Showing posts with label Pain. Show all posts
Showing posts with label Pain. Show all posts

Monday, June 1, 2020

உனக்கும் எனக்கும் விடுதலை

                                                                                              

















உனக்கும் எனக்கும் விடுதலை

கிடைத்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

நீ நீயாகிய விடுதலை. 

நான் நானாகிய விடுதலை.


எந்த முடிவுகளிலும் இருவர்பால் 

சார்ந்தவை எனும் கருத்தில் 

என் நச்சரிப்பிலிருந்து உனக்கு விடுதலை

நேரத்தை வீணாக்குகிறாய் என்னும் 

பழியிலிருந்து எனக்கு  விடுதலை


உன்நலனுக்காய் மண்றாடல்கள் பல

அக்கறையான கரிசணை தினம்

இதையெல்லாம் நிறுத்தியதில் 

எனக்கு விடுதலை

இதெல்லாம் மூடச்செயல் என்று 

முடக்கியதில் உனக்கு விடுதலை


அன்பான வார்த்தைகள் நேரடி சந்திப்புகள்

பேரிடியான சண்டைக்கு மருந்தென்பதில்

என்னை உதாசீனப்படுத்துவதிலிருந்து

உனக்கு விடுதலை

ஏங்கித்திவிக்கும் ஏக்கத்திலிருந்து

எனக்கு விடுதலை


ஒருமுறையாவது அழைப்பு விடுத்து 

ஹலோ எனும் வார்த்தையில்

அத்தனையும் பேசியதாய் 

மமதை கொள்ளும் 

என் நினைவுகளுக்கு விடுதலை

ஓர் வார்த்தையிலே முழுநடிப்பையும் 

காண்பிப்பதிலிருந்து உனக்கு விடுதலை


அன்புப்பரிசுகள் அன்பை மென்மேலும் 

வாரிவழங்களிலும் தேவைகள் அறிந்து 

பூர்த்தி செய்வதிலும் நேர்த்தியான உபாதை 

என்பதிலிருந்து எனக்கு விடுதலை

அதை கண்ணாடிப்பெட்டிக்குள் சலிப்போடு 

மறைத்து வைப்பதில் உனக்கு விடுதலை


முழுஉலகத்தையும் உன்னுள் செலுத்தி 

திக்கற்றவளுக்கு உன் ப்ரியமே துணை

என்பதிலிருந்து எனக்கு விடுதலை

என் உலகத்தில் நீ ஜடமாய்க்கூட

இல்லை என்பதை எனக்குணர்த்துவதிலிருந்து 

உனக்கு விடுதலை


எத்தனை ஆடவண் கண்ணில் படினும்

உன்னைத்தேடி நாடிவரும் என் 

சிந்தனையிலிருந்து எனக்கு விடுதலை

அதையே ஆணவமாய் எண்ணி

அநீதிசெய்யும் உனக்கு விடுதலை


வருடங்கள் கடந்தும் உனைமறவாத உயிர்

உடலில் இருந்து எனக்கு விடுதலை

வருடங்கள் தான் கடந்தாலும் 

பிடிகொடுக்காத உன் கோபம் கண்ணீரால்

இன்று உனக்கு விடுதலை


Thursday, May 28, 2020

ஓ மனமே....

                                                                                                 


ஓ மனமே .....

நீ ஓர் ஊனமுற்ற கைக்குழந்தை

அடித்தாரின் பெயர் சொல்லி 

அழத் தெரியாத

மண்மூட்டை

ஓராயிரம் கூரிய வாள் வெட்டுக்களுக்கு 

பச்சிலை அரைத்து பற்றிட்டு பத்தியம் 

அறியாப் பச்சிளங்குழந்தை

சிந்தையால் காண்பதை நிஜமென நம்பி

சித்தம் மறந்த கைப்பாவை

உடலுக்காய் துடிப்பதை விடுத்து 

பிறவுயிர்க்காய் துடிக்கும் 

துக்கம் நிறைந்த கைம்பாவை

துடிப்பதையும் விடுத்து நினைக்கத்தூண்டும்

நினைப்பதில் உயிரைத் துறக்கத்தூண்டும்

இலவளித்த இரும்பு ஆலை

பள்ளம் தேடும் சேற்று நீரையும்

தேக்கி செந்தாமரை மலரால் 

வனப்பு சேர்க்கும்

கண்ணீரின் வற்றாக்குளம்

குடியிருக்க குடிசை இல்லாதவனும்

கோபுரத்தில் அலங்கரிக்கப்பட்டு

பவனிவரும்

சில்லுடைந்த  மரகத ரதம் 

கற்பனையில் அனைத்தும் கடந்து 

செல்லும் கற்சிலை

கூழங்கற்களால் சிதைக்கப்படும் உன் 

காதலிற்கு ஓர் மணிமகுடம்

துன்பத்தில் சளைக்காமல்

அறுவடைக்காய் காத்திருக்கும் 

ஏழை விவசாயி

மனமே நீ மனமாக மட்டும்

மாறிவிடு

மாற்றமில்லா மனக்கல்லறைகள் பல

உலாவித்திரிகையில் ஏமாற்ற தாழாது

நீ மரணித்துவிடக்கூடும்

Thursday, May 21, 2020

ப்ரியங்களின் வதை




ப்ரியங்களின் வதை எப்பொழுதும் 

மௌனமானதே

அது இருட்டில் மட்டும் 

வெளிச்சமிட்டு காட்டிகையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

அவஸ்தையானதே

அலாதியான அன்பைக் கொண்டு

அநாதையாய் மாற்றுகையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

துயரானதே

நேசிக்கும் நெஞ்சத்தில்

நேசத்தை தேடுகையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

சுவாரஸ்யமானதே

எப்போதாவது இன்னல்கள் விடுத்து

இன்பங்கள் சூழ்ந்திடும் நிலை எதிர்பார்கையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

சுயநலமானதே

இருகண்களில் ஒன்றை மட்டும்

உருத்தி கண்ணீர் காண்கையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

ஆத்மாத்தமானதே

உடலின் காயங்கள்  சரிசெய்துவிடும் என்கையில்

மனதால் வடுக்களின் வலி நித்தம் சுமக்கையில் 


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

ஒருமனமானதே

சொப்பனங்களிலும் கதி கலங்கிடும்

படுபாவி நினைவுகளை மட்டும் தெளிக்கையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

ப்ரியமானதே

ப்ரியமானவரின் அன்புப் பரிசை

பவித்திரமாய் பரிபூரணமாய் ஏற்கையில்

Saturday, May 9, 2020

முடிவு



இன்றெடுக்கப்போகும் முடிவிற்காக நான் 
தினமும் வருந்தலாம் மௌனமாய் 
இரவுகளில் கண்ணீர் சிந்தலாம் 
இந்த முடிவின் பலனை 
ஆயுள்வரை அனுபவிக்கலாம்
இதனால் என் இதயமும் இருண்ட 
பாலைவனத்தில் அடிமையாகலாம்
உணர்வுகள் இறந்துபோகலாம்
ஊமையாய் பல வார்த்தைகள் மடிந்து போகலாம்
ஆனால் இந்த முடிவில் நான் மாற்றம் காணப்போவதில்லை
இதில் என் சுயநலம் அடங்கலாம்
என் சுயமரியாதை உயரலாம்
நான் நானாகவே என்றும் வாழலாம்
ஆனால் இந்த முடிவில் மனதார எனக்கு உடன்பாடில்லை
இந்த முடிவால் பலரின் முன்விரோதங்களில் 
இருந்து சற்று தப்பித்துக்கொள்ளலாம்
இது உனக்காக எடுக்கும் முடிவு
உன் நலன் விரும்பியாய் எடுக்கும் முடிவு
உன்னால் மட்டுமே என் நலன் என்பதிற்கான முடிவு
தொடக்கத்திலே முடிவு என்கதையில் மட்டும் தான்
இதில் சுக துக்கங்கள் எல்லாம் நானாய் உருவாக்கிய 
கற்பனை உதறல்கள்
இந்த முடிவில் எனக்கு இஸ்டமில்லை
இந்த முடிவால் உனக்கு கஸ்டமில்லை
இதுபோன்ற முடிவுகள் ஒருவகை இன்பம்தான்
இதில் பயன்பெருவர் இம்முடிவினை வேண்டுவோராய் 
இருக்கும் பட்சத்தில்
இந்த முடிவு என்னை தூங்கவிடப்போவதில்லை
இந்த முடிவால் தூக்கம் என்னை விடப்போவதில்லை
மறப்பதற்காய் தூக்கம் கொள்கின்றேன் 
ஏன் மறதியின் வாயிலாய் நியாபகத்தைத் தூண்டுகிறாய் 
இந்த முடிவில் பலர் பயனாளியாகலாம்
நன்மை என்று கருதலாம் இதில் அவர்களுக்கு
பங்கும் இருக்கலாம் இம்முடிவால் பூரிப்படையலாம்
இந்த முடிவில் எனக்கு மனக்குழப்பமில்லை
இதை ஏற்க உனக்கு என்போல் மனமும் இல்லை
இந்த முடிவால் நீ நீயாகுகிறாய் நான் என்றும் 
நாமாகத்தான் இருப்பேன்
இந்த முடிவு துயரானது நீ என் 
துயரில் கூட துக்கம் விசாரிக்க 
இல்லை என்கிறது இந்த முடிவு
இன்று எடுக்காவிடின் வேறு என்றோ கட்டாயமாய்
இந்த முடிவை நீ எடுக்கத்தான் போகிறாய்
அதற்குப் பரிகாரமாய் இன்றே 
சற்றும் விருப்பமில்லாலம் நான் முடிவெடுக்கிறேன்
இதில் நீ உன் முடிவை இனி முடியாது 
என்று பொய் பேசத்தேவையில்லை
எல்லாம் முடிந்த முடிவு இனி முற்றுப்பெற்றது
இந்த முடிவில் முடியாது என்ற பேச்சுக்கு இடமில்லை
இந்த முடிவில் நீயும் நானும் திருப்ப முடியாத 
நீண்ட இடைவெளி பெறலாம்
எந்நாளும் இந்த முடிவை ஒரு நொடி 
மனதார பிழை விடுத்தோம் என தேற்றிக்கொள்ளலாம்

Thursday, April 30, 2020

செல்லப்பிராணிகள்




செல்லப்பிராணிகள் 
எம் வீட்டோடு வாழ்பவர்கள்
அன்பைச் செலுத்தி அதீதமாகப் பெறுகையில்
இவர்களும் எமக்குச் செல்லக்குழந்தைகள்


போதனையில்லா  மெய் நன்றி இவர்களின் இலக்கணமாகிட பாரினில் விசும்பும் மென் மழைத்துளிகூட இவர்களின் அன்புத்தூய்மையில் தோற்றுப்போய்விடும்


வாலினால் தலைவணங்குவது 
ரோமங்களினால் மெய் தீண்டுவது 
நாவினால் நன்றி நல்குவது
முன் புஜங்களினால் இறுகப்பற்றுவது 
நம் காலடியில் தஞ்சம் கொள்வது 
நீண்ட நேரத்தவிப்பை பாசமழையாய் அவர் அவர் மொழியில் பறைசாற்றுவது 
இதுவெல்லாம் அவர்களின் அன்பின் வெளிப்பாடு அதுவே அவர்களின் கோட்பாடு


ஒருபிடிசோற்றுக்கு வாழ்நாள் முழுவதும் 
உழைக்கும் உழைப்பாளிகள்
சற்று நேரம் உறங்கினாலும் துரிதமாய் சேவை செய்து கிறங்கடிக்கச் செய்திடுவார்கள்
பலவித வித்தை கண்டு வியப்புற்றேன் இவர்களின் அன்பு என்ன மாய வித்தையோ?


சேற்றிலும் சகதியிலும் துள்ளிக்குதித்து ஆனந்தம் கொண்டு வெண்சட்டையிலும் காற்தடம் பதித்திடுவார்
குறுகிய ஓசையில் தம் வரவைக் கண்டு குதூகலித்து ஆரவாரம் செய்திடுவார்
தட்டில் எத்தனைவகை உணவிட்டாலும் உம் கரத்தால் ருசி பார்த்திடுவார் 
காதலனுக்கோ பொறாமை விஞ்சிடும் அவர்களின் கன்னத்தில் பதியும் எண்ணற்ற முத்த மழையில் தமக்கான மகுடம் என சூடிடுவார்


படுக்கையில் குழவியாகினும் வயதுமுதிர்ந்த கிழவியாகினும் பேதமற்றவராய் கட்டளைக்காக காத்திருப்பார்
வளர்த்த கடனை திருப்பிக்கொள்ள ஆருயிர்த்தியாகமும் சுயவிருப்புடன் யாக்கைத்துறப்பார்





Wednesday, March 11, 2020

முதுமை





முதுமை ஒரு ஓரத்தில் பழைய கட்டில் மெத்தை தலையணை போட்டு என்னைப் பாடாய் படுத்திவிட்டது
வருபவர் போவோர் எல்லாம் நலன்விசாரிக்கும் கண்காட்சிப் பெட்டகம் ஆக்கிவிட்டது
கஞ்சி கூழ் போன்ற சத்துணவுகள் ஆகாரமோ இல்லை பானமோ இரண்டும் கலந்தவையோ என எண்ணியும் பார்க்கமுடியாத வேளையாகிவிட்டது
கூந்தலும் ஒன்றொன்றாய் கலன்றுவிட தேகமும்
நரைநிரப்ப வாலிபமும் வாழும் ஆசையும் சிதைந்து
போன கதையாகிவிட்டது
விக்கல் இருமல் சளி வாயுத்தொல்லை
இதற்கெல்லாம் எண்ணி எண்ணி மாத்திரை சாப்பிடுவது தினமும் தொல்லை
நிம்மதியான உறக்கம் தேடு நிம்மதியற்ற பல இரவுறக்கம் பகலில் பாசாங்கான உறக்கம்
பல ஜவுலிக்கடை சாம்ராஜ்யம் வீட்டின் அலுமாரியில்
நானோ விரும்பி உடுப்பது பழைய பருத்தியாடை
கொஞ்சம் சுவாத்தியமாய் இருக்கட்டும்
புதிது என் வாரிசுகள் ஆளட்டும்
படிப்பதற்கு பல புத்தகங்களும் பார்ப்பதற்கு தொலைக்காட்சியும் கேட்பதற்கு பழைய வானொலியும்
இருந்தும் என்ன பயன் எல்லாம் சிறிது சிறிதாய் பறிபோய்விட்டன புலன்கள்
பக்கத்து வீட்டு விடுப்புகள் எல்லாம் காதருகே மொய்க்கும் இலையான் இரைச்சல்போலாகிவிட்டது
இரவு அனைவரும் உறங்கும் வேளை யாரையும் தொந்தரவு செய்யாது நுளம்புகளுடன் பேசுவேன்
எனக்கு ஆயுள் குறைவாகிவிட்டது என்னைக்கடித்தால் என் வியாதி அவர்களுக்கும் வந்துவிடுமாம் என் காதுபடவே பேசிக்கொள்கிறார்கள்
அங்கும் கிழட்டு நுளம்புகள் போனால் போகட்டும் என்று என்னைத்தின்று பார்கிறார்கள்
எனக்குத்தான் வயதாகி பார்வை மங்கிவிட்டதால்
யார் இவர் என்று அடையாளம் காணமுடியாது 
பிள்ளைகளுக்குமா அடையாளம் காண சிரமமாகிவிட்டது?
போதும் இந்த முதுமை உடல் வலியைவிட
மனது வலிக்கிறது.




கோபம்



கோபம் ஒரு போலி முகத்திரைதான்
காற்று வீசிடும் திசைக்கேற்ப 
ஆடல் புரிந்துவிட்டு இளைப்பாறிவிடும்
கோபத்திற்கு அப்பால் பல உண்மை முகங்களும்
காண்பீரோ தெரியவில்லை
கோபம் வெறும் நாக்குநுனியில் முடிந்துவிடும்
ஆனால் அது உண்மை அல்ல நிலையானது அல்ல
கோபம் ஓர் போலி உணர்ச்சி 
கோபம் கொள்பவன் கண்களை உற்றுப்பார்த்ததுண்டா?
அதில் ஏக்கம் கலந்த அன்பு மறைந்திருக்கும்
பிரிவைத் தாழாத வலி உறைந்திருக்கும்
எளிதில் ஆவியாகிவிடும் கண்ணீர் ஈரப்பதன்
விழியோரமாய் அணை உடைக்கக் காத்திருக்கும்
அவை கண்ணைச்சுற்றிய கருவளையத்துள் நீச்சல் குளம் போல் நீரை தேக்கிவைக்கும்
கோபம் கொள்பவன் தொண்டைக்குழியை 
இரசித்ததுண்டா?
மூளை கட்டளை இடும் அனைத்து வார்த்தைகளையும் ஆதாரங்களையும் மெல்ல மெல்ல மென்று தின்றுவிட்டு எஞ்சியதை
கொடுக்கும். இடையிடையே தாகமும் எடுக்கும்
எச்சிலை முழுங்கி பின் மீண்டும் முயற்சித்துப் பார்க்கும்
கோபம் கொள்பவன் இதயத்துடிப்பைக் கேட்டதுண்டா?
பிரியாதே பிரியாதே என ஓலமிடும் 
ஒரு அங்குல ஆழமாய் இதயம் சரிந்ததாய்
உணர்வு வரும் 
குண்டூசிகள் ஊடுருவும் வலியால் இரத்தங்களும் சூடேரி கொதிக்கும் அனல்காற்றை உடலினால்  வெளியேற்றும்
கைவிரல்களோ தெம்பாய் பற்றிக்கொள்ள ஏதுமின்றி நான்கு விரல்களை மாத்திரம் நடுக்கத்துடன் ஒன்று சேர்த்துக்கொள்ளும். மீதம் ஒரு விரல் எதிரில் உன்னை விழிப்பூட்டும்
இத்தனையும் கடந்து கோபம் கொள்ளவது எல்லாம்
அன்பிற்காய்த்தான். அன்பின் ஆழம் கடல் ஆழத்திலும் இல்லை
அன்பின் எல்லை ஆகாய எல்லையிலும் இல்லை
கோபம் தான். கோபத்தில் மட்டும் தான்
உனக்காய் என் கோபம்
எனக்கானது உன் கோபம்
எளிதில் கரைந்துவிடும் இந்தக்கோபம்
உனக்கும் எனக்குமான ஓர் அன்பின் பாலம்

Saturday, June 1, 2019

விலைமாதுக்களே! வரவேற்கின்றேன்


பெண்ணாக நான் இருந்துகொண்டு
விலைமாதுக்கள் ஆகிய உங்களை
இன்முகத்துடன் வரவேற்பதில்
பெருமிதமடைகின்றேன்

நீங்கள் விருப்பம் கொண்டோ
அல்லது உங்கள் விருப்பத்திற்கு
பிறம்பாகவோ விலைகூறி உங்களை
சமூகத்தில் அவப்பெயர் பெற்று
இத்தொழில் செய்கிறீர்கள்
இருந்தாலும் நீங்களும் பெண் தானே
உங்களின் வலிகளும் வேதனைகளும்
சிறிதளவாயினும் நானும் புரிந்துகொள்வேன்

பருவமடையும் முன் நானும் உங்களைப்பற்றி
அவதூறாகக் கதைத்ததுண்டுதான்
மானத்தை உயிராய் நினைக்கும்
பெண்கள் மத்தியில் அதை கூலிக்கு
நீங்கள் விற்பனை செய்வதால்
ஆனால் இன்று உங்களைப்
பெருமளவில் காணக்கிடைப்பதில்லை

உங்கள் விலையை உயர்த்திவிட்டீர்களோ
சட்ட ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டுவிட்டீர்களோ தெரியவில்லை
நீங்கள் நலிந்துவிட்ட இக்காலகட்டத்தில்
பருவமங்கையரை மட்டுமல்ல
பிஞ்சுக்குழந்தைகளையும் வயது முதிர்ச்சி பெற்று
இறக்கும் காலத்தை எண்ணி பொழுதைக் கழிக்கும்
மூத்தோரையும் வக்கிரகுணம் கொண்ட
காமுகர்கள் விட்டுவைத்ததில்லை
இரவில் மட்டுமல்ல பகலிலும் பொதுமக்கள்
நிறைந்த நிலையிலும் அவர்கள்
தயங்காமல் முன்னேறுகிறார்கள்

அவனை ஈன்றவள் ஒரு பெண்
அன்பாய் அண்ணா என பாசம் பொழிந்தவள் ஒரு பெண்
தம்பி என தலைதடவியவள் ஒரு பெண்
அவனை மட்டும் பதியாய் மானம் துறப்பவள் ஒரு பெண்
அவன் உருவாய் பிறப்பெடுப்பதும் ஒரு பெண்
என்பதை மறந்துவிடுகிறான்

பொது இடங்களிலும் நாங்கள் நிம்மதியாய்  

மூச்சுவிட்டிருக்கமாட்டோம்
அதையும் தட்டிக்கேட்ட யாரும் அங்கு ஆண்மகனாய் தெரியவில்லை
பொதுமலசலகூடம் கூடச்சுதந்திரமாய் செல்லமுடியவில்லை
பாவி இரகசியக் காமராக்களை எங்கெல்லாமோ மறைத்துவைத்திருக்கின்றான்

எங்கள் ஆடைதான் அவன் உணர்ச்சியை ஈர்ப்பதாயின்
புடவையில் அவன் அம்மாவைப் பார்த்திருக்கமாட்டானா?
இல்லை சுடிதாரில் அவன் அக்காவைப் பார்த்திருக்கமாட்டானா?
இல்லை பாவாடை அணிந்த தோழியைப் பார்த்திருக்கமாட்டானா?இல்லை ஜீன்ஸ் அணிந்த அவன் தங்கையைத்தான் பார்த்திருக்கமாட்டானா?
வயதுதான் புணர்ச்சியைத் தூண்டுவதெனில்
பாட்டிமார்களையும் எங்கு சென்று பத்திரப்படுத்தி வைப்பது?

விலைமகள்களே!
அரச அங்கீகாரம் பெற்று சுகநலதேகிகளாய்
வனப்புமிக்க தோற்றத்துடன் அரைகுறை ஆடையுடன்
வீதியில் நீங்கள் அலைந்து திரியுங்கள் அப்பொழுதாவது அவன் பார்வை சற்று விலகட்டும்

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...