமில்லை
அஞ்ஞானம் தாண்டி அறிவு விழித்தாலும் 
தினமும் வளரும் என்ற நம்பிக்கை 
குறைவதுமில்லை
காதல் தோல்விகள் பெண்களுக்கானது
இல்லை
ஆண்கள் மனதில் அதற்கு அர்த்தம் சரியாகப் 
பதிவிடப்படவில்லை
தாய் வயிற்றில் கருவாய் தடம் பதித்த நாள் முதல்
கருவறைச் சுவரை காதல் செய்வாள்
அதன் மென் சூட்டின் கதகதப்பை சுவாசம் செய்வாள்
வெளி உலகை எட்டிப்பார்க்கையில் அவள் தாய் முகம் பார்த்து
சிரித்திட தந்தை எனும் புதுச்சூழலை தாய் அறிமுகம் செய்வாள்
இவளும் தன் காதலை அப்பா என்றே அன்புடன் பகிர்ந்துகொள்வாள்
நாளுக்கு நாள் அவள் வளர உறவுகளும் பெருக காதல் மட்டுமென்ன அணைக்கட்டில்லா ஆறாய் உருவெடுக்கும்
மனிதர்கள் இடத்தில் மட்டுமல்ல செல்லமாய் விளையாடிடும் பிராணிகளிடமும் ஆசையாய் வளர்க்கும் புல் பூண்டுகளிடமும்
அதன் வாட்டம் கண்டால் மனம் ஒடிந்து விடுவாள்
பாடப்புத்தகங்கிற்கு அழகாய் உறையிட்டு அலங்கரித்தவள் வர்ண வர்ணப் பேனைகளால் ஆசையாய் அவள் பெயர் பொறித்திடுவாள்
அடுப்படியில் கறி கிளறும் கரண்டிச் சத்தம் அரை அவியலிலே சுவை பார்த்து ஓய்வுகொடுக்கும்
பிசையும் சாதம் ஒரு பருக்கையாய் மிஞ்சும் வரை விருத்தோம்பலில் நளபாகம் தேர்வு பெற்றவள் தண்ணீர்குவளையுடன் சிரித்த முகம் மணம்வீச வந்தோரை காதல் செய்வாள்
காதலுக்கு தலைசிறந்த பரிசு தாஜ்மஹாலா? அவளிடம் அன்பாய் ஒரு பார்வை பார்த்துவிடு அதை ஆயுள் வரை அடிமனதில் தேக்கிவைப்பாள்
அவளுக்கு புடவைகளில் ஆபரணங்களில் அழகுசாதனப்பொருட்களில் காதல் ஏற்படாதா?
ஆம் ஏற்படும் தான். 
பிடித்த வர்ணங்களில் எடுப்பாய் காட்டிட புடவைகள் எத்தனை எடுத்தாலும் அம்மாவின் பழைய சேலையைக் கட்டி அப்பாவிடம் காட்டிடும் காதல் அவளிற்கு பெரியது.
தங்க விலை கூடிச்செல்ல சேமிக்கும் காசில் புதிய வடிவமைப்பில் வாங்கிவைக்கும் ஆபரணங்களோ இன்னும் பிறக்காத தன்மகளிற்கு தாய்வீட்டு சீதனம் என வாங்கி அழகுபார்க்கும் 
காதல் அவளிற்கு பெரியது
உதட்டுச் சாயமும் கருகண்மையும் தோற்றப்பொழிவு கொடுத்தாலும் வாசம் வீசும் வாடாமல்லிகை சூடி அதன்போதையில் கண்களால் புன்னகை செய்து கண்மையினால் குழந்தைக்கு திருஷ்டிப்பொட்டு வைக்கும் காதல் அவளிற்கு பெரியது.
கணவனிடத்தில் எப்பொழுது மனைவியாகத் திகழ்வாள்?
பெணகள் காதலி என்று சொல்லும் போதே மனைவியாகி விடுகிறாள்
மனைவி எனும் பொழுது உனக்குத் தாயாகிவிடுகிறாள்
உன் கோபத்திலும் சோகத்திலும் உன்னை விட்டுவிலகாது என்றும் காதலியாகின்றாள்
தன்துயர் துடைக்கவே சிறுநொடி சேயாகின்றாள்
பெண் என்றுமே ஒரு வட்டத்துள் இருந்ததுமில்லை
இறப்பின் நொடிவரை அவள் காதல் அடங்கிப்போவதுமில்லை
இனி அடங்காப்பிடாரி என நீங்கள் என்னை உச்சரித்தால்
தாராளமாய் ஏற்றுக்கொள்கின்றேன் மறவாமல் காதலையும் சேர்த்து
காதல் அடங்காப்பிடாரி என்றே கூப்பிடுங்கள்.

Wednesday, May 8, 2019

மௌனமான இரவு


இந்த இரவை மட்டும் பரிசாய்க் கொடுத்திடு
எனக்கான பல கேள்விகள் இருக்கு அதில் 
உன் மௌனம் மட்டும் பரிசாய்க் கொடுத்திடு 
என் உதடுகள் உன் பெயரை பல முறை சொல்லக்கூடும் 
உன் காதோரம் வெப்பக்காற்று வீசக்கூடும் 
பார்வைகள் இருட்டின் வெளிச்சத்தில் கெஞ்சக்கூடும் ஆனாலும் 
உன் மௌனமான பார்வையை மட்டும் 
பரிசாய்க் கொடுத்திடு 
என் வேதனைகள் எல்லாம் வார்த்தையாகிடும்
என் வலிகள் எல்லாம் கண்ணீராகிடும்
ஆனாலும் நீ மௌனமாய் என்னைப் பார்வையிடு
என் விம்மலான அழுகைக்கு உன் தழுவல் பலம் 
கொடுக்க கூடும் இருந்தாலும் மௌனமாய் இரு
எந்த அழைப்புகளையும் ஓரம்கட்டு
எந்த மொழிக்கும் செவிசாய்க்காதே
எந்த சிந்தனைகளையும் தூக்கிவீசு
எந்த நினைவுகளையும் நினைவுகொள்ளாதே
மௌனமாய் என்மீதுமட்டும் பார்வை கொள்
காந்தமான நெருக்கத்திற்கும் விரல்கள் தேடும் 
தேடல்களுக்கும் இந்த இரவை மட்டும் பரிசாய்க் கொடுத்திடு
இந்தனை நாட்கள் பிரிந்த ஏக்கத்திற்கும் என் கோபமான கொஞ்சிடும் மொழிக்கு 
இந்த இரவை மட்டும் பரிசாய்த் தந்து மௌனமாய் பார்வை வீசிடு 
உன் மார்போடு உறக்கத்தில் அதன் வலிகளைக் கரைத்துக்கொள்கின்றேன்


Tuesday, April 23, 2019

முதல் முத்தம்




பேனைமுனை கண் நனைக்க
காகிதங்களோ கைக்குட்டையாய்
அதை வாங்கிக்கொள்ள
காகிதச்சிற்றபம் ஒன்று 
இறுதியாய் வரைந்தெடுக்கப்பட்டது
கருவில் சுமக்கா ஒரு பிள்ளை
என் மடிநனைக்க
விரல் நுனியில் காந்தவிசை
உன் தலைமுடி வழியே
உயிரப்பூட்டிட என்மடியோ
உனக்கு தாலாட்டும் தொட்டிலாகிற்று
கிடையாகவும் நிலைக்குத்தாகவும் 
முக்கோண வளைகுடாக்கள்
ஒன்றை ஒன்று உரசிச்செய்யும்
வெப்ப அனல்காற்றோ கொஞ்சம்
முன்னேறி தாகம் தணிய
நீர்வீழ்ச்சியைப் பருகிட தடைதான் விதிக்க
வெட்கம் கலந்த புன்னகையோ
பார்வையை இருட்டில் அலையவிட்டு
இதழ்களை மலரச்செய்தது
வழுக்கி விழுந்த கூந்தலை
நேர்த்தி செய்ய மரநிழலும்
குடைபிடிக்க
ஏனோ உஷ்ணமும் 
உள்ளூர ஊர்ந்தது
ம் என்று விடையளிக்க
மர்மமான தேடல் ஒன்றை
நீயும் நிகழ்த்தி வெற்றிகொண்டாய்
கூதல் காற்றில்லா மெய்சிலிப்பிற்கு
தீண்டும் உன் ஸ்பரிசம்தான் தீனிபோடுகிறதோ
நீளும் நேரமெல்லாம்
மயிர்த்துவாரத்தினுள் ஊடுருவிச் செல்கிறது
இத்தனை அழகான இதழ் செதுக்கத்திற்கு
அடிமையாகி போதை தலைக்கேறி
ஏதோ ஓர் எல்லையற்ற உலகில் 
உலாவித் திரிகின்றேன் 
மீண்டும் என் உயிரை என் உடலோடு கோர்த்துவிடு
முத்த அழைப்பின் முடிவினிலே

Sunday, January 20, 2019

அவள் ஒரு புதிய அகராதி


காலை எட்டு மணிபோல தான்
அவள் தரிசனம் தருவாள்
அதற்காக அவள் சோம்பேறியும் அல்ல
செல்லப்பிள்ளையும் அல்ல
அதிகாலையிலே மதிய உணவுவரை
அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு
வயோதிபம் காணும் தாயையும்
கவனித்து விட்டு
வீட்டில் வளரும் செல்ல நாய்க்குட்டிக்கும்
பால் ஊட்டி விட்டு பறந்து வரும்
பட்டாம்பூச்சி தான் அவள்
நடுத்தரமான உயரமாகவும்
மாநிறமேனியும் வளைந்த புருவத்தின் மத்தியில்
கறுப்பு நிறப் பொட்டும்
ஆடம்பரமற்ற நேர்த்தியாய்
உடுக்கப்பட்ட ஆடையும்
கைகளுக்கு அடக்கமாய் வளையலும்
கரு நதியாய் கூந்தலும் தான்
அவள் அடையாளம்
சற்றுப்பருமனான தேகம் தான்
காற்றில் மிதப்பது போல
பாதம் வைத்து நடந்திடுவாள்
பார்ப்பதற்கு மென்மையான
தேகம் கொண்டவள்
பாதுகாப்பு தேவையறிந்து
வார்த்தையில் கடினம் காட்டிடுவாள்
ஆண்கள் கூட்டத்தின் மத்தியில்
ஒரு தோழியாய் திகழ்ந்திடுவாள்
ஆண்துணை ஒன்று தேடிடாதவள்
அதன் காரணம் பலர் கேட்டிட
சாட்டுகள் பல சொல்லிடுவாள்
கோவில் குளம் என சென்றிடாதவள்
மனதுருகி வேண்டிடுவாள்
வேண்டிய தெய்வமெல்லாம் பொய் என
நார்த்திகமும் பேசிடுவாள்
அதிகமாய் அனைவரிடமும் பேசிடாதவள்
அனைவருக்கும் அளவுகோல் ஒன்றை
தீர்மானித்த பின்பே பேசவும் செய்வாள்
புலன்களை மாற்றிட அவளிடம்
கல்வி பயில வேண்டும்
துன்பத்திலும் சிரித்திடும்
பெண் சிலையவள்
சோகங்களை மௌனமாய் காத்திடுவாள்
எத்தனை நபர்கள அவள் வட்டத்தில் இருந்தாலும்
அவள் வாட்டத்தை தனிமைக்கே காட்டிடுவாள்
அவளை இலக்கணப்படுத்தவே வேண்டும்
ஒரு புதிய அகராதி

Thursday, October 11, 2018

காதல் கொண்டேன் பெண்ணே

நீள் கருங்கூந்தலிலும் இல்லை
வளைந்தெடுத்த புருவங்களிலும் இல்லை
செவ்விதழ் ரேகையிலும் இல்லை
பஞ்சணை மேனியிலும் இல்லை
செஞ்சந்தன நிறத்திலும் இல்லை
தாமரைப் பாதங்களிலும் இல்லை
வெண்மெழுகு நகத்திலும் இல்லை
காந்தவிழி அழகிலும் இல்லை
மென்மொழி செப்புதலிலும் இல்லை
கொச்சை பேசும் உலகம்தனை ஓரம்கட்டி
நித்தம் நெஞ்சில் துணிவுடன் ஒற்றை வழிப்பாதையில்
தடம் பதித்து செல்கையில் உன் திமிர் கண்டு
நான் காதல் கொண்டேன் பெண்ணே




நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...