Thursday, April 25, 2019

ஸ்வர்ணலதா



யாருமில்லாத மாலைவேளையில்

தூறிய மழை நின்றபின் வரும்
சிலிப்பான காற்றுக்கு 
சுடச்சுடத் தேநீரும் 
போற்றிக்கொள்ள கதகதப்பான கம்பளியும் தான் 
அவள் குரலோசை
தேங்கிக் கிடந்த என் சோகங்கள் எல்லாம்
சோ என மழை பொழிந்தார்ப்போல்
கண்கள் நீர் நிறைக்க
தெம்பில்லாத உடலுக்கு அம்மாவின் வருடல் தான்
அவள் குரலோசை
உதிரம் வற்றிய நிலையிலும் பிளவுகளை எதிர்க்கொண்ட
உடலுக்கு உதிரவாடை வீச தன் குழந்தையைக் காணும்
தாயின் கண்ணீர்தான்
அவள் குரலோசை
பல நாளாய்ப் பட்டினி கிடந்தவன்
பசித்தெழும் வேளையில்
அறுசுவையுடன் பால்பாயாசம் வரை
அன்னமிடும் அன்னலட்சுமி
அவள் குரலோசை
யார் அவள்? அவள் குரல் என்ன இத்தகைய மகத்தானதா?
இத்தனை ஒப்பீடுகளும் ஒரு பெண்ணின் குரலுக்கா போற்றப்படுகிறது? எனக் கேள்விகளை எழுப்புபவர்களுக்கு
ஒன்று கூறுகின்றேன்
அவள் தான் ஸ்வர்ணலதா
நான் தேடும் பாடல்கள் எல்லாம் சொல்ல முடியாத
ஒரு உணர்வை உண்டு பண்ணிச் செல்லும்
பைத்தியக்காரிதான் நான் ஒரு பாடலை ஆயிரம் முறை
மனதில் பதியவைத்து எத்தனை நாட்டகளாய் என் தூக்கம்
தொலைத்திருப்பேன்
காதல் என்னை வஞ்சித்ததும் சில பாடல்களை மட்டும் மீண்டும் கேட்டு பின்னனிப்பாடகியும் ஆகியிருப்பேன்
பேரூந்துத் தரிப்பிடத்தில் நான் விரும்பும் பாடலுக்காய் 
எத்தனை பேரூந்துகளை வேண்டாம் என சைகை செய்திருப்பேன்
தொலைபேசியை நோட்டமிடும் நேரத்தை என் பழைய வானொலிப்பெட்டியில் சில பாடல் பாட அதை இரசித்த வண்ணம் சமையல் செய்திருப்பேன்
குளியலறையல் என் மேனி தொடுவது நான் முணுமுணுக்கும் சில பாடல்கள் தான். 
கடைசியில் தான் அறிந்தேன் அவை அனைத்தும் என் நாயகி
ஸ்வர்ணலாதாவின் குரலோசைகள்
என் வெவ்வேறு உணர்வுகளுக்கு விடையாய் அவள் பாடல் மட்டும் என்பது தான் என் ஆர்வத்தைத்தூண்டியது
குயில் பாடும் பாட்டுக்கு அதன் முகம் கண்டுதான் இரசித்திருந்தோமா? அதை எண்ணி என்னை சமாதானம் செய்துகொள்வேன்
அவன் குரல் மகத்தானது தான் 
ஏதோ ஓர் உறவைத்தேடி தூக்கம் தொலைத்த ஆண்கள் கூட விரித்தபாய் தலையணையுடன்
அவள் பாடலையும் சுவாசித்துக்கொள்வர்
என் காதற்பிணிக்கு என் புலன் மாற்றவல்லது அவள் பாடல்தான். வரிகளிலா ? அவள் குரல் அலைகளிலா? அபூர்வம் தெரியவில்லை. அவள் குரல் மென்னையிலே தான் வரிகளை நான் மீள மீள உதடுகளுக்கு உணவூட்டியதுண்டு
காலதாமதமாகித்தான் அவளைத் தெரிந்துகொண்டேன் அவள் மீண்டும் பூமிக்கு வரமுடியாத நிலையில். அவள் அர்ப்பணிப்பு அறிந்தது தான் தாமதம் அவள் குரலுக்கு மட்டுமல்ல அவளுக்கும் அடிமையாகி விட்டேன்
ஒன்று மட்டும் கூறுவேன் ஏதோ ஓர் உறவைத்தேடி உணர்வைத் தொலைத்து வெளியே சிரிக்கும் இதயங்களுக்கெல்லாம் அவள் குரல் சமர்ப்பணம்

Tuesday, April 23, 2019

முதல் முத்தம்




பேனைமுனை கண் நனைக்க
காகிதங்களோ கைக்குட்டையாய்
அதை வாங்கிக்கொள்ள
காகிதச்சிற்றபம் ஒன்று 
இறுதியாய் வரைந்தெடுக்கப்பட்டது
கருவில் சுமக்கா ஒரு பிள்ளை
என் மடிநனைக்க
விரல் நுனியில் காந்தவிசை
உன் தலைமுடி வழியே
உயிரப்பூட்டிட என்மடியோ
உனக்கு தாலாட்டும் தொட்டிலாகிற்று
கிடையாகவும் நிலைக்குத்தாகவும் 
முக்கோண வளைகுடாக்கள்
ஒன்றை ஒன்று உரசிச்செய்யும்
வெப்ப அனல்காற்றோ கொஞ்சம்
முன்னேறி தாகம் தணிய
நீர்வீழ்ச்சியைப் பருகிட தடைதான் விதிக்க
வெட்கம் கலந்த புன்னகையோ
பார்வையை இருட்டில் அலையவிட்டு
இதழ்களை மலரச்செய்தது
வழுக்கி விழுந்த கூந்தலை
நேர்த்தி செய்ய மரநிழலும்
குடைபிடிக்க
ஏனோ உஷ்ணமும் 
உள்ளூர ஊர்ந்தது
ம் என்று விடையளிக்க
மர்மமான தேடல் ஒன்றை
நீயும் நிகழ்த்தி வெற்றிகொண்டாய்
கூதல் காற்றில்லா மெய்சிலிப்பிற்கு
தீண்டும் உன் ஸ்பரிசம்தான் தீனிபோடுகிறதோ
நீளும் நேரமெல்லாம்
மயிர்த்துவாரத்தினுள் ஊடுருவிச் செல்கிறது
இத்தனை அழகான இதழ் செதுக்கத்திற்கு
அடிமையாகி போதை தலைக்கேறி
ஏதோ ஓர் எல்லையற்ற உலகில் 
உலாவித் திரிகின்றேன் 
மீண்டும் என் உயிரை என் உடலோடு கோர்த்துவிடு
முத்த அழைப்பின் முடிவினிலே

தீயின் மேற் காதற்கொண்ட இலவம் பஞ்சு



தீயின் மேற் காதற்கொண்ட இலவம் பஞ்சு
தீராத தலைவலிக்கு பற்றிட்டு 
தைலம் தேய்த்து
வெந்நீர் ஒற்றடம் பையக்கொடுக்க
நிம்மதியாய் தன்னை மறந்த ஒரு 
அசட்டுத்தூக்கம் தான் 
இலவம் பஞ்சு தீயின்மேற்கொண்ட காதல்
உனக்காய்ப் பிறந்த பாடல்வரிகள் கானம்
சொட்டச் சொட்ட
மெல்லியாதாய் வீசும் தென்றலுக்கு முகம் கொடுக்க
முடியா சொல்லா வேதனை தான்
இலவம் பஞ்சு கொண்ட காதல்
ஆர்ப்பரிக்கும் கடலுக்கு ஒற்றைக்கால் ஊன்றி
உறுதுணையாய் நிற்கும் வெளிச்ச விளக்கு
இலவம் பஞ்சின் காதல்
கசிந்து வந்த கண்ணீரெல்லாம் 
கல்லாற்று நீராய் நிரம்பி ஓட
தெளிந்த நீரில் கிறுக்கிய கிறுக்கலெல்லாம்
ஒன்றாய்ச் சேர்ந்தது
இலவம்பஞ்சின் காதல்
கொத்திச்சென்ற பட்சிகள் பல இருக்க 
காத்துக்கிடக்கும் காகம் பல இருக்க
மூடிவைத்த முத்துக்கு விலைதான்
இலவம் பஞ்சின் காதல்
இரயில் ஓடும் பாதையில் தள்ளிப்போகும் மரங்களை
வேடிக்கைபார்த்து உறங்கிப்போகும் 
சிறுபிள்ளைதான் இலவம் பஞ்சின் காதல்
தீயினாற்ச் சுட்ட வடு மாற்றி நாவினாற்சுட்ட 
வடு நீள தீயிற்கு இரையாகிடும் அர்ப்பணம்
எல்லாம் சமர்ப்பணம் ஆகிட
தீயிடம் காதல் கொள்ள காத்துக்கிடக்கும்
இந்த தீயின் மேற் காதற்கொண்ட இலவம் பஞ்சு

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...