Sunday, October 28, 2018

யார் உனக்கு அதிகாரம் தந்தது?


என்னை வருடிச் செல்லும் மெல்லிய தென்றல் காற்றே!
அவன் நினைவுகளைத் தாங்கிடும் இந்த தேகத்தை
கூதல் செய்து செல்ல
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
என் நெற்றி வழி வழிந்தோடிய வியர்வைத் துளி
அவன் உதடுகளால் ஒற்றி எடுக்கும் நொடி
பூவாய் மலர்ந்திட அதை உதிர வைக்க
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
அவன் பார்வையில் உருகிவிடும் சந்தனத்தேகம்
அதைப் பொக்கிஷமாய் பாதுகாத்திடும்
பட்டுப் புடவை அதை மெதுவாய் நகர வைக்க
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
பாதத்திலாடிடும் வெள்ளிக் கொளுசுமணி
அவன் பார்வை என் திசை திரும்பும்படி
காற்றில் அவன் மேல் கொண்ட காதல் கீதம் இசைத்திட
அவன் இல்லா நேரத்தில் அதை இரசிப்பதற்கு
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
அந்திசாயும் வேளையில் நித்தமும்
ஏனோ ஏக்கமாய் அவன் வாங்கித்தந்த
வாசம் வீசும் கொடி மல்லிகை மாலை
அவன் மயங்கிக்கிடக்க ஆசையாய்
நான் சூட்டி அழகு பார்க்கையில்
அதன் வாசனை சற்று களவாடிச் செல்ல
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
இத்தனை இலட்சணமாய் அலங்கரித்து
பெண்ணாணவள் உனக்காய் உருகி உருகிக் காத்திருந்து
கண்ணீர் கன்னம் வழியே வழிந்தோடிட அதைத் துடைப்பதற்கு
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
உன் நினைவாலே வாடிய இந்த மலர்
உன் நிரந்தரப் பிரிவைத் துயர் தாங்காது
உயிர் நீக்க
அவ்வுயிரை காற்றோடு சங்கமிக்க
என் காதலனே உன்னைத் தவிர
இந்தக் காற்றுக்கு
யார் அதிகாரம் தந்தது?

Saturday, October 27, 2018

உன் செல்லமான சண்டைக்காரி


குழந்தைத்தனமான சிறு சண்டை
கொஞ்சும் மொழியில் பின் கெஞ்சல்கள்
வாட்டிவிடும் மௌனங்கள்
கர்வம் நிறைந்த காதல் பார்வைகள்
பேசிவிடத்துடிக்கும் இதயங்கள்
இடைவெளி குறையும் தூரங்கள்
வெட்கம் கொட்டும் பார்வைகள்
அதை இரசிக்கும் இரட்சகன் நீ
உன் அணைப்பில் மெய் மறந்த நான்
இந்த ஒரு நொடிக்காய் தான் என் இத்தனை நிமிட
வாக்கு வாதங்கள்
உன் செல்லமான சண்டைக்காரி நான்
அர்த்தமற்றதாய் அரும்பிடும் வாதங்களில்
உன்னை வெல்பவளாய் தினமும் புதிதாய்
சண்டைகள் பிடித்திடவே காத்திருப்பேன்
என்ன புதிதாய் பார்க்கிறாய்?
காதலில் இருக்கத்தானே வேண்டும்
சண்டைகளும் பின் தழுவல்கள் நிறைந்த சமாதானமும்
கட்டியணைத்து நீ பார்க்கும் பார்வையில் தெரியுமடா
ஓராயிரம் மன்னிப்புகள்
அதில் இலயித்துப்போகவே என் குறும்புத்தனமான சண்டைகள்
வேடிக்கையான இந்தத் தழுவலில் என்ன சுகம் இருக்கிறது
என விநோதமாய் பல முறை கேட்டிருப்பாய்
நீண்ட நேரம் திட்டித்தீர்த்த உதடுகள் களைத்திருக்கும்
நீண்ட நேரம் சொரிந்த கண்ணீரால் கண்கள் வற்றிப்போயிருக்கும்
காதலையும் உன்னையும் சுமக்கும் தேகமோ சோர்வடைந்திருக்கும்
கரங்களோ பற்றிக்கொள்ள ஒரு துணை தேடும்
அச்சந்தர்ப்பத்தில் நீ என்னைக் கட்டியணைக்கும்
ஒவ்வொரு நொடியும் இன்னும் கொஞ்ச நேரம் எனக்
கேட்கும் தேவாமிர்த நொடிகளே
காலங்களும் கடந்து போயின
நம் காதலும் திருமணபந்தத்தில் கனிந்தது
பொறுப்பான கணவனாக இன்று நீ
உன்னைச் சீண்டிப் பார்க்கும் அதே
செல்லமான சண்டைக்காரி நான்
இம்முறை என் சண்டைகள் அனைத்தும்
உன்மீது அக்கறை கொள்பவையே
வெகுநேரத்தின் பின்னான உறக்கம்
தட்டிக்களிக்கும் என்னுடனான நேரம்
கால்வாசி வயிறு நிரம்பிடா உணவு
உன்னை நீயே திட்டிக்கொள்ள தனிமை
எப்படி ஏற்றுக்கொள்ளும் என் மனம்?
அன்பே துணைவி எனும் மரியாதை ஊரார் அறிய
நீ எனக்குத் தந்த பொக்கிஷம்
அதைவிட என்றும் உன் காதலியாய் துணை நிற்கவே
விரும்புகிறேன்
பொறுப்புகளாளும் சொல்ல முடியா வேதனைகளாளும் என்னை ஓரம் கட்டி விடாதே
அதே காதலுடன் உன்னிடம் உன் காதல் நிரம்பிய தழுவலுக்காய் உன்னிடம் சண்டை போடக்காத்திருக்கின்றேன்
உன் செல்லமான சண்டைக்காரி

Wednesday, October 24, 2018

சிகரெட் காதலி


இரு விரல்கள் நடுவில் காதலோடு 
என்னைப் பற்றிக் கொண்டாய் 
எனக்கு கதகதப்பளிக்கவே 

காதல் தீயும் மூட்டினாய்
கிடைக்கும் சந்தர்ப்பங்கள் எல்லாம் உன் உதட்டு ரேகையை 

என்மேல் பதிய வைத்தாய்
யாருமற்ற சந்தர்ப்பங்கள் மட்டுமின்றி ஊரார் முன்னும் தைரியமாக அவ்வப்போது 
என்னை அறிமுகம் செய்து வைத்தாய்
எத்தனை பேர் கூறியும் மன்றாடியும் பற்றிய உன் கரம் நழுவவில்லை
இதை விட வேறு என்ன பாக்கியம் தான் இந்தக்காதலிக்கு கிடைத்து விடப்போகிறது?
இன்று உன்னை விட நான் உன்னைக் காதல் செய்கின்றேன்
என் காதல் பிணைப்பினால் நான் இல்லாத ஒரு வாழ்வை நீ கனவிலும் காணமாட்டாய்
இன்னும் அதீதமாக உன்னைக் காதல் செய்ய உன் உயிர் சுவாசம் எங்கும் ஊடுருவி முன்னேறிச் செல்கின்றேன்
உன் ஆன்மாவுடன் ஒன்றோடு ஒன்றாய்க் கலக்க உன் சுவாசப்பையை நெருங்கிவிட்டேன்
எனக்கு ஓர் ஆசை
உன் இதயத்தில் என்னைப் பற்றிய நினைவுகள் அனைத்தையும் ஒருமுறை முத்தமிட்டு கட்டியணைப்பதற்கு
வேகமாய் நிதானமற்று குருதியுடன் கலந்து உன் இதயவறைகளை எட்டிப் பார்க்கின்றேன்
நீ என்னை ஏமாற்றிவிட்டாய்
உன்னை மட்டுமே மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்ட என்னை விட கசப்பான பழைய நினைவுகள் உன் இதயத்தில் சுட்டெரித்துக்கொண்டு இருப்பதைக் கண்ட என் மனம்
எவ்வளவு துடித்திருக்கும் என்பதை அறிந்திராமல் நீயோ
பழைய நினைவுகளிடம் இருந்து தப்பிக் உன்னை நீயே என்மேல் காதல் என்று ஒரு வடிவம் கொடுத்து ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றாய்.
உன்னை நேசித்த இதயமல்லவா எப்படி உன்னை நீங்கிச் செல்வேன்? 

ஏமாற்றப்பட்டதை அறிந்தும் 
உன் விரல்கள் நடுவில் வாழும் 
சிகரெட் காதலி

Tuesday, October 23, 2018

அவள் தான் என் அம்மா


ஆங்கிலம் பெரிதாய் தெரிந்திராதவள்
என் ஆசைக்காய் முயற்சித்து உச்சரித்து விடுவாள்
என் விருப்பங்கள் பெரிதாய் அறிந்திராதவள்
விரும்பியதை வாங்கித் தந்து என்னை சமாதானம் செய்திடுவாள்
தன்விருப்பத்தில் தெரிவுகளை மேற்கொள்ளாதவள்
என் விருப்பத்தை எப்பொழுதும் ஏற்றிடுவாள்
தன் பசி அறியாது அடுப்படியில்
என் பசி போக்க காய்ந்திடுவாள்
வண்ணங்களில் சேலை அணிந்திடாதவள்
வண்ணமயமாய் என் வாழ்வை மாற்றிட போராடிடுவாள்
துன்பங்கள் பல சகித்துக்கொண்டவள்
என் முகம் துவண்டதைக்கண்டு
கண்ணில் உதிரம் வடிப்பாள்
கணவன் அவன் உயிர்துறக்கையில் கைம்பெண்ணாய்
தந்தையுமாகி நின்றவள் அவள்
பெற்றகடனுக்கு நான் பெரிதாய் உனக்கு
ஏதும் செய்யவில்லை எனினும்
மற்றோர் முன் என்றும் உயர்வாய்க்கூறிடுவாள்
தூய்மை அது வெண்மை மட்டுமில்லை
அதை நான் அச்சொட்டாய்க் கண்டதில்லை
கருமை நிறத் தேகத்திலும் தூயவள்
அவள் தான் என் அம்மா

அடுப்படியில் அம்மா உன் நேசம்


அடுப்படியில் அம்மா உன் நேசம் கண்டு
எத்தனைமுறைதான் நான் வியப்பது?
அதிகாலை எந்த வேலையும் இல்லாத சேவல் கூட
உறங்கிக்கிடக்கையில் பாத்திரம் தேய்க்கும் சத்தம் 
கேட்டு தான் நான் பல முறை விழித்தெழுவேன்
கொட்டும் பனியில் எனக்காய் ஆகாரம் செய்திட
பாத்திரங்கள் சுத்தம் செய்வதில் என்னை கவனித்திருக்கமாட்டாய்
ஒரு சாண் வயிற்றுக்கேற்ப உண்டு நீர் அருந்திடவேண்டும்
என்பேன் பாடசாலைச் சீருடையுடன்
இன்னுமொரு தோசை அடுப்பில் இருக்கிறது
என்றே மன்றாடி ஊட்டிவிடுவாய்
பரீட்சைகாலம் நெருங்கவே உண்ண உறங்க மனமின்றி
என் சிந்தனை எதயோ நாட
ஊட்டச்சத்து உணவின்றி என் மகள் ஊக்கம் குறைந்தது என்பாய்
கோபம் உன்னில் காட்டிட சந்தர்ப்பமாய் பட்டினி
கிடந்திடுவேன்
கண்கலங்கிய நீயோ ஊட்டிவிட முன்னும் பின்னுமாய்
கெஞ்சிடுவாய்
அன்பை வெளிக்காட்டிட நீ வாய்மொழியால் என்னிடம்
சொல்லாவிட்டாலும்
கரி படிந்த அடுப்படிச் சுவர் இன்னும்
தீயாய் என்னைச் சுட்டுக்கொண்டிருகிறது அம்மா
உன் கையால் ஊட்டிவிடும் சோற்றுருண்டையில்
அறுசுவை தெரியவில்லை மாறாக
உன் அடுப்படி நேசம் தெரிகிறதம்மா

Monday, October 22, 2018

யாருமற்ற வாழ்க்கையை வாழ பழகிக்கொள்வீர்கள்


காதல் கொண்டு ஆசையாய் கட்டிய மனைவி
கடைசிவரை உறுதுணையாய் உன்னைக் காப்பேன் என
அக்கினி குண்டம் வலம் வந்தேன்
செய்த சத்தியம் பொய்யாய்ப் போய்விட
உன் பெற்றோருக்கு நான் அளித்த வாக்கு மங்கும் படி
என் உயிர் இவ்வுலகம் விட்டு போகப் போகிறது
எண்ணும் எழுத்தும் கண்ணாய்
பிள்ளைகள் நால்வரைப் பெற்றேன்
கல்வி எனும் கடலில் கரைதாண்டி
பட்டம் பெற ஆனந்தமாய் நானும் கண்ணீர் மல்க
கனவுகள் தான் பல நெஞ்சில் சுமந்தேன்
நீங்கள் வாங்கும் முதல் மாத சம்பளத்தில்
வேண்டுதல்கள் பல நிறைவேற்றிட தெய்வம்
அருள்புரிய வேண்டி நின்றேன்
நல்ல இடமாய் மாமா என அழைத்தாலும்
பெறாமக்களாய் என் அன்பைச் சொரிந்திட
ஊர்ஊராய் ஊர்வலம் சொந்தங்களுடன் கூடியே
என் மக்களுக்கு கனவில் திருமணமும் நிகழ்த்தி விட்டேன்
எத்தனை கடை தான் ஏறி இறங்கினாலும் பிஞ்சு மொழியால்
தாத்தா இன்னும் ஒன்று வாங்கி தாங்க என்று சொல்லும்
பேரக்குழந்தைகளையும் ஒருமுறையாவது தூக்கி சுமந்துவிடுவேன்
இப்படி ஆசைகளை மூட்டை கட்டி வயதுபோன நாற்காலியில்
இளம் வயதோடு போகப் போகும் என் உயிருக்காய் நான்
நிமிடங்களை எண்ணி களைப்புற்று விட்டேன்
பிறக்கையில் மரணத்தின் விதையை நாட்டி விட்டு
இம்மண்ணுலகில் ஏன் பிற உயிர்களோடு பந்தங்களை
ஏற்படுத்துகின்றோம்
அவர்களின் நீங்காத துயர் மூலமும் நினைவு வரும் வேளையில் கண்ணீர்த்துளி மூலமும் பிறப்பெடுப்பதற்கா?
இறப்பு என்பது எத்தகைய
கொடியது என இறக்கும் தறுவாயில்
துடித்த இதயங்களிடம் கேட்டுப்பாருங்கள்
யாருமற்ற வாழ்க்கையை வாழ பழகிக்கொள்வீர்கள்

Sunday, October 21, 2018

பழைய புத்தகத்தில் நடுப்பக்கத்து மயிலிறகாய்


விதிகளைத் தளர்த்தெறிந்த 
வரைமுறையற்ற பார்வை வீச்சினால்
வன்முறைகள் பல செய்கிறாய்
தூரம் நான் தேடி நின்றாலும்
என் பேர் சொல்லிய வெப்பம் நிரம்பிய
உன் சுவாசக்காற்றால்
வலிமை இழக்கச் செய்கிறாய்
ஆணுக்கான திமிர் நிறைந்த தோரணையில்
எப்பக்கமும் சாயாக் கொடி என்னை
மெழுகுசிலையாய் உருக வைத்தாய்
இத்தனை அழகாய் சொல்லாக்காதலை
ஒரு சொல்லில் உதட்டோடு வருடிவிட
எத்தனை வருடமாய் நானும் காத்திருக்க
இது உன் விதி என எழுதி வைக்கா என் காதல் காவியத்தை
முடித்து வைத்தது காலம் எனும் விதி
இனி எங்கு சொல்லப் போகிறாய்
சொல்லா உன் காதல் கதையின் கதாநாயகி
பழைய புத்தகத்தில் நடுப்பக்கத்து மயிலிறகாய்
உன் நினைவுடன் மடிந்து கிடக்கின்றேன்

Thursday, October 18, 2018

கலியுகத்திலும் இன்னும் தசரதர்கள்


எழில் கொஞ்சும் அன்னம் அது
உன் நடையழகை சாயல் கொண்டு
மெல்ல வர அதனழகில் காதல் வயப்பட்டு
அந்நாளில் பெண் மேல் காதல் புரிந்தானொருவன்
விரிந்த செந்தாமரை இதழ் மென்மையில்
இடையழகை வர்ணித்து ஒப்பீடுகளில்
வரைமுறை பேணி பெண் மேல் காதல் புரிந்தானொருவன்
சிவதனுசை வில்லொடித்து மணமாலை மணமகன்
சூட்டிட சுயம்வர வேளையில் வீரமகன் வதனம் கண்டு
வெட்கத்தால் அவள் சிவந்திட வீரம் கொண்டு
வில்லொடித்து பெண் மேல் காதல் புரிந்தானொருவன்
இப்படி இதிகாசங்களிலும் புராணங்களிலும் காதல் கற்பு
நெறி தவறாமல் உரைத்து நின்ற பெருமான்களே
உம்போல் உரைப்பதற்குப் பலர் இருந்தும் கேளாய்ச் சமூகமாய் மாறிவிட்டார்கள் எம்மவர்கள்
விதைத்தவன் நன்கு செழித்து வளரந்த பயிரை உரிய முறையில் அறுவடை செய்யக்காத்திருக்கும் வேளை
தீ மூட்டி அதில் குளிர்காய்ந்து கருக வைத்த பாவிகள்
வாழும் உலகம் இது
பாவம் நாளை அவர்கள் விதைக்கையில் அவர்களின் பயிர்களுக்கும் இதே கதி என்பதை மறந்துவிட்டார்கள்
இராமவதாராம் முடிந்தும் கலியுகத்திலும் இன்னும் தசரதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்
இதயத்தால் காதல் கற்பற்ற கன்னியர்கள் நினைவில்
நீங்காச் சிலை எழுத்துப்போல

Monday, October 15, 2018

ஓடாதே என் ஆசைக் கணவா


ஓடாதே என் ஆசைக் கணவா
அன்று தொட்ட காலம் முதல் 
உன் மீது கொண்ட காதல்
பூமாலை மணக்கோலம் தாண்டி
இப்பூவுலகில் இருவரின் பாதமும் 
ஒருமித்தப் பதிந்திட தவம் இல்லா
வரம் ஒன்று கைகளில் ஏந்தியும்
எல்லையில்லா மகிழ்ச்சியை
விழிகளால் வழிந்தோடிடும் கண்ணீரும்
உரைத்து நிற்கும்
என் வாழ்நாள் முழுவதும் சேர்த்துவைத்த
ஆசை எல்லாம் திகட்டத்திகட்ட
பாசமாய் ஊட்டிவிட உன் மார்பின் அருகில்
சற்று இடம் தந்து
என்னை அணைத்துக் கொள்
கழுத்தில் நீ கட்டிய மாங்கல்யம்
வேலி மட்டுமல்ல உன் மீது நான் கொண்ட
அதீத காதலையும் கர்வத்துடன் தினமும்
நினைவூட்டி நிற்கும் எவ்வேளையும்
வேலை மக்கள் குடும்பம் என்று ஓடிவிடாது
என்னைக் கொஞ்சம் அணைத்துக் கொண்டு
அமைதியாய் இரு
அந்த நிசப்பத்தில் எனக்காக மட்டும் துடிக்கும் உன்
இதயத் துடிப்பை கேட்டுக் கொண்டே என் வாழ்நாளைக்
கழித்துவிட ஒரு கணம் ஓடாதே என் ஆசைக் கணவா

ஏன் இன்னும் இந்த இடைவெளி?


பதிவுத் திருமணமும் முடிந்துவிட்டது
சட்ட ரீதியாக மட்டும் மனைவி ஆகிவிட்டேன்
ஊர் அறிய உறவறிய திருமணத்திற்கு நாள் பார்க்கிறாள்
உன் மாமியார்
தடபுடலாய் சமையலுக்கு ஆள் தேடுகின்றான் உன் மூத்த மச்சான்
மண்டபம் அலங்காரம் பத்திரிகையில் நேரத்தைப் போக்காட்டுகின்றான் உன் இளைய மச்சான்
அறிவுரையும் சமையல் கலையும் அழகுக்கலையிலும் நிபுணத்துவம் பெறுகிறாள் உன் மைத்துனி
நான் மட்டும் உன் நினைவாய் எம் சந்திப்பிற்காய் காத்திருக்கின்றேன்
அனைவரும் கோவில் சென்றுவிட்டார்கள்
நான் மட்டும் தனிமையில் உன் நினைவுகளோடு
எதேற்சையாய் நீயும் வந்தாய் இது கனவல்ல மறக்க முடியா நினைவு
காதல் புரிய இதுவல்லவோ சிறந்த நேரம் என நான் நாணம் கொட்ட என் அருகில் வந்த நீயோ என் கண்களை தின்பதாய் பார்க்கிறாய்
நாணம் கொஞ்சம் வெட்கமாய் மாறிட என் பெண்மைக்கான கூச்சத்தை ஓரம் கட்டி உன்னிடம் கேட்டேன்
“ ஏன் இன்னும் இந்த இடைவெளி?”
செல்லமாய் என் கன்னத்தைத் தட்டியவாறு கூறினாய்
“ஊரார் ஆசியுடன் உன்னை மனைவி ஆக்கிய பின் இனி ஏது இந்த இடைவெளி “
கண்கலங்கிய என் கண்மடலைத் துடைத்தபடியே பார்க்கின்றாய்
அதில் தெரிந்ததோ உன் ஆண்மையின் அடையாளம்

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...